கற்றுத்தரும் குழந்தைகள்…


கொஞ்சநாளைக்கு முன்ன ஒரு மாலை நேரத்தில் என்னோட நண்பன் வீட்டுக்கு போயிருந்தேன். அவனோட 4 வயது குழந்தை என்னோட விளையாடிக் கொண்டிருந்தது. சட்டென கரண்ட் கட் ஆக இருள் சூழ்ந்தது. என் நண்பன் விளக்கெடுக்க உள்ளே சென்றான். அந்த குழந்தை, “மாமா இவ்ளோ நேரம் இங்க இருந்த வெளிச்சம் இப்போ எங்க போச்சு?” என்று கேட்டது. நான் திகைத்தேன். குழத்தையின் கேள்விக்கு பதில் தெரியாத தருணங்கள் எனக்கு ஞானத்தை அளிப்பதாக உள்ளது. அவள், திரும்பவும் “சொல்லுங்க மாமா…” என்று அனத்த ஆரம்பித்தாள். என்னிடம் அவளுக்கு சிரிப்பை மட்டுமே பதிலாக தரமுடிந்தது. இதைக்கேட்டுக்கொண்டே வந்த எனது நண்பன், “சும்மா இருடீ, வெளிச்சத்தை காக்கா எடுத்துட்டு போயிடுச்சி” என்றான். “காக்காவா, இவ்ளோ வெளிச்சத்தை எடுத்துட்டு போயும் ஏன் அது கருப்பாயிருக்கு?”. என்ற தனது அடுத்தக் கேள்வியை கேட்டது. என்னால் தாங்கமுடியவில்லை. “நான் வர்ரன்டா…” என்று சொல்லிவிட்டு நடையைகட்டினேன்.

பிறகு இரண்டு நாள் கழித்து என்னுடைய பள்ளிகால பிசிக்ஸ் வாத்தியாரை சந்தித்தபோது, இந்த கேள்வியைக் கேட்டேன். அவர் குவாண்டம் பிசிக்ஸ் பற்றியும் தெர்மோ டைனமிக்ஸ் பற்றியும் கூறி விளக்கினார். இதே போன்ற கண்டுபிடிப்புக்காக இயற்பியலில் நோபல் கிடைத்திருப்பதாக சொல்லும் போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அந்த குழந்தை நோபலுக்குரிய சிந்தனை ஓட்டத்தை இயல்பாய் வெளிப்படுத்தியது சலனப்படுத்தியது.
இது போல பல சந்தர்பங்களில் குழந்தைகளின் கேள்விக்கு என்னிடம் பதில் இருப்பதில்லை. எனக்குள், குழந்தைகளிடம் இருக்கும் கேள்வி கேட்கும் ஞானம், ஆராயும் குணம் எதையும் புதிதாக பார்க்கும் தன்மை ஆகியவற்றைப் பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.

வாழ்க்கையின் எந்தப்புள்ளியில் இந்த குணங்கள் விட்டுப்போய் ஸ்டிரியோடைப்பாகிறோம் என்றும் யோசனை வந்தது. என்ன இருந்தாலும் “காக்கா எடுத்துட்டு போயிடுச்சி..” என்ற எனது நண்பனின் பதில் நியாயமானது இல்லை எனப்பட்டது. அது போன்ற அக்கரையற்ற, அந்த சமயத்தை கடத்துகிற அல்லது பேண்டசியாக்குகின்ற போக்குகளே ஒரு குழந்தையின் ஆய்வுகுணத்தைக் கொன்று சராசரி மனிதனாக்குகிறது எனப்படுகிறது.

கலில்கிப்ரன், “குழந்தைகள் பெற்றோரிடமிருந்து வெளிவருவதில்லை, பெற்றோர் மூலமாக வெளிப்படுகிறது” என்பார். ஆழமான வார்த்தைகள். ஆனால் பெரும்பாலான பெற்றோர்கள் அதைப்புரிந்து கொள்வதில்லை. குழந்தையை அதன் இயல்பிலேயே வளப்பது மிகப்பெரிய கலை. ஆனால் இன்றைக்கு இருக்கும் பெரும்பாலான பெற்றோர்கள், குழந்தையை அவர்களுக்கு விருப்பமான எதோ ஒரு மோல்டில் வைத்து அச்சாக பிரதியெடுக்கவே விரும்புகிறார்கள்.

என்னுடைய சிறிய வயது முழுக்க எனது பூர்வீக கிராமத்தில் தான் கழிந்தது. என்னுடைய தாத்தா எனக்கு ஆகச்சிறந்த நண்பன். பகல் முழுவதும் எனது கேள்விகளாலும் அதற்கான அவரது ஆர்வமான, அக்கரையுள்ள விளக்கங்களாகவும் கழியும். அந்த காலகட்டமே எனக்குள் புத்தாக்கத்தை விதைத்தது. இப்போதிருக்கும் தலைமுறையை பார்க்கும் போது பெரும்பாலும் வருத்தமாகத்தான் இருக்கிறது. ஒரு பயணத்தின் போது, பனைஓலை விசிறியைப் பார்த்த 10 வயது சிறுவன், “மம்மி, டென்னிஸ் பேட் வாங்கிக்கொடுங்க…” என்றான். நமது குழந்தைப்பருவத்தில் நமக்குக் கிடைத்த பல வாய்ப்புகள் இப்போதிருக்கும் தலைமுறைக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் தனிமையில் இருக்கிறார்கள் அல்லது காப்பகத்தில் அல்லது பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கையின் அபத்தங்கள் பற்றிய கேள்விகளுடன் திரிகிறார்கள். அதை கேட்கக்கூட ஆளில்லை.

சமீப காலமாக ஒளிபரப்பப்பட்டு வரும் பிலிப்ஸ் ஆடியோ பார் பற்றிய டிவி விளம்பரம் ரசிக்கும் படி இருக்கிறது. ஒரு பெரிய வீட்டில் தனியாக இருக்கும் குழந்தை தனக்குக் கிடைத்த பொம்மையின் மீது செலுத்தும் வன்முறையும் அந்த பொம்மை தன்னை மறைத்துக்கொள்வதாகவும் காட்டப்பட்ட காட்சிகள் அற்புதமாக இருக்கும். கடைசியில் பிலிப்ஸ் ஆடியோ பிளே செய்யப்பட்டவுடன் குழந்தை அமைதியாகும். “ஒலி உங்கள் உலகத்துக்கு உயிர் கொடுக்கிறது…” என்ற கேப்ஷனுடன் விளம்பரம் முடியும். என்னுடைய வருத்தமெல்லாம் ஏன் அந்தக் குழந்தையுடன் விளையாட யாருமேயில்லை. ஆடியோவை இயக்கியவர் கொஞ்ச நேரம் அந்த குழந்தையுடன் விளையாடியிருக்கலாமே என்று எண்ணத்தோன்றியது.

9 thoughts on “கற்றுத்தரும் குழந்தைகள்…

  1. “நமது குழந்தைப்பருவத்தில் நமக்குக் கிடைத்த பல வாய்ப்புகள் இப்போதிருக்கும் தலைமுறைக்கு கிடைப்பதில்லை. பெரும்பாலும் குழந்தைகள் வீட்டில் தனிமையில் இருக்கிறார்கள் அல்லது காப்பகத்தில் அல்லது பள்ளியில் தள்ளப்படுகிறார்கள். வாழ்க்கையின் அபத்தங்கள் பற்றிய கேள்விகளுடன் திரிகிறார்கள். அதை கேட்கக்கூட ஆளில்லை.”

    என் குழந்தைகளை என்னால் விடுமுறைக்கு ஊருக்கு கூட கூட்டிசெல்ல முடியவில்லை.

    1. உண்மைதான் ராஜா. குழந்தைகள் நமக்கு கற்றுத்தந்து கொண்டுதான் இருக்கின்றன, நாம் தான் அதைக் கற்பதில்லை…

    1. பின்னுட்டத்துக்கு மிக்க நன்றி. குழந்தைகளை பார்த்துக்கொள்ள நேரம் இல்லை என்று சொல்லும் பெற்றோர்களை, அவர்களுடைய வயதான காலத்தில் அவர்களை பார்த்துக்கொள்ள நேரமில்லை என்று அவர்களின் பிள்ளைகளும் சொல்வார்கள். இது எளிமையான நியூட்டன் விதி.

ஜானகிராமன்.நா -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி