“Hello. My name’s Forrest, Forrest Gump. You want a chocolate?” இப்படித் தான் இந்த படத்தின் ஆரம்ப கட்ட வசனம் துவங்கும்.
பேருந்து நிறுத்தத்தில் முன்பின் அறியாத நபரிடம் இயல்பாக நட்பு கொள்ளும் மனமும் அவருக்கு சாக்கோலெட் கொடுக்கும் அன்பும் நம்முடைய மெச்சுர்ட் உலகில் தவறாக பார்க்கப்படுகிறது. பூரண அன்பை நாம் நம்புவதில்லை. எல்லாவற்றிலும் ஒரு கைமாறு இருக்க வேண்டும் என்றே நினைத்து பழகிவிட்டோம்.
இந்த கதையின் ப்ரொட்டகானிஸ்ட், ஒரு எளிமையான, உடல் மற்றும் மன ரீதியாக மாற்றுத் திறன் உள்ளவர், மற்றவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியவர். பரிசுத்த அன்பு, எதையும் எதிர்பார்க்காத நட்பு இதை மட்டுமே மூலதனமாக கொண்டு தனது வாழ்வில் மிகப்பெரிய இடத்தை பொருளாதார அளவிலும், சமூக அளவிலும் அடைவதை மிகவும் நெகிழ்ச்சியாக விவரிக்கும் படம்.
வாழ்க்கையில் வெற்றி பெற, தந்திரம், மிகப்பெரிய திறன், அறிவு எல்லாம் தேவையில்லை. உண்மையும், மற்றவர் மீதான அன்பும் இருந்தாலே போதும் என்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய செய்தி.
என்னைப் பொருத்தவரையில் எனக்கு எப்போதெல்லாம் வாழ்வில் வெறுப்பு தட்டுகிறதோ, அவநம்பிக்கை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த படத்தை ஒரு முறை பார்க்க முற்படுவேன். ஃபாரஸ்ட் கம்ப் தரும் மனஎழுச்சியும் உற்சாகமும் வாழ்க்கையை கொண்டாடவும், எல்லாரிடமும் நட்பை போற்றவும் பெரிய சக்தியை கொண்டுவரும். தனிப்பட்ட அளவில் எனக்கு பிடித்த சிறந்த 10 படங்களில் இந்த படத்துக்கு தனியிடம் உண்டு. ஃபாரஸ்ட் கம்ப்பின் அன்பு பனித்துளியை போல தூய்மையானது. குழந்தையின் மனம் அவனிக்கிருப்பது தனி வரம். அவனிடம் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை. அவனுக்கு கிடைத்த புகழ், வெற்றி, மரியாதை எல்லாமும் அவனது அன்பு செலுத்துவதால் மட்டுமே கிடைத்தது. உலக வாழ்க்கையில் மற்றவர் மதிக்கும் எல்லா வளங்களும் கிடைத்தபின்னும் அவன் அதை பெரிதாக பார்க்காமல் அன்பையும் நட்பையுமே போற்றுகிறான். அதுவே அந்த கேரக்டரை அமரத்துவம் ஆக்குகிறது.
So, நாம் அன்பையும் நட்பையும் போற்றுவோம், புத்துணர்ச்சியை கதிரியக்கமாய் நம்மை சுற்றி பரப்புவோம்.