எனக்கு ஏன் ஆயிரத்தில் ஒருவன் பிடிக்கவில்லை?


Aayirathil-oruvan

எனக்கு செல்வராகவனை ரொம்ப பிடிக்கும். அதனாலேயே ஆயிரத்தில் ஒருவன் 2009ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த துக்க அதிசயமாக பார்க்கிறேன்.

கேஷவலாக அப்படியே நடந்துகொண்டே செல்லும் பாதையின் ஒரு புள்ளியில் நமது பூர்வ குடிகளை, அவர்களின் மாறாவாழ்க்கைமுறையை சந்திப்பது என்பது மிகவும் ப்ரெஷ்ஆன ஸ்டோரி லைன். ஹாலிவுட் காரர்களுக்கே சவால் விடக்கூடியது. ஆனா, முழுமையான, தெளிவான எக்சிக்யூஷன் இல்லாமல் பலபேருடைய ஆகச் சிறந்த பங்களிப்பு வீணானது தான் வேதனை.

இன்றைக்கும் ஜிவிப்ரகாஷ், பார்த்திபன், ரிமாசென், கார்த்தி ஆகியோர்களின் வாழ்நாள் சாதனை பங்களிப்பாக இந்த படம் இருக்கும். படத்தின் கலை வடிவங்களும், வசனமும் மிக சிறப்பாகவே இருக்கும். எல்லாம் நல்லாயிருந்தும் படம் அதன் தரத்துக்கும் எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்யவில்லை என்பது தான் பிரச்சனை.

இந்த படத்தை சுந்தர் சி பேரரசு போன்றவர்கள் இயக்கியிருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருக்கலாம். ஆனா செல்வராகவன் செம்மையாக திட்டமிட்டு, செயல்படும்போது சொதப்பினால் வரும் ஏமாற்றம் தான் தாங்கமுடியவில்லை. எல்லா பாடத்திலும் 100க்கு 100 வாங்கி நல்லா படிக்கிற மாணவன் ஜஸ்ட் பாஸ் ஆனா வரும் கடுப்பினை தான் இந்த படம் தருகிறது.

ஓக்கே. பேக்கிரவுண்ட் போதும். இனிமே எனக்கு இந்த படத்தில் உறுத்தலாக தெரிந்த அம்சங்களை பார்ப்போம்.

1. கடவுளின் உருவமாக பார்க்கப்படும் அதிசய சக்திகொண்ட சோழர்கள் பாண்டியர்களுக்கு எதிரான கடைசி போரில்தமது திறன்களை வெளிப்படுத்தாதது
படத்தின் துவக்கம் முதலே கடல் கடந்த சோழர்கள் அதிசய சக்தி படைத்தவர்கள் என்று நிறுவப்பட்டுவருகிறது. கடலில் அவர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் கொலைகார மீன்களில் இருந்து பாலைவன நடராஜர், பாம்பு மழை, என அனைத்து ட்ராப்களும் சோழர்கள் இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நிறுபிப்பதாக உள்ளது. அந்த தீவில் வசிக்கும் பழங்குடியினரும் சோழர்களை கடவுள்கள் என்றே குறிப்பிடுகின்றனர். அந்த பாழடைந்த சோழ நகரில் கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு புத்தி பேதளித்துப்போவது, கார்த்தியின் முதுகில் புலி சின்னம் தோன்றுவது, ரிமாவை பார்த்திபன் அந்தரத்தில் மாயமாக உயர்த்தி நிழல் வழியாக அவரை புணர்வது என முழுக்க முழுக்க சோழர்கள் சாமானியர்கள் இல்லை அவர்கள் தனி சக்தி வாய்ந்தவர்கள் என்பது படத்தின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் வலியுருத்தப்பட்டு வருகிறது. ஆனா கடைசியில் நடக்கும் போரின் போது மிக சாமானியர்கள் போல பலியாவது இதுவரை சோழர்களின் மீது கட்டமைக்கப்பட்ட அதி திறன் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. இந்த இடத்தில் படத்தை பார்க்கும் ரசிகன் குழம்பிப் போகிறான்.

2. உள்ளுர் அரசாங்கம் அதன் அமைப்புகள் எதுவுமே படநிகழ்வுகளில் வெளிவராதது.
படத்தின் பெரும்பாலான களம் வியட்நாம் அருகில் இருக்கும் தீவில் நிகழ்வதாக காட்டப்படுகிறது.ஆனால் படத்தின் எந்த காட்சியிலும் உள்ளுர் போலிசோ, ராணுவமோ வருவதே இல்லை. இப்படி ஒரு நாடு தனது ராணுவத்தை முழுமையாக வேறொரு நாட்டுக்கு கொண்டு போய், அவர்களின் உதவியே இல்லாமல் ஒரு சமூக குழுவை கொன்று சாய்ப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. மேலும் வியட்நாம் உள்ளிட்ட நாடு மற்றும் தீவுகளில் பாலைவனம் என்பதே இல்லை எனும் போது இந்த படத்து தீவில் மட்டும் பாலைவனம் வருவது புவியியல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மெட்ராசுக்கு பக்கத்தில் பனி மலையை காட்டுவது எவ்வளவு அபத்தமோ அது போன்றது இது.

3. தொன்ம குடிகளாக வாழும் சோழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்தது
இது சகித்துக்கொள்ளவே முடியாத காட்சி அமைப்பு. அந்த தீவு பசுமையானதாக தான் இருக்கிறது. மேலும் சிதிலமடைந்த சோழர் நகரமும் பொன், வைரம் என பல பொக்கிஷங்களுடன் இருக்கிறது. உண்மையான வரலாற்றுபடி கடல் கடந்து சென்று அங்கோர்வாட் உள்ளிட்ட வென்ற இடங்களில் எல்லாம் அற்புதமான கட்டிடம், வாழ்க்கை முறையை சோழர்கள் உலகுக்கு அளித்திருக்கிறார்கள். ஆனா, இந்த படத்தில் சோழர்கள் கற்காலத்துக்கு திரும்பியது போலவும், நமது தமிழ் கலாச்சாரத்துக்கு சம்மந்தமே இல்லாத ஆள் கொல்லும் கிரேக்க போட்டிகளை நடத்துவதும் வரலாற்றை திரிப்பது போல இருந்தது.

4. மீட்கவந்த குறிப்புகள் தவறாகிப்போவது
படத்தின் மிக முக்கிய நம்பிக்கை சோழர்களின் முன்னோர்கள் எழுதிவைத்திருக்கும் எதிர்கால குறிப்புகள். அவற்றின் படியே எல்லா நிகழ்வுகளும் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனா, அந்த நிகழ்வுகளில் தவறு நிகழ்ந்து, அனைவரும் கொல்லப்படலாம் என்பதை கணிக்கமுடியாத முன்னோர்கள் இருந்திருப்பது திரைக்கதையில் முன்னோர் குறிப்புகளின் பங்கு குறித்த நம்பிகையின்மையே ரசிகர்களிடையே ஏற்படுத்திவிடுகிறது.

5. கடைசி கட்ட காட்சிகளை இலங்கை தமிழர் கொடுமையுடன் தொடர்பு படுத்தும் அமெச்சுர் தனம்.
கடைசியில் சிறைபிடிக்கப்பட்ட சோழர்கள் மீது பாண்டியர்கள் செலுத்தும் வன்கொடுமை காட்சிகள் இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்ட கொடுமையோட லிங்க் செய்தார்கள் சில பிரகஸ்பதிகள்.உண்மையில் செல்வராகவன் அப்படித்தான் நினைத்து காட்சிகளை வடிவமைத்தார் என்றால் அதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் இருக்கமுடியாது.

6. பல ஆங்கில படங்களின் தாக்கம் / பிரதிபளிப்பு
இன்டியானா ஜோன்ஸ், க்ளாடியேட்டர் என படத்தின் பிற்பகுதி காட்சிகள் இலக்கே இல்லாமல் தேவையுமில்லாமல் தொகுக்கப்பட்டது போல இருக்கிறது

7. யார் ஆயிரத்தில் ஒருவன்?
படத்தின் தலைப்பு ஆயிரத்தில் ஒருவன். அப்படின்னா ஒரு ரேர் ஹீரோ evolve ஆகி மொத்த சமூகத்தையும் காப்பாற்றுவது என்பது தான் பொருத்தமாய் இருக்கும். ஆனா கடைசியில் எல்லாம் இழந்து சிறுவனாக இருக்கும் சோழ இளவரசனை எடுத்துக்கொண்டு கார்த்தி காணமல் போகிறார். படத்தின் முடிவு யாரைத் தான் / எப்படித் தான் படத்தலைப்பை நியாயப்படுத்துகிறது? அடுத்தடுத்த பாகங்கள் வரப்போகின்றன என்றால் கடந்த 6 வருடங்களில் இதன் அடுத்தபாகம் பற்றிய பேச்சே இல்லை. அப்படின்னா இந்த படம் இன்கம்ப்ளீட் என்று தானே எடுத்துக்கொள்ளமுடியும்.

ஆக என்னளவில் இந்த படம் பான்டசியாகவும் சரி, ஹிஸ்டாரிகலாகவும் சரி, சப்டில் ஸ்கிரிப்ட்டாகவும் சரி எந்தவகையிலும் சிறப்பாக கையாளப்படவில்லை என்பதே முடிவு.

Forrest Gump (1994)


38526527_10216557055909221_2852748197472763904_n.jpg

“Hello. My name’s Forrest, Forrest Gump. You want a chocolate?” இப்படித் தான் இந்த படத்தின் ஆரம்ப கட்ட வசனம் துவங்கும்.

பேருந்து நிறுத்தத்தில் முன்பின் அறியாத நபரிடம் இயல்பாக நட்பு கொள்ளும் மனமும் அவருக்கு சாக்கோலெட் கொடுக்கும் அன்பும் நம்முடைய மெச்சுர்ட் உலகில் தவறாக பார்க்கப்படுகிறது. பூரண அன்பை நாம் நம்புவதில்லை. எல்லாவற்றிலும் ஒரு கைமாறு இருக்க வேண்டும் என்றே நினைத்து பழகிவிட்டோம்.

இந்த கதையின் ப்ரொட்டகானிஸ்ட், ஒரு எளிமையான, உடல் மற்றும் மன ரீதியாக மாற்றுத் திறன் உள்ளவர், மற்றவர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் உள்ளாகியவர். பரிசுத்த அன்பு, எதையும் எதிர்பார்க்காத நட்பு இதை மட்டுமே மூலதனமாக கொண்டு தனது வாழ்வில் மிகப்பெரிய இடத்தை பொருளாதார அளவிலும், சமூக அளவிலும் அடைவதை மிகவும் நெகிழ்ச்சியாக விவரிக்கும் படம்.

வாழ்க்கையில் வெற்றி பெற, தந்திரம், மிகப்பெரிய திறன், அறிவு எல்லாம் தேவையில்லை. உண்மையும், மற்றவர் மீதான அன்பும் இருந்தாலே போதும் என்பது தான் இந்த படத்தின் மிகப்பெரிய செய்தி.

என்னைப் பொருத்தவரையில் எனக்கு எப்போதெல்லாம் வாழ்வில் வெறுப்பு தட்டுகிறதோ, அவநம்பிக்கை ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இந்த படத்தை ஒரு முறை பார்க்க முற்படுவேன். ஃபாரஸ்ட் கம்ப் தரும் மனஎழுச்சியும் உற்சாகமும் வாழ்க்கையை கொண்டாடவும், எல்லாரிடமும் நட்பை போற்றவும் பெரிய சக்தியை கொண்டுவரும்.  தனிப்பட்ட அளவில் எனக்கு பிடித்த சிறந்த 10 படங்களில் இந்த படத்துக்கு தனியிடம் உண்டு. ஃபாரஸ்ட் கம்ப்பின் அன்பு பனித்துளியை போல தூய்மையானது. குழந்தையின் மனம் அவனிக்கிருப்பது தனி வரம். அவனிடம் அன்பு தவிர வேறு எதுவும் இல்லை. அவனுக்கு கிடைத்த புகழ், வெற்றி, மரியாதை எல்லாமும் அவனது அன்பு செலுத்துவதால் மட்டுமே கிடைத்தது. உலக வாழ்க்கையில் மற்றவர் மதிக்கும் எல்லா வளங்களும் கிடைத்தபின்னும் அவன் அதை பெரிதாக பார்க்காமல் அன்பையும் நட்பையுமே போற்றுகிறான். அதுவே அந்த கேரக்டரை அமரத்துவம் ஆக்குகிறது.

So, நாம் அன்பையும் நட்பையும் போற்றுவோம், புத்துணர்ச்சியை கதிரியக்கமாய் நம்மை சுற்றி பரப்புவோம்.

 

நோலன் எனும் மேஜிஷியன்


க்ரிஸ்டோபர் நோலன்.

சமகால திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை. 1990களின் இறுதியில் திரையுலகில் நுழைந்து பத்தே ஆண்டுகளில் திரைமொழியில் பல ஜாலங்கள்கள் நிகழ்த்திய அற்புதம். 1998ல் Followingல் ஆரம்பித்து Memanto, Insomnia, 3 Batman reboot series, Prestige, Inception, Interstellar, Dunkrik என 10 படங்களில் எதுவுமே தப்பு செய்யாத மிக நேர்த்தியான படங்களாக அமைந்திருக்கின்றன. BBC 21 ம் நுற்றாண்டின் 100 ஆகச்சிறந்த படங்கள் பட்டியலில் இவரது மெமண்டோ, டார்க் நைட், இன்செப்ஷன் என மூன்று படங்கள் இடம் பெற்றிருக்கிறது.

இதற்கிடையே ஹோவார்ட் ஹியூகோவுடைய பயோகிராபியை இவர் எடுக்க திட்டமிட்டு, மிகச் சிறந்த திரைக்கதையெல்லாம் எழுதிய பின்னர் அந்த வாய்ப்பு மார்ட்டின் ஸ்கார்சிசிக்கு சென்று ஏவியேட்டராக மாறியது. அந்த படமும் மிகச் சிறந்தது தான் என்றாலும் நோலனுடைய டிரீட்மெண்ட்டை காணமுடியாதது ஒருவகையில் இழப்பே.

நோலனுடைய தனித்தன்மை மனதின் விளையாட்டை காட்சிப்படுத்தும் வித்தை. மனவியல் சார்ந்த விஷயங்கள் அவரது ஹோம் கிரவுண்ட். எல்லா படங்களுமே மனித மனங்களின் பயம், குற்ற உணர்வு, சாத்தியப்படாத கற்பனைகள் ஆகியவற்றால் பின்னிப்பிணைந்திருக்கும்.

ஸ்டான்லி குப்ரிக்குப் பிறகு அவர் விட்ட இடத்தை நிரப்புவதற்கு இவரால் மட்டுமே முடியும். குப்ரிக் அளவுக்கு வெர்சடாலிட்டி நோலனிடம் இல்லை என்ற வாதம் நிறைய ரசிகர்களிடம் இருக்கிறது. அதனை சமீப கால டங்க்ரிக் போன்று வேறு ஜானர்களில் நோலன் முயற்சித்து தன்னை நிறுபிப்பதும் நடந்து தான் வருகிறது. இருந்தாலும், மேக்கிங்கிலும், திரைகதையின் ஆழத்திலும் குப்ரிக்கின் கையாளுகையை நோலனின் படைப்பிலும் பார்க்கமுடியும்.

நோலனுடைய எல்லா படைப்பிலும் ஹீரோவின் சிறு தவறு அல்லது கவனக்குறைவால் ஏற்படும் சுய குற்ற உணர்வு அதனைச் சார்ந்து அவனின் மனதுக்குள் எழும் போராட்டம், தீர்க்கும் விதம் என்ற இழை தவறாமல் இடம்பெறும். ஆனால் ஒவ்வொறு படத்திலும் அந்த தீம் தமக்கே உரிய தனித்தன்மையுடன் இயங்கும் வகையில் இருப்பது தான் மிகச் சிறப்பு.

மெமண்டோவில் ஹீரோவிற்கு குறுகிய கால ஞாபகமறதி நோய் இருக்கும். அது ஏற்படுத்தும் அழுத்தத்தை மறைக்க, தமக்கு தாமே தவறான தகவல்களை தனக்குள் உள்ளிட்டுக்கொண்டு வாழ்க்கையை சுவாரசியமாக்கப் பார்ப்பான்.
இன்சோம்னியாவில் சிறு கவனக்குறைவால் தன் சக துப்பறிவாளனை சுட நேர்ந்த குற்ற உணர்வு அல்பசினோவை கடைசி வரை தூங்க விடாது. மனதுக்குள் ஏற்படும் போராட்டம் கடைசி வரை தன்னுடைய அடிப்படை நேர்மையை விட்டுக்கொடுக்காமல் போராடுவது அற்புதமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.

பேட்மேன் ரீபூட் சீரிஸ் முழுவதுமே ஹீரோவின் குற்ற உணர்ச்சி அல்லது பயம் சார்ந்து கட்டமைக்கப்பட்டதின் உச்சம். சிறு வயதில் தன்னால் தான் தனது பெற்றோர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற உணர்வு ப்ருஸ் வெய்னை ஆட்டுவிக்கும். வவ்வாலை பார்த்து பயப்படுவான். எது பயத்தை ஏற்படுத்துகிறதோ அதுவாகவே மாறி விடுவதே அதனை வெல்லும் வழி என்ற அழகாக உளவியல் தத்துவத்தை கட்டமைத்திருப்பார். கடைசி பாகத்தில் கூட பேனால் அடித்து துவைக்கப்பட்டு பாதாளக்கிணறில் வைக்கப்பட்டிருக்கும் போது வெளியேறும் போது வரை மரண பயம் மட்டுமே தப்பிக்க வழியை ஏற்படுத்தும் என்பதை வலிமையாக வெளிப்படுத்தியிருப்பார்.

டார்க் நைட் (2008) படத்தில் கட்டமைக்கப்பட்ட ஜோக்கர் என்ற எதிர் நாயகன் கதாபாத்திரம், உலக சினிமா கண்ட மிகச் சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கக்கூடியது. சமூக உளவியலை முழுமையாக புரிந்து கொண்டு, பொதுஜனங்களின் நம்பிக்கையை தகர்த்து, பயத்தை ஏற்படுத்துவதின் மூலம் பெரிய பேரழிவை ஏற்படுத்த திட்டமிடும் அவனது அணுகுமுறை வேறெந்த படத்திலும் காணாதது.

த ப்ரிஸ்டீஜ்ல் தனது நண்பனின் மனைவி ஜீலியாவுடைய விபத்து மரணத்துக்கு தான் தான் காரணம் என்ற குற்ற உணர்வு, இன்செப்ஷனில் காப்பின் மனைவி அரியாட்னியின் விபத்து ஏற்படுத்தும் உளவியல் குழப்பம் என படத்தை அடுத்தடுத்து எடுத்து செல்ல உதவியிருக்கும்.

ஃபாலோயிங்கில் தான் செய்த கொலையை மறைக்க தன்னைப் போலவே இன்னொறுவனை மன ரீதியாக தயார் செய்வது விரிவாக சொல்லப்பட்டிருக்கும். நோலனுடைய முதல் டாகுமெண்டரியான டூடுல் பக் கூட ஒருவனின் ஆல்டர் ஈகோவுடனான போராட்டத்தை குறியீடாக கொண்டிருக்கும். இன்டர்ஸ்டெல்லர், டங்க்கிரிக்கில் கூட மனித மனம் சார்ந்த விளையாட்டை மிக அழகாக பின்னியிருப்பார் நோலன்.

இன்றைய தேதிக்கு நோலனுக்கு 47 வயது தான் ஆகிறது. சராசரியாக இரண்டு வருடத்துக்கு ஒரு படம் இயக்குகிறார். ஆக, இன்னும் அடுத்த 20 வருடங்களில் 10 படங்கள் எடுப்பார். வரும் காலங்களில் அவரது முதிர்ச்சியும், அனுபவமும் திரைத்துறையில் ஏற்படும் தொழில்நுட்ப மேம்பாடும் ஆகச்சிறந்த திரைப்படங்களை தரும் என்பதில் சந்தேகமில்லை. தற்சமயம், ஜேம்ஸ்பாண்ட் படத்தின் சீரிஸை அவர் இயக்குவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக அறிகிறோம். ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தின் மனவியல் நோலன் வழியாக அடுத்த தளத்துக்கு செல்லும் என்பதே மிக உற்சாகமாய் இருக்கிறது.

மனித மனம் மிகச் சிக்கலானது. அதனைச் சார்ந்து படம் எடுப்பது கத்தி மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் ஆழமாக போனால் படம் செம மொக்கையாகிவிடும். மேம்போக்காக சொன்னால் விஷயம் உள்ளுக்குள் போகாமல் நீர்த்து போய்விடும். பெருவாரியான மக்களையும் கவர வேண்டும் அதே சமயம் உள்ளடக்கத்திலும் எந்த சமரசமும் செய்துகொள்ளக் கூடாது என்ற அக்கறை நோலனை போன்ற சிலரால் மட்டும் தான் செயல்படுத்த முடிகிறது.

திரைப்படம் என்பது ஒரு கனவை ரசிகனின் விழிப்பு நிலையிலேயே விரித்து காண்பிப்பது. மாய உலகின் ஜாலங்களை சாத்தியமாக்குவது. நோலனுடைய தந்தை ஒரு ப்ரொபஷனல் மேஜிஷியன். திரையில் நமக்காக கனவுலகை க்ரியேட் செய்து ரசிகனை ஆஹாவென வியக்கவைப்பதால்  சந்தேகமே இல்லாமல் நோலன் மிகச்சிறந்த மேஜிஷியன்.

p

Lust Stories 2017


இந்திய சினிமாவில் காமம் என்பது பேசாப்பொருள். அப்படியே பேசப்பட்டாலும் காமம் என்பது ஆணிய பார்வையில், ஒழுக்கம், கற்பு என பலவித கட்டமைக்கப்பட்ட அறங்களால் நிரப்பப்பட்டே வந்திருக்கிறது.

இந்திய – தமிழ் சினிமா, தனது பெரும்பாலான படங்களின் வாயிலாக கலாச்சார காவலர் வடிவத்தை பிடித்து வைத்துக்கொண்டாலும், மறக்காமல் பெண் கதாப்பாத்திரங்களின் கவர்ச்சியை வணிகத்துக்காக பயன்படுத்திக்கொண்டது முரணான விஷயம்.

இதனை உடைத்து பெண்ணியப் பார்வையில் காமம் என்பதை குறித்த படங்கள் ஹிந்தியில் அப்பப்ப வந்து அதிர்வை ஏற்படுத்தத் தான் செய்கிறது. தமிழில் பாலச்சந்தர், ருத்ரய்யா போன்றவர்கள் 80களில் செய்த முயற்சி அடுத்த கட்டத்துக்கு நகராமலேயே போய்விட்டது.

சில வருடங்களுக்கு முன் லீனா யாதவின் இயக்கத்தில் வெளிவந்த பார்ச்ட் படம் கிராமப்புற பெண்களின் வாழ்வியலை பேசியது. இந்த லஸ்ட் ஸ்டோரிஸ், நகர்புறத்தில் வெவ்வேறு நிலைகளில் வாழும் 4 பெண்களின் கதையை பேசுகிறது. இந்த படம் அந்தாலஜி வகையை சேர்ந்தது. ஒரே தீமைச் சேர்ந்த நான்கு குறும்படங்களின் தொகுப்பு (Wild Stories போல).

ஹிந்தி திரைப்பட உலகின் மிக முக்கிய இந்த தலைமுறை இயக்குனர்கள், அனுராக், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் வரும் பெண்கள், தமது ஆசைகளை பூட்டி வைத்துக்கொள்வதில்லை. தாம் கற்பு குறித்த பொதுவான விதிகளை பின்பற்றாது குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. தீதும் நன்றும் சேர்ந்த அவர்களின் ஊசலாட்டமும் இறுதியில் கிடைக்கும் தெளிவும் மிக அழகான சிறுகதைகளாக படமாக்கப்பட்டிருக்கிறது.

கதை என்று பார்த்தால் பெருசா சொல்வதற்கில்லை. ஆனால் அதனை பிரசன்ட் செய்த விதம், அந்த தவிப்பை பார்வையாளர்களுக்குள் கடத்திய விதம் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லாமல் ராதிகா ஆப்டே அசுர நடிப்பை காட்டியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் மிக மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்கள், படத்தை எடுத்த விதம் அனைத்தும் மிக சுவாரசியமாக இருக்கிறது.

சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம். உண்மையில் இது பெண்களின் அக உலகம், சற்று வெளிப்படையாக பேசப்பட்டிருக்கிறது. படங்களை இயக்கியிருப்பது ஆண்கள் என்பதால் இது சம கால பெண்கள் பற்றி புரிந்து கொள்ள ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் எனலாம்.

Please try See, if you don’t bother about So called, constructed Gender Values!

Lust-Stories-Poster_600x300

மரணமில்லாதவர்களின் கதை


மகாபாரதத்தில் குளக்கரையில் கொக்கின் வடிவில் இருக்கும் யட்சனுக்கும் தர்மனுக்கும் நிகழும் நீதி, அறம், உலக நடைமுறை குறித்த உரையாடல் மிக முக்கியமானது. யட்சனின் கேள்விகளுக்கு தர்மனுடைய பதில் தரும் வகையில் அமைந்திருக்கும். அதில் ஒரு கேள்வி,
யட்சன் – “இந்த உலகில் எது வியப்பானது?” என கேட்க, தர்மன் – “நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது” என்று பதில் தருகிறான். நீர்குமிழி போன்றே நிலையற்ற இந்த வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்களை மனிதர்கள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

அதே போல நாம் பல புராண இதிகாசக கதைகளை கேட்டிருக்கிறோம். அதிலெல்லாம், ராட்சஸன் கடும் தவம் இருந்து தனக்கு சாகா வரம் வேண்டும் என்ற வரத்தை பெற்றிருப்பான். தான் சாகப்போவதில்லை என்று அறிந்த பின், கொடுஞ்செயல்களை, மற்றவர்களை வதைப்பதை செய்வான். உண்மையில் சாகாவரம், வரமல்ல அது சாபம் என்பதை இறுதியில் அவர்கள் உணர்வார்கள்.

கமலஹாசனின் உத்தம வில்லன் படத்தில் இதனைச் சார்ந்த காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில், கமல் எழுதிய பாடல் வரிகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. “சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா! வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன் சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு, கேளாய் மன்னா”

ஆக என்றைக்குமே மரணம் குறித்த சிந்தனைகள் மனித சமூகத்தில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் எதேச்சையாகத் தான் எனது ஹார்டிஸ்க்கில் ரொம்ப நாளைக்கு முன்னாடி டவுன்லோட் பண்ணி வச்ச இரண்டு படங்கள், The man from earth (2007) மற்றும் Blade of the immortal (2017) அடுத்தடுத்து பார்த்தேன். அவை, இதனை இன்னும் உறுதி செய்தது. இரண்டுக்கும் கோ-இன்ஸிடன்ட். இந்த இரண்டு படத்திலும் ப்ரட்டொகானிஸ்ட்க்கு மரணமே ஏற்படுவதில்லை. அதன் விளைவுகளே படத்தின் காட்சிகளாய் விரிகிறது.

The man from earth கிளாசிக் படம். ஆதி காலத்தில் இருந்து ஒரு மனிதன் சாகாமல், இந்த பூமியின் எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியாய் இருந்தால் எப்படி இருக்கும் என்ற மிதமிஞ்சிய கற்பனை. இறப்பே இல்லாத ஆதி மனிதன் தனது வாழ்விடத்தை 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிகொண்டே செல்கிறார். இந்த கதை நிகழும் தருணத்தில் அவர் ஒரு கல்லுரியின் மிக வெற்றிகரமான, அனைவரும் விரும்பும் பேராசியராக இருக்கிறார். அன்றைய தினம் அந்த ஊருடன் தனக்கிருக்கும் எல்லா தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு பெயர் அறியாத அடுத்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். அவரை வழி அனுப்ப உடன் பணி புரியும் சக பேராசிரியர்கள் அவரது வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது யதேச்சையாக தொடங்கும் உரையாடல், பல புள்ளிகளைத் தொட்டு, மரணமற்ற தன்மைக்கு வந்து நிற்கிறது.

12 Angry Men போல, காட்சிகளில் பெரும்பாலும் ஒரு அறைக்குள் நிகழ்வதாக, உரையாடல்கள் மூலம் திட்டமிட்டிருப்பார்கள். மிக சுவாரசியமாக இருக்கும். ரொம்ப லாஜிக்கலாக, மிக மிக புத்திசாலித்தனமாக இந்த திரைப்படம் வந்த புதிதில் கிருத்துவ பழைமைவாதிகளின் எதிர்ப்பை சந்தித்தது.

Blade of the immortal கீழை தேசத்து, ஜப்பான் நாட்டு படம். ஒரு சூனியக்காரியால் மரணமற்ற வரம் பெற்ற சாமுராய் வீரனின் சாகசத்தையும் அவன் மரணத்துக்காக ஏங்கும் தவிப்பையும் பேசும் படம். இவனது ஒரு செயலால் தேசத்தின் படைவீரர்கள் அனைவரும் எதிர்த்து, இவனை கொல்ல வருகிறார்கள். மிக நீண்ட போரினை இவன் தனி ஆளாக எதிர்கொள்கிறான். தனது தங்கை போர் வீரர்களால் கொல்லப்படுகிறார். தானும் இறந்து, ஓர் சூனிய கிழவியின் வாயிலாக இறப்பற்ற தன்மையை அடைகிறான்.

தனது ஆத்மாவை மீட்டு மரணத்தை ஏற்க இவனுக்கு இருக்கும் ஒரே வழி தீயதை எதிர்ப்பது என அறிந்து அதற்காக மேற்கொள்ளும் சாகசம் கதையாக விரிகிறது.

மரணமில்லாத தன்மை கேட்கும் போதே ஆத்சர்யமாகவும் உற்சாகத்தை தூண்டுவது போலவும் இருக்கிறது. யார் கண்டார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் மரணமற்ற யாரோ ஒரு மனிதன் இந்த பதிவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கலாம்.

சார்லியும் கலியும்


அவன் அன்பால் நிரம்பியவன். காற்றைப்போல ஒரு இடத்தில் நிற்காமல் அலைந்து திரிபவன். செல்லும் இடமெல்லாம் அன்பை கதிரியக்கமாய் வெளிப்படுத்துபவன். மற்றவருக்கு உதவுவதும், வாழ்க்கையை அன்பால் கொண்டாடுவதுமே அவனது செயல். இவன் இருந்து சென்ற இடங்களில் எல்லாம் அவள் தங்குகிறாள். அவனை நேரில்பார்க்கமுடியாவிட்டாலும் அவனது அன்பின் வீச்சை அவள் உணர்கிறாள். அவனை காதலிக்கவும் செய்கிறாள். அவனைத் தேடிய அவளது பயணம் திரிச்சூர் பூரம் திருவிழாவில் சங்கமிக்கிறது.
#Charlie (2015)
Malayalam

அவன் கடுங்கோபக்காரன். எடுத்ததெற்கெல்லாம் கோபப்படும், எரிச்சலாகும் இயல்புடையவன். அவனுக்கு காதல் ஏற்பட்டு திருமணமும் ஆகிறது. ஒரு தவிர்க்கக்கூடிய சூழலில் இவனது கோபத்தால் இரண்டு பேருக்கும் சண்டை ஏற்பட்டு அவள் வீட்டை விட்டு வெளியேறுகிறாள். தனது தவறை உணர்ந்த அவன், அவளை சமாதானப்படுத்தி காரில் தனது மாமனார் வீட்டுக்கு செல்கிறான். நல்லிரவில் ஒரு தாபாவில் சாப்பிட நேருகிறது. அந்த தாபாவின் சூழ்நிலையும், அங்கு நடக்கும் சம்பவங்களும் தப்பாகவே முடிகின்றன. அவனது முன்கோபமும் அந்த நிகழ்வுகளை இன்னும் வேகப்படுத்துகிறது. தனது முன் கோபத்துக்கான விலை என்ன என்பதை அவன் உணர்கிறான்.
#Kali (2016)
Malayalam

துல்கர் சல்மான், இரண்டு படங்களிலும் கதைநாயகன். கம்ப்லீட்டாக வேறு வகையாக கேரக்டர்கள். ஆனால் ஆர்பாட்டமில்லாத நடிப்பில் தன்னை நியாயப்படுத்துகிறார். முதல் படத்தில் நாம் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற உணர்வையும் இரண்டாம் படத்தில் நாம் இப்படி இருக்கவே கூடாது என்ற உணர்வையும் ஏற்படுத்துகிறார்.

மிக நல்ல படங்கள்.

 

மாயாநதி 2017


மாயாநதி 2017

மலையாள திரையுலகம் வருடந்தோறும் ஆச்சரியத்தை அளித்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த வருடம் இந்த படம். இதில் நிகழும் காட்சிகள் நமது வாழ்வில் நடந்துவிடும் அனைத்து சாத்தியமும் உள்ளதாக இருப்பதே இந்த படத்தின் நம்பகத்தன்மை.

பெரிய ஹீரோயிசம், பாவனைகள் என்று எதுவுமில்லாமல் தமது எதிர்கால வாழ்வை, இலட்சியத்தை தத்தமது பார்வையில் தேடும் காதலர்களின் கதை. தமிழும் மளையாளமும் இணைந்த கதை களன்.

மாத்யு என்கிற மாத்தான், பிழைப்புக்காக மதுரையில் கொஞ்சம் அன்டர்-க்ரௌண்ட் வேலை செய்பவன். அமெரிக்க டாலர்களை கைமாற்றும் விவகாரத்தில் போலிஸ் வந்துவிட, இவன் மட்டும் தப்பிக்கிறான். அதில் எதிர்பாராமல் ஒரு போலிஸ்காரர் இறந்துவிடுகிறார்.

மாத்தானின் காதலி அபர்ணா. சினிமாவில் கதாநாயகியாக முயற்சித்துக்கொண்டிருப்பவர். இவர்கள் இருவருக்கும் பல முரண்கள் இருந்தாலும் காதல் மாய நதியாய் இருவருக்குள்ளும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. மதுரையிலிருந்து அமெரிக்க டாலர்களுடன் கேரளா வந்துவிடுகிறான் மாத்தான். அதனை கொண்டு, அபர்ணாவையும் கூட அழைத்து துபாயில் செட்டிலாக முயற்சி எடுக்கிறான். அபர்ணா, சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாள்.

தமிழ்நாடு போலிஸ் மாத்தானை தேடி கேரளா வந்து விடுகிறது. மாத்தானையும் பிடித்துவிடுகிறது. தமிழக – கேரள எல்லையில் அவனை என்கவுண்ட்டர் செய்ய திட்டம்.

தமிழக போலிஸாக வரும் இளவரசு கேரக்டர் எக்ஸ்டார்டினரி. அதே போல அபர்ணாவின் தோழியாக வரும் சமீராவும் அற்புதம். திரைக்கதையும் வசனங்களும் பிரமாதம் என்பது க்ளிஷேவாக இருந்தாலும் அது தான் உண்மை. கதையைவிட இந்த படத்தின் காட்சி அனுபவம் சினிமா எனும் கலையின் வீச்சை உணரவைக்கிறது.

❤️

37234998_10216404048124122_2731180471009411072_n

லீலா 2016


லீலா (2016)

இலக்கியப்படைப்பை திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமில்லை. பெரும்பாலும் இலக்கியம் படைப்பாளியின் கட்டுக்கடங்கா சுதந்திரம் + எல்லையற்ற கற்பனை ஆகியவற்றை சார்ந்து இருக்கக்கூடியது. மேலும் அங்கு ஆல் இன் ஆல் படைப்பாளி மட்டுமே க்ரியேட்டராக இருக்கிறார். ஆனால் திரைப்படம் சமூகம், சென்சார், காட்சிப்படுத்தும் வலி, பட்ஜெட் என பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 100க்கணக்கான மனிதர்களின் அணி செயல்பாடுடன் இயங்கும் பெருஞ்செயல். இதனாலேயே இலக்கியப்படைப்புகளை திரைப்படமாக்குவது பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கிறது.

லீலா கேரள எழுத்தாளர் உண்ணி.ஆர் அவர்கள் எழுதிய புனைவு. ஒருவகையில் இந்த கதையை மனித மனதின் அறம், சமூக ஒழுக்கம் குறித்த சர்ரியலிச விமர்சனம் என்றும் கொள்ளலாம். காட்சி படுத்துவதற்கு மிகவும் சிக்கலான கதையை திரைப்படமாக எடுக்கத்துணிந்ததற்கே கேரள திரைத்துறையின் முக்கிய இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு பெரிய வணக்கம். இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. ஆனா, சுவாரசியமான படம்.

பூர்வீக சொத்தும் பணமும் நிறைய இருக்கும், தான்தோன்றியாக வாழ்க்கையை ரசித்துவாழும் குட்டியப்பன், தான் கனவில் கண்ட ஒரு ஃபேண்டசியை செய்து பார்க்க புறப்படுகிறார். அதனை சாத்தியமாக்க எடுக்கும் பிரயத்தனங்களும், அதன் விளைவுமே திரைப்பட காட்சிகளாக விரிகிறது.பேசாப்பொருட்களை பேசத் துணிந்த படம்.

எழுத்தில் இருக்கும் வீரியம் திரைப்படத்தில் சத்தியமாக இல்லை. இத்தனைக்கும் சிறுகதையை எழுதிய உண்ணி அவர்களே இந்த படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக கடைசி காட்சி சிறுகதையில் பெரிய அதிர்ச்சியையும், அடிப்படை கேள்விகளையும் எழுப்பும். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் கருதி சற்றுமொன்னையாக திரைப்படத்தின் கடைசி காட்சி அமைந்திருக்கும்.

சிறுகதையை படித்துவிட்டு படத்தைப் பார்த்தாலோ, படத்தைப்பார்த்துவிட்டு சிறுகதையை படித்தாலோ இதன் வீரியம் விளங்கும். ஒருவகையில் திரைப்படத்தில் க்ளைமாக்சை சப்டிலாக வைத்ததே இயக்குனர் சமூகத்தின் போலி விழுமியங்களை கிண்டலடிக்கத்தான் என்று நினைக்கிறேன். இந்த படம் குறித்த விவாதம் பரவலாக நிகழவேண்டும். நமது அறம், ஈகோ குறித்த பல கேள்விகளை இந்த திரைப்படம் புதைத்துவைத்திருக்கிறது.

படத்தின் இயக்கம், நடிகர்கள் அனைவரும் நேர்மையான உழைப்பை தந்திருப்பது ஒவ்வொறு காட்சியிலும் தெரிகிறது. மாற்று சினிமாவை விரும்புபவர்கள், கொஞ்சம் போல்டான, சீரியசான சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். கூடவே, படத்தை பார்த்துவிட்டு, சிறுகதையையும் இந்த லிங்க்கில் படிக்கலாம்.
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4417

 

13754201_10210008991811711_628992693680910059_n

Remember 2015


ஒரு மனிதன் தனது பழிவாங்கலுக்கு எத்தனை தூரம் போகமுடியும்… அனைத்தையும் இழந்து உடல் தளர்ந்து, நோய்மையிலும், விரக்தியிலும் மரணத்தை எதிர்நோக்கியிருக்கும் தருணத்தில் கூட தனக்கு நேர்ந்த அநீதிக்கு பழிவாங்க சக்தியை திரட்டமுடியுமா. அவ்வளவு குரூரமானதா மனிதனின் மனம்? கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலான, “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா…” நமது நினைவுகளே நமது சாபம் என்று உணர்த்தும். இந்த படத்தை பார்த்து முடிக்கும் போது நமது ஞாபகங்களே மொத்த மனித சமூகத்தின் மிகப்பெரிய எதிரி என்பது புரிகிறது.

ஒரு முதியோர் காப்பகம். 90 வயது Guttman ஒரு காலையில் கண் விழிப்பதுடன் படம் துவங்குகிறது. எழுந்ததும் தனது மனைவி தேடுகிறார். பிறகு அவர் தனது மனைவி சில நாட்களுக்கு முதுமையின் காரணமாக முன் இறந்துவிட்டார் என்று தெரிந்துகொள்கிறார். கட்மேனுக்கு டிஸ்லெக்ஸியா எனும் மறதி வியாதி இருக்கிறது. சற்று நேரம் கண் அயர்ந்தாலும் சில விஷயங்களை மறந்துவிடுகிறார். விழித்தவுடன் திரும்பவும் தனது இறந்து போன மனைவி உயிருடன் இருப்பதாக நினைத்துத் தேட ஆரம்பிக்கிறார். வயோதிகம் காரணமாக தளர்வு, அயர்ச்சி ஆகியவையும் அவரை சிரமப்படுத்துகிறது.

அதே காப்பகத்தில் அவரது வயதை ஒத்த நண்பர் Max Rosenbaum இருக்கிறார். இவர், சுவாசக்கோளாரினால் அவதிபடுபவர். கால் ஊனமானவர். அவர் Guttman ஐக் கூப்பிட்டு, முன்பு வாக்களித்திருந்த படி, தனது மனைவி இறந்தபிறகு செய்யவேண்டிய முக்கியமான பணி குறித்து ஞாபகப்படுத்துகிறார். அது குறித்த விரிவான கடிதத்தை Guttmanனிடம் தருகிறார்.

இவர்கள் இருவரும் யூதர்கள். ஜெர்மனியின் நாஜிப்படையினரால் சித்திரவதைக்கு ஆளானவர்கள். அந்த வன்கொடுமை கூடாரத்தில் தமது குடும்பங்களை இழந்தவர்கள். தமது குடும்பத்தை கொன்ற ஜெர்மனிய தளபதி, Otto Wallisch என்பவன் இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்ற பிறகு தனது பெயரை Rudy Kurlander என மாற்றிக்கொண்டு, ஜெர்மானியரால் பாதிக்கப்பட்ட நபரைப்போல போலியான டாக்குமெண்ட்களுடன் Rudy Kurlander என்ற பெயரில் அமெரிக்கா – கனடாவில் புலம்பெயர்ந்திருப்பதாக கண்டுபிடிக்கிறார்.

அமெரிக்க – கனடா நாடுகளில் Rudy Kurlander என்ற பெயரில் நான்கு பேர் இருப்பதாக Max Rosenbaum கண்டுபிடிக்கிறார். அவர்களில் யார் Otto Wallisch என கண்டுபிடித்து கொன்று பழி தீர்ப்பதற்காக கட்மேன் பயணப்படுகிறார். அவருக்கு வேண்டிய லாஜிஸ்டிக் உதவிகளை முதியோர் இல்லத்தில் இருந்தபடியே Max செய்து கொடுக்கிறார்.

கட்மேன், டிஸ்லெக்ஸியா வியாதியுடன் அவ்வப்போது தான் எதற்காக பயணம் மேற்கொள்கிறோம் என்றே மறந்துபோய்விடும். இந்த வலியுடன் உண்மையான Otto Wallisch யார் என்பதை கண்டறியும் பயணமாக இந்த படம் விரிகிறது.

Zev Guttmanஆக Christopher Plummer நடித்திருப்பார். செம்மையான நடிப்பு. அவருக்கு உண்மையிலேயே 90 வயது என்பதால் அவரது இயல்பான இருப்பே படத்துக்கு தேவையான நியாயத்தை கொடுத்துவிடுகிறது.

அமைதியான, அதே சமயம் அடுத்து என்ன என்று பரபரப்பை ஏற்படுத்தி பெரிய அதிர்வுடன் முடியும் அற்புத படம். படத்தின் இறுதி காட்சி நமது நம்பிக்கை, அறம், சாதி மற்றும் மதம் சார்ந்த பெருமிதத்தின் அபத்தத்தை கேள்வி கேட்கக்கூடியது.13775938_10210090881098892_3138812620845877385_n

Whiplash (2014)


10924799_10206177540667827_5182964045401759871_nஎங்க ஆபிஸில் ஒருத்தர் இருக்கார். சீனியர். அவருடன் சில ப்ராஜெக்ட்களில் நான் சேர்ந்து ஒர்க் பண்ணியிருக்கேன். அவரோட ஒர்க் பண்ணும் போதெல்லாம் எனக்கு அவர் மீது கோபமாகவும், பயமாகவும் இருக்கும். யாரு என்னன்னுல்லாம் பாக்கமாட்டார். கண்டபடி திட்டுவார். ஒவ்வொன்னுலயும் குறை கண்டுபிடிச்சி கடுப்ப கிளப்புவார். எப்படா அந்த வேலைகள் முடியும்ன்னு நான் காத்துக்கிட்டு இருப்பேன். ஆனா, மொத்தமா என்னுடைய கடந்த 13 வருட வேலையை நினைச்சிப்பாத்தா, என்னுடைய பெஸ்ட் லேர்னிங் அவருடன் இருந்த காலத்தில் தான் அமைந்திருக்கிறது.

சில பேர் இப்படித்தான். மத்தவங்க மேல கம்பாஷனே இல்லாம, கடுந்தோலுடன் மனசு முழுக்க பேரன்புடன் செயல்படுவார்கள். அன்பு எப்படி கோபமாக, மற்றவர் மனதை காயப்படுத்துவதாக வெளிப்படும்? இந்த படத்தில் வெளிப்பட்டிருக்கு. J.K.Simmons, மொட்டத்தல ப்ளெட்சராக நடித்திருக்கும் இந்த படம் க்ளாசிகல் மாஸ்டர் பீஸ். ரெண்டு நாளைக்கு முன்னாடி இந்த படத்தை பாத்தாலும் இப்பவும் தலைக்குள்ள ட்ரஸ் சத்தமும், ப்ளெட்சருடைய திட்டும் கேட்டுக்கிட்டே இருக்கு.

டிரம்ஸ் இசையில் மிகப்பெரிய சாதனை செய்யனும்னு நினைக்கும் ஆன்ட்ரூவிடம் இருந்து தி பெஸ்ட்டை வெளிப்படுத்த ப்ளெட்சர் கையாளும் முறை நிஜமாவே டரியலாக்குகிறது. அந்த கடைசி சீனில் ஆன்ட்ரூ தன்னோட பெஸ்ட்டை கொடுக்கும் போது ஒரு புன்னகையும், வெற்றிபெற்ற களிப்பும் கலந்து ப்ளெட்சர் ஸ்மைல் பண்ணுவாரு. அங்கயே படம் ஓவர்.

முதல் காட்சியில் டபுல் பீட் வாசிக்கச் செய்யும் அவரது கம்பீரமான என்ட்ரி, ரிகர்சல் போது தப்பா வாசிக்கறவன கண்டுபுடிக்கும் முறை, எதிர்பாக்கும் டெம்போ வரலைன்னு மூனு பேரை மாத்தி மாத்தி ட்ரம்ஸ் வாசிக்கச் செய்யும் மரண பிடிவாதம், அந்த ஹோட்டலில் சார்லி பார்க்கர் பத்தி பேசும் பேஷன், கடைசி கம்போஷன் என சிம்மன்ஸ் அதகளம் பண்ணியிருப்பார். ஆன்ட்ரூ வாக நடித்த மைல்ஸ் டெல்லரும் அன்டர் ப்ளே செய்து, கடைசியில் விஸ்வரூபம் எடுப்பது அற்புதமாக இருந்தது.

Must watch musical drama.