எனக்கு செல்வராகவனை ரொம்ப பிடிக்கும். அதனாலேயே ஆயிரத்தில் ஒருவன் 2009ம் ஆண்டு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த துக்க அதிசயமாக பார்க்கிறேன்.
கேஷவலாக அப்படியே நடந்துகொண்டே செல்லும் பாதையின் ஒரு புள்ளியில் நமது பூர்வ குடிகளை, அவர்களின் மாறாவாழ்க்கைமுறையை சந்திப்பது என்பது மிகவும் ப்ரெஷ்ஆன ஸ்டோரி லைன். ஹாலிவுட் காரர்களுக்கே சவால் விடக்கூடியது. ஆனா, முழுமையான, தெளிவான எக்சிக்யூஷன் இல்லாமல் பலபேருடைய ஆகச் சிறந்த பங்களிப்பு வீணானது தான் வேதனை.
இன்றைக்கும் ஜிவிப்ரகாஷ், பார்த்திபன், ரிமாசென், கார்த்தி ஆகியோர்களின் வாழ்நாள் சாதனை பங்களிப்பாக இந்த படம் இருக்கும். படத்தின் கலை வடிவங்களும், வசனமும் மிக சிறப்பாகவே இருக்கும். எல்லாம் நல்லாயிருந்தும் படம் அதன் தரத்துக்கும் எதிர்பார்ப்புக்கு நியாயம் செய்யவில்லை என்பது தான் பிரச்சனை.
இந்த படத்தை சுந்தர் சி பேரரசு போன்றவர்கள் இயக்கியிருந்தால் தலையில் வைத்து கொண்டாடியிருக்கலாம். ஆனா செல்வராகவன் செம்மையாக திட்டமிட்டு, செயல்படும்போது சொதப்பினால் வரும் ஏமாற்றம் தான் தாங்கமுடியவில்லை. எல்லா பாடத்திலும் 100க்கு 100 வாங்கி நல்லா படிக்கிற மாணவன் ஜஸ்ட் பாஸ் ஆனா வரும் கடுப்பினை தான் இந்த படம் தருகிறது.
ஓக்கே. பேக்கிரவுண்ட் போதும். இனிமே எனக்கு இந்த படத்தில் உறுத்தலாக தெரிந்த அம்சங்களை பார்ப்போம்.
1. கடவுளின் உருவமாக பார்க்கப்படும் அதிசய சக்திகொண்ட சோழர்கள் பாண்டியர்களுக்கு எதிரான கடைசி போரில்தமது திறன்களை வெளிப்படுத்தாதது
படத்தின் துவக்கம் முதலே கடல் கடந்த சோழர்கள் அதிசய சக்தி படைத்தவர்கள் என்று நிறுவப்பட்டுவருகிறது. கடலில் அவர்கள் ஏற்படுத்திவைத்திருக்கும் கொலைகார மீன்களில் இருந்து பாலைவன நடராஜர், பாம்பு மழை, என அனைத்து ட்ராப்களும் சோழர்கள் இயற்கையை கட்டுப்படுத்தும் சக்தி வாய்ந்தவர்கள் என்பதை நிறுபிப்பதாக உள்ளது. அந்த தீவில் வசிக்கும் பழங்குடியினரும் சோழர்களை கடவுள்கள் என்றே குறிப்பிடுகின்றனர். அந்த பாழடைந்த சோழ நகரில் கார்த்தி உள்ளிட்டவர்களுக்கு புத்தி பேதளித்துப்போவது, கார்த்தியின் முதுகில் புலி சின்னம் தோன்றுவது, ரிமாவை பார்த்திபன் அந்தரத்தில் மாயமாக உயர்த்தி நிழல் வழியாக அவரை புணர்வது என முழுக்க முழுக்க சோழர்கள் சாமானியர்கள் இல்லை அவர்கள் தனி சக்தி வாய்ந்தவர்கள் என்பது படத்தின் மூன்றில் இரண்டு பங்கு பகுதிகளில் வலியுருத்தப்பட்டு வருகிறது. ஆனா கடைசியில் நடக்கும் போரின் போது மிக சாமானியர்கள் போல பலியாவது இதுவரை சோழர்களின் மீது கட்டமைக்கப்பட்ட அதி திறன் பிம்பம் உடைந்து நொறுங்குகிறது. இந்த இடத்தில் படத்தை பார்க்கும் ரசிகன் குழம்பிப் போகிறான்.
2. உள்ளுர் அரசாங்கம் அதன் அமைப்புகள் எதுவுமே படநிகழ்வுகளில் வெளிவராதது.
படத்தின் பெரும்பாலான களம் வியட்நாம் அருகில் இருக்கும் தீவில் நிகழ்வதாக காட்டப்படுகிறது.ஆனால் படத்தின் எந்த காட்சியிலும் உள்ளுர் போலிசோ, ராணுவமோ வருவதே இல்லை. இப்படி ஒரு நாடு தனது ராணுவத்தை முழுமையாக வேறொரு நாட்டுக்கு கொண்டு போய், அவர்களின் உதவியே இல்லாமல் ஒரு சமூக குழுவை கொன்று சாய்ப்பது நம்பத்தகுந்ததாக இல்லை. மேலும் வியட்நாம் உள்ளிட்ட நாடு மற்றும் தீவுகளில் பாலைவனம் என்பதே இல்லை எனும் போது இந்த படத்து தீவில் மட்டும் பாலைவனம் வருவது புவியியல் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. மெட்ராசுக்கு பக்கத்தில் பனி மலையை காட்டுவது எவ்வளவு அபத்தமோ அது போன்றது இது.
3. தொன்ம குடிகளாக வாழும் சோழர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்தது
இது சகித்துக்கொள்ளவே முடியாத காட்சி அமைப்பு. அந்த தீவு பசுமையானதாக தான் இருக்கிறது. மேலும் சிதிலமடைந்த சோழர் நகரமும் பொன், வைரம் என பல பொக்கிஷங்களுடன் இருக்கிறது. உண்மையான வரலாற்றுபடி கடல் கடந்து சென்று அங்கோர்வாட் உள்ளிட்ட வென்ற இடங்களில் எல்லாம் அற்புதமான கட்டிடம், வாழ்க்கை முறையை சோழர்கள் உலகுக்கு அளித்திருக்கிறார்கள். ஆனா, இந்த படத்தில் சோழர்கள் கற்காலத்துக்கு திரும்பியது போலவும், நமது தமிழ் கலாச்சாரத்துக்கு சம்மந்தமே இல்லாத ஆள் கொல்லும் கிரேக்க போட்டிகளை நடத்துவதும் வரலாற்றை திரிப்பது போல இருந்தது.
4. மீட்கவந்த குறிப்புகள் தவறாகிப்போவது
படத்தின் மிக முக்கிய நம்பிக்கை சோழர்களின் முன்னோர்கள் எழுதிவைத்திருக்கும் எதிர்கால குறிப்புகள். அவற்றின் படியே எல்லா நிகழ்வுகளும் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனா, அந்த நிகழ்வுகளில் தவறு நிகழ்ந்து, அனைவரும் கொல்லப்படலாம் என்பதை கணிக்கமுடியாத முன்னோர்கள் இருந்திருப்பது திரைக்கதையில் முன்னோர் குறிப்புகளின் பங்கு குறித்த நம்பிகையின்மையே ரசிகர்களிடையே ஏற்படுத்திவிடுகிறது.
5. கடைசி கட்ட காட்சிகளை இலங்கை தமிழர் கொடுமையுடன் தொடர்பு படுத்தும் அமெச்சுர் தனம்.
கடைசியில் சிறைபிடிக்கப்பட்ட சோழர்கள் மீது பாண்டியர்கள் செலுத்தும் வன்கொடுமை காட்சிகள் இலங்கை தமிழர் மீது நடத்தப்பட்ட கொடுமையோட லிங்க் செய்தார்கள் சில பிரகஸ்பதிகள்.உண்மையில் செல்வராகவன் அப்படித்தான் நினைத்து காட்சிகளை வடிவமைத்தார் என்றால் அதைவிட மிகப்பெரிய முட்டாள்தனம் இருக்கமுடியாது.
6. பல ஆங்கில படங்களின் தாக்கம் / பிரதிபளிப்பு
இன்டியானா ஜோன்ஸ், க்ளாடியேட்டர் என படத்தின் பிற்பகுதி காட்சிகள் இலக்கே இல்லாமல் தேவையுமில்லாமல் தொகுக்கப்பட்டது போல இருக்கிறது
7. யார் ஆயிரத்தில் ஒருவன்?
படத்தின் தலைப்பு ஆயிரத்தில் ஒருவன். அப்படின்னா ஒரு ரேர் ஹீரோ evolve ஆகி மொத்த சமூகத்தையும் காப்பாற்றுவது என்பது தான் பொருத்தமாய் இருக்கும். ஆனா கடைசியில் எல்லாம் இழந்து சிறுவனாக இருக்கும் சோழ இளவரசனை எடுத்துக்கொண்டு கார்த்தி காணமல் போகிறார். படத்தின் முடிவு யாரைத் தான் / எப்படித் தான் படத்தலைப்பை நியாயப்படுத்துகிறது? அடுத்தடுத்த பாகங்கள் வரப்போகின்றன என்றால் கடந்த 6 வருடங்களில் இதன் அடுத்தபாகம் பற்றிய பேச்சே இல்லை. அப்படின்னா இந்த படம் இன்கம்ப்ளீட் என்று தானே எடுத்துக்கொள்ளமுடியும்.
ஆக என்னளவில் இந்த படம் பான்டசியாகவும் சரி, ஹிஸ்டாரிகலாகவும் சரி, சப்டில் ஸ்கிரிப்ட்டாகவும் சரி எந்தவகையிலும் சிறப்பாக கையாளப்படவில்லை என்பதே முடிவு.