இந்திய சினிமாவில் காமம் என்பது பேசாப்பொருள். அப்படியே பேசப்பட்டாலும் காமம் என்பது ஆணிய பார்வையில், ஒழுக்கம், கற்பு என பலவித கட்டமைக்கப்பட்ட அறங்களால் நிரப்பப்பட்டே வந்திருக்கிறது.
இந்திய – தமிழ் சினிமா, தனது பெரும்பாலான படங்களின் வாயிலாக கலாச்சார காவலர் வடிவத்தை பிடித்து வைத்துக்கொண்டாலும், மறக்காமல் பெண் கதாப்பாத்திரங்களின் கவர்ச்சியை வணிகத்துக்காக பயன்படுத்திக்கொண்டது முரணான விஷயம்.
இதனை உடைத்து பெண்ணியப் பார்வையில் காமம் என்பதை குறித்த படங்கள் ஹிந்தியில் அப்பப்ப வந்து அதிர்வை ஏற்படுத்தத் தான் செய்கிறது. தமிழில் பாலச்சந்தர், ருத்ரய்யா போன்றவர்கள் 80களில் செய்த முயற்சி அடுத்த கட்டத்துக்கு நகராமலேயே போய்விட்டது.
சில வருடங்களுக்கு முன் லீனா யாதவின் இயக்கத்தில் வெளிவந்த பார்ச்ட் படம் கிராமப்புற பெண்களின் வாழ்வியலை பேசியது. இந்த லஸ்ட் ஸ்டோரிஸ், நகர்புறத்தில் வெவ்வேறு நிலைகளில் வாழும் 4 பெண்களின் கதையை பேசுகிறது. இந்த படம் அந்தாலஜி வகையை சேர்ந்தது. ஒரே தீமைச் சேர்ந்த நான்கு குறும்படங்களின் தொகுப்பு (Wild Stories போல).
ஹிந்தி திரைப்பட உலகின் மிக முக்கிய இந்த தலைமுறை இயக்குனர்கள், அனுராக், சோயா அக்தர், திபாகர் பானர்ஜி, கரண் ஜோஹர் ஆகியோர் தலா ஒரு குறும்படத்தை இயக்கியிருக்கிறார்கள்.
இந்த படத்தில் வரும் பெண்கள், தமது ஆசைகளை பூட்டி வைத்துக்கொள்வதில்லை. தாம் கற்பு குறித்த பொதுவான விதிகளை பின்பற்றாது குறித்தும் அலட்டிக்கொள்வதில்லை. தீதும் நன்றும் சேர்ந்த அவர்களின் ஊசலாட்டமும் இறுதியில் கிடைக்கும் தெளிவும் மிக அழகான சிறுகதைகளாக படமாக்கப்பட்டிருக்கிறது.
கதை என்று பார்த்தால் பெருசா சொல்வதற்கில்லை. ஆனால் அதனை பிரசன்ட் செய்த விதம், அந்த தவிப்பை பார்வையாளர்களுக்குள் கடத்திய விதம் அற்புதமாக கையாளப்பட்டிருக்கிறது. சந்தேகமே இல்லாமல் ராதிகா ஆப்டே அசுர நடிப்பை காட்டியிருக்கிறார். அவர் பேசும் வசனங்கள் மிக மிக புத்திசாலித்தனமாக எழுதப்பட்டிருக்கிறது. மற்ற நடிகர்கள், படத்தை எடுத்த விதம் அனைத்தும் மிக சுவாரசியமாக இருக்கிறது.
சிலருக்கு இந்த படம் பிடிக்காமல் போகலாம். உண்மையில் இது பெண்களின் அக உலகம், சற்று வெளிப்படையாக பேசப்பட்டிருக்கிறது. படங்களை இயக்கியிருப்பது ஆண்கள் என்பதால் இது சம கால பெண்கள் பற்றி புரிந்து கொள்ள ஆண்களுக்காக எடுக்கப்பட்ட படம் எனலாம்.
Please try See, if you don’t bother about So called, constructed Gender Values!