தொழில் வல்லுநர் – புத்தக மதிப்புரை


978-93-5135-153-5_b

அடிப்படையில் நான் ஒரு நிறுவனத்தில் மத்திய மேலாண்மை பொறுப்பில் இருப்பவன். எனது பணி சார்ந்து எனக்குக்கீழ் பணிபுரியும்  நண்பர்களுக்கு பலவித பயிற்சிகளை அடிக்கடி நான் நடத்தவேண்டியிருக்கும். அவர்களுக்கு தொழில்வல்லுநர் தன்மை குறித்து பலமுறை பாடங்கள் எடுத்திருக்கிறேன். இப்போது எதேச்சையாக இதே தலைப்பில் இந்த புத்தகத்தை கண்டவுடன் எனது பயிற்சிகளில் பயன்படுத்த உதவுமே என்ற எண்ணத்துடன் படிக்கஆரம்பித்தேன்.ஆனால் அதையும் தாண்டி, என்னுடைய அடிப்படைக் குணம் மற்றும் திறன் குறித்த சுய ஆய்வை மறுபடியும் திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த புத்தகம் பெரிய உத்வேகம் அளித்துள்ளது.

நான் தீவிர வாசகன் கிடையாது. ஒரு புத்தகத்தையே வாரக்கணக்கில், மாதக்கணக்கில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்பவன். ஆனால் கடந்த தீபாவளி விடுமுறைக்காக எனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு இரயிலில் திரும்பும்போது பொழுதை போக்க சாதாரணமாக படிக்க ஆரம்பித்த நான், முழுபுத்தகத்தையும் ஒரே வீச்சில் அந்த பயணத்தின் இறுதிக்குள் படித்துமுடித்திருந்தேன். மிகவும் சுவாரசியமான நடை.

போட்டி நிறைந்த இந்த உலகில் பொருளாதார தேவைகளை தாண்டி தமது இருப்பினை உறுதிசெய்வதற்காகவும், தான் சார்ந்திருக்கும் துறையில் மேன்மேலும் வளர்ந்து செல்லவும் அனைவருமே விரும்புகின்றனர். இன்றைய அறிவுசார் வாழ்க்கைச் சூழலில் எல்லாவித தொழில்களுமே தனித்துவ தொழில்வல்லுநர் தன்மையை கோருகின்றன. முன்பெல்லாம் தொழில்வல்லுநர் என்றால் நமக்கு மருத்துவர், வழக்குரைஞர், பொறியாளர், கணக்காளர் என்று சில குறிப்பிட்ட தொழில்கள்தான் ஞாபகத்துக்கு வரும். ஆனால் முறையான ஈடுபாடும் செயல்திறனும் இருந்தால் பொதுவான சமூகம் கீழ்நிலைத் தொழில்களாக கருதும் தெரு பெருக்குபவர், ப்ளாட்பாரத்தில் கடைகாரர், வீட்டுக்கு தினசரி செய்தித்தாள் போடுபவர் என அனைவருமே தொழில்வல்லுநர்கள்தான். இதைப்பற்றித் தான் இந்த புத்தகம் பேசுகிறது.

வெறும் தத்துவ வார்த்தைகளில் மட்டுமே பந்தல் போடாமல், வெற்று பிரசாரத்தில் தனது அட்வைஸ்களை மட்டுமே திணிக்காமல் இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு.சுப்ரதோ பாக்ச்சி மிக எளிமையாக தனது வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும், தான் பார்த்த மனிதர்கள், படித்த புத்தகங்கள் வாயிலாகவும் இன்றைய உலகில் தொழில் வல்லுநர்களின் தேவை என்ன என்பதை ஒரு நண்பனைப் போல சொல்லிச்செல்கிறார். இந்த புத்தகத்தின் ஆகச்சிறந்த பலமே இது விஷயங்களை எடுத்துவைக்கும் முறை. நம் மீது அக்கறையுள்ள நண்பன் நாட்டுநடப்புகளை நம்மிடம் இயல்பாக பகிர்ந்துகொள்ளுவது போல இந்த புத்தகத்திலும் தொழில் வல்லுநர் என்பவரின் குணங்கள், தேவைப்படும் திறன்கள்,மாறிவரும் உலக சந்தையில் தொழில்வல்லுநர் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் என பல தளங்களில் அற்புதமான கருத்தை வழங்குகிறது.

மெத்தப்படித்து உலகுக்கே மேலாண்மை அறிவை வழங்கும் மேதைகளின் தொழில்திறனுக்கும் ஆசிரியர் குறிப்பிடும் படிப்பறிவில்லாத வெட்டியானின் தொழில்திறனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்ற கருத்து தொழில்வல்லுநர் குறித்து அகடமிக் உலகம் இதுவரை சொல்லிவரும் சிந்தனையில் இருந்து மாறுபட்டதாகவும்,ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கிறது. அதே போல தொழில்வல்லுநர் என்பவரின் தகுதி அவரது திறமை சார்ந்து அளக்கப்படுவதை விட, அவரது பண்பு சார்ந்து அளக்கப்படுவதின் அவசியத்தை புத்தகத்தில் எல்லாப்பக்கங்களிலும் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பதிவுசெய்கிறார்.

அறிவு சார்ந்து செயல்படுவதை விட, இதயம் சார்ந்து, மனப்பூர்வமாக செயல்படுவதின் மகத்துவத்தை, அதற்கான தேவையை பல அனுபவ குறிப்புகளின் மூலம் உணர்த்துவது சிறப்பாக இருந்தது. பணமே பிரதானமாகிவிட்ட இன்றைய கமர்ஷியல் உலகில், பணத்தைவிட அடிப்படை பண்புகளுக்கும் கொள்கைகளுக்கும் பெரிய மதிப்பிருக்கிறது என்பதை தமது பலவித வாழ்க்கை அனுபவங்களின் வாயிலாக பகிர்ந்துகொள்ளும்போது நமக்குள் நம்பிக்கை பிறக்கிறது.

கல்லுரி மாணவர்கள், இளைய தொழில்வல்லுநர்கள் ஆகியோர் இந்த புத்தகத்தை கட்டாயம் படிக்கவேண்டும். இதன் மூலம் தம்மை தமது துறைக்கு தகுந்தவாறு தயார்படுத்திக்கொள்வதுடன், தான் மேற்கொள்ளும் பணியை இன்னும் சிறப்பாக, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக மேற்கொள்ள தேவையான நடைமுறை ஆலோசனைகளை இந்த புத்தகம் நிச்சயம் வழங்கும். இந்த புத்தகத்தின் மூலம் தனிப்பட்ட அளவில் நான் புதியதாக கற்றுக்கொண்ட பல விஷயங்கள் எனக்குள் புதிய புரிதலை ஏற்படுத்தியிருக்கிறது. அதே போல இதனை படிக்கும் ஒவ்வொறுவரும் எதாவது ஒருவகையில் தமது ஆளுகை குறித்த புரிதலை பெறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

மிகமுக்கியமாக இது ஒரு மொழிபெயர்ப்பு புத்தகம் என்ற உணர்வே ஏற்படவில்லை. வெகு இயல்பாக புத்தகத்துக்குள்,தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்வது போல வெகு இயல்பாக அலுங்காமல் குலுங்காமல் பயணிக்க முடிகிறது. இந்த புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்த திரு.பி.வி.ராமசாமி இதன் மூல புத்தகத்துக்கு மிகப்பெரிய நியாயம் செய்திருக்கிறார்.

(மறுபதிப்பு – இந்த புத்தகம் குறித்து http://mathippurai.com/ இணையதளத்தில் வெளியான எனது மதிப்புரை)

Suspect X (2008) – ஜப்பானிய த்ருஷ்யம்.


Comparativeஆ பிசிக்ஸ், கணிதம் படித்தவர்களிடையே logical reasoning வலிமையா இருக்கும். ஆனா, thinking processல் பிசிக்ஸ் படிச்சவங்களுக்கும் கணிதம் படிச்சவங்களுக்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. பிசிக்ஸ் படிச்சவங்க, நிகழ்வுகளை கவனிப்பாங்க. அதிலிருந்து ஹைபொதிஸிஸ் டிரைவ் பண்ணுவாங்க. அந்த ஹைபோதிஸிஸ உறுதி செய்ய ஆய்வுகள் மேற்கொள்ளுவார்கள். ஆனா கணித பின்னணி இருப்பவர்கள் தாம் கவனிக்கும் விஷயங்களின் சாத்தியமாகக்கூடிய எல்லா விளைவுகளையும் ஒவ்வொன்றாக தமது மனசுக்குள் சிமுலேஷன் செய்து ஓட்டிப்பார்ப்பார்கள். ஒவ்வொன்றின் தவறு சரியும் மனசுக்குள் விரிந்து அதனடிப்படையில் இறுதி விளைவினை வரையறுப்பார்கள். கணிதத்தை நேசிப்பவருடைய மனசு + மூளை ஆய்வக லேபைப் போல வேலை செய்யும்.

இப்படி ரெண்டு ஜீனியஸ். ஒருத்தர் பிசிக்ஸ் ப்ரொபஸர் (யுக்கவா). இன்னொருத்தர் அவரது கல்லுரி கால ப்ரெண்ட் கணிதம் சொல்லித்தரும் பள்ளி ஆசிரியர் (இஷிகாமி). இந்த ரெண்டு பேருக்கும் நடக்கும் கேட் அன்ட் மவுஸ் கேம் தான் ஸஸ்பெக்ட் எக்ஸ். இந்த படத்துக்கு இன்னொறு ஸ்பெஷல் இருக்கு. மலையாளத்தில் மரண ஹிட் அடிச்ச த்ருஷ்யம் படத்தோட அடிப்படை கரு இந்த படத்தில் இருந்து துவங்குவதை படம் பார்க்கும் போது உணரமுடியும். நோ. நிச்சயம் இந்த படத்த பாத்து த்ரிஷ்யம் காப்பியடிக்கப்பட்டது என்று சொல்லக்கூடாது. அது மகாஅபத்தம். இந்த படத்துக்கு செய்யும் துரோகம். ஆனா, மெமண்டோவுக்கும் கஜினிக்கும் உள்ள தொடர்பு போல இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கணவனை பிரிந்து தனது டீன்ஏஜ் வயது மகளுடன் வாழும் பெண். அப்பப்ப அவரது கணவன் வந்து அவர்களுக்கு தொந்தரவு கொடுத்து, பணம் பிடுங்கி செல்கிறான். ஒரு நாள் அது போன்ற தருணத்தில் அவனை இந்த பெண்ணும் அவரது மகளும் தற்செயலாக கொலை செய்து விடுறார்கள். பக்கத்து வீட்டில் தனிமையே துணையாக குடியிருக்கும் கணித ஆசிரியர் இஷிகாமி. அவருக்கு அந்த பெண்ணின் மீது ஒருவித அன்பு. அவர்களுக்கு உதவிசெய்ய ஆரம்பிக்கிறார். அந்த பிணத்தை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு சமாதானம் சொல்லி போலிஸ் வந்தால் எப்படி பதில் சொல்லவேண்டும் என்று பயிற்சி அளிக்கிறார். மறுபக்கம் போலிஸ் பிசிக்ஸ் ப்ரொபசரின் துணையுடன் இந்த கொலையினை துப்பறிய இறங்குகிறார்கள். (இவரோட இன்ரோ சீனே சூப்பர் ஸ்டார் அறிமுகம் போல அத்தன மிரட்டலாக அமைந்திருக்கும்).

யுக்கவாவுக்கும் இஷிகாமிக்கும் இடையிலான பழைய கால நட்பு, அதனை தாண்டி இந்த சம்பவத்தில் அவர்கள் இருவரும் ஒருத்தரை ஒருத்தர் போட்டு வாங்குவது, ஆகியவற்றை சார்ந்து நிகழும் உரையாடல்கள் ரொம்ப டைட்டா, க்ரிஸ்ப்பா ஆணியடிப்பது போல இறங்கும்.

ஒரு கொலை. அதில் தொடர்புடைய சில கதாபாத்திரங்கள். இவற்றை மட்டும் வைத்துக்கொண்டு ஆடியன்சுக்கு தண்ணி காட்டும் ஹிட்ச்காக் ஸ்டைலில் இந்த படம் இயங்குகிறது. ஆனா, இதனை வெறும் சஸ்பென்ஸ் திரில்லராக மட்டும் பார்க்கமுடியவில்லை. அதையும் தாண்டி தனது திறமைக்கு உரிய அங்கீகாரமின்மை, அன்புக்கு ஏங்கும் மனதின் ஏக்கம் ஆகியவை எந்த அளவுக்கு ஒருவரை ஆதிக்கம் செய்யும் என்பதை இயக்குனர் (ஹிரோஷி நிஷிதானி) அழகாக வெளிப்படுத்தியிருப்பார்.

சினிமாடோக்ராபி க்ரிஸ்டல் தூய்மையுடன் இருக்கும். கடைசி சில காட்சிகளில் இந்த படம் முற்றிலும் வேறொரு தளத்துக்கு சென்றுவிடும். இதன் சுவாரசியத்துக்கும், ப்ரசென்டேஷனுக்கும், பேசுகின்ற முக்கிய பொருளுக்காகவும் கட்டாயம் பார்க்கவேண்டிய படம்.suspect-x-02

தமிழ் சினிமா 2012: பறவைப் பார்வையில்….


2012

சினிமா வெறும் என்டர்டெய்ன்மெண்டுக்காக தான் என எளிதில் கடந்து சென்றுவிடமுடியாது. வருடத்துக்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் புழங்கும் துறை. தமிழக அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் தவிர்க்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் அதிசக்தி வாய்ந்த ஆயுதம். சினிமா பேசும் செய்தியை வெகுஜனமக்களின் ரசனையையும் சமூகப்போக்கையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாகத் தான் காணமுடிகிறது. இந்தியாவில் வங்காள, மராத்தி மற்றும் மலையாள சினிமாக்களைப் போல தமிழ் சினிமா இன்னும் தனித்துவம் பெறவில்லை என்றாலும் அதற்கான வெளிச்சக்கீற்றுகள் இந்த ஆண்டு தென்பட்டிருப்பது பெரிய ஆறுதல்.

வழக்கம் போல இந்த வருடமும் தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. இது தவிர ஆங்கில மற்றும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களின் வருகை இதே அளவுக்கு இணையாக இருக்கும். அப்படிப் பார்த்தால் சராசரியாக மாதத்துக்கு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள். கடல் அலையைப் போல சினிமா ரசிகனை அடுத்தடுத்து கனவுகளின் கடலுக்குள் இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறது. 10 வருடத்துக்கு முன்பு போல தமிழில் எந்த படமும் 100 நாள் 150 நாள் ஓடக்கூடிய சாத்தியம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வெள்ளிக்கிழமை வெளிவரும் படம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை தாங்கினாலே போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இரண்டு வெள்ளிகளை கடந்து ஓடினால் பெரிய ஹிட் என பெருமிதப்பட்டுக்கொள்ளலாம்.

நேர்மையுடனும், சுவாரசியத்துடனும் சொல்லப்பட்ட எந்த கதையையும் தமிழ் ரசிகன் ஏமாற்றவே இல்லை எனும் போக்கு உருவாகிவருகிறது. நாலு சிப்ஸை காற்றடைத்த பையில் போட்டு அநியாய விலைக்கு விற்கும் லேஸ், குர்குரே பாக்கெட்டுகளை போல ஸ்டார் வேல்யுவின் கவர்ச்சியான அம்சங்களை மட்டுமே ஆதாரமாக கொண்ட குப்பைகளை புறக்கணித்தலும் கடந்த ஆண்டில் ஆரவாரத்துடன் நிகழ்ந்தேறியிருக்கிறது மகிழ்ச்சி தருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் என்னை ஆச்சரியப்படுத்திய, பொருளாதார ரீதியில் வெற்றி பெற்ற, மரண மொக்கை அனுபவம் தந்த படங்களை வரிசைப்படுத்தி பார்க்கிறேன்.

thuppakki

இந்த வருடம் ரஜினி, கமல் ஆகிய ஹெவிடுயூட்டி நடிகர்களின் படங்கள் ஏதும் வரவில்லை என்றாலும் 50 கோடிக்கும் மேலாக செலவு செய்து தயாரிக்கப்பட்ட படங்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இருந்தன. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்றி, தந்திரத்துடன் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட பெரிய நடிகர்கள் நடித்த மெகா பட்ஜெட் படங்களான வேட்டை, சகுனி, பில்லா-2, முகமூடி, 3 (மூன்று), தாண்டவம், மாற்றான், போடாபோடி, நீஎபொவ என ஏறக்குறைய சோ கால்ட் மெகாநடிகர்களை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த வரிசையில் தப்பிய ஒரே மெகா பட்ஜெட் படம் துப்பாக்கி மட்டுமே. ஆனா, துப்பாக்கியின் வெற்றிக்கு விஜயின் அன்டர்ப்ளே ஆக்டிங்கும் மிக முக்கிய காரணம். அவர் தனது வழக்கமான பஞ்ச்சை இந்த படத்திலும் தூவியிருந்தால் துப்பாக்கி இன்னொறு “சுறா”வாகியிருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, பெரிய நடிகர் பட்டாளம் இல்லால் வெளியான சில படங்கள் தமிழ் சினிமாவின் பெருமிதமாக அடையாளமாகியிருக்கிறது. இவை அனைத்தும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமானது. காதலில் சொதப்புவது எப்படி, அம்புலி, தடையறத் தாக்க, நான் ஈ, அட்டகத்தி, சாட்டை, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கும்கி ஆகிய படங்கள் இந்த லிஸ்டில் வந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான படங்கள் அவற்றின் இயக்குனர்களுக்கு முதல் படமாகும்.

Karnan-Stills-202002

சென்ற ஆண்டில் போட்ட முதலீட்டை சார்ந்து மிக அதிக லாபம் ஈட்டிய படம் “கர்ணன்” என்பது இனிய ஆச்சரியம். நடிகர் திலகத்தின் முத்திரைப் படமான இது கடந்த ஆண்டு டிஜிடலஸ் செய்யப்பட்டு ரீரிலிஸ் செய்யப்பட்டது. இது முதலீட்டை விட சுமார் 15 மடங்கு இலாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. இது புதிய சினிமாக்களில் தற்போது இருக்கும் கதை சொல்லல் முறையில் இருக்கும் பஞ்சத்தையே காட்டுகிறது. கர்ணன் வெற்றி, தமிழ் சினிமாவுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கிறது. இனி வரும் வருடங்களில் இதே வரிசையில் தில்லானா மோகனாம்பாள், உலகம் சுற்றும் வாலிபன், திருவிளையாடல், அடிமைப்பெண் போன்ற காலத்தை வென்ற பசுமையான பொழுதுபோக்கு படங்கள் டிஜிட்டலில் ரசிகர்களை மகிழ்விக்கும் எனலாம். இதன் நீட்சியாக சூப்பர் ஸ்டாரின் “சிவாஜி 3D”யில் மறு வெளியீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று.

Aravaan-Stills-23

வேறு சில படங்கள் நல்ல கண்டென்ட்டுடன், சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் சரியான முறையில் மக்களிடம் போய் சேரவில்லை. பெரிய படங்களின் போட்டி, சரியான மார்க்கட்டிங் இல்லாதது, திரையங்க உரிமையாளர்களின் முன்முடிவுகள் போன்றவை முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இது நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று மட்டும் புரிகிறது. வழக்கு எண் 18/9, மதுபானக்கடை, அரவான், தோனி, மெரினா, ஆரோகணம், வெங்காயம், ராட்டினம், லீலை, நீர்பறவை போன்ற படங்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இவற்றில் அரவான், மெரினா, நீர்பறவை ஆகிய படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும் சின்னச்சின்ன திரைக்கதை சறுக்கல்களால் வெற்றிக்கோட்டிற்கு சில அடிகளுக்கு முன்பே சுருண்டு விழுந்தது பரிதாபம்.

ஊருக்கு கருத்து சொல்கிறேன் என்று ஷாட் பை ஷாட் டெரராக கருத்துமழை பொழிந்தோ,  பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டையே காக்க வந்த சூப்பர் ஹீரோவாகவோ இல்லாமல் சொல்லவந்த கதையை நறுக்காக, நாலு பேர் மனம்விட்டு சிரிக்கும் படி கொடுத்த, நண்பன், ஒருகல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, மனம் கொத்தி பறவை போன்ற படங்கள் உள்ளடக்கத்தில் பெரிய ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக காமெடி மற்றும் எளிய சென்டிமெண்ட்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டதால் மக்கள் விரும்பிய என்டர்டெய்னராகவும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

“என்னதான் ஆயிரம் படங்கள் வந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “யாருக்கு யாரோ” புகழ் சாம் ஆண்டர்சன், “லத்திகா” புகழ் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் அமர காவியங்கள் இந்த வருடம் வராதது தமிழ் சினிமாவுக்கு சூனியம் வைத்தது போலாகி விட்டது”  என தீவிர மொக்கை சினிமா ரசிகர்களின் வருத்தம் அடுத்த வருடம் நீங்கிவிடும் என நம்புவோம். 🙂

மொத்தமாக கடந்த ஆண்டின் தமிழ் சினிமா சூழலை தொகுத்துப்பார்க்கும் போது கலவையான உணர்வுகள் வெளிப்படுகின்றது. நாலில் மூன்று பங்கு படங்கள் வந்த அடையாளமே தெரியாமல் தொலைந்து போனதும், மிச்சமிருந்த எதிர்பார்ப்பு மிகுந்த படங்களுக்கு அந்த எதிர்பார்ப்பே வில்லனாக மாறியதும், சாலையோரத்தில் நம்மை கடந்து செல்லும் பேருந்தில் இருந்து குழந்தைகள் நாம் எதிர்பார்க்காத தருணத்தில் உற்சாகமாய் நம்மைப் பார்த்து கையசைத்து புன்னகைக்கச் செய்வது போல புதிய இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமாவின் உற்சாகத்துக்கு காரணமாய் அமைந்திருக்கின்றன.

kumki (9)

இந்த வருஷத்தில் வடிவேலு இல்லாத காமெடிக்கு மக்கள் பழக்கப்பட்டு விட்டார்கள், திரிஷா, ஷிரேயா, நயன்தாரா என சுற்றி வந்து இந்த வருடத்தின் கனவுக்கன்னிகளாக காஜல் அகர்வாலும் அனுஷ்காவும் பொறுப்பை சரி விகிதத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் (சரி சரி, சமந்தாவை அடுத்த வருஷ ஆட்டதுல சேர்த்துப்போம்), வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் மாதத்துக்கு ஒரு சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி காட்டில் நல்ல மழை அடித்துப் பொழிந்துள்ளது, எப்பவுமே நான் ராஜா என்று இசைஞானியின் நீஎபொவ பாடல்கள் புத்துணர்ச்சி தந்துள்ளது, கலைஞர் டீவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கெடுத்த பங்கேற்பாளர்களில் ஒவ்வொறுவராக பெரிய அளவில் ஜெயிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 2012 தமிழ் சினிமா : மழைக்கால தூறலில் கிடைத்த சூடான இஞ்சி டீ போல சர்ப்ரைசிங்காக இருக்கிறது.

************************

Gold top 10 winner

இப்ப என்னுடைய பார்வையில் கவுண்ட் டவுன் லிஸ்ட்:     

டாப் 10 தமிழ் திரைப்படங்கள் 2012:

 1. வழக்கு எண் 18/9: சொந்த ப்ரெஷ்ஷான சிந்தனையுடன் படங்கள் வருவது குறைந்து போன காலகட்டத்தில் மிகவும் சின்சியராக எடுக்கப்பட்ட படம். படத்தின் நடிகர்கள் பற்றி இன்று வரை தெரியாது. ஆனால் பாலாஜி சக்திவேலின் உழைப்பும் டீடெயில்ஸ்சும் படத்தை உச்சாணிக்கொம்பில் நிறுத்தியிருக்கிறது. கிளைமேக்ஸ் தவிர்த்து பார்த்தால், இந்த படம் உலக சினிமாவுக்கான தமிழின் பங்களிப்பு எனலாம்.
 2. காதலில் சொதப்புவது எப்படி?: நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாக எடுக்கப்பட்ட படம். அதுவே முழுநீளப்படமாக சுவாரசியம் கெடாமல், மாறுபட்ட பிரசன்டேஷனுடன் வந்து பிரமாதமான பாராட்டை பெற்ற படம். சித்தார்த் மற்றும் அமலா பாலின் எளிமையான யதார்த்தமான நடிப்பு அழகு.
 3. நான் ஈ: தெலுங்கிலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட படம். தெலுங்கு சினிமா உலகின் ஷங்கர் என்று கொண்டாடப்படும் ராஜமவுலியின் முதல் தமிழ்படம். அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உச்சமாக வந்து அசத்திய படம். வழக்கமான காதல், மோதல், பழிவாங்கல் தான் கதை என்றாலும் சொன்னவிதத்தில் கவனத்தை ஈர்க்கிறது.
 4. பிட்சா: தமிழின் டிரென்ட் செட்டர் படம். ஹாரர் படங்கள் பெரும்பாலும் தியேட்டரில் காமெடியாக முடியும். கடைசியாக யாவரும் நலம் நல்ல பய அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்தின் ஹாரர் ஃபீலிங் மிக வலிமையானது. இடைவேளை வரை தியேட்டரில் ரசிகர்களின் நடுநடுக்கமே இந்த படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸ் யூகிக்கமுடியாத படி, கண்ணாமூச்சி காட்டியது ரசிக்கப்படவேண்டியது.
 5. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்: என்னாச்சி? தமிழ் சினிமாவுக்கு? என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். கடைசி ப்ளாக் வரை ஹீரோயினையே காட்டவில்லை. வில்லன் கிடையாது, ஆலமரம், நசுங்கிபோன சொம்பு, ஊர்பஞ்சாயத்து கிடையாது, சும்மா பத்து கேரக்டர்களை வைத்துக்கொண்டு சுவாரசியமான படத்தை கொடுத்து, இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை படமாக பெயரை தக்கவைத்துக்கொண்டார் இயக்குனர்.
 6. தடையற தாக்க: மகிழ்திருமேனியின் முதல் படம் கைவிட்டுவிட, இந்த படத்தில் விட்டதையும் சேர்த்து பிடித்துவிட்டார். ஒரு ஆக்ஷ்ன் படத்துக்கு உரிய மிக தெளிவான திரைக்கதை. கடைசிவரை ஏறிய டெம்போகுறையாமல் சென்றது படத்தின் பெரிய பலம். அருண் விஜய்க்கு நல்ல திருப்பம் அளித்த படமாகவும் அமைந்தது.
 7. சாட்டை: மெகா சீரியல்கள் போல பிழிய பிழிய சென்டிமெண்ட்டும் நாடகத்தனமான காட்சிகளும் நிரம்பியிருந்த படமென்றாலும் அரசு பள்ளிகளின் கான்டெம்பொரரி நிலை நிதர்சனமாய் காட்டியதற்கும், அதை திருத்துவதற்குறிய வாய்ப்புகளையும் கோடுபோட்டு காட்டியுள்ளது நிச்சயம் கவனம் கொள்ள வேண்டியது.
 8. கும்கி: பிரபு சாலமனுக்காக பெரிதும் எதிர்பார்த்த படம். நிச்சயம் ஏமாற்றவில்லை. ஆனால் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என்று தோன்றியது. நான் ஈ போலவே அன்புக்காக தன் உயிரை தியாகம் செய்யும் ஒரு மிருகத்தின் கதை. கதைக்களன் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிது. பளிங்கு கண்ணாடி போல ஒவ்வொறு ஃப்ரேமும் அவ்வளவு அழகு, சுத்தம், பசுமை.
 9. சுந்தர பாண்டியன்: சசிகுமாருடைய டெம்ப்ளேட் படம். கிராமிய நட்பு, நட்பின் துரோகம், பழிவாங்கல், நட்பை மன்னித்தல் என்ற அவருக்கு வாகான ஏரியாவில் நின்னு விளையாடியிந்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததால் கதை சீராகவும், சுவாரசியமாகவும் சென்றது.
 10. துப்பாக்கி: படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் பார்த்து முடிக்கும் வரை அதைப்பற்றியே சிந்தனை எழாமல் படத்துடன் ஒன்றவைத்தது திரைக்கதையின் வெற்றி. ரொம்ப க்ரிஸ்பான திரைக்கதையும் எடிட்டிங்கும் படத்தின் பலம். முருகதாஸ் துப்பாக்கியின் குறி ரமணாவுக்கு பிறகு இந்த முறை தான் தப்பாமல் சுட்டிருக்கிறது.

ஆகச்சிறந்த டாப் மொக்கைத் திரைப்படங்கள் 2012

மொக்கை படங்களுக்கு காரணங்கள் தேவையில்லை. இவை அனைத்தும் ஒரு வகையில் தமிழ் ரசிகர்களை லகுடபாண்டிகளாக நினைத்துக்கொண்டு, பெரிய நடிகரின் கால்ஷீட்டும், நல்ல டெக்னிகல் டீமும் இருந்தால் பணத்தை சுலபமாக அள்ளிவிடலாம் என்ற மதப்பில் எடுக்கப்பட்டவை.

 1. சகுனி
 2. தாண்டவம்
 3. மாற்றான்
 4. பில்லா 2
 5. வேட்டை

அவர்களை குற்றம் சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் ரசிகர்களின் ரசனையை மதித்து குறைந்தபட்ச நேர்மையையாவது படத்தில் செலுத்துங்கள் என சொல்வதற்கு உரிமை இருக்கிறது.

டிஸ்கி: இந்த தரப்படுத்துதல் சாதாரண திரைப்பட ரசிகனான எனது பார்வையின் புரிதலில் அமைந்த பட்டியல் மட்டுமே. இது தான் அல்டிமேட் தமிழ் சினிமா என எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை.

மினி குடியரசு – எடவகா பஞ்சாயத்து: ஓர் அனுபவம்


“இது நம்முடைய கிராம சபை. இதில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் யாருக்கோ நாம் ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? அவர்கள் எப்படி நமது கிராமசபையில் கலந்துகொள்ளலாம்?” என்று எங்களைப் பார்த்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலிருக்கும் எடவகா பஞ்சாயத்தின் 19வது வார்டு கிராமசபை கூட்டத்தில் ஒரு பொது குடிமகன் கேள்வி எழுப்பியபோது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.

கேரளத்தின் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி எமது அகடமி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக நான் அவர்களை எடவகா பஞ்சாயத்துக்கு பட்டறிவு பயணமாக கூட்டிச் சென்றிருந்தேன். அந்த பஞ்சாயத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, மக்களின் மேம்பாட்டில் அடித்தள அரசின் பங்களிப்பை அறிந்துகொள்வது எங்கள் திட்டம்.

அந்த பஞ்சாயத்தின் தலைவர் திரு.பிரதீப் கேரளத்தின் குறிப்பிடத்தகுந்த பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர். என்னுடைய நண்பரும் கூட. அந்த உரிமையில் நாங்கள் சென்றிருந்த அன்று நிகழவிருந்த 19ம் வார்டுக்கான கிராம சபையில் எங்களை பிரதானமாக பங்கெடுக்கவைத்தார். அன்று தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மீதான சமூகத் தணிக்கை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது தான் இந்த கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வி எழுந்தது. திரு.பிரதீப், அந்த குடிமகனுக்கு பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து இவர்கள் நம்முடைய பஞ்சாயத்தின் விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள், இந்த மாணவர்கள் நமது பணிகளைப் பார்த்து கற்றுக்கொண்டு, அந்த படிப்பினையை இந்தியாவெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்கள்” என்று நமது நிறுவனத்தின் தன்மையை விளக்கினார். பிறகு, “அவர்கள் விருந்தினர்கள் என்றால் தாராளமாக வரவேற்கிறோம். ஒரு பார்வையாளராக நமது கிராமசபையில் பங்கெடுக்கலாம்” என்று மகிழ்வுடன் அதே குடிமகன் எங்களின் வருகையை அங்கீகரித்தார்.

கேரளத்தின் மக்கள் சக்தி!

எனக்கு பெருமிதமாக இருந்தது. கேரளத்தின் அபரிமித வளர்ச்சிக்கு இதுதான் ஆணிவேர். விஷயமறிந்த மக்கள். தமது சந்தேகங்களை மற்றும் தேவைகளை துணிச்சலுடன் கேட்கும் கலாச்சாரம். இதனால் அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அதிகம் ஏமாற்றமுடியாது. மக்கள் கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வு இருப்பதாலேயே நல்ல பல செயல்கள் நிதமும் நடக்கின்றன. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட கேரளா ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேறொரு சமயத்தில், அந்த பஞ்சாயத்தின் அலுவலர் ஒருவர், சராசரியாக ஒரு நாளைக்கு அந்த பஞ்சாயத்தில் மூன்றிலிருந்து ஐந்து விண்ணப்பங்கள் தகவல் கேட்கும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்படுகிறது என்று சொன்னபோது உண்மையான மக்களாட்சி இப்படித்தான் இருக்கும் என்ற புரிதல் எங்களுக்கு ஏற்பட்டது.

கேரளாவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினருக்கு சராசரியாக ஆண்டுக்கு இரண்டு கோடிகள் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரளத்தின் பஞ்சாயத்துகளுக்கு மேம்பாட்டு பணிகளுக்காக சராசரியாக ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் நிதி தரப்படுவது அதிகாரப்பரவலின் உச்சம் எனலாம். கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி என ஏறக்குறைய எல்லா வளர்ச்சி அமைப்புகளின் மொத்த நிர்வாகமும் கேரள பஞ்சாயத்து அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றிருந்த முப்பதாயிரத்து சொச்சம் மக்கள்தொகையுள்ள எடவகா பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமார் 15 முழு நேர அலுவலர்கள். அலுவலகம் முழுமையும் கணினி மயமாக்கப்பட்டு ஒரு கார்பரேட் அலுவலகம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

மகளிர் நலத்துக்கான பொருளாதார சுதந்திர திட்டம்:

எங்கள் பயணத்தின் அங்கமாக பஞ்சாயத்தால் செயல்படுத்தப்படும் இரண்டு சிறப்புத் திட்டங்களை பார்வையிட்டோம். அங்குள்ள பழங்குடியின பெண்களை சுய உதவிக்குழுக்களாக ஒருமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக குடைகள் தயார் செய்யும் சிறுஉற்பத்தி கூடத்தை பஞ்சாயத்து ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் மூலம் 50 பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். குமரப்பாவின் சப்சிடியாரிட்டி பொருளாதாரக் கொள்கையின் படி, உள்ளுர் பயன்பாட்டுக்கான பொருள்களை அவர்களே உற்பத்தி செய்வதால், அவர்களின் பண சுழற்சி அவர்கள் அளவிலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெளிச்சந்தையை சார்ந்திருக்கும் தன்மை குறைந்து தன்னிறைவு சுலபமாக எட்டமுடியும். அடுத்த கட்டமாக இந்த பஞ்சாயத்தில் மற்ற எல்லா வித நுகர்வுப் பொருட்களுக்கான உற்பத்தியையும் இவர்களே தயார் செய்ய முயற்சிகள் எடுக்குமாறு கூறியுள்ளோம்.

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:  

அடிப்படையில் எனக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டில் அது செயல்படும் விதத்தைப் பார்த்து, சோம்பேறிகளையும் ஊழலையும் பெரிய அளவில் உற்பத்திசெய்யும் திட்டமாகத் தான் நான் புரிந்துகொண்டுள்ளேன். ஆனால் எடவகா பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மக்களின் தேவையை அறிந்து அதனை ஒட்டி செயல்படுவது மிகப்பெரிய ஆறுதல். இந்த பஞ்சாயத்தானது மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதை சிறப்பாக நடத்தியதற்காக நடப்பு ஆண்டில் விருது பெற்றுள்ளது.

இவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வார்டுக்கு ஒரு தாவர  நாற்றாங்கால் என 19 நாற்றாங்கால்களை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சராசரியாக ஒரு பருவத்துக்கு 25000 நாற்றுகள் தயார்செய்யப்பட்டு ஒரு நாற்று ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இதில் சுவாரசியமான அம்சம், இந்த நாற்றாங்கால் பண்ணையில் பணிபுரிவோர் கட்டாயம் வயதானவராகவோ, நலிவுற்ற பிரிவினராகவோ இருக்கவேண்டும் என்பது தான். நாற்றாங்கால் வேலை ஒப்புமை ரீதியில் குறைந்த உடலுழைப்பு உள்ளது. இதில் நலிவுற்ற பிரிவினருக்கும் மட்டும் வேலை தரப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அவர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி ஏற்படுகிறது. அதே சமயம், உழைக்கும் சக்தி உள்ளவர்களின் உழைப்பும் தேவையில்லாமல் இது போன்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு பெரிய எதிரியாய் உருவெடுத்திருக்கும் இத்திட்டம், பஞ்சாயத்து அமைப்பின் சரியான அணுகுமுறையால் விவசாயத்துக்கு உறுதுணையாகவும், நலிவுற்றப் பிரிவினரின் நலம் காக்கும் திட்டமாகவும் மாறியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

வனச்சூழல் மீதான அக்கறை மற்றும் பாதுகாப்பு:

கேரளத்தின் வயநாடு பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான பகுதி. ஆரோக்கியமான சுற்றுச்சூழலால் இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுட்காலம் நம்மை விட நிச்சயம் பத்து வருடம் அதிகமாகத் தான் இருக்கும். இத்தகைய சூழலை பாதுகாக்க பஞ்சாயத்து அமைப்புகள், இயற்கை வளங்களை போற்றிப் பாதுகாத்து வருவதும், வியாபாரத்துக்காக இயற்கையை அழித்து கட்டிடக்காடுகளை ஏற்படுத்தாததும் மகிழ்ச்சி தருகிறது. இந்த பஞ்சாயத்தை ஒட்டியிருக்கும் கருவா தீவினை காண்பதற்காக காத்திருந்தோம். ஆற்றினால் ஏற்படுத்தப்பட்டத் தீவு அது. கட்டுமரத்தில் தான் அந்த தீவுக்கு செல்லவேண்டியிருக்கும். நாங்கள் சென்ற சமயத்தில் அந்த தீவினில் யானை கூட்டம் இறங்கியிருப்பதால் எங்களுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், வன மிருகங்களை கம்பி வேலிக்குள் அடைத்து அந்த இடத்தில் பத்து விடுதிகள் கட்டி, சுற்றுலாத் தளம் என்ற பெயரில் இயற்கையை சிறை பிடித்து வியாபாரம் நடத்தாமல், இயல்பான சூழலில் மக்களும் மற்ற விலங்குகளும் வாழ வழிசெய்திருப்பது, கேரளத்தில் மக்களுக்கு மட்டுமில்லை, எல்லா உயிரினங்களுக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது என்று பூரிப்படைய தோன்றியது.

பாலாஜி சக்திவேலின் படைப்புலகம்


எப்பவாவது படத்தை எடுத்தாலும் எப்பவுமே என்னளவில் நெருக்கமாக இயக்குனர் பட்டியலில் பாலாஜி சக்திவேலுக்கு தனித்த இடம் கண்டிப்பாக இருக்கும். 2002ல் ஆரம்பித்து 2012 வரை நான்கே நான்கு படங்கள். சாமுராய், காதல், கல்லுரி மற்றும் வழக்கு எண் 18/9. இவை அனைத்துமே ஒருவகையில் சமூக பிரச்சனைகள் பற்றி பேசிய படங்கள்.

வழக்கமான தமிழ் சினிமா கலாச்சாரத்தின் படி, ஹீரோ என்ட்ரி, ஹீரோயினோட கெமிஸ்ட்ரி, வில்லனோ பிசிக்ஸ் என்ற டெம்ப்லேட்டில் இல்லாமல், எளிய மக்களின் போராட்ட வாழ்வின் மறுபக்கத்தை முகத்திலடித்தாற்போல சொல்லக்கூடியவை இவரது படங்கள். இதில் சாமுராய் மட்டும் கொஞ்சம் ஹீரோயிச பாணியில் சொல்லப்பட்ட கதை.

தமிழ் சினிமா உலகில் எத்தனை பெரிய அப்பாடக்கர் இயக்குனர் என்றாலும், எடுக்கிற படம் நல்லா வியாபாரமாக வேண்டும். தயாரிப்பாளர் காசு சம்பாதிப்பது ரொம்ப அவசியம். அதிலும் இயக்குனருடைய முதல் படம் அவரது வாழ்வின் தலையெழுத்தை நிர்ணயிப்பது. ஆனால் இவரது சாமுராய் படம் நல்ல காஸ்டிங், மேங்கிங்கில் வந்திருந்தாலும் சரியாக ஓடாததால் சினிமா உலகத்தில் இவரது அடையாளம் வெளிப்படாமலேயே இருந்தது. திரும்பவும் ஷங்கருடன் பணியாற்றினார். வணிக ரீதியாக வெற்றிபெற முடியாததாலேயே இவரது திறமையை வெளிக்காட்ட அடிக்கடி தீக்குளிக்கவேண்டியிருந்தது. அப்படியிருந்தும் வாழ்வாதாரத்துக்காக கமர்ஷியல் சினிமா சூழலில் இவர் விழுந்துவிடாமல் இருந்தது தமிழ் சினிமாவின் புண்ணியம்.

அதற்கப்புறம் ஷங்கரின் தயாரிப்பில் காதல் படம் வெளிவந்தது. இந்த முறை படத்தில் பெரிய ஸ்டார்கள் யாரும் இல்லை. ஏறக்குறைய அனைவரும் புதுமுகங்கள். மிக வலிமையான கதைசொல்லலால் இந்த படத்தில் பங்கெடுத்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என எல்லாருக்கும் மிகப்பெரிய வாழ்வினை அளித்தது. இந்த முறை பாலாஜி தன் கேரியரின் பெரிய ஸிக்சரை அடித்தார். தன்னை மிகச் சரியாக வெளிப்படுத்திக் கொண்டார்.

அதற்கடுத்து இவரது இயக்கத்தில் நடிக்க, படத்தை தயாரிக்க நிறைய பேர் காத்திருந்தாலும், ஒரு பெரிய இடைவெளி விட்டு அதே ஷங்கர் பிக்சர்சுக்காக கல்லுரி படம். அந்த படமும் சமூகத்தில் நல்ல அதிர்வை ஏற்படுத்தியிருந்தது. தமன்னாவிற்கு பெரிய ரீஎன்ட்ரி கொடுத்தது. அந்த படத்தில் ஒரு சிறு நகரத்தில் இருக்கும் அரசு கல்லுரிகள், அங்கு படிக்கும் மாணவர்களின் பின்புலம் பற்றி முன்பு சொல்லப்படாத பல செய்திகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடைசி காட்சிகள், அரசியல் கேவலத்தின் வெட்கக்கேட்டினை உணர்த்தியிருந்தது.

அதற்கடுத்து வழக்கு எண் 18/9. இந்த படத்தை தமிழ் சினிமாவில் நிகழ்ந்த முக்கியமான அற்புதம் என்று கூட சொல்லலாம். ஆரண்ய காண்டதுக்குப் பிறகு புதிய போக்குப் படமாக அமைந்திருந்தது. ஸ்டில் கேமிரா, மிக எளிமையான தொழில்நுட்ப வசதிகள், அதிக செலவில்லாத தயாரிப்பு என லோ புரொபைலில் படம் எடுக்கப்பட்டிருந்தாலும் கதையில் கனத்திலும், திரைக்கதையில் மெனக்கெடலிலும், பாத்திர உருவாக்கத்தின் நுணுக்கத்திலும் இன்றைக்கு பாடல் காட்சிக்கு எந்த வெளிநாடு போகலாம் என்று திட்டமிடும் பல இயக்குனர்களுக்கு மிகப் பெரிய படிப்பினையாக அமைந்துள்ளது.

மகேந்திரனின் பாத்திரப்படைப்பு, பாலுமகேந்திராவின் உள்ளடக்க டீடெயில்ஸ் என்று கலந்துகட்டிய அற்புத இயக்குனராக பாலாஜி சக்திவேல் இருக்கிறார். இவரது படங்களில் எல்லாம் சில அடிப்படை அம்சங்கள் / அவரது நம்பிக்கைகள் திரும்பத்திரும்ப வருவதை கவனிக்க முடியும்.

 1. ஆட்சி அதிகாரம் மற்றும் பணபலம் இருப்பவர்கள் செய்யும் தவறுகள் அநியாயங்கள் எளிமையான மக்களை பாதிக்கிறது. (சாமுராயில் தவறு செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், காதல் படத்தில் சாதிய ஆதிக்கவெறி, கல்லுரியில் பஸ்ஸை எரிக்கும் கட்சிக்காரர்கள், வழக்கு எண்ணில் பணபலம் மிக்க மேட்டுகுடி)
 2. உயர்தட்டு குடும்ப பிள்ளைகள் பாலியல் ஒழுக்ககேட்டை சந்திக்கின்றனர் (சாமுராயில் அனிதா கேரக்டர் மீதான பாலியல் வன்முறையும், வழக்கு எண் படத்தின் அடிப்படை பிரச்சனையும் ஒரே வகையில் அமைந்திருப்பது)
 3. எளிமையான மக்களை ஏமாற்ற செயல்படும் நயவஞ்ச, தந்திரக்காரர்கள் (காதல் படத்தில் சித்தப்பா கேரக்டர், வழக்கு எண்ணில் இன்ஸ்பெக்டர்)

இவை எல்லாவற்றையும் விட, முதல் படமான சாமுராயைத் தவிர, மற்ற மூன்று படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகள் பெரிய ஒற்றுமையை கொண்டுள்ளதை கவனிக்கமுடியும். அவை அனைத்திலுமே ஹீரோ எதிரிகளை பரந்து பரந்து அடித்து, பத்து சுமோக்களை பறக்கவிட்டு, அழித்து துவம்சம் செய்து நீதியை நிலைநாட்டுவதில்லை. எல்லாவற்றிலும் எளிய மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அவர்களின் அவலநிலைக்கு மகிழ்ச்சிகரமான, நம்பமுடியாத முடிவைத் தராமல், யதார்த்தத்தை ஒட்டி என்ன நிகழக்கூடுமோ அதையே உண்மைக்கு அருகில் தர முயற்சித்திருக்கிறார். இந்த காரணத்தால் எனக்கு பாலாவின் படைப்புகளை விட இவரது படைப்புகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

கடைசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியே வரும் பார்வையாளர் குறைந்த பட்சம் அடுத்த வேளை உணவை உண்ணும் வரையாவது அதன் தாக்கத்தில் இருப்பான். சினிமா வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல் வெகுஜனமக்களின் சிந்தனைப் போக்கை ஒரு மில்லிமீட்டர் அளவுக்காகவாவது வளர்க்க முயற்சிக்கவேண்டும். அந்த வகையில் பாலாஜி சக்திவேல் தொடர்ந்து நம்பிக்கையளித்து வருகிறார். மனமார பாராட்டுவோம்.

கரடி குட்டி


வாழ்க்கை தான் எவ்வளவு எதிர்பாராமைகள் நிறைந்தது. நமக்கான மகிழ்ச்சியும் ஆபத்தும் அடுத்தடுத்த வினாடிகளில் பொதிந்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதே வாழ்வை இன்னும் சுவாரசியமாக்குகிறது.  இது மனிதருக்குத் தான் என்றில்லை. உலகின் எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இந்த காணொளியில் ஒரு கரடிக்குட்டியின் உயிர் போராட்டம், பதைபதைப்பை தாண்டி பல படிப்பினைகளை நமக்கு தருகிறது. இது முழுமையான ஒரே வீச்சில் அமைந்த காணொளியாக இல்லாமல் சின்னச் சின்ன எடிட்டிங் மற்றும் சில டிங்கரிங் வேலை செய்யப்பட்டாலும் உணவுக்கான போராட்டத்தை விட உயிருக்கான போராட்டம் வலிமை மிக்கது என்பதை பலமாக நிறுபிக்கிறது. கடைசி சில வினாடிகள் மனதை நெகிழச்செய்பவை.

கரைந்து போகும் பெண் குழந்தைகள்


சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள் இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கிராமங்களில் இருந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களது வறுமையை முன்வைத்து ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாயிருந்தால் அதனை கருவிலேயே அழிப்பது நிகழ்கிறது என்றும் கவலைபட்டார். அது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், அப்போது நான் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சமீபத்தில் 2011 ம் ஆண்டின் சென்செஸ் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது அந்த ஆபத்து நடந்திருக்குமென்று ஊகிக்கமுடிகிறது. அவர் சொன்ன அந்த பயங்கரத்தின் விளைவு புள்ளிவிவரங்களாக வெளிப்பட்டிருந்தது. தமிழ்நாட்டளவில் 14 மாவட்டங்களில் 2001ம் ஆண்டு இருந்ததை விட ஆறு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக கடலுர், அரியலுர், பெரம்பலுர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெப்போதும் விட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் சராசரியாக 1000க்கு 25 என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழ்நாடளவில் மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் 1000ம் ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவில் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்றுள்ளது கவலைக்குறியது. பெண் சிசுவதை அதிகம் இருப்பதாக கருதப்படும் தர்மபுரி, சேலம், தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு பெண்குழந்தை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும் அங்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரிக்கும் குறைவாகவே இருக்கின்றன.

இந்தியாவில் 2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் அறிக்கைப்படி, குழந்தைகள் அளவில் பாலின விகிதம் 927 ஆக இருந்ததது. அது இப்போது 10 புள்ளிகள் குறைந்து இப்போது 917 ஆக பிரதிபளிக்கிறது. இந்த புள்ளிவிவரம், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எடுக்கப்பட்ட எல்லா சென்சஸ் புள்ளிவிவரங்களிலும் பதிவாகிய மிகக்குறைந்த அளவு என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். இதன்மூலம், இந்திய சமூகத்தில் முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் பெண்குழந்தைகள் பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.

இதன்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 83 பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு அடிப்படையான பிறப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுவருவது மிகக்கொடுமையான செய்தி. பொதுவாக இயற்கையின் நியதி படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 1036 பெண் குழந்தைகள் பிறப்பதாக அறிவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் அதிகபட்ச பெண்குழந்தை பிறப்பு துத்துக்குடியில் 970ஆகவும் நீலகிரியில் 982ஆகவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பெண்குழந்தைக்கான முழுபாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.

1997களில் சராசரியாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 160 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. தற்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும் பெண் சிசுவுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படவில்லை. தற்போதய மருத்துவத்துறை தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் வளர்ந்திருப்பதால் பெண் குழந்தை பிறந்த பிறகு இறக்கும் விகிதம் குறைந்து, கருவிலேயே அழிக்கும் போக்கு அதிகமாகியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதனை வெறும் சமூகப்பிரச்சனை மட்டுமாக எடுத்துக்கொள்ளமுடியாது. பேறுகாலத்தின் நான்காவது மாதத்தில் கருவின் பாலினம் கண்டறியப்பட்டு கருச்சிதைவு நிகழ்த்துதல் தாயின் உயிருக்குக் கூட ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சறிக்கிறார்கள்.

வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது, விதிமீறலாக நிகழும் செலக்டிவ் அபார்ஷனும் முன்னேற்றப்படவேண்டிய பேறு கால கவனிப்பும் தான். எப்படி பார்த்தாலும் உயிர் கொண்ட ஒரு சிசுவிற்கு தன் வாழ்க்கையை முழுமையாக வாழ சகல உரிமையும் இருக்கிறது. அதனை பாலினக்காரணங்களுகாக கரைப்பது பாவம். இது மூன்று வித உரிமை மீறலாக கருத்தப்படவேண்டும். 1.மனித உரிமை மீறல், 2. குழந்தை உரிமை மீறல், 3. பெண்ணுரிமை மீறல். இந்த நிலைக்கு அரசாங்கமும் பொறுப்பெடுக்கவேண்டும். முதலமைச்சராக, ஜனாதிபதியாக பெண்கள் இருப்பது மட்டும் பாலின சமத்துவத்துக்கான குறியீடாகாது. இந்தியா உலக அளவில் வல்லரசாவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நமது பூமியில் பூக்கும் ஒவ்வொறு பெண்குழந்தையும் முழுமையாக, ஆரோக்கியத்துடன் மலரவழி செய்யட்டும்.

இந்திய அளவில் தனிநபர் வருமானம் மிக அதிகம் இருக்கும் மாநிலங்களான பஞ்சாப் (846), ஹரியானா (830) ஆகிய மாநிலங்களில் தான் பெண் குழந்தை பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. அதே போல வளர்ச்சி அடையாத, பிரச்சனைகள் மிகுந்த மாநிலங்களாக கருதப்படும் மிசோரம் (971), மேகாலயா (970) ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அதிக பாலின விகிதத்தை கொண்ட முதல் இரண்டு மாநிலங்களாக நிலைபெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரம், வளர்ச்சி என்பது வெறும் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் காகிதம் மட்டும் தானா அல்லது சமநிலைச்சமுதாயமா என்ற அடிப்படை கேள்வியை நம்முன் வைக்கிறது.

இதன் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியவரும். பாலினம் சமநிலையில் இல்லாத சமூகம் நிச்சயம் நொண்டியடிக்கும். அப்போது நாம் செய்த தவறு தெரியவரும். கலர் டீவி, மிக்ஸியை விட பெண் குழந்தைகள் முக்கியம் என்று உணர ஆரம்பிப்போம்.

குறிப்பு: மேலுமதிக விவரங்களுக்கு: http://www.census.tn.nic.in/whatsnew/ppt_total2011.pdf

அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.


(புகைப்படத்தில் இருப்பவர் – வடிவேல் அய்யா)

திருத்தணிக்குப் பக்கத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்திலிருக்கும் விவசாயி வடிவேலு அய்யா.  ஒருமுறை இவரது கிராமத்தில் ஏரி மதகை சரி செய்வதற்காக 1.5 இலட்சம் ரூபாயில் காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுத்தவர் பெயருக்கு வேலை செய்துவிட்டு மிச்ச பணத்தை சுருட்டியிருக்கிறார். இதை கேள்வி பட்ட வடிவேலு அய்யா, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். முதலில் அவர்கள் கொஞ்ச பணத்தை இவருக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு பேரம் பேசியிருக்கிறார்கள். இவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள். இவர் மசியவில்லை. ஒரு புகார் மனு தயாரித்து, ஊரில் இருக்கும் 130 விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி கலெக்டரிடம் கொடுக்க போனார். கலெக்டரின் உதவியாளர், “இப்போது கலெக்டரை பார்க்கமுடியாது. வேண்டுமானால் என்னிடம் கொடுத்துவிட்டு போங்கள்” என்று சொல்ல, இவர் மறுத்து பிடிவாதமாக கலெக்டரை பார்க்கவேண்டும் என்று வலியுருத்தியிருக்கிறார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் போலிஸை கூப்பிட்டு ஜெயிலில் போடுவேன் என்று சொல்லி இவரை மிரட்டியிருக்கிறார்கள். இவர், “இந்தியா சுதந்திரம் அடைவதற்காக காந்தி, நேரு போன்றவர்கள் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள். நான், என்னுடைய கிராமத்து ஏரிக்காக ஜெயிலுக்கு போகவேண்டியிருந்தால் சந்தோஷமாக போகிறேன்” என்ற சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டார். இந்த சச்சரவை உள் அறையிலிருந்து கேட்ட கலெக்டர், அவரைக் கூப்பிட்டு விவரம் கேட்டு பிறகு அந்த காண்ட்ராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்தார். இப்போது அந்த மதகு, அந்த ஊரில் உள்ள 150 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்பட்டுவருகிறது.

ஆள் பலம், பண பலம் என எதுவும் இல்லாத எளிமையான விவசாயியான வடிவேலு அய்யா ஊர் நலத்துக்காக தனி ஆளாக போராடிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இது போல ஊர் நலனுக்கான பல விஷயங்களில் யாருடைய உதவியும் இல்லையென்றாலும் அவர் தனியாளாக தன்னால் முடிந்தததை மனமாற செய்துவருகிறார். இதை அவர் தம்பட்டம் அடித்துக்கொள்வதும் இல்லை தான் பெரிய சமூக சேவகன் என்று கூறிக்கொள்வதுமில்லை.

இதேபோல தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தின் கிராமக் கமிட்டி பொருளாளராக இருந்தவர் வண்டப்புலி நாடார். (வண்டப்புலி நாடார் என்பது அவரது பெயர் அல்ல.  வண்டப்புலியிருருந் இடம் பெயர்ந்தவர்). சிறிய அளவில் பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.  கிராம கமிட்டி சார்பாக இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கும்.  ரூபாய் நோட்டுகளின் எண்ணை கூட சரிபார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சாதியினரும் மதத்தவரும் வசிக்கும் கடமலைக்குண்டில் நாடார் சமூகத்தின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் தொடர்ச்சியாக பொருளாளராக இருந்தவர்.

திருவிழாவிற்கு கிராமத்தின் சார்பாக பலசரக்கு வாங்குவதாக இருந்தால் கூட தனது கடையில் வாங்குவதை தவிர்த்தவர். தேனியில் இந்தக் கடையில் வாங்குங்கள். இங்கு விலை குறைவாக இருக்கும் என்று தகவல் சொல்லிவிட்டு கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வார். வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் கணக்கு ஒப்படைப்பது வழக்கம். ஒருமுறை இதுபோல திருவிழா முடிந்து ஊர்மக்களிடம் கணக்கு ஒப்படைக்கும் நாளில், குடிகாரன் ஒருவன் போதையில் “வண்டப்புலி நாடார் புது வீடு கட்டுறாரே! எப்படி ‘எல்லாம் கிராமத்துப் பணம் தான்’ “ன்னு கேட்டுட்டான். அந்தக் கணமே தனது பதவியைத் துறந்தார். (தன்தரப்பு நியாயத்துக்காக வருடக் கணக்கில் விவாதிக்கவில்லை, வாய்தா வாங்கவில்லை) கணக்கினை பைசா சுத்தமாக ஊர் மக்களிடம் ஒப்படைத்தார்.

அடுத்த நாள் கிராமத்து பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று நீங்கதான் பொருளாளராக இருக்கனும் ‘அவன் என்னமோ தண்ணியைப் போட்டு ஒலறிட்டான்’எவ்வளவோ சமதானம் சொன்னாங்க. முன்பு குற்றம் சுமத்தியவனும், “நான் ஏதோ நேத்து தெரியமா போதையில அப்படி கேட்டுட்டேன், என்னை மன்னிச்சிருங்க நீங்கதான் பொருளாளராக வரனுமு”ன்னு அவர் காலில் விழுந்தான். இருந்தும் இவர் சம்மதிக்கவில்லை. “நீ சந்தேகப் படும்படி என்னுடைய ஏதோ ஒரு செயல் உனக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ அப்படி கேட்டாய். சந்தேகப்படும்படியான ஆள் பொறுப்பில் இருப்பது அவ்வளவு நல்லதில்லை” என அனைவரையும் இன்முகத்தோடு அனுப்பிவிட்டார்.

இரண்டொரு நாள் அதே வேதனையில் இருந்தவர் இறந்துவிட்டார்.  இறப்பிற்கு முன் வண்டப்புலி நாடார் தம்குடும்பத்தாருக்கு சொன்ன வார்த்தைகள் “நம் குடும்பத்தில் இருந்து யாரும் கிராமப் பொறுப்பிற்கு வரக்கூடாது. ஆனால் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய முதல் வரி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்”.  இதனால் தான் அவர் இறந்து 10 வருடங்களாகியும் உள்ளுர் மக்களால் உதாரணமாய் வாழ்கிறார். இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபடுவர்களுக்கு எத்தனை பெரியவர் வண்டப்புலி நாடார்.

இல்லாதவர்கள், ஏதுமற்றவர்கள் நேர்மையாகத்தான் இருக்கின்றனர்.  ஒரு ஏழையோ, கிராமத்து விவசாயியோ எளிதாக பொய் சொல்வதில்லை. நீதி நூல்களை படித்தவர்கள், நீதிகளை மேடைகளில் முழங்குபவர்கள்தான் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் நமக்கு முன்னே போலிகளாய் நிற்கிறார்கள். மிக எளிமையாக, தன்னைச்சுற்றி நல்லது நடக்கப் போராடும் இவருக்கு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆகாஷ் குடியிருப்பு ஊழல்கள் பற்றியோ, தேசிய அரசியலின் விளையாட்டுகள் பற்றியோ அதிகம் தெரியாது. அது தெரியாமல் இருப்பதாலேயே அவருடைய ஆன்ம பலம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.

(வண்டப்புலி நாடார் பற்றிய தகவல் பகிர்ந்துகொண்ட திரு.கண்ணனுக்கு நன்றி)

டீ பிரேக் 1


[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு.

எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி

உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு.

வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ]

 

ஒரு கதை…

புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார். புத்தரிடம், ”ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், தப்பான மக்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தான். புத்தர் பதிலேதும் சொல்லாமல், அமைதியாக அந்த சீடனைப்பார்த்து, சிறு புன்முறுவலுடன் தன் உடலில் இருந்த மேல்துண்டை அந்த சீடனுக்கு போர்த்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இப்போது, மேல்துண்டை தன் மீது புத்தர் ஏன் போர்த்தினார் என்ற குழப்பம் சீடனை ஆக்ரமித்தது. அதிலிருந்து புத்தர் என்ன செய்தியைச் சொல்கிறார் என யோசிக்க ஆரம்பித்தான். யோசித்துக்கொண்டே இருந்தான். அன்று இரவு உறக்கம் கூட அவனுக்கு வரவில்லை. நேராக புத்தரிடம் சென்று இது பற்றிக் கேட்டான். புத்தர், “நான் துண்டை உன்மீது போர்த்தியதில் எந்த செய்தியும் இல்லை.

உன்னுடைய மனம், மக்களின் திட்டுகளையும் கேலிகளையும் யோசித்துக்கொண்டிருந்தது, அதிலிருந்து திசைதிருப்ப துண்டினை உன் மேல் போர்த்தினேன். அதற்கு பிறகு நீ மக்களை மறந்துவிட்டு, துண்டினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்” என்றார்.

 

ஒரு காணொளி

தனிமை எப்பவும் கொடுமையானது. இதைப்பார்த்த பிறகு என் அப்பாவிம் மீதான என் அன்பு இன்னும் அதிகரித்தது.

 

ஒரு செய்தி

யார் இந்த அன்னா ஹசாரே?

முன்னால் ராணுவ வீரர். 1965 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கெடுத்தவர், காந்தியவாதி.

என்ன பெரிசா செய்துவிட்டார்?

எல்லா நிலைகளிலும் பின்தங்கியிருந்த ராலேகான் சித்தி (அகமது நகர், மகராஷ்டிரா) கிராமத்தை தனிஆளாக பண்பிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் முன்னோடி கிராமமாக மாற்றிக்காட்டியவர்.

அதனால என்ன?

இப்போது, இந்த கிராமம் முழுமையான சுயசார்புத் தன்மையுடையதாக, மத்திய மாநில அரசின் உதவியில்லையென்றாலும் தன்தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் மாறியுள்ளது. கிராமத்துக்கான மின்சக்தி கிராமத்திலேயே சூரிய, உயிர்ம, காற்று சக்திகளால் உற்பத்திசெய்யப்படுகிறது. 1975ல் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த இந்த கிராமம் இப்போது, இந்தியாவின் பொருளாதார வளமிக்க கிராமமாக மாறியுள்ளது.

இதெல்லாம் சரி, இவரோட வாழ்க்கை, வசதிகள் பற்றி…

இந்த மாற்றத்துக்கு காரணமான இவர் தன்னுடைய வாழ்நாள் சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். இன்றைக்கும், அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே 10க்கு 10 இடவசதி கொண்ட ஒரு சிறு அறையில் தான் வாழ்ந்துவருகிறார்.

இப்ப எதுக்காக உண்ணாவிரதம் இருக்கார்?

நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழலை ஒழிக்க சரியான சட்டக்கருவியை (ஜன லோக்பால் சட்டம்) ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கிறார்

இந்த சட்டம் புதியதான ஒன்றா?

இல்லை. 1972லேயே அப்போதய சட்ட அமைச்சர் திரு.சாந்தி பூசனால் கொண்டுவர பரிசீலிக்கப்பட்டது. ஆனா, நமது மாண்புமிகுக்களும் உயர் அதிகாரிகளும் 40 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பொதுசொத்தை ஆட்டையை போட்டு வருகின்றனர்

இவர் உண்ணாவிரதத்தின் மூலம் குறுகிய காலத்தில் இதை சட்டமாக்க அரசை நிர்பந்திப்பது சரியா?

இப்போதைக்கு அரசிடம் இவர் கேட்டுக்கொள்வது, இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிக்கை வாயிலான உறுதிமொழியைத் தான். அடுத்து, இந்த சட்டவரைவை மேற்கொள்ள 50% அரசு அதிகாரிகளும் 50% மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்பது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்ன நிகழும்?

இதன் மூலம் தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரத்தன்மையுடன் இயங்கும் மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஊழல் குற்றம் சாட்டப்படுபவர் எவ்வளவு பெரிய அதிகாரியாகவோ, எவ்வளவு பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும் 1 வருடத்துக்குள் விசாரிக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் தீர்ப்பும் தண்டனையும் வழங்க சட்டபூர்வ வழி ஏற்படும்.

இந்த சட்டத்தால் மட்டுமே இந்தியா ஊழலற்ற தேசமாகிவிடுமா?

தகவல் பெறும் உரிமை சட்டம் போல இந்த சட்டமும் வெளிப்படையான நிர்வாகத்தை உண்டாக்க உதவும் ஒரு கருவி மட்டுமே. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக இப்போதைக்கு இருக்கும் ஊழல் விசாரணை முறைகள் இன்னும் மேம்படும். இதில் சந்தேகமே இல்லை.

அன்னா ஹசாரே மட்டுமே இதற்காக போராடுகிறாரா?

அவருடன் இப்போது, சமூக ஆர்வலர்களான பாபா ஆம்தே, சுவாமி அக்னிவேஷ், அர்விந் கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் பல நல்ல உள்ளங்கள் இணைந்து போரட வந்துகொண்டிருக்கின்றன.

சரி, நான் என்ன செய்யமுடியும்?

இந்த விஷயத்தைப் பற்றி, நம் நண்பர்கள், உறவினர் வட்டத்தில் பேசலாம். இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமும் வாய்ப்பும் இருந்தால், நமது பகுதியில் இது பற்றிய விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொள்ளலாம். எதுவும் முடியாதென்றால், அன்னா ஹசாரேவின் உடல் நலம் மேம்பட பிரார்த்தனையாவது செய்யலாம்.

தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும்


15 வருஷத்துக்கு முன்பு குமுதத்தில் வந்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சென்னையையே பார்க்காத கிராமத்து மனிதரை சென்னைக்கு கூட்டிவந்து, ஊர் சுற்றிக்காட்டி அவருடைய ரியாக்ஷன்களை பதிவுசெய்திருந்தார்கள். அதில் ஒரு அங்கமாக சினிமா படபிடிப்பினை பார்வையிடவைத்திருந்தனர். அந்த டைரக்டரை தயங்கித் தயங்கி கிராமத்தவர், “சினிமாவை எப்படி 3 மணி நேரத்தில் எடுக்கமுடியுது?” என்று கேட்ட அவரின் கேள்வி நமது மக்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பொதுஜனங்களிடையே சினிமா பற்றி இருக்கும் இது போன்ற மாயவியப்பின் விளைவாகவே சினிமாவின் கதாநாயகர்கள் நம்மை ஆள்வதும், கடவுளாகுவதும் நிகழ்கிறது. ஆனால் காலம் எல்லா மாயத்தையும் கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. நிச்சயம் இன்றைய தேதிக்கு தமிழ் ரசிகன் இவ்வளவு அப்பாவியாக இல்லை. அவன் சினிமா எது நிஜம் எது என்பதை குறைந்தபட்ச அளவிலாவது புரிந்து வைத்துள்ளான். சினிமா தரும் குச்சிமிட்டாய்க்கும் குருவிரொட்டிக்கும் மயங்குவதில்லை. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம், உலகமயமாக்கலால் பெருமளவில் அன்னிய மொழிப்படங்களின் பரிட்சயம் ஏற்பட்டதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்ட இண்டர்நெட்டின் வீச்சும் தான். இது சராசரி ரசிகனுக்கு சினிமா பற்றிய பலவித சாய்ஸ்களை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கதை, திறமையான பிரசன்டேஷன் இல்லாத திரைப்படங்கள் குப்பைக்குத் தள்ளப்படும் போக்கு நம் காலத்தில் நிகழ்ந்துவருவதை ஆமோதித்துத்தான் ஆகவேண்டும்.

பொல்லாதவன் படம் வெளிவந்த நேரம். விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில், இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். “இந்தப்படத்தை பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் தழுவல் என்று பேசிக்கறாங்களே…” என்ற மதனுடைய கேள்விக்கு வெற்றிமாறன் சற்றுத் தடுமாறித்தான் போனார். தொடர்ந்து பேசிய மதன், “இல்ல… இந்த படத்துக்கும் அதுக்கும் தொடர்பிருப்பதாக நான் நினைக்கல” என்று சொன்னபிறகு, ஆசுவாசமான வெற்றிமாறன், “சார். பொல்லாதவன் படமும் பைசைக்கிள் தீவ்சும் வேற வேற. அந்த படம் கிளாசிக். அப்படி அந்த படம் போல இது இருக்குன்னு சொன்னாங்கன்னா நான் கொடுத்துவைச்சவன்” என்று சிறு புன்னகையுடன் சொன்னதாக ஞாபகம். பைசைக்கிள் தீவ்சில் சைக்கிள் காணமல் போகிறது. பொல்லாதவனில் பைக் காணாமல் போகிறது. இந்த ஒரு முடிச்சை மட்டும் வச்சிக்கிட்டு அதோட காப்பி தான் பொல்லாதவன் என்று சொல்லும் தமிழின் திரைவிமர்சனக் கலைஞர்களின் ரசனை பயப்படவைக்கிறது. அதே போலத்தான் கஜினி படம் வந்த போது, அது மெமொண்டோவோட காப்பின்னு அடிச்சுவிட்டாங்க. சமீபத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தையும் மெமரிஸ் ஆப் மர்டர் படம்ன்னு சொல்லிக்கிழிக்கிறாங்க. இது போன்ற புரிதலற்ற விமர்சனங்கள் நம்முடைய சினிமா ரசனையின் மொன்னைத்தன்மையையே வெளிப்படுத்துகிறது.


அதே நேரத்தில் நந்தலாலாவுக்கு கிகுஜிரோவிலிருந்து சீன்-பை-சீன் அப்படியே அளவெடுத்து ஜெராக்ஸ போட்டுவிட்டு இது என்னுடைய சொந்தகதை என்று சண்டித்தனம் செய்த மிஷ்கின், டீரெயில்ட் படத்தை அச்சாக தமிழுக்கு பச்சைக்கிளி முத்துச்சரமாக எடுத்துவந்த கௌதம், செல்லுலார் என்ற படத்தை ரெண்டு மூனு பேர் வேறுவேறு நடிகர்களைப் போட்டு தமிழ்படுத்திய விதம் (ஒரு வெர்ஷனில் ரித்திஷ், இன்னொரு வெர்ஷனில் எஸ்.வி.சேகர் மகன் நடித்ததாக ஞாபகம்) ட்சோட்சி படத்தை தமிழ் படுத்திய யோகி படம் (இப்போதைக்கு இவ்வளவு படங்கள் தான் என் ஞாபகத்தில் வருகிறது) போன்றவை சகித்துக்கொள்ளமுடியாதது. இதில் மூலப்படத்துக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்காமல், என்னமோ, தாங்கள் முட்டுச்சந்தில் மொட்டுவலைய பாத்துப்பாத்து யோசிச்சு எழுதியது போல, a flim byன்னு தன்னோட பெயரை போட்டுக்கொள்வது அயோக்கியத்தனம்.

 

இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே வெற்றிமாறன் ஆடுகளத்தில் பிளிமோகிராபியை வைத்து கேச்சி, அமரோஸ்பெராஸ் என்று ஒரு நீளமான படலிஸ்டை கொடுத்துவிட்டார் என நினைக்கிறேன். கண்டிப்பா அமரோஸ் பெராஸின் நாய்ச்சண்டையை ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி எழுதும் வாய்ப்பு குறைவென்றாலும் வாலண்டரியாக தன்னுடைய இன்ஸ்பரேஷன்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது தமிழ்சினிமாவின் பாசிட்டிவ் போக்காகவே பார்க்கத் தோன்றுகிறது. ஒருவகையில் இதை வருங்காலங்களில் தவிர்க்கமுடியாது. இப்பல்லாம் உலகப்படங்கள் பர்மாபாஜாரிலும், டோரண்டிலும் கொட்டிக்கிடக்கிறது. சாதாரண ரசிகர்கள்கூட உலகப்படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமே நம்ம இயக்குனர்கள் உலகப்படத்தை உல்டா செய்வதை ரொம்ப சுலபமாக கண்டுபிடித்துவிடமுடியும்.
மாறிவரும் சமூக-தொழில்நுட்பச்சூழலில் தமிழ் இயக்குனர்கள் சொந்த கதையை வைத்து படமெடுப்பது மட்டுமே அவர்களை நிலைக்கச்செய்யும் . சொந்த சரக்கு இல்லை, ஜெராக்ஸ் தான் எடுக்கமுடியும்னா முன்கூட்டியே கன்பெஷன் செய்துவிடவேண்டியிருக்கும்.

2000ம் ஆண்டுக்கு பிறகு வெளிபட்டு வரிசை கட்டி வரும் புதிய தலைமுறை இயக்குனர்கள்,  மிஷ்கின், வெற்றிமாறன், கௌதம், சுசீந்திரன், சசிகுமார், அமீர், சமுத்திரகனி, ராம், வசந்தபாலன், பிரபுசாலமன், ராதாமோகன், சற்குணம், பாண்டிராஜ், ராசுமாதவன், செல்வராகவன், பாலாஜி சக்திவேல்  (இந்த வரிசை தரமதிப்பீட்டில் அமைந்ததல்ல, எழுதும் போது மனதில் தோன்றிய ரேண்டம் பெயர்கள்) எல்லாரும் தமிழ்சினிமாவின் மிகப் பெரிய நம்பிக்கைகளாக தெரிகிறார்கள். அதற்கான உழைப்பும், தகுதியும் நிச்சயம் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், மாறிவரும் சூழலின் தன்மையறிந்து வேற்று மொழிப்படங்களை பிரதியெடுப்பதற்கு பதிலாக நமது மண்ணிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் கதைகளைச் சொல்லத்துவங்கவேண்டும்.

சமீபத்தில் நடுநிசிநாய்கள், யுத்தம் செய், ஈசன் ஆகிய 3 படங்களை தொடர்ச்சியாக பார்க்கநேர்ந்தது. இந்த மூன்று திரைப்படங்களின் கதையின் தளம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. நகரச்சூழலில் இளம்பெண்களுக்குக்கெதிரான பாலியல் வன்முறை, அதைச்சார்ந்த பழிவாங்கல் என்று கதையின் வடிவம் குறுகியிருந்தது. ஆனால் இந்த மூன்று படங்களின் இயக்குனர்னர்களின் இதற்கு முந்தைய படங்கள் வி.தா.வ, நந்தலாலா, சுப்ரமணியபுரம் வெவ்வேறு கதைத்தளத்தில் சொல்லப்பட்டவையாக இருந்தது சுவாரசியம். தொழில்நுட்பமும் திரைமொழிபற்றிய புரிதலும் விரிந்து செல்லச்செல்ல, நமது கதைத் தளத்துக்கான கரு பழிவாங்கல், காதல், வன்முறை என குறுகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சினிமாவின் வியாபாரத்தைத் தாண்டி, ரசிகனின் ரசனையை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்வது சினிமா பிழைத்திருப்பதற்கான கட்டாயமும் ஆகும். தமக்கான பார்வையாளர்களும் வியாபாரமும் மிகக்குறுகிய அளவே இருந்தாலும் சமரசம் செய்யாத ஆகச்சிறந்த படங்கள் மராத்தி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் வரும் போது, ஒரு தமிழ் சினிமாவுக்கான வியாபார சாத்தியம் 300, 400 கோடிகள் அளவில் இருக்கும் போது (உபயம்: எந்திரன்) அதன் முழுவீச்சை நாம் இன்னும் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி, ஈரானிய, கொரிய திரைப்படங்கள் தம்முடைய தனித்துவமான திரைமொழியால் தமக்கென தனிஇடத்தை உலகத்திரை அரங்கில் பிடித்ததோ, அதே காலம் தமிழுக்கும் வரவேண்டும். இதற்கான பொறுப்பு இயக்குனர்கள், ரசிகர்கள் என இருவருக்குமே இருக்கிறது.