பசியுடனிரு, முட்டாளாயிரு…


சென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார்.

நாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை அப்பப்ப பார்த்துக்கொண்டு, மிச்சப் பணத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு, சில்லரைக்காக அவருடைய கருணையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கவேண்டும். எனக்கும் வண்டியோட வாஸ்துவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் என்பதால், இது போன்ற ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று போனால், அங்கு ஏற்கனவே ஐந்தாறு பேர் காத்துக்கொண்டிருந்தனர்.

ஏடிஎம்முக்காக வரிசையில் நின்று, பஸ்ஸை தவறவிடவும் விரும்பவில்லை. அதனால் 500 ரூபாய் நோட்டை மாற்ற, அடுத்த பிளாட்பார்மில் இருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். திருப்பதிக்கான பஸ்கள் நிற்கும் பிளாட்பார்மில் நல்ல புத்தகக் கடை இருந்தது. நிறைய புத்தகங்கள் பார்வைக்கு இருந்தன. அப்போது எனக்கு புத்தகம் வாங்கும் மூட் இல்லையென்றாலும், 100 ரூபாய்க்கு குறையாமல் புத்தகம் வாங்கினால் தான் அந்த கடைகாரர் சில்லரை தரும் வாய்ப்பு இருப்பதால், 100லிருந்து 200க்குள் விலையுள்ள புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆனந்த விகனுடைய பிரசுரத்தில் வெளிவந்த முயற்சி திருவினையாக்கும் என்ற புத்தகத்தை பார்த்தேன். மிக நேர்த்தியான அட்டைப்படம், 500 பக்க கனமான புத்தகம். மிக முக்கியமாக, அதன் மூலவெளியீடு ஐஐஎம் நிறுவனம் என்று பார்த்த போது உடனே எடுத்துவிட்டேன். விலையைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. எப்படியும் 400ரூபாய் இருக்கும் என்று நினைத்த எனக்கு வெறும் 175 ரூபாயை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு ஐஐஎம் சப்ஸிடைஸ் செய்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.

சில்லரையை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் அமர்ந்த பின் உள்ளடக்கத்தை புரட்ட ஆரம்பித்தேன். பொதுவாக பஸ் பயணங்களின் போது படிப்பதை தவிர்த்துவருகிறேன். புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, சூழலை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் கிடைக்கும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். மேலும், பஸ்ஸினுடைய சீரற்றப் பயணத்துக்கிடையே படிப்பது கண்ணை சீக்கிரம் அயர்ச்சியடையச் செய்கிறது. ஆனால், இந்த முறை என்னுடைய ஆர்வத்தை அடக்கமுடியாமல் உள்ளடக்கத்தையும், முன்னுரையையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் முன்னுரையே, இது சாதாரண புத்தகமல்ல என்று சொல்லிவிட்டது.

ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்து முடிக்கும் முன்பே வந்து குவியும் பிளேஸ்மென்ட்களையும், ஆறு இலக்க சம்பளங்களையும் உதறித்தள்ளி, தம்முடைய உள்ளுணர்வு சொல்லியபடி கரடுமுரடான சுயதொழிலைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக இயங்கிவரும் 25 பேருடைய வாழ்க்கைக் கதைகள். இந்த 25 பேருக்கும் எடுத்த உடன் வெற்றி கிடைத்துவிடவில்லை. வேதனை, போராட்டம், விரக்தி என்று பல துயர நிகழ்வுகளிடையே சிறு கீற்றாய் அவர்களை வழிநடத்திய நம்பிக்கை ஒரு அற்புதத் தருணத்தில் அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.

இவர்கள் வயதால் வேறுபட்டவர்கள், பிறந்து வளர்ந்த சூழலில் வேறுபட்டவர்கள், குடும்ப பொருளாதார நிலையில் வேறுபட்டவர்கள், அவர்களுடைய துறைகளும் வெவ்வேறு. ஆனால் அவர்களிடம் இருந்த பொதுவான விஷயம், அவர்கள் தங்களுடைய கனவுகளை பின்பற்றினார்கள். எதாவது ஒரு நிறுவனத்தில் கிடைத்த வேலையை எடுத்துக்கொண்டு, சோப்பு விற்பதையோ, சாயம் கலந்த குளிர்பானத்தை விற்பதையோ, முகம் தெரியாத கஸ்டமர்களுக்காக பொட்டித் தட்டுவதையோ விட, தங்களுடைய உள்ளுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்டவர்கள். அதற்காக வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள்.

இப்போது பிரபலமாக விளங்கும் நௌக்ரி.காம் சஞ்சிவ் பிக்சாண்டனி, சுபிக்ஷா ஆர்.சுப்பிரமணியன், எஜிகேம்ப் ஷாந்தனு, ரேணுகா சுகர்ஸ் நரேந்திரா, ஏகலைவா ஃபவுண்டேஷன் சுனில் ஹண்டா, ஆர்சிட் பார்மா ராகவேந்திர ராவ், கிவ் இந்தியா வெங்கட் கிருஷ்ணன், பேசிக்ஸ் விஜய் மகாஜன், சின்டெக்ஸ் டங்காயச் போன்றவர்களின் தொழில் சரிதத்தை படிக்கும் போது ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி பல மில்லியனுக்கு தம்முடைய நிறுவனங்களை கட்டமைத்த மேஜிக் வியக்கச்செய்கிறது. இதில் எனக்கு சுனில் ஹண்டாவுடைய கதையும் வெங்கட் கிருஷ்ணன் கதையும் ரொம்ப வியப்பு. இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன்.

உண்மையான கனவு என்பது நமது உறக்கத்தில் வருவதல்ல, எது நம்மை உறங்கவிடாமல் செய்கிறதோ அது என்பது புரிந்தது. 2005ம் ஆண்டு, ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பில் தொடக்க உரை ஆற்றும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அறிவுரை தான் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்”. இந்த புத்தகத்திலிருக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மற்றவர்கள் முட்டாள்தனம் என்று நினைத்த விஷயங்களை எடுத்துக்கொண்டவர்கள். இன்னும் விரிவாக அவற்றைச் செய்வதற்குறிய பசியுடன் இருந்தார்கள்.

இந்த புத்தகத்தின் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் எழுதிய ராஷ்மி பன்சாலும் ஒரு ஐஐஎம் அலும்னி, பத்திரிகையாளர். இளைஞர்களுக்கான இதழை நடத்தி வருகிறார். அவருடைய எழுத்து நடையும், பிரசன்டேஷனும் குறிப்பிட்ட நபருக்கு பக்கத்தில் நாம் உட்கார்ந்து டீ அருந்திக்கொண்டே பேசிச் செல்வது போல் அவ்வளவு அன்யோன்யமாக இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைப்பதற்கு தோன்றவில்லை. பிறகு இதன் ஆங்கில வடிவத்தையும் இணையதளத்தில் எடுத்துப் படித்தேன். ஆங்கில நடையும் மிக எளிமையாக சரலமாக இருந்து நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது. தமிழில் ரவிபிரகாஷ் மொழிபெயர்த்திருக்கிறார். அற்புதமான ஆகச்சிறந்த மொழி பெயர்ப்பு. மனுஷன், ஆங்கில மூலவடிவத்தின் ஜீவனை அப்படியே தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்தில் வைத்திருக்கும் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பு ரொம்ப கன்வன்ஷனலாக இருக்கிறது. படித்தவும் பற்றவைக்கவில்லை. ஆங்கிலத்தின் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்” என்ற தலைப்பு சொல்லும் செய்தியை தமிழ் தலைப்பு சொல்ல மறந்துவிட்டது. ஆ.விகடன் எப்படி இதை அனுமதித்தது என்பது வியப்பு. இருந்தாலும் உள்ளடக்கத்தில் தமிழ் பதிப்பு மிகச்சிறந்ததாகவே வெளிவந்திருக்கிறது.

இந்த 25 பேரைப்போல இன்னும் பலர் இன்னமும் வெளியே தம்முடைய கனவை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையளிக்கும். சக்தியையும் புத்துணர்ச்சியையும் புதுப்பிக்கும். இந்த புத்தகத்தை ஒரே ஸ்டெட்சில் படித்து முடித்தபோது என்னுடைய பசி மற்றும் அறியாமையின் கணத்தை உணர்ந்தேன். நீங்களும் படிக்கும் போது உணரக்கூடும்.

வால்:இந்த புத்தகத்தின் ஆங்கில மொழியின் மென்நகலை வேண்டுவோர் http://ciieindia.org/programmes/stay-hungry-stay-foolish என்ற இணையதளத்துக்கு சென்று உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை கொடுத்துவிட்டு தரவிரக்கிக்கொள்ளலாம்.

சிறுவனும் சிறுமியும்


ஒரு சிறுவனும் சிறுமியும் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். சிறுவன் கூழாங்கற்களை சேகரித்துக்கொண்டிருந்தான். சிறுமி பழங்களை சேகரித்துக்கொண்டிருந்தாள். சிறிது நேரத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக்கொண்ட போது, சிறுமியிடம் இருந்த பழங்களைப் பார்த்து ஆசைப்பட்ட சிறுவன், கூழாங்கல்லுக்கு பழங்களை மாற்றிக்கொள்ளலாமா என்று சிறுமியிடம் கேட்டான். சிறுமியும் ஒத்துக்கொள்ள, சிறுவன் அவனிடம் இருப்பதிலேயே மிக அழகான கூழாங்கல்லை மட்டும் மறைத்து வைத்துக்கொண்டு மிச்சமிருக்கும் கூழாங்கல்லை சிறுமிடம் கொடுத்தான். சிறுமி அவளிடமிருந்த எல்லாப் பழங்களையும் மறைக்காமல் சிறுவனுக்கு கொடுத்தாள்.

அன்று இரவு சிறுமி நன்றாக உறங்கினாள். சிறுவனுக்கு உறக்கம் வரவில்லை. தான் கூழாங்கல்லை மறைத்து வைத்துக்கொண்டது போல, சிறுமி எதாவது பழத்தை தன்னிடமிருந்து மறைத்திருப்பாளோ என்ற யோசனையில் தன்னைத் துன்புறுத்திக் கொண்டிருந்தான்.

பிரச்சனையும் தீர்வுகளும்…


நமது வாழ்க்கையும் பணிச்சூழலும் பிரச்சனைகளால் நிரம்பியவை. உண்மையில் அவை நமது வாழ்க்கையை அர்த்தமாக்க அவசியமானவை கூட. நீ உனது பயணத்தில் எந்த பிரச்சனையையும் சந்திக்கவில்லை என்றால் தவறான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறாய் என்று அர்த்தம் என்ற வாசகத்தை எங்கோ படித்த ஞாபகம் வருகிறது
பிரச்சனையை தீர்ப்பதில் எப்போதும் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று அந்த பிரச்சனையை ஆதாரமாக வைத்து தீர்வை நோக்கிப் பயணித்தல், மற்றொன்று தீர்வை ஆதாரமாகக் கொண்டு பிரச்சனையை சந்தித்தல். எடுத்துக்காட்டாக கீழே கொடுக்கப்பட்ட நிகழ்வை கவனியுங்கள்:
முதன்முதலில் நாசா நிறுவனம் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் போது விண்வெளி நிகழ்வுகளை காகிதத்தில் பதிவு செய்யும் பணியில் சிக்கலை சந்தித்தனர். அப்போதிருந்த பேனா, வெற்றிடத்தில் ஈர்ப்பு விசை இல்லாத்தால் வேலை செய்யாது. விண்வெளியின் வெற்றிடத்திலும் வேலைசெய்யும் பேனாவினை கண்டறிவதில் பெரிய தொழில்நுட்பம் தேவைப்பட்டது.
 பிரச்சனை மையத் தீர்வு: நாசா ஏறக்குறைய 120 இலட்சம் டாலர்கள் செலவு செய்து 10 வருட கால இடைவெளியில் வெற்றிடத்திலும் வேலை செய்யும் பேனாவினை கண்டறிந்தனர். அந்த வகைப் பேனா வான்வெளி, ஆழ்கடல் என எல்லா நிலையிலும் வேலை செய்யும்.
தீர்வு மையத் தீர்வு: இதே பிரச்சனையை ரஷ்யர்கள் சந்தித்தபோது அவர்கள் கண்டறிந்த உடனடியான மற்றும் எளிமையான தீர்வு… “பென்சிலை உபயோகித்தல்…”
பெரும்பாலான மேலாண்மைத் தத்துவங்கள், இரண்டாவது முறையை வலியுருத்துகின்றன. நாம் பிரச்சனையை மையமாகக் கொண்டியங்கும் போது தீர்வினை எளிமைப்படுத்தாமல் சிக்கலாக்கிக்கொள்கிறோம். ஆனால் தீர்வினை மையங்கொண்டு இயங்கும் போது, மாற்று வழிகளில் நமது சிந்தனை செயல்படச்செய்கிறது. உண்மைதானே!

I Mean, “மீன்”…


எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு அழகான கஸல் பாடல், “நாம் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருக்கிறோம், நாம் சீக்கிரம் காதலிக்கத் தொடங்குவோமென நினைக்கிறேன்…” என்று போகும். அது போலத்தான் பிரச்சனைகளும். பிரச்சனைகளை தவிர்க்க எண்ணினால், அதுவே பெரிய பிரச்சனையாய் போய் முடிய வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக பிரச்சனைக்குள் இறங்கி, அதனை தொடர்ச்சியாக சந்தித்தால் அப்பிரச்சனையை நாம் இரசிக்க ஆரம்பித்து காதலிக்கவும் செய்யலாம்.

ஜப்பானில் மீன்சந்தையில் மக்களின் விருப்பத்தை பொறுத்து மீனவர் எடுத்த பல விதமான முயற்சிகளை படிக்கும் போது ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ஜப்பானியர்களுக்கு மீன் மிகவும் பிடித்த உணவு என்பதல் அதன் தேவையும் அதிகமாயிருக்கும். தொடர்ச்சியாக மீன் பிடித்ததால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன் கிடைக்கவில்லை. மீன் தேவையை சமாளிக்க மீனவர்கள் கடல் மீன்களை கடற்கரையை ஒட்டி நிலப்பகுதியில் குளம் வெட்டி மீன் வளர்த்தனர். ஆனால் நிலப்பகுதி மீன்களின் சுவையை மக்கள் விரும்பவில்லை.

அடுத்து, மக்களின் விருப்பத்துக்காக மீனவர்கள் கடலில் நீண்டதூரம் சென்று, ஆழ்கடலில் மீனெடுத்து ஐஸ் பெட்டியில் கொண்டு வந்து விற்க ஆரம்பித்தனர். ஐஸ்பெட்டியில் மீன்களை வைத்திருந்ததால் அவற்றின் சுவை ஜப்பானியர்களை கவரவில்லை.

மீனவர்கள் யோசித்து, மீன்பிடிக்கும் படகுக்குள்ளேயே சிறிய நீர்தொட்டியை ஏற்படுத்தி அதில் ஆழ்கடலில் பிடித்த மீன்களை வைத்து எடுத்து வந்து விற்றனர். இப்போதும் சலனமற்ற படகுத்தொட்டிக்குள் இருந்த மீன்கள் அதிக இயக்கமற்று இருந்ததால் அதன் சுவை குறைப்பாட்டை ஜப்பானியர்கள் கண்டுகொண்டனர்.

மீண்டும் மீனவர்களுக்கு மக்களின் சுவைத் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நீண்ட யோசனைக்குப் பின் புதிய வழிமுறையை கண்டுபிடித்தனர். ஆழ்கடலில் பிடித்த, மீன் இருக்கும் படகுத் தொட்டியில் ஒரு சிறிய சுறாமீனையும் விட்டனர். சுறாமீனைக் கண்டதும் தொட்டியிலிருந்த மற்ற எல்லா மீன்களும் பயந்து நீந்திக் கொண்டேயிருந்தன. இம்முறை கொண்டுவரப்பட்ட மீன்களின் சுவையில் எந்த குறையையும் மக்கள் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.

நான் கூட இயல்பான சூழலில் செயல்படும் வேகத்தைவிட இலக்கு நிர்ணயித்த பணிகளின் போது மிக வேகமாக பணியாற்றியிருக்கிறேன். நாம் எப்போதும் சிறப்பாக பணிசெய்ய, நாமே நமக்கு சில சுறாமீன்களை தொட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.

கிணறு வெட்ட பூதம்…


பஞ்சாயத்து தலைவர்களுக்கான பயிற்சியின் போது கிராம பஞ்சாயத்தின் அமைப்பை பங்கேற்பாளர்களுக்கு விளக்க ஒரு சைக்கிள் படத்தை வரைந்து, அதன் பாகங்களை பஞ்சாயத்து அமைப்பின் அங்கங்களுடன் பொறுத்திப் புரியவைப்போம். சைக்கிள் படத்தை முதன்முதலில் போர்டில் வரையும் போது எனக்கு சைக்கிள் படம், அவ்வளவு சுத்தமாக வரவில்லை. பங்கேற்பாளர்கள் எனது முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தனர். ஏதோ ஒன்றிரண்டு கதைகள் சொல்லி அந்த வகுப்பை ஒப்பேத்தினேன். எளிமையான சைக்கிள் படம் தானே, சுலபமாக வரைய முடியும் என்ற எனது குருட்டு நம்பிக்கை அதை வரைய முயற்சிக்கும் போது அவ்வளவு சுலபமில்லை என தெரியவந்தது. இது போல பல வேலைகளை வெளியிலிருந்து பார்க்கும் போது சுலபமாகத் தெரிந்தாலும் அதில் ஈடுபடும் போதுதான் அதன் வீரியம் தெரியவருகிறது. இதை நாட்டார் வழக்கில் “கிணறு வெட்ட பூதம் வந்தது” என கூறுவார்கள். பார்க்கும் போது சாதாரண கட்டமைப்பாக தெரியும் கிணறை வெட்டுவது சுலபமில்லை. எல்லா செயல்களும் அதற்கேயுரிய சிக்கல்களை கொண்டுள்ளது என்பதை பல சந்தர்பங்களில் புரிந்து கொள்ளமுடிகிறது.

மெண்டரிங்…


சில சமயங்களில் நல்ல ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான தமிழ் வார்த்தை கிடைக்காது. மென்டரிங் எனும் வார்த்தையை தமிழ்ப்படுத்த முடியாமல் வழிகாட்டுநர், குரு-சீடர் முறை போன்ற தோராயமாய் அதே பொருளைத்தரும் வார்த்தைகளை பயன்படுத்தவேண்டியுள்ளது. மிகப்பொருத்தமான மாற்று வார்த்தை கிடைக்காதவரை அதே ஆங்கில வார்த்தைகளை தமிழுக்கு தத்தெடுத்துக்கொள்வது தவறில்லை. மென்டரிங் மிகச்சிறந்த வார்த்தை மட்டுமல்ல, அது ஒரு தத்துவம்; தொடர்செயல். சமீபகாலமாக, நமது நிறுவனத்தில் மென்டரிங் விரிவாக பயன்படுத்தப்படுகிறது. நமது செயல்முறைகளிலும் அது பிரதிபளிக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு தாய், தனது குழந்தைக்கு சாப்பிட, நடக்க, பேச, எழுத சொல்லிக்கொடுத்து வாழ்க்கையை இயல்பாய் எதிர்கொள்ளத் தேவையான திறனை விதைக்கும் செயல்முறையை, நமது பணிச்சூழலில் மூத்தப்பணியாளர் இளம் பணியாளருக்கு ஏற்படுத்தித் தருவதே மென்டரிங் எனலாம். ஒரு குருவின் கடமை சீடருக்கு சொல்லித்தருவது இல்லை, சீடர் கற்றலுக்கான சூழலை ஏற்படுத்துவது என்ற தத்துவம் மென்டரிங்குக்கும் மிகப்பொருத்தம். அன்பே சிவம் படத்தில் கமல், மாதவன் மீது தனது கருத்தை திணிக்காமல், அவர் போக்கில் தன்வயப்படுத்தி, சகமனிதர்கள் மீதான பெருங்கருணையை மாதவனிடம் உண்டாக்குவது மென்டரிங் பற்றிய நல்ல பதிவு. “நான் ஒரு எறும்பைக் கொன்றேன், எனது மூன்று குழந்தைகள் அதை அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்ற ஜென் கவிதையை படித்தபோது, எனக்குள் சிலிர்த்தது. சூழலின் எல்லாப் பக்கத்திலும் நம்மால் காணமுடியாத கண்கள் இருக்கின்றன. அறியாமல் நான் செய்யும் வன்முறையை, தவறை சுற்றிலும் பல கண்கள் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றன. நான் என்னை ஒழுக்கப்படுத்திக்கொள்ளாமல் மென்டரிங் முறையில் நேர்மையாக பங்கெடுக்கமுடியாது என்றே தோன்றியது.

நாம் புழங்கும் சமூகம், நமக்கு மிகமுக்கிய மென்டராக இருந்து வருகிறது. ஒருமுறை வறட்சியின் பிரச்னைகள் குறித்து சிவகங்கை பகுதியில் ஒரு விவசாயியிடம் பேசிக்கொண்டிருந்த போது, “மழை பெஞ்சா நெல்லை விப்போம்; பெய்யலனா நெலத்த விப்போம்” என்று பேச்சுவாக்கில் அவர் கூறியது கேட்டு அசந்துபோனேன். வறட்சி; அதன் விளைவு; அதனை அவர்களின் வாழ்க்கை முறையோடு இயல்பாய் பொருத்திக் கொண்ட பக்குவம் இதையெல்லாம் யோசித்தபோது, அவர்களுக்குச் சொல்ல எந்த செய்தியுமில்லாமல் நான் நின்றிருந்தேன். சமீபத்தில் பார்த்த ஒரு திரைப்படத்தில், “தெருக்களில் இறங்கித் தேடும்போது, எல்லாம் கிடைக்கும். நமது கேள்விகள் அனைத்துக்கும் தெருக்களில் பதிலுள்ளது” என்ற வசனம் வரும். அது சத்தியமான உண்மை. கிராமத்துக்கு சென்று திரும்பும் ஒவ்வொறு முறையும் கிராமம் எனக்கு ஏதாவதொரு செய்தியை சொல்லித்தந்து அனுப்பும் மென்டாரிங் முறை எப்போதும் உற்சாகமான அனுபவம்.

பணித்திறம்…


ஒருமுறை பஞ்சாயத்து தலைவர்கள் பயிற்சிக்காக நானும், திரு வள்ளிநாயகம் அவர்களும் சென்று கொண்டிருந்தோம். பொதுவாகவே, நான் அவர் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பேன். 70 ஐ தாண்டிய இந்த வயதிலும் பஞ்சாயத்து துறை சார்ந்து, தீவிரமாக இயங்கிவரும் அவரது ஈடுபாடு, என்னை பல முறை ஒழுங்குபடுத்தியுள்ளது. எப்போதும் அவர் தன்னுடனே வைத்திருக்கும் பஞ்சாயத்து சட்டம் பற்றிய புத்தகத்தை என்னிடம் ஒரு குறிப்பிட்ட சட்ட பிரிவை சுட்டிகாட்டி, அதை குறித்து படிக்க தந்தார். அந்த புத்தகம் மிகவும் பழுப்பேறியிருந்தது. எல்லா பக்கங்களிலும் அவர் எழுதியிருந்த மேற்கோள்கள், அடிக்கோடுகள், குறிப்புகள் என இன்றைய தினம் வரை பஞ்சாயத்து சட்டத்தில் நடந்த எல்லா மாற்றங்களும் குறிக்கப்பட்டிருந்தது. எனக்கு ஆச்சரியம் தாளாமல், “எப்படி சார், இதுபோல் பராமரிக்கமுடிகிறது?” என கேட்டேன். அவர் மிக எளிமையாக, “பண்ணனுங்க. இல்லைனா அப்டேட் செய்ய முடியாது” என்றார். அவர் அந்த சட்டம் 1994ல் அரசு அறிக்கையாக (கெசட்) வெளிவந்தபோது வாங்கி, தாள் தாளாக பிரித்து ஒவ்வொரு தாளுக்கு இடையிலும் ஒரு வெள்ளைத்தாளை வைத்து, கடைசி பக்கத்திற்கு அடுத்து ஒரு 20 பக்கங்கள் கூடுதல் வெள்ளைத்தாள் வைத்து தொகுத்துத்தைத்துக் கொண்டாராம். பின்னர், அவ்வப்போது நிகழ்கிற சட்ட மாற்றம், நீதிமன்ற வழக்கு, அரசாணை, சட்ட விதிகள், சுற்றறிக்கைகள், அரசு திட்டம் என எல்லாவற்றையும் அதற்குரிய பிரிவுக்கு அருகில் குறித்து வருகிறார். இவரது தொடர்ச்சியான 13 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பு “வேலைப்பாடு” (றிக்ஷீஷீயீமீssவீஷீஸீணீறீவீsனீ) என்றால் என்ன என்பதை எனக்கு கற்றுத் தந்தது. ஓர் சிறந்த நடராஜர் சிலையில், முகத்தில் சொரியும் மஞ்சன நீர், மூக்கு நுனி வழியாக வழிந்து வீசிய கரத்தின் விரல் நுனியோடு இறங்கி, தூக்கிய திருவடியின் விரல் நுனியிலே சொட்டுமாம். அத்கைய நுண்ணிய பணித்திறம் அவரிடம் இருப்பதாகவே உணர்ந்தேன். எனது பணியிலும் இது போன்ற வேலைப்பாட்டை கொண்டுவர முயற்சிக்கும் எண்ணம் உறுதிபட்டது.