பசியுடனிரு, முட்டாளாயிரு…


சென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார்.

நாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை அப்பப்ப பார்த்துக்கொண்டு, மிச்சப் பணத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு, சில்லரைக்காக அவருடைய கருணையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கவேண்டும். எனக்கும் வண்டியோட வாஸ்துவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் என்பதால், இது போன்ற ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று போனால், அங்கு ஏற்கனவே ஐந்தாறு பேர் காத்துக்கொண்டிருந்தனர்.

ஏடிஎம்முக்காக வரிசையில் நின்று, பஸ்ஸை தவறவிடவும் விரும்பவில்லை. அதனால் 500 ரூபாய் நோட்டை மாற்ற, அடுத்த பிளாட்பார்மில் இருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். திருப்பதிக்கான பஸ்கள் நிற்கும் பிளாட்பார்மில் நல்ல புத்தகக் கடை இருந்தது. நிறைய புத்தகங்கள் பார்வைக்கு இருந்தன. அப்போது எனக்கு புத்தகம் வாங்கும் மூட் இல்லையென்றாலும், 100 ரூபாய்க்கு குறையாமல் புத்தகம் வாங்கினால் தான் அந்த கடைகாரர் சில்லரை தரும் வாய்ப்பு இருப்பதால், 100லிருந்து 200க்குள் விலையுள்ள புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆனந்த விகனுடைய பிரசுரத்தில் வெளிவந்த முயற்சி திருவினையாக்கும் என்ற புத்தகத்தை பார்த்தேன். மிக நேர்த்தியான அட்டைப்படம், 500 பக்க கனமான புத்தகம். மிக முக்கியமாக, அதன் மூலவெளியீடு ஐஐஎம் நிறுவனம் என்று பார்த்த போது உடனே எடுத்துவிட்டேன். விலையைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. எப்படியும் 400ரூபாய் இருக்கும் என்று நினைத்த எனக்கு வெறும் 175 ரூபாயை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு ஐஐஎம் சப்ஸிடைஸ் செய்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.

சில்லரையை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் அமர்ந்த பின் உள்ளடக்கத்தை புரட்ட ஆரம்பித்தேன். பொதுவாக பஸ் பயணங்களின் போது படிப்பதை தவிர்த்துவருகிறேன். புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, சூழலை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் கிடைக்கும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். மேலும், பஸ்ஸினுடைய சீரற்றப் பயணத்துக்கிடையே படிப்பது கண்ணை சீக்கிரம் அயர்ச்சியடையச் செய்கிறது. ஆனால், இந்த முறை என்னுடைய ஆர்வத்தை அடக்கமுடியாமல் உள்ளடக்கத்தையும், முன்னுரையையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் முன்னுரையே, இது சாதாரண புத்தகமல்ல என்று சொல்லிவிட்டது.

ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்து முடிக்கும் முன்பே வந்து குவியும் பிளேஸ்மென்ட்களையும், ஆறு இலக்க சம்பளங்களையும் உதறித்தள்ளி, தம்முடைய உள்ளுணர்வு சொல்லியபடி கரடுமுரடான சுயதொழிலைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக இயங்கிவரும் 25 பேருடைய வாழ்க்கைக் கதைகள். இந்த 25 பேருக்கும் எடுத்த உடன் வெற்றி கிடைத்துவிடவில்லை. வேதனை, போராட்டம், விரக்தி என்று பல துயர நிகழ்வுகளிடையே சிறு கீற்றாய் அவர்களை வழிநடத்திய நம்பிக்கை ஒரு அற்புதத் தருணத்தில் அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.

இவர்கள் வயதால் வேறுபட்டவர்கள், பிறந்து வளர்ந்த சூழலில் வேறுபட்டவர்கள், குடும்ப பொருளாதார நிலையில் வேறுபட்டவர்கள், அவர்களுடைய துறைகளும் வெவ்வேறு. ஆனால் அவர்களிடம் இருந்த பொதுவான விஷயம், அவர்கள் தங்களுடைய கனவுகளை பின்பற்றினார்கள். எதாவது ஒரு நிறுவனத்தில் கிடைத்த வேலையை எடுத்துக்கொண்டு, சோப்பு விற்பதையோ, சாயம் கலந்த குளிர்பானத்தை விற்பதையோ, முகம் தெரியாத கஸ்டமர்களுக்காக பொட்டித் தட்டுவதையோ விட, தங்களுடைய உள்ளுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்டவர்கள். அதற்காக வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள்.

இப்போது பிரபலமாக விளங்கும் நௌக்ரி.காம் சஞ்சிவ் பிக்சாண்டனி, சுபிக்ஷா ஆர்.சுப்பிரமணியன், எஜிகேம்ப் ஷாந்தனு, ரேணுகா சுகர்ஸ் நரேந்திரா, ஏகலைவா ஃபவுண்டேஷன் சுனில் ஹண்டா, ஆர்சிட் பார்மா ராகவேந்திர ராவ், கிவ் இந்தியா வெங்கட் கிருஷ்ணன், பேசிக்ஸ் விஜய் மகாஜன், சின்டெக்ஸ் டங்காயச் போன்றவர்களின் தொழில் சரிதத்தை படிக்கும் போது ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி பல மில்லியனுக்கு தம்முடைய நிறுவனங்களை கட்டமைத்த மேஜிக் வியக்கச்செய்கிறது. இதில் எனக்கு சுனில் ஹண்டாவுடைய கதையும் வெங்கட் கிருஷ்ணன் கதையும் ரொம்ப வியப்பு. இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன்.

உண்மையான கனவு என்பது நமது உறக்கத்தில் வருவதல்ல, எது நம்மை உறங்கவிடாமல் செய்கிறதோ அது என்பது புரிந்தது. 2005ம் ஆண்டு, ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பில் தொடக்க உரை ஆற்றும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அறிவுரை தான் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்”. இந்த புத்தகத்திலிருக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மற்றவர்கள் முட்டாள்தனம் என்று நினைத்த விஷயங்களை எடுத்துக்கொண்டவர்கள். இன்னும் விரிவாக அவற்றைச் செய்வதற்குறிய பசியுடன் இருந்தார்கள்.

இந்த புத்தகத்தின் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் எழுதிய ராஷ்மி பன்சாலும் ஒரு ஐஐஎம் அலும்னி, பத்திரிகையாளர். இளைஞர்களுக்கான இதழை நடத்தி வருகிறார். அவருடைய எழுத்து நடையும், பிரசன்டேஷனும் குறிப்பிட்ட நபருக்கு பக்கத்தில் நாம் உட்கார்ந்து டீ அருந்திக்கொண்டே பேசிச் செல்வது போல் அவ்வளவு அன்யோன்யமாக இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைப்பதற்கு தோன்றவில்லை. பிறகு இதன் ஆங்கில வடிவத்தையும் இணையதளத்தில் எடுத்துப் படித்தேன். ஆங்கில நடையும் மிக எளிமையாக சரலமாக இருந்து நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது. தமிழில் ரவிபிரகாஷ் மொழிபெயர்த்திருக்கிறார். அற்புதமான ஆகச்சிறந்த மொழி பெயர்ப்பு. மனுஷன், ஆங்கில மூலவடிவத்தின் ஜீவனை அப்படியே தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்தில் வைத்திருக்கும் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பு ரொம்ப கன்வன்ஷனலாக இருக்கிறது. படித்தவும் பற்றவைக்கவில்லை. ஆங்கிலத்தின் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்” என்ற தலைப்பு சொல்லும் செய்தியை தமிழ் தலைப்பு சொல்ல மறந்துவிட்டது. ஆ.விகடன் எப்படி இதை அனுமதித்தது என்பது வியப்பு. இருந்தாலும் உள்ளடக்கத்தில் தமிழ் பதிப்பு மிகச்சிறந்ததாகவே வெளிவந்திருக்கிறது.

இந்த 25 பேரைப்போல இன்னும் பலர் இன்னமும் வெளியே தம்முடைய கனவை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையளிக்கும். சக்தியையும் புத்துணர்ச்சியையும் புதுப்பிக்கும். இந்த புத்தகத்தை ஒரே ஸ்டெட்சில் படித்து முடித்தபோது என்னுடைய பசி மற்றும் அறியாமையின் கணத்தை உணர்ந்தேன். நீங்களும் படிக்கும் போது உணரக்கூடும்.

வால்:இந்த புத்தகத்தின் ஆங்கில மொழியின் மென்நகலை வேண்டுவோர் http://ciieindia.org/programmes/stay-hungry-stay-foolish என்ற இணையதளத்துக்கு சென்று உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை கொடுத்துவிட்டு தரவிரக்கிக்கொள்ளலாம்.