கைப்புள்ளையோட சென்னைப் பயணம்


அநியாயம், அராஜகம், அக்கிரமம், சகிக்கமுடியாத டார்ச்சர் இவை எல்லாவற்றையும் ஒரு சேர அனுபவிக்க வேண்டுமென்றால் இந்த விடுமுறைகாலத்தில் எதாவது ஒரு நகரத்துக்கு ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து பாருங்கள்.

போனவாரம் மதுரையிலிருந்து சென்னைக்கு திரும்பவேண்டியிருந்தது. மதுரையிலிருந்து கிளம்பும் போதே காலெண்டரில் என்னுடைய ராசிக்கு வடக்கில் சூலை என்று எழுதியிருந்தது. அதையும் மீறி இப்படி சூனியம் வைத்திருப்பார்கள் என்று யாருக்குத் தெரியும்? பெரியார் பஸ் ஸ்டாண்டில் ஆம்னி பஸ் பிடிக்க சென்ற போது, நான் வழக்கமாக பயணம் செய்யும் டிராவல் ஏஜென்சிகாரர், டிக்கட் 600 ரூபாய் என்றார். வழக்கமாக 380 ரூபாய் தானே வாங்குவீங்க என்றதற்கு, “அது போன மாசம், நான் சொல்றது இந்த மாசம்” என்று வசனம் பேசினார். நாம என்னமோ தேவையே இல்லாம ஆணி புடுங்க வந்தமாதிரி எகத்தாளமாகப் பார்த்தார். சரி விடுங்கடா என்று 600 ரூபாயைக் கொடுத்து டிக்கட் வாங்கினேன்.

நானாவது பரவாயில்லை. பயணம் செய்வது வடஇந்தியர்கள் என்றால் நம்ம ஆட்கள் தலைக்கு மொட்டையடித்து, சந்தனம் தடவி, ரெண்டு காதிலும் ஒரு முழ பூவை சொருகிவிடுவார்கள் போல. நான் பயணம் செய்த அதே பேருந்தில் நான்கு வடநாட்டவரும் வந்திருந்தனர். அவர்களிடம் ஆளுக்கு 900 ரூபாய் வாங்கியிருந்தனர். இதைக்கேட்டு நமக்கு 300 ரூபாய் மிச்சம் என்று நினைத்துக் கொண்டேன். ஆடு அதுவாவே வந்து பிரியாணி ஆகரேன்னா நம்மாளுங்க விடவாப் போறாங்க?

இவ்வளவு கொடுத்து பயணம் செய்கிறோமே அமர்கின்ற சீட்டாவது நல்லாயிருக்குமா என்றால், எனக்கு வாய்த்த இருக்கையில் புஷ்பேக் துருபிடித்து ஒரே நிலையில் இருந்தது. சீட்டில் உட்கார்ந்தால் வழுக்கிக்கொண்டே சென்றது. நானும் பல ஆங்கிள்களில் நிலையாக உட்கார முயற்சித்து தோற்றுப்போனேன். இதற்க்கிடையில் எனக்கும் என் பக்கத்து ஸீட்காரருக்கும், எங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஸைடு கைப்பிடியை யார் ஆக்ரமித்துக்கொள்வது என்று ஒரு மௌனயுத்தமே நடந்தது. சைக்கிள் கேப்பில் நான் என்னுடைய செருப்பை ஓரமாக கழற்றி வைக்கும் போது கைப்பிடியை அவர் ஆக்ரமித்துக்கொள்ள, வடை போச்சு!

எப்படியோ சென்னை போய் சேர்ந்தால் போதும் என்று மனதை தேற்றிக்கொண்டு உறங்க முயற்சித்தபோது நான் எதிர்பார்க்காத பயங்கரம் நடந்தது. அந்த பஸ்ஸில் இருந்த பாடாவதி டிவியில் “குருவி” படத்தைப் போட்டு எனது கனவினை வேட்டையாடி விட்டார்கள். என் தலைக்கு நேராக இருந்த ஸ்பீக்கரில் 10 நிமிடத்துக்கு ஒருமுறை வில்லனும் விஜயும் மாறி மாறி அடித்தொண்டையில் சவால் விட்டு என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தனர். உறக்கத்துக்கு இடையே கண்விழித்துப் பார்த்தால் விஜய் எதோ ஒரு மலையிலிருந்து இன்னொறு மலைக்கு தவ்விக்கொண்டிருந்தார். அதைவிடக் கொடுமை, எனது பக்கத்து சீட்காரர் அதை மெய்மறந்து ரசித்துக்கொண்டிருந்தது தான். காலைல போன உடனே, பக்கத்து சீட்காரரைப் பத்தி ஒரு கண்டனத் தீர்மானத்தை ப்ளாக்கில் எழுதியாகனும் என்ற சபதம் எடுத்தேன்.

இதையும் தாங்கிக்கொண்டு இரும்பு மனதுடன் பயணம் செய்த என்னை, அதிகாலை மூணு மணி வாக்கில் விழுப்புரம் பக்கத்தில் உணவகம் என்ற பெயரில் உள்ள பழைய காயலாங்கடை வாசலில் நிறுத்திப் படுத்தினார்கள். தண்ணீரில் சில சொட்டு பாலைக்கலந்த கலவையை எட்டு ரூபாய்க்கு விற்றனர். சும்மா ஒன்னுக்கிருக்க டாய்லெட் பக்கம் ஒதுங்கினால் ரெண்டு ரூபாய் கேட்டு மிரட்டினார்கள். பெண்களுக்கு மூன்று ரூபாயாம் (எனக்கு ஒரு ரூபாய் மிச்சம்). பத்து ரூபாய் தண்ணீர் பாட்டிலை 16 ரூபாய்க்கு விற்றார்கள். சுற்றிப்பார்த்தால் 10-15 பஸ்ஸில் என்னைப் போன்றே பல லகுடபாண்டிகள் அந்த மொக்கைக்கடையில் தெரிந்தே ஏமார்ந்துகொண்டிருந்தனர். நேரங்கெட்ட நேரத்தில் கூட டிரைவரும் கண்டக்டரும் ஓசி சாப்பாடு சாப்பிட்டுவிட்டு திருப்தியாக தம் அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், “அண்ணே, தாம்பரத்துக்கு அஞ்சு மணிக்கெல்லாம் வண்டி போகுமா?” என்று கேட்டதற்கு, ஆறு மணி ஆயிடும் என்றார்கள். “வண்டி ஏறும்போது நாலு மணிக்கெல்லாம் கோயம்பேடுக்கே போயிடும் என்று ஏஜென்ஸிகாரன் சொன்னானே…” என்றதற்கு, “போகும்; ஆனா போகாது..” என்ற ரீதியில் பதிலளித்து கடுப்பேற்றினார்கள்.

எப்படியோ எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஆறு மணி போல தாம்பரம் வந்திறங்கினால், “எங்க சார் போகனும்?” என்று கேட்டவாறு முகமூடி போடாத கொள்ளைக்கூட்டமாக ஒன்றுக்கு நான்கு ஆட்டோக்காரர்கள் எனக்கு முன்னே முட்டிக்கொண்டிருந்தனர். நானும் எவ்வளவு நேரந்தான் பர்ஸ்ல பணம் இருக்கறமாதிரியே நடிக்கறது? முடியல… அழுதுட்டேன். (சென்னையில இருந்து மதுரைக்கு கவர்ன்மென்ட் பஸ்ல போனது இதைவிட பெரிய சோகக்கதைண்ணே… மனசத் தேத்திக்கிட்டு அப்புறமா அந்தக்கதைய சொல்றேன்)

ஞானியரின் ஞானத்தை மட்டும் கேள்…


நேற்று இரவு 10.30 மணியிருக்கும். யதேச்சையாக வெளியே வந்து பார்த்தபோது எதிர் வீட்டுக்காரர் குடும்பத்துடன் முற்றத்தில் நிறைய புத்தகங்கள், புகைப்படங்கள் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். உற்றுக் கவனித்த போது அவை நித்தியானந்தர் பற்றியவை எனத் தெரிந்தது, அக்குடும்பம் நித்தியானந்தரின் தீவிர பக்தர்கள். அவர்கள் வீடு எங்கள் ஊருக்கான நித்தியானந்தரின் தியானபீடத்தை நிர்வகித்து வந்தது. சில மாதங்களுக்கு முன் நித்தியாநந்தரின் முக்கிய சீடர்களுள் ஒருவர் இவர்களின் வீட்டுக்கு வந்தபோது இவர்களின் தயாரிப்பும் வரவேற்பும் மிகையாக இருந்தது. நேற்று வரை நித்தியானந்தரின் புகழ் பாடிவந்த இவர்கள் சன் டிவி வெளியிட்ட ஒரே ஒரு செய்தியினால் நித்தியானந்தர் (இனி, நித்தியா) மீது பெருங்கோபம் கொண்டு எதிர்வினை ஆற்றியது வருத்தமாக இருந்தது.

நித்தியா ஒரு நடிகையுடன் உறவு கொண்டிருந்தது ஆதாரபூர்வமாக தெரிந்தவுடன் அதற்கான எதிர்வினை பெரிய அளவில் இருந்தது. இதற்கு முன் இது போன்ற சிக்கலில் மாட்டிய சாமியார்களை விட இவர் கொஞ்சம் பெரிய அளவில் பெயர் பெற்றவர் என்பதும், அவர் இளைஞர் என்பதும், அவருடன் உறவு கொண்டவர் பிரபலமான முன்னால் நடிகை என்பதும் ஊடகங்களையும் பொதுஜனத்தையும் இந்நிகழ்வு குறித்து தீவிரமாக கவனிக்க வைத்தது. நித்தியா குறுகிய காலத்துக்குள் கட்டிவைத்த பல கோடிக்கணக்கான ஆன்மீக சாம்ராஜ்யம் ஒரே நாளில் தவிடு பொடியானது. “முட்டை உடைந்த பிறகு, அதிகபட்சம் அதை ஆம்லட் தான் போடமுடியும்”.

உண்மையில் எனது கவனமெல்லாம் அவருடைய திறம் பற்றித் தான். யூ-டியூபில் அவரது ஞானம் பற்றிய பகவத்கீதை பற்றிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மிகச் சிறப்பானவை. ஆழமானவை. அவரது அறிவுத்தெளிவும் கேட்பவரை வசீகரிக்கும் பேச்சும் வலிமைமிக்கது. இப்போது அவர் ஒரு நடிகையுடன் உறவு கொண்டார் என்பதாலேயே அவரது திறமும் இது வரை இந்து மதத்துக்கான அவரது பங்களிப்பும் இல்லாமல் போய்விடுமா? கள்ளக்காமம் குறித்த மனிதகுலத்தின் புரிதல் உணர்வுபூர்வமானது. அது எல்லாத் தவறையும் விட மிகக் கடுமையானதாக கருதப்படுவது. எவ்வளவு பெரிய நபராக ஒருவர் இருந்தாலும், பாலியல் ஒழுக்கம் மீறப்படும் போது அவர் மக்களிடமிருந்து தூக்கியெறியப்படுகிறார். தனிமனித ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம்தராத அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கள்ளக்காமம் கொண்ட முன்னால் ஜனாதிபதி கிளின்டன், கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் மீதான அமெரிக்க மக்களின் கோபம் கடுமையாகவே இருந்தது. நமது இந்திய மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் ஒழுக்கம் நமது தேசத்தின் அடையாளமாகவே உலகெங்கும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

நம் மக்கள் நமது புனிதர்களின் தவறான பாலியல் ஒழுக்கத்தைக் கூட பொருத்துக்கொள்வார்கள், ஆனால் அது பொது வெளிக்கு வெளிப்படுவதை சகித்துக் கொள்ளவே மாட்டார்கள். சன் டிவியின் எதாவது ஒரு நல்ல டி.ஆர்.பி ரேட் உள்ள மெகா சீரியலில் ரஞ்சிதா நடித்துக்கொண்டிருந்தால் இதே போன்ற அறச்சீற்றத்தை சன் டிவி மேற்கொண்டிருக்குமா? இப்போது நித்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க காத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் ஒழுக்கமானவர்கள்? நமது திரைத்துறையில் பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அகில உலக சூப்பர் ஸ்டார்களின் லீலைகள் ஊரறிந்த இரகசியமாகத் தானே இருந்து வருகிறது? ஏசுநாதர் கூறியது போல் எந்தத் தவறும் செய்யாத மனிதன் முதற்கல்லை எடுத்து வீசச்சொன்னால் யார் மிஞ்சுவர்? உண்மையில் இப்போதய சாமியார்கள் பெரும்பாலானோர் போலி எனவும் முன்பிருந்த முற்றும் துறந்த முனிவர்களை நாம் இப்போது காணமுடிவதில்லை எனவும் நாம் அங்கலாத்து வருகிறோம். அடிப்படையில் எல்லா மனிதரும் குறைமனிதர் தான். யாருமே புனிதர் இல்லை. ஒருவேளை முன்காலத்தில், இப்போதிருக்கும் ஹிடன் கேமரா தொழில்நுட்பம் இல்லாததால் அவர்கள் தப்பித்தார்கள்.

பிரச்சனை சாமியார்கள் மற்றும் மக்கள் இருவர் மீதும் உள்ளது. சாமியார்களின் “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்” மிகப் பெரிய குற்றம். நமது காலகட்டத்தில் வாழ்ந்த ஓஸோ மிகச் சிறந்த உதாரணம். அவர் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசினார். அவர் தன்னைச் சுற்றி எந்தவித புனிதத்தன்மையையும் கட்டமைக்கவில்லை. அவரை நாடிச் சென்றவர்கள் அவரின் இயல்பை அறிந்தே ஏற்றுக்கொண்டதால் எந்த சூழ்நிலையிலும் ஏமாற்றமடையவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை திட்டியவர்கள் கூட இப்போது அவரது கருத்தை மதிக்கிறார்கள். இப்போதும் கோடிக்கணக்கில் அவரது புத்தகங்கள் விற்பனையாவது கவனிக்கத்தக்கது.

மக்களின் மீதுள்ள முக்கிய தவறு, ஒரு மனிதரை அவரது திறத்தைச் சார்ந்து மட்டும் எடைபோடாமல் அவரது தனிமனித வாழ்க்கையை பொதுப்படுத்திக் கொள்வதாகும். கலில் கிப்ரனின் மகா வாக்கியம், “ஞானியரின் ஞானத்தை மட்டும் கேள்” என்று சொல்கிறது. நாம் ஞானியரின் ஞானத்தை விடவும் ஞானியை பிடித்துக் கொள்கிறோம். நித்தியா பிரச்சனையில், சாருவுடைய பின்னூட்டம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாரு, எல்லா காலத்திலும் தமக்குப் பிடித்தது “வைன், வுமன் மற்றும் கடவுள்” என்பவர். அதை வெளிப்படையாகவும் எழுதிவருபவர். அவர் நித்தியாவின் சீடரும் கூட. ஆனால் அவரால் கூட ஏமாற்றத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை. அவரது வலைத் தளத்தில் நித்தியாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியிருப்பது, சாமியார்களின் தனிப்பட்ட வாழ்க்கை உயர் நிலையில் இருப்பது அல்லது இருப்பதாக காமித்துக்கொள்வது நமக்கு மிகமுக்கியம் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியது.

இந்த நிலை மாற நாம் ஞானியரை தவிர்த்து அவரது ஞானத்தை மட்டும் கவனிக்க ஆரம்பித்தால் ஏமாற்றங்களையும் கோபங்களையும் இல்லாமல் செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கும் கடவுளுக்கும் இடையில் நமக்கு ஏன் சாமியார்கள் போன்ற இடைத்தரகர்கள் தேவை. அவன் அருளால் அவன்தாள் வணங்கி, கடவுளை நமக்குள் கொண்டு வருவோம்.

மனிதன் படைத்தக் கடவுள்…


கடந்த 4 ஆண்டுகளாக நான், கிரண் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோர் வருடத்துக்கு ஒருமுறை 2 – 3 நாட்கள் தனிப்பட்ட விருப்பத்தின் காரணமாய் அதிகம் அறிப்படாத சிவஸ்தலங்களுக்கு சென்று வருகிறோம். இந்தப் பயணம் உள்ளார்ந்த புத்துணர்ச்சியையும் சுயம் சார்ந்த ஆற்றுப்படுதலையும் எமக்கு தருகிறது. கடந்த 2 நாட்கள், திருவாரூர் பக்கமுள்ள சில கோவில்களுக்கு சென்றுவந்தோம். திருமுக்கூடல், கோவில்வன்னி போன்ற 1000 வருடங்கள் பழமையான, பாடல்பெற்ற, பெரிய மகான்கள் வந்து சென்ற, இலட்சக்கணக்கான மக்களுக்கு ஆறுதலளித்த கோவில்கள் இன்று விளக்கு எரிக்கக்கூட எண்ணெய் இல்லாமல் முற்றாக சிதிலமடைந்து இருப்பதைக் காணும் போது பெருஞ்சோகம் ஏற்படுகிறது. ஒருகாலத்தில் உள்ளூர் மக்களின் உழைப்பால் கட்டப்பட்ட கோவில்களில் இன்று மக்கள் தினசரி வருவது கூடக் கிடையாது. கோவில் பராமரிப்பில் உள்ள அரசியல் தந்திரங்கள் மக்களாட்சி மீது விரக்தியை தந்தன.

இந்த சமயத்தில் எனக்கு டெல்லியில் உள்ள சுமார் 1000 கோடி ரூபாய்க்கும் மேலான மதிப்பில் கட்டப்பட்ட சுவாமி நாராயணா கோவில் ஞாபகம் வருகிறது. 4 நூற்றாண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் வாழ்ந்த ஒரு நாராயணன் என்ற முற்றும்துறந்த துறவியின் பற்றற்ற வாழ்க்கைப் போதனைகளை நமக்கு எடுத்துச்சொல்ல இது போன்ற ஆடம்பரம் தேவைப்படுகிறது. அந்தக் கோவிலில் இருந்தபோது, அமைதிக்கு பதிலாக காரணமறியாத வெறுமை தான் எனக்கு ஏற்பட்டது. 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சொத்தை பாதுகாக்க ராணுவ பகுதியில் நுழைவதற்கு செய்யப்படும் சோதனைகளைப் போல் பல கட்டங்களில் பல வித ஆய்வுக்குப் பிறகு உள்ளே அனுமதிக்கப்படும் போது, இந்த பணத்தைக்கொண்டு எத்தனை குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தை உறுதிசெய்திருக்க முடியும், எத்தனை குழந்தைகளுக்கு கல்வி தந்திருக்க முடியுமென்று மனது கணக்கிட்டது. வாழ்க்கைக்கு நம்பிக்கையையும் ஆறுதலையும் தரவேண்டிய எளிமையான ஆன்மீகம், கண்முன்னே வர்த்தகமாக்கப்பட்டு; பின் அரசியலாக்கப்படும் போக்கு வேதனையாக உள்ளது.

மக்களைப் போற்றுதும்…


ஈரானில் சென்ற வருடத்தின் ஒருநாளில், தீவிரவாதத் தாக்குதலால் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் அடுத்த நாள் செய்தித்தாளின் முதல் பக்கத்தில் ஈரான் குடிமகன் ஒருவர் தமது சமுகப்பணிக்காக தேசியவிருது பெறும் நிகழ்வு படத்துடன் இடம்பெற்றிருந்தது. தேசத்தை உலுக்கிய தீவிரவாதத் தாக்குதல் 3வது அல்லது 4வது பக்கத்தில் அச்சிட்டிருந்தனராம்.

இந்த செய்தி எனக்கு முக்கியமானதாகப்பட்டது. மனிதன் நம்பிக்கையிழக்கும் போதும், பயம் அவனை ஆட்கொள்ளும்போதும் நல்லெண்ணத்தை விளைவிக்கும் நற்செய்தியை முக்கியத்துவப்படுத்துவது அவசியமெனப்படுகிறது. நற்செய்தி மக்களுக்கு ஊக்கத்தை அளிக்கும். மாறாக பிரச்சனைகளை, தவறுகளை பெரிதுபடுத்தி அதையே பரப்பும் போது, நமது சக்தி நீர்த்துப்போவதை தவிர்க்கமுடியாது.

கனகம்மாசத்திரம் பகுதி விழாவின் போது, ஒரு உறுப்பினரின் மகன், முளைப்பாரியை அலங்கரிக்க பூக்கள் எடுத்துவர தோட்டத்துக்கு சென்ற போது பாம்பு கடித்துவிட்டது. அந்த நிலையிலும், அவர் தமது மகனை உறவினர்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு நமது பகுதிவிழாவில் கலந்து கொண்டார் என்பதை அவருடன் உரையாடியபோது தெரிந்ததும் எனக்கு சிலிர்த்தது. நிச்சயம் என்னால் அது போன்ற சூழலில் அவரைப்போல் இருந்திருக்க முடியாது. அவருக்கு இந்த நம்பிக்கையும் சக்தியையும் கொடுத்தது எதுவெனப் பார்த்தால், நமது களஞ்சியத்தின் கண்ணுக்குத் தெரியாத சக்தி விளங்கும்.

இதேபோல், லட்சுமாபுரம் பகுதியின் விழாவின் போது பந்தல் அமைக்க பணியாளர்கள் வராத நிலையிலும், களஞ்சிய பொறுப்பாளர்களே அதிகாலையிலிருந்து பந்தல் அமைத்து சிறு காயங்கள் பட்டது, சின்னம்மாபேட்டை பகுதி விழாவின் போது 100 பேர் மட்டுமே அமரக்கூடிய சமுதாயக்கூடத்தில் மின்சாரமில்லாமல் 300க்கும் குறையாத உறுப்பினர்கள் வேர்வை சொட்டச்சொட்ட நிகழ்ச்சி முடியும் வரை அமைதி காத்தது, நெமிலிப்பகுதியில் டேப்ரிக்காடரில் இசைத்த களஞ்சியப்பாடலுக்கு டயனாஸ்டிக் மனநிலையில் 50 வயதுக்கும் மேற்பட்ட களஞ்சிய உறுப்பினர்கள் சிலர் தம்மை மறந்து ஆடிமகிழ்ந்தது என வட்டாரம் நடத்திய 8 பகுதிவிழாக்களும் எதாவது ஒரு நற்செய்தியை, மக்களின் ஆற்றலை எனக்கு உணர வைத்தது.

மக்களைப் போற்றுவோம். நமது நிறுவனப்பெருமை குறித்தும், பங்களிப்பு குறித்தும் பெருமிதம் கொள்வோம். நல்ல செயல்களை வாய்ப்பு கிடைக்கும் எல்லா இடங்களிலும் உரத்து கூறுங்கள். குளத்தில் எறிந்த கல்லைப்போல சமூகத்தின் எல்லாப் பக்கங்களுக்கும் அலையாய் பரவிச் செல்லட்டும். தவறு மற்றும் பிரச்சனைகள் பற்றி விளக்கமுற்படாமல் அதைத் தீர்க்கும் முயற்சிகளில் சிறு பங்கினையாவது எடுப்போம்.

ரொம்ப ரசித்த ஆழமான வரிகள்…


“புதல்வா, அந்த ஆலமரத்தின் கனியைக் கொண்டு வா”
“இதோ தந்தையே…”
“அதைப் பிளந்துபார், என்ன காண்கிறாய்?”
“அணுநிகர் விதைகள் தந்தையே…”
“விதையினைப் பிளந்து பார், என்ன காண்கிறாய்?”
“விதைக்குள் ஒன்றுமில்லையே…”

“…நீ இங்கு காணாது போன நுண்மையே, இந்த மாபெரும் ஆலமரமாக ஆகியுள்ளது;
இப்பிரபஞ்சமாய் வியாபித்துள்ளது; நமக்குள் நிறைந்திருக்கிறது!”

– சாந்தோக்ய உபநிடதம்

தோல்வியின் மரைவலி


திட்டமிடல் நிகழ்வுக்காக ஒருமுறை கழுகுமலைக்குச் சென்றிருந்தேன். மலையேறி, மேலிருந்து முதன்முதலாக வெட்டுவான் கோவிலைப் பார்த்ததும், மனம் கொஞ்ச நேரம் திகைத்து நின்றது. அதிகம் அறியப்படாமல் எங்கோ கண்காணாத இடத்திலிருக்கும், அந்த அற்புதத்தைப் பார்த்தபோது, நெஞ்சுக்குள் மாமழை பெய்வது போலிருந்தது. மதுரைக்குத் திரும்பிய பின்பும், மூன்று நாட்களுக்கு மனம், ஆளில்லாக் காட்டில் காயும் முழுநிலாவைப்போல கம்பீரமான மௌனத்துடன் நின்றிருந்த அந்தக் கோவிலையே சுற்றிக்கொண்டிருந்தது. கோவிலை வடிவமைத்த யாரோ பெயர் தெரியாத சிற்பியின் கனவும், அது நிறைவேறாமல் பாதியிலேயே நின்றுபோன சோகமும் எனக்குள் வியாபித்தது. வெற்றி பெறாத பல உன்னத முயற்சிகள் அவை வெற்றிபெறவில்லை என்ற ஒரே காரணத்துக்காக உலகின் கவனத்திலிருந்து நிராகரிக்கப்படும் தருணங்கள் வலிநிறைந்தவை. மனிதன் அங்கீகாரத்துக்கு ஏங்கும் மிருகம். சமூகத்தின் நிராகரிப்புக்கு ஆளாகும் மனிதனின் நல்ல பண்புகள் வெளிப்படாமலேயே கரைந்துவிடுகின்றன. நமது பணிகளில் நாம் எப்போதும் தனியாளாக எதையும் சாதிப்பதில்லை. எல்லாம் கூட்டு முயற்சியின் வெளிப்பாடு தான். வெற்றி பெற்ற செயல்களில் இயல்பாகவே அங்கீகாரம் தாமாக வந்துவிடுகிறது. தோல்விபெற்ற பல பணிகளிலும் தீவிரமாய் உழைத்தவர்களின் வியர்வை கரைந்திருப்பதை நாம் கவனிக்கத் தவறுகிறோம். உண்மையில், தோல்வி பெறும் போது அல்லது சிக்கலில் இருக்கும் போது தான் நமக்கு ஆறுதல் தேவைப்படுகிறது. வெட்டுவான் கோவில் எனக்குள் செதுக்கிய இந்த செய்தி எனக்குள் மூடியிருந்த பல ஜன்னல்களை திறந்து வைத்தது.

நேபாளம் இந்தியாவை விட பெரியது…


ஒருமுறை வடக்கே களப்பார்வைக்காக சென்று கொண்டிருந்தபோது, கூட வந்திருந்த நேபாள நண்பருடன் நேபாளத்தின் சமீப அரசியல் மாற்றம், நேபாளத்துக்கும் இந்தியாவுக்கும் உள்ள வேற்றுமைகள் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். பேச்சினூடாக அவர், “நேபாளம், இந்தியாவைவிட பெரியது” என்றார். எப்படி என்றபோது, “இந்தியாவில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்தை அதிகபட்சம் எவ்வளவு நேரத்தில் சென்றடைவீர்கள்?” என்று கேட்டார். நான், தமிழ்நாட்டிலிருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கோ இமய மலைப்பகுதிக்கோ செல்லும் தூரத்தை மனதில் கொண்டு, “அதிகபட்சம் 4 நாட்கள்” என்றேன். நேபாளத்தில், தனது திட்டம் செயல்படும் கிராமத்தை சென்றடைய அவருக்கு 7 நாட்கள் ஆனதாகக் குறிப்பிட்டு, மலைகளினூடான, சாலைகளற்ற பாதை; நிச்சயமற்ற பயணத்தின் தன்மையை விளக்கியபோதுதான் எனக்கு உண்மை புரியத் தொடங்கியது. பொதுவாக இங்கு 4 மணி நேரத்தில் செல்லக்கூடிய இடத்திற்கு அங்கு ஒரு நாள் ஆகக்கூடிய துன்பத்தினை விவரித்தார். மனித மனம் தூரத்தை கணக்கில் கொண்டு பெரிய தேசம், சிறிய தேசம் என பிரிக்கிறது. தூரத்தைவிட, அதனை அடைய ஆகும் காலம்; அதற்கான போக்குவரத்து வசதிகளை நாம் கவனிக்கத் தவறுவதை உணர்ந்தேன். அந்த வகையில் பார்க்கப்போனால், அமெரிக்கா நம்மை விட சிறிய தேசம். நேபாளம் நம்மைவிட பெரிய தேசம். தொலைவினை அளவிட தூரத்தை விட, காலம் சரியான அளவுகோலாக இருக்க முடியும் எனத்தோன்றியது. இதுபோல், இயந்திரத்தனமான கல்வி முறை எனக்குள் திணித்த நம்பிக்கைகள், கற்பிதங்கள் ஆகியவை அனுபவங்கள் மூலம், மறுஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு புதிய பார்வைகள் உதிக்கும் தருணங்கள் எனக்கு போதிமரமாய் இருந்துள்ளன.

தீரா விருப்பங்கள்…


வயிற்றுப் பிழைப்புக்கு ஒரு தொழில் என்ற நிலை மிகவும் கொடியது. தனக்குப் பிடிக்காத செயலை நிர்பந்தத்துக்காக செய்வதே நரகம் என்று ஸ்பார்டகஸ் படத்தில் ஒரு வசனம் வரும். நிர்பந்தம் குடும்பத்தால், நண்பர்களால் வரலாம். வேறு வழியில்லாமல் நாமே கூட அதைக் கைக்கொண்டிருக்கலாம். நமது தேசத்தின் மிகப்பெரிய பிரச்சனை இதுவாகத் தான் இருக்கும். நமக்கு நாம் விரும்பிய செயல்களை செய்வதற்கு வாய்ப்புகள் அமைவதில்லை.

எ பக்கெட் லிஸ்ட் என்று ஒரு படம். ஜாக் நிக்கல்சன்னும் மோர்கன் ப்ரீமேனும் நடித்தது. அதில் எல்லா வசதிகளும் வாய்ப்புகளும் பெற்ற ஒரு பெரும்பணக்காரர், எதுவுமே இல்லாத குடும்பத்துக்காக வாழ்க்கையைத் தொலைத்த சாதாரண கார் மெக்கானிக் ஆகிய இருவர் தமது வாழ்க்கையின் இறுதி கட்டத்தில் கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு ஓர் மருத்துவமனையில் சந்திக்கின்றனர். நோய் இருவருக்கும் பாரபட்சம் காட்டாமல் ஒரேவித வலியை தருகிறது. இதில் பணக்காரருக்கு நோயின் தீவிரத்தை சகித்துக்கொள்ள முடியவில்லை. வாழ்க்கையில் கஷ்டங்கள் மட்டுமே சந்தித்த ஏழையால் நோயை சகித்துக்கொள்ள முடிகிறது. இது பணக்காரரின் கவனத்தை ஈர்க்கவே, இருவரும் நண்பர்களாகிறார்கள். தமது பழைய நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார்கள். அப்போது, வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதற்காக தாம் தொலைத்த பல நிறைவேறாத விருப்பங்களை இருவரும் பட்டியலிட்டுக்கொள்கிறார்கள். இமயமலைப் பனிச்சிகரத்தில் ஏறுவது, அமேசான் காட்டில் வேட்டையாடி உணவுண்பது, பிரியமான கால்பந்தாட்ட வீரரை சந்திப்பது, ஓடும் விமானத்தில் அழகான பெண்ணைப் புணர்வது என அவர்களின் தீரா விருப்பங்களை தமது எஞ்சியிருக்கும் வாழ்நாளில் தீர்த்துக்கொள்வதென தீர்மானித்து பணக்காரரின் அளவில்லா நிதியுடனும், ஏழையின் வழிகாட்டுதலுடனும் பயணத்தை ஆரம்பிக்கின்றனர். அவர்களின் எல்லா விருப்பமும் நிறைவேறி, மரணத்தை முழுத்திருப்தியுடன் எதிர்கொள்ளும் இறுதிக்காட்சி நெகிழ்ச்சியானது.

நமது வாழ்க்கையிலும் இது போல நம்மால் நிறைவேற்ற முடியாத விருப்பங்கள், நமது பணி மற்றும் குடும்பச்சுமையினால் நீண்டு கொண்டுதான் இருக்கின்றன. நமது மரணத்துள்ளாவது அதில் சிலவற்றை நிறைவேற்றிக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தால் நாம் பாக்கியவான்கள்.

கண்ணுக்கு முன்னே தொலைபவை…


குல தெய்வ வழிபாடு என்பது ஒரு சிறு துளி தான். தன்முனைப்பு பெருகிவிட்ட இக்காலச்சூழலில் எல்லாம் எளிமையாகவும் விரைவாகவும் கிடைக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகரித்து விட்டது. முன்பெல்லாம் வங்கியில் பணம் எடுக்க முழு அரை நாள் வங்கியில் காத்திருந்த காலம் போய், இப்போது ATMல் எனக்கு முன் இரண்டு பேர் காத்திருப்பதையும் பொருத்துக்கொள்ள முடிவதில்லை.

சில வாரங்களுக்கு முன் சென்னையில் மைலாப்பூர் அருகே ஒரு ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். எனது மேசையை துடைத்துக்கொண்டிருந்த 70 வயது பெரியவர் ஏதோ ஒரு பாடலை முனுமுனுத்துக்கொண்டிருந்தார். பிறகு அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது, அவர் ஒரு திண்டிவனம் பக்கம் தெருக்கூத்து வாத்தியார் எனவும் இப்போதெல்லாம் அதற்கு மரியாதையில்லை என்பதாலும் அவரின் பிள்ளைகள் அவரை கவனிக்காததாலும் ஓட்டலில் பாத்திரம் கழுவ வந்ததாகவும் சொன்னார். வருத்தமாக இருந்தது. நம் காலகட்டத்திலேயே டேப்ரிக்காடர், 5, 10 காசு பில்லைகள், கைத்துரிகை பேனர்கள், அஞ்சல் அட்டை என பல பொருட்கள் காணாமல் போய்விட்டன.

ஆளைக்கொல்லும் தொழில்நுட்பம் நமக்கு அவசியம் தானா? இவைகளை நாம் இழப்பதைவிட இவைகளை நாம் இழந்துகொண்டிருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் இருப்பது வலிக்கிறது. குறைந்தபட்சம் நாம் இழப்பவற்றின் மிச்சங்களை கொஞ்சம் சேகரித்து வைப்போம். அவை மியூசியத்தில் வைத்து நமக்கு பின் வரும் தலைமுறை அடையாளம் காணவாவது பயன்படட்டும்.