உலக திரைப்படங்களில் போர்கால சூழலை அதன் அழிவை விவரிக்கும் திரைப்படங்களுக்கு மிகப்பெரிய மதிப்பிருக்கிறது. இயக்குனர்கள் சமூகத்தின் மனசாட்சியாக இவற்றை ஆவணமாக பதிவு செய்திருப்பார்கள். நிறைய குறிப்பிடத்தகுந்த படங்கள் இந்த வகைமையில் இருந்தாலும் சில படங்கள் சாகாவரம் பெற்றவை. அவற்றில் போர்கால சூழ்நிலையை ஒரு குழந்தையில் பார்வையில், புரிதலில் சொல்லும் படங்கள் அதிக நெகிழ்ச்சியையும், மனபாரத்தையும் ஏற்படுத்துபவை. இந்த வகை படங்களை யோசிக்கும் போது எனக்கு சட்டென நினைவுக்கு வரும் படங்கள் விட்டோரிய டி சிகாவில் Bi Cycle Thieves (1948), ராபர்ட்டோ பெனிக்னியின் Life is Beautiful (1997), குயுல்லர்மோ டெல்டோராவின் Pan’s Labyrinth (2006). இந்த படங்கள் மறக்கவே முடியாத அனுபவத்தை தந்துள்ளன.
அதே போல Schindler’s List (1993) படத்தின் ஒரு காட்சியில் 4 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் குழந்தை சுற்றிலும் நாஜி படைகளால் மக்கள் சுட்டு சாகடிக்கும் சூழலில் தனியாக நடந்து சென்று, யாருமற்ற வீட்டில் கட்டிலுக்கு கீழ் சின்ன சிரிப்புடன் பதுங்கிக்கொள்வதும், பிறகு வேறொரு காட்சியில் அந்த குழந்தை சாகடிக்கப்பட்டு வண்டியில் கொண்டுசெல்லப்படுவதும் காட்டப்படும். இயக்குனர் ஸ்பீல்பெர்க் இந்த படத்தை முழுவதும் ப்ளாக் அன்ட் வொயிட்டில் எடுத்திருப்பார். ஆனால் குறிப்பிட்ட அந்த பெண் குழந்தையை மட்டும் சிகப்பு உடையுடன் காண்பித்திருப்பார். பார்ப்பவரின் மனதை கரையச்செய்யும் காட்சி அது. எப்போது இந்த காட்சியை பார்த்தாலும் போர் குறித்த அந்த குழந்தையின் அறியாமையும், சமூக அவலத்துக்கு அவர் பலியாவதும் என்னை அழசெய்யும். (தமிழில் இதுபோன்ற படமாக கன்னத்தில் முத்தமிட்டால் முயற்சிக்கப்பட்டது. ஆனா, வழமையான மணிரத்தின மேதைமையினால் கதையின் அடிப்படை கரு சிதைந்து, அழகியல் துருத்திக்கொண்டது.)
இந்த வகை படங்களின் உச்சம் என Grave of the Fireflies (1988) படத்தை சொல்லலாம். ஹிஷோ டகஹாட்டா இயக்கிய ஜப்பானிய படமான இது அனிமேஷன் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும். ஓரளவுக்கு வசதியான குடும்பத்தில் மகிழ்ச்சியாக இருக்கும் அண்ணன், தங்கை ஆகியோர் போரினால் தனித்துவிடப்படுகின்றனர். அண்ணனுக்கு 14 வயதிருக்கும். தங்கைக்கு 4 வயதிருக்கும். இவர்கள் இருவருக்குமே போர் சூழல், அதன் தாக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளமுடியவில்லை. கடைசியில் போரின் மிகக்கோர விளைவுகளால் அவர்கள் இருவரும் இறந்து போவார்கள். மிக அழுத்தமான காட்சிகளால் நிரம்பிய படம். எனக்கு மிகவும் பிடித்த ஆனால் இன்னொறுமுறை பார்க்க விரும்பாத படம் என இந்த படத்தை குறிப்பிடுவேன். பார்க்கும் போது பல இடங்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. அதிகாரம், ஆட்சியாளர்களின் ஈகோவினால் நிகழ்ந்த போர்களால் அந்த போட்டியில் எந்த தொடர்பும் இல்லாத எத்தனை எத்தனை எளிய மக்கள் விட்டில் பூச்சிகளை போல மடிகிறார்கள் என்பதை உணரமுடிகிறது.
இந்த வகை படங்களை பெரிய அளவில் மக்கள் பார்க்கவேண்டும். அப்போது இயல்பாகவே மிருக குணம் குறைந்து அன்பு பெருக்கெடுக்கலாம். சகமனிதத்தை போற்றவும் வார்த்தெடுக்கவும் இந்த வகை படங்கள் மிகப்பெரிய கருவியாய் இருக்கக்கூடும்.