
***
மௌனம்,
எல்லா இரண்டு வார்த்தைகளுக்கு நடுவிலும்
நதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது.
நாம் மட்டும்,
வார்த்தைகளைக் குடித்தே
தாகம் தீர்த்துக்கொள்கிறோம்!
***
***
எல்லா வார்த்தைகளும்
தீர்ந்து போன ஒருநாளில்,
மௌனம் தன்னைப் பற்றி
எழுத ஆரம்பித்தது!
****
***
குடித்து முடித்த கோப்பையில்
எஞ்சி நிற்கும் தேனீர் துளிகளைப்போல்,
நாம் பேசி முடித்த தருணங்களில்
எஞ்சி நிற்கும் மௌனம்…
***
***
பொதுக்கழிப்பரை சுவற்றில்,
கிறுக்கப்பட்டிருக்கும் வார்த்தைகளின் வாசம் –
உனக்கும் எனக்குமான துரத்தை
மௌனத்தால் அளக்கும்!
***
***
இயக்கமற்றிறுப்பது மௌனமென்றால்,
இயங்கி கொண்டிருக்கும் மௌனத்தை
என்னவென்று அழைப்பது?
***
***
எந்த பிரபஞ்சப் பறவை
கொத்திப்போகும்
மௌனம் பற்றிய இந்த கவிதையின் வார்த்தைகளை…
***
***
நாம்
தனித்திருக்கும் தருணங்களில்
மௌனமாய் நீ
வெட்கப்படும் போதெல்லாம்,
என்னால்
ஏனோ
வெறும் மௌனமாய்
அதை எதிர்கொள்ள முடிவதில்லை…
***
***
எங்கே போய் விடுகின்றன?
பேசுகின்ற வார்த்தைகள்
பேசி முடித்த பிறகு,,,
***