“இது நம்முடைய கிராம சபை. இதில் தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கும் யாருக்கோ நாம் ஏன் நேரம் ஒதுக்கவேண்டும்? அவர்கள் எப்படி நமது கிராமசபையில் கலந்துகொள்ளலாம்?” என்று எங்களைப் பார்த்து கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்திலிருக்கும் எடவகா பஞ்சாயத்தின் 19வது வார்டு கிராமசபை கூட்டத்தில் ஒரு பொது குடிமகன் கேள்வி எழுப்பியபோது கொஞ்சம் அதிர்ந்து தான் போனேன்.
கேரளத்தின் பஞ்சாயத்து அமைப்புகள் பற்றி எமது அகடமி மாணவர்கள் தெரிந்து கொள்வதற்காக நான் அவர்களை எடவகா பஞ்சாயத்துக்கு பட்டறிவு பயணமாக கூட்டிச் சென்றிருந்தேன். அந்த பஞ்சாயத்தின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களை பார்வையிட்டு, மக்களின் மேம்பாட்டில் அடித்தள அரசின் பங்களிப்பை அறிந்துகொள்வது எங்கள் திட்டம்.
அந்த பஞ்சாயத்தின் தலைவர் திரு.பிரதீப் கேரளத்தின் குறிப்பிடத்தகுந்த பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவர். என்னுடைய நண்பரும் கூட. அந்த உரிமையில் நாங்கள் சென்றிருந்த அன்று நிகழவிருந்த 19ம் வார்டுக்கான கிராம சபையில் எங்களை பிரதானமாக பங்கெடுக்கவைத்தார். அன்று தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் மீதான சமூகத் தணிக்கை நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்தது. அப்போது தான் இந்த கட்டுரையின் துவக்கத்தில் எழுப்பப்பட்ட கேள்வி எழுந்தது. திரு.பிரதீப், அந்த குடிமகனுக்கு பதில் அளிக்கையில், “தமிழ்நாட்டில் இருந்து இவர்கள் நம்முடைய பஞ்சாயத்தின் விருந்தினர்களாக வந்திருக்கிறார்கள், இந்த மாணவர்கள் நமது பணிகளைப் பார்த்து கற்றுக்கொண்டு, அந்த படிப்பினையை இந்தியாவெங்கும் பரப்ப திட்டமிட்டுள்ளார்கள்” என்று நமது நிறுவனத்தின் தன்மையை விளக்கினார். பிறகு, “அவர்கள் விருந்தினர்கள் என்றால் தாராளமாக வரவேற்கிறோம். ஒரு பார்வையாளராக நமது கிராமசபையில் பங்கெடுக்கலாம்” என்று மகிழ்வுடன் அதே குடிமகன் எங்களின் வருகையை அங்கீகரித்தார்.
கேரளத்தின் மக்கள் சக்தி!
எனக்கு பெருமிதமாக இருந்தது. கேரளத்தின் அபரிமித வளர்ச்சிக்கு இதுதான் ஆணிவேர். விஷயமறிந்த மக்கள். தமது சந்தேகங்களை மற்றும் தேவைகளை துணிச்சலுடன் கேட்கும் கலாச்சாரம். இதனால் அங்குள்ள அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் அதிகம் ஏமாற்றமுடியாது. மக்கள் கண்காணிக்கிறார்கள் என்ற உணர்வு இருப்பதாலேயே நல்ல பல செயல்கள் நிதமும் நடக்கின்றன. இந்தியாவின் மற்ற எந்த மாநிலத்தையும் விட கேரளா ஐந்து ஆண்டுகள் முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. வேறொரு சமயத்தில், அந்த பஞ்சாயத்தின் அலுவலர் ஒருவர், சராசரியாக ஒரு நாளைக்கு அந்த பஞ்சாயத்தில் மூன்றிலிருந்து ஐந்து விண்ணப்பங்கள் தகவல் கேட்கும் சட்டத்தின் கீழ் தகவல் கேட்கப்படுகிறது என்று சொன்னபோது உண்மையான மக்களாட்சி இப்படித்தான் இருக்கும் என்ற புரிதல் எங்களுக்கு ஏற்பட்டது.
கேரளாவில் பஞ்சாயத்துகளுக்கு அதிகபட்ச அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஒரு பாராளுமன்ற / சட்டமன்ற உறுப்பினருக்கு சராசரியாக ஆண்டுக்கு இரண்டு கோடிகள் தொகுதி மேம்பாட்டு நிதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கேரளத்தின் பஞ்சாயத்துகளுக்கு மேம்பாட்டு பணிகளுக்காக சராசரியாக ஆண்டுக்கு ஆறு கோடி ரூபாய் நிதி தரப்படுவது அதிகாரப்பரவலின் உச்சம் எனலாம். கல்வி, சுகாதாரம், நல்வாழ்வு, ஊரக வளர்ச்சி என ஏறக்குறைய எல்லா வளர்ச்சி அமைப்புகளின் மொத்த நிர்வாகமும் கேரள பஞ்சாயத்து அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. நாங்கள் சென்றிருந்த முப்பதாயிரத்து சொச்சம் மக்கள்தொகையுள்ள எடவகா பஞ்சாயத்து அலுவலகத்தில் சுமார் 15 முழு நேர அலுவலர்கள். அலுவலகம் முழுமையும் கணினி மயமாக்கப்பட்டு ஒரு கார்பரேட் அலுவலகம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மகளிர் நலத்துக்கான பொருளாதார சுதந்திர திட்டம்:
எங்கள் பயணத்தின் அங்கமாக பஞ்சாயத்தால் செயல்படுத்தப்படும் இரண்டு சிறப்புத் திட்டங்களை பார்வையிட்டோம். அங்குள்ள பழங்குடியின பெண்களை சுய உதவிக்குழுக்களாக ஒருமுகப்படுத்தி, அவர்களின் வாழ்வாதாரத்துக்காக குடைகள் தயார் செய்யும் சிறுஉற்பத்தி கூடத்தை பஞ்சாயத்து ஏற்படுத்தி தந்திருக்கிறது. இதன் மூலம் 50 பெண்கள் அவர்கள் இருக்கும் இடத்திலேயே வேலைவாய்ப்பு பெற்றுள்ளார்கள். குமரப்பாவின் சப்சிடியாரிட்டி பொருளாதாரக் கொள்கையின் படி, உள்ளுர் பயன்பாட்டுக்கான பொருள்களை அவர்களே உற்பத்தி செய்வதால், அவர்களின் பண சுழற்சி அவர்கள் அளவிலேயே கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் வெளிச்சந்தையை சார்ந்திருக்கும் தன்மை குறைந்து தன்னிறைவு சுலபமாக எட்டமுடியும். அடுத்த கட்டமாக இந்த பஞ்சாயத்தில் மற்ற எல்லா வித நுகர்வுப் பொருட்களுக்கான உற்பத்தியையும் இவர்களே தயார் செய்ய முயற்சிகள் எடுக்குமாறு கூறியுள்ளோம்.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்:
அடிப்படையில் எனக்கு தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தில் பெரிய நம்பிக்கை இல்லை. தமிழ்நாட்டில் அது செயல்படும் விதத்தைப் பார்த்து, சோம்பேறிகளையும் ஊழலையும் பெரிய அளவில் உற்பத்திசெய்யும் திட்டமாகத் தான் நான் புரிந்துகொண்டுள்ளேன். ஆனால் எடவகா பஞ்சாயத்தில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் மக்களின் தேவையை அறிந்து அதனை ஒட்டி செயல்படுவது மிகப்பெரிய ஆறுதல். இந்த பஞ்சாயத்தானது மாவட்ட அளவில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டதை சிறப்பாக நடத்தியதற்காக நடப்பு ஆண்டில் விருது பெற்றுள்ளது.
இவர்கள் இந்த திட்டத்தின் மூலம் வார்டுக்கு ஒரு தாவர நாற்றாங்கால் என 19 நாற்றாங்கால்களை ஏற்படுத்தியுள்ளனர். இதில் சராசரியாக ஒரு பருவத்துக்கு 25000 நாற்றுகள் தயார்செய்யப்பட்டு ஒரு நாற்று ஒரு ரூபாய் என்ற விகிதத்தில் விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. இதில் சுவாரசியமான அம்சம், இந்த நாற்றாங்கால் பண்ணையில் பணிபுரிவோர் கட்டாயம் வயதானவராகவோ, நலிவுற்ற பிரிவினராகவோ இருக்கவேண்டும் என்பது தான். நாற்றாங்கால் வேலை ஒப்புமை ரீதியில் குறைந்த உடலுழைப்பு உள்ளது. இதில் நலிவுற்ற பிரிவினருக்கும் மட்டும் வேலை தரப்படுவதால், அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. அவர்களும் கண்ணியமான வாழ்க்கை வாழ வழி ஏற்படுகிறது. அதே சமயம், உழைக்கும் சக்தி உள்ளவர்களின் உழைப்பும் தேவையில்லாமல் இது போன்ற திட்டங்களில் வீணடிக்கப்படுவதில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் விவசாயிகளுக்கு பெரிய எதிரியாய் உருவெடுத்திருக்கும் இத்திட்டம், பஞ்சாயத்து அமைப்பின் சரியான அணுகுமுறையால் விவசாயத்துக்கு உறுதுணையாகவும், நலிவுற்றப் பிரிவினரின் நலம் காக்கும் திட்டமாகவும் மாறியிருப்பதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
வனச்சூழல் மீதான அக்கறை மற்றும் பாதுகாப்பு:
கேரளத்தின் வயநாடு பகுதி இயற்கை எழில் கொஞ்சும் அற்புதமான பகுதி. ஆரோக்கியமான சுற்றுச்சூழலால் இங்கு வாழ்பவர்களின் சராசரி ஆயுட்காலம் நம்மை விட நிச்சயம் பத்து வருடம் அதிகமாகத் தான் இருக்கும். இத்தகைய சூழலை பாதுகாக்க பஞ்சாயத்து அமைப்புகள், இயற்கை வளங்களை போற்றிப் பாதுகாத்து வருவதும், வியாபாரத்துக்காக இயற்கையை அழித்து கட்டிடக்காடுகளை ஏற்படுத்தாததும் மகிழ்ச்சி தருகிறது. இந்த பஞ்சாயத்தை ஒட்டியிருக்கும் கருவா தீவினை காண்பதற்காக காத்திருந்தோம். ஆற்றினால் ஏற்படுத்தப்பட்டத் தீவு அது. கட்டுமரத்தில் தான் அந்த தீவுக்கு செல்லவேண்டியிருக்கும். நாங்கள் சென்ற சமயத்தில் அந்த தீவினில் யானை கூட்டம் இறங்கியிருப்பதால் எங்களுக்கான பயண அனுமதி மறுக்கப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பினாலும், வன மிருகங்களை கம்பி வேலிக்குள் அடைத்து அந்த இடத்தில் பத்து விடுதிகள் கட்டி, சுற்றுலாத் தளம் என்ற பெயரில் இயற்கையை சிறை பிடித்து வியாபாரம் நடத்தாமல், இயல்பான சூழலில் மக்களும் மற்ற விலங்குகளும் வாழ வழிசெய்திருப்பது, கேரளத்தில் மக்களுக்கு மட்டுமில்லை, எல்லா உயிரினங்களுக்கும் பூரண சுதந்திரம் இருக்கிறது என்று பூரிப்படைய தோன்றியது.