லீலா (2016)
இலக்கியப்படைப்பை திரைப்படமாக எடுப்பது சாதாரண விஷயமில்லை. பெரும்பாலும் இலக்கியம் படைப்பாளியின் கட்டுக்கடங்கா சுதந்திரம் + எல்லையற்ற கற்பனை ஆகியவற்றை சார்ந்து இருக்கக்கூடியது. மேலும் அங்கு ஆல் இன் ஆல் படைப்பாளி மட்டுமே க்ரியேட்டராக இருக்கிறார். ஆனால் திரைப்படம் சமூகம், சென்சார், காட்சிப்படுத்தும் வலி, பட்ஜெட் என பல கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு 100க்கணக்கான மனிதர்களின் அணி செயல்பாடுடன் இயங்கும் பெருஞ்செயல். இதனாலேயே இலக்கியப்படைப்புகளை திரைப்படமாக்குவது பெரும்பாலும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
லீலா கேரள எழுத்தாளர் உண்ணி.ஆர் அவர்கள் எழுதிய புனைவு. ஒருவகையில் இந்த கதையை மனித மனதின் அறம், சமூக ஒழுக்கம் குறித்த சர்ரியலிச விமர்சனம் என்றும் கொள்ளலாம். காட்சி படுத்துவதற்கு மிகவும் சிக்கலான கதையை திரைப்படமாக எடுக்கத்துணிந்ததற்கே கேரள திரைத்துறையின் முக்கிய இயக்குனர் ரஞ்சித் அவர்களுக்கு பெரிய வணக்கம். இந்த படம் எல்லாருக்கும் பிடிக்கும் என்று சொல்லமுடியாது. ஆனா, சுவாரசியமான படம்.
பூர்வீக சொத்தும் பணமும் நிறைய இருக்கும், தான்தோன்றியாக வாழ்க்கையை ரசித்துவாழும் குட்டியப்பன், தான் கனவில் கண்ட ஒரு ஃபேண்டசியை செய்து பார்க்க புறப்படுகிறார். அதனை சாத்தியமாக்க எடுக்கும் பிரயத்தனங்களும், அதன் விளைவுமே திரைப்பட காட்சிகளாக விரிகிறது.பேசாப்பொருட்களை பேசத் துணிந்த படம்.
எழுத்தில் இருக்கும் வீரியம் திரைப்படத்தில் சத்தியமாக இல்லை. இத்தனைக்கும் சிறுகதையை எழுதிய உண்ணி அவர்களே இந்த படத்தின் திரைக்கதையையும் எழுதியிருக்கிறார். குறிப்பாக கடைசி காட்சி சிறுகதையில் பெரிய அதிர்ச்சியையும், அடிப்படை கேள்விகளையும் எழுப்பும். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் கருதி சற்றுமொன்னையாக திரைப்படத்தின் கடைசி காட்சி அமைந்திருக்கும்.
சிறுகதையை படித்துவிட்டு படத்தைப் பார்த்தாலோ, படத்தைப்பார்த்துவிட்டு சிறுகதையை படித்தாலோ இதன் வீரியம் விளங்கும். ஒருவகையில் திரைப்படத்தில் க்ளைமாக்சை சப்டிலாக வைத்ததே இயக்குனர் சமூகத்தின் போலி விழுமியங்களை கிண்டலடிக்கத்தான் என்று நினைக்கிறேன். இந்த படம் குறித்த விவாதம் பரவலாக நிகழவேண்டும். நமது அறம், ஈகோ குறித்த பல கேள்விகளை இந்த திரைப்படம் புதைத்துவைத்திருக்கிறது.
படத்தின் இயக்கம், நடிகர்கள் அனைவரும் நேர்மையான உழைப்பை தந்திருப்பது ஒவ்வொறு காட்சியிலும் தெரிகிறது. மாற்று சினிமாவை விரும்புபவர்கள், கொஞ்சம் போல்டான, சீரியசான சினிமாவை நேசிப்பவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய படம். கூடவே, படத்தை பார்த்துவிட்டு, சிறுகதையையும் இந்த லிங்க்கில் படிக்கலாம்.
http://uyirmmai.com/ContentDetails.aspx?cid=4417