மாயாநதி 2017
மலையாள திரையுலகம் வருடந்தோறும் ஆச்சரியத்தை அளித்துக்கொண்டு தான் இருக்கிறது. கடந்த வருடம் இந்த படம். இதில் நிகழும் காட்சிகள் நமது வாழ்வில் நடந்துவிடும் அனைத்து சாத்தியமும் உள்ளதாக இருப்பதே இந்த படத்தின் நம்பகத்தன்மை.
பெரிய ஹீரோயிசம், பாவனைகள் என்று எதுவுமில்லாமல் தமது எதிர்கால வாழ்வை, இலட்சியத்தை தத்தமது பார்வையில் தேடும் காதலர்களின் கதை. தமிழும் மளையாளமும் இணைந்த கதை களன்.
மாத்யு என்கிற மாத்தான், பிழைப்புக்காக மதுரையில் கொஞ்சம் அன்டர்-க்ரௌண்ட் வேலை செய்பவன். அமெரிக்க டாலர்களை கைமாற்றும் விவகாரத்தில் போலிஸ் வந்துவிட, இவன் மட்டும் தப்பிக்கிறான். அதில் எதிர்பாராமல் ஒரு போலிஸ்காரர் இறந்துவிடுகிறார்.
மாத்தானின் காதலி அபர்ணா. சினிமாவில் கதாநாயகியாக முயற்சித்துக்கொண்டிருப்பவர். இவர்கள் இருவருக்கும் பல முரண்கள் இருந்தாலும் காதல் மாய நதியாய் இருவருக்குள்ளும் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. மதுரையிலிருந்து அமெரிக்க டாலர்களுடன் கேரளா வந்துவிடுகிறான் மாத்தான். அதனை கொண்டு, அபர்ணாவையும் கூட அழைத்து துபாயில் செட்டிலாக முயற்சி எடுக்கிறான். அபர்ணா, சினிமாவில் சாதிக்கவேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாள்.
தமிழ்நாடு போலிஸ் மாத்தானை தேடி கேரளா வந்து விடுகிறது. மாத்தானையும் பிடித்துவிடுகிறது. தமிழக – கேரள எல்லையில் அவனை என்கவுண்ட்டர் செய்ய திட்டம்.
தமிழக போலிஸாக வரும் இளவரசு கேரக்டர் எக்ஸ்டார்டினரி. அதே போல அபர்ணாவின் தோழியாக வரும் சமீராவும் அற்புதம். திரைக்கதையும் வசனங்களும் பிரமாதம் என்பது க்ளிஷேவாக இருந்தாலும் அது தான் உண்மை. கதையைவிட இந்த படத்தின் காட்சி அனுபவம் சினிமா எனும் கலையின் வீச்சை உணரவைக்கிறது.
❤️