மகாபாரதத்தில் குளக்கரையில் கொக்கின் வடிவில் இருக்கும் யட்சனுக்கும் தர்மனுக்கும் நிகழும் நீதி, அறம், உலக நடைமுறை குறித்த உரையாடல் மிக முக்கியமானது. யட்சனின் கேள்விகளுக்கு தர்மனுடைய பதில் தரும் வகையில் அமைந்திருக்கும். அதில் ஒரு கேள்வி,
யட்சன் – “இந்த உலகில் எது வியப்பானது?” என கேட்க, தர்மன் – “நாள்தோறும் பலர் இறப்பதைக் கண்ட போதும்..தனக்கு மரணம் இல்லையென்று மனிதன் கருதுகின்றானே அதுதான் வியப்பானது” என்று பதில் தருகிறான். நீர்குமிழி போன்றே நிலையற்ற இந்த வாழ்க்கையில் எவ்வளவு சிக்கல்களை மனிதர்கள் ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.
அதே போல நாம் பல புராண இதிகாசக கதைகளை கேட்டிருக்கிறோம். அதிலெல்லாம், ராட்சஸன் கடும் தவம் இருந்து தனக்கு சாகா வரம் வேண்டும் என்ற வரத்தை பெற்றிருப்பான். தான் சாகப்போவதில்லை என்று அறிந்த பின், கொடுஞ்செயல்களை, மற்றவர்களை வதைப்பதை செய்வான். உண்மையில் சாகாவரம், வரமல்ல அது சாபம் என்பதை இறுதியில் அவர்கள் உணர்வார்கள்.
கமலஹாசனின் உத்தம வில்லன் படத்தில் இதனைச் சார்ந்த காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். அந்த படத்தில், கமல் எழுதிய பாடல் வரிகள் மிகவும் அர்த்தம் பொதிந்தவை. “சாகாவரம் போல் சோகம் உண்டோ கேளாய் மன்னா! வேண்டியதெல்லாம் வாய்த்த ஒருவன் சாவையும் வேண்டி செத்த கதைகள் ஆயிரம் உண்டு, கேளாய் மன்னா”
ஆக என்றைக்குமே மரணம் குறித்த சிந்தனைகள் மனித சமூகத்தில் தொடர்ந்துகொண்டு தான் இருக்கிறது. சில வாரங்களுக்கு முன் எதேச்சையாகத் தான் எனது ஹார்டிஸ்க்கில் ரொம்ப நாளைக்கு முன்னாடி டவுன்லோட் பண்ணி வச்ச இரண்டு படங்கள், The man from earth (2007) மற்றும் Blade of the immortal (2017) அடுத்தடுத்து பார்த்தேன். அவை, இதனை இன்னும் உறுதி செய்தது. இரண்டுக்கும் கோ-இன்ஸிடன்ட். இந்த இரண்டு படத்திலும் ப்ரட்டொகானிஸ்ட்க்கு மரணமே ஏற்படுவதில்லை. அதன் விளைவுகளே படத்தின் காட்சிகளாய் விரிகிறது.
The man from earth கிளாசிக் படம். ஆதி காலத்தில் இருந்து ஒரு மனிதன் சாகாமல், இந்த பூமியின் எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சியாய் இருந்தால் எப்படி இருக்கும் என்ற மிதமிஞ்சிய கற்பனை. இறப்பே இல்லாத ஆதி மனிதன் தனது வாழ்விடத்தை 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றிகொண்டே செல்கிறார். இந்த கதை நிகழும் தருணத்தில் அவர் ஒரு கல்லுரியின் மிக வெற்றிகரமான, அனைவரும் விரும்பும் பேராசியராக இருக்கிறார். அன்றைய தினம் அந்த ஊருடன் தனக்கிருக்கும் எல்லா தொடர்புகளையும் அறுத்துக்கொண்டு பெயர் அறியாத அடுத்த ஊருக்கு செல்வதற்கு ஆயத்தமாகிறார். அவரை வழி அனுப்ப உடன் பணி புரியும் சக பேராசிரியர்கள் அவரது வீட்டுக்கு வருகிறார்கள். அப்போது யதேச்சையாக தொடங்கும் உரையாடல், பல புள்ளிகளைத் தொட்டு, மரணமற்ற தன்மைக்கு வந்து நிற்கிறது.
12 Angry Men போல, காட்சிகளில் பெரும்பாலும் ஒரு அறைக்குள் நிகழ்வதாக, உரையாடல்கள் மூலம் திட்டமிட்டிருப்பார்கள். மிக சுவாரசியமாக இருக்கும். ரொம்ப லாஜிக்கலாக, மிக மிக புத்திசாலித்தனமாக இந்த திரைப்படம் வந்த புதிதில் கிருத்துவ பழைமைவாதிகளின் எதிர்ப்பை சந்தித்தது.
Blade of the immortal கீழை தேசத்து, ஜப்பான் நாட்டு படம். ஒரு சூனியக்காரியால் மரணமற்ற வரம் பெற்ற சாமுராய் வீரனின் சாகசத்தையும் அவன் மரணத்துக்காக ஏங்கும் தவிப்பையும் பேசும் படம். இவனது ஒரு செயலால் தேசத்தின் படைவீரர்கள் அனைவரும் எதிர்த்து, இவனை கொல்ல வருகிறார்கள். மிக நீண்ட போரினை இவன் தனி ஆளாக எதிர்கொள்கிறான். தனது தங்கை போர் வீரர்களால் கொல்லப்படுகிறார். தானும் இறந்து, ஓர் சூனிய கிழவியின் வாயிலாக இறப்பற்ற தன்மையை அடைகிறான்.
தனது ஆத்மாவை மீட்டு மரணத்தை ஏற்க இவனுக்கு இருக்கும் ஒரே வழி தீயதை எதிர்ப்பது என அறிந்து அதற்காக மேற்கொள்ளும் சாகசம் கதையாக விரிகிறது.
மரணமில்லாத தன்மை கேட்கும் போதே ஆத்சர்யமாகவும் உற்சாகத்தை தூண்டுவது போலவும் இருக்கிறது. யார் கண்டார்கள். இந்த பிரபஞ்சத்தின் எதோ ஒரு மூலையில் மரணமற்ற யாரோ ஒரு மனிதன் இந்த பதிவைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருக்கலாம்.
√