The bullet vanishes (மாயத் தோட்டா) 2012


e

சீனாவின் ஷங்காய் மாகாணம், 1920 வாக்கிலான காலம், மழை நாள், இரவு நேரம். அது துப்பாக்கி தோட்டாக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை. அங்கு வேலை பார்க்கும் ஒரு பெண் தொழிலாளி சில தோட்டாக்களை திருடிவிட்டாள் என குற்றம் சுமத்தப்பட்டு சக தொழிலாளிகளின் முன்னே கைகள் கட்டப்பட்டு, மண்டியிட்டு இருக்கிறாள். முதலாளி நீதி விசாரணை நடத்துகிறான்.

முதலாளி தன் கையில் வைத்திருக்கும் ரிவால்வரில் ஒரே ஒரு குண்டை மட்டும் வைத்துவிட்டு, ரிவால்வர் கேப்பை சுழற்றிவிடுகிறான். பிறகு, அந்த பெண்ணின் மீது தான் அபாண்டமாக குற்றம் சுமத்தியிருந்தால் இந்த துப்பாக்கி என்னை தண்டிக்கட்டும் என டிரிக்கரை அழுத்த, வெற்று சத்தத்துடன் டிரிக்கர் அமைதியாகிறது. பிறகு அதே துப்பாக்கியை மீண்டும் சுழற்றி அந்த பெண்ணிடம் கொடுத்து அவளை சுட்டுக்கொள்ளச் செய்யும் போது துப்பாக்கியின் தோட்டா உண்மையிலேயே வெடித்து அவள் இறக்கிறாள்.

இது தவறிழைத்த அவளுக்கு கடவுள் தந்த தண்டனை என அறிவித்து, சடலம் அப்புறப்படுத்தப்படுகிறது. இப்படித் தான் இந்த படம் ஆரம்பிக்கிறது.

அதற்கடுத்து அந்த தொழிற்சாலையில் அடுத்தடுத்து மேலாளர் அளவில் பணிபுரியும் சிலர் அடுத்தடுத்து மர்மான முறையில் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்களை சுட்ட தோட்டாக்களும் கிடைப்பதில்லை. தொழிலாளிகளிடையே இந்த கொலைகளை செத்து போன பெண்ணின் ஆவி செய்வதாக பீதி பரவுகிறது.

அந்த பகுதியில் இரண்டு போலிஸ்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவன், பூமியில் பதிந்த காலடி தடத்தை வைத்தே அந்த காலடிக்கு சொந்தமானவன் எவ்வளவு உயரம், என்ன வயது, எவ்வளவு எடை, அவனது நடைபழக்கம் ஆகியவற்றை ரொம்ப லாஜிக்கலாக, உண்மைக்கு நெருக்கமாக சொல்லக்கூடியவன். அந்த பிராந்தியத்திலேயே துப்பாக்கியை மிக வேகமாக உபயோகிக்ககூடியவன்.

மற்றொருவன், துக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்ட உடலுக்கும், கொலை செய்யப்பட்டு பின்னர் துக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படும் உடலுக்கும் இருக்கும் வித்தியாசத்தை அறிய தானே தன்னை துக்கு மாட்டிக்கொண்டு, உடலில் ஏற்படும் மாற்றங்களை குறித்து அதன் அடிப்படையில் குறிப்பிட்ட வழக்கின் உண்மைத் தன்மையை கண்டறியும் வீரியம் கொண்டவன். இவர்கள் இருவரும் தொழிற்சாலையில் நிகழும் தொடர்கொலைகளை கண்டறிய இணைகிறார்கள். பிறகு படம் அதிரிபுதிரி வேகத்துடன் செல்கிறது.

குறிப்பாக மாயமான தோட்டாக்கள் எப்படி தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்று ஆராயும் முயற்சிகளும் பனிக்கட்டியினால் கூட தோட்டாவை மாதிரியாக செய்து பார்த்து அதனால் கொலை நிகழ்ந்திருக்குமா என யோசித்திருப்பார்கள். கடைசியில் உண்மையான உண்மையை கண்டுபிடிக்கும் போது வாவ் என இருக்கும். அடுத்த முடிச்சு, துப்பாக்கி முதலாளி பயன்படுத்தும் போது வெடிக்காமல் குறிப்பிட்ட நபர் பயன்படுத்தும் போது மட்டும் வெடிப்பது. இதில் ப்ராபபளிட்டி தியரியை தாண்டி செய்யப்படும் கோக்குமாக்கு வேலையை கண்டறியும் வித்தை, மிக சுவாரசியமாக விரிந்திருக்கும்.

இதே போல படம் முழுக்க சிலந்தி வலை போல பரவியிருக்கும் முடிச்சுக்கள். அதனை ஒவ்வொன்றாக விடுவிக்கப்படும் போது பெரிய காட்சிஅனுபவத்தை தருகிறது. எல்லாமே சூப்பர் என்றாலும் எனக்கு தனிப்பட்ட வகையில் இந்த படத்தின் கடைசி காட்சி பிடிக்கவில்லை. அதற்கு முன்பே இந்த படத்தை முடித்திருக்கலாம். கடைசி காட்சி சீனதேசத்தின் அதிகாரமையங்களை பகடி செய்ய எடுக்கப்பட்டதாகவும் கருதமுடிகிறது.

படத்தின் அடுத்த கவனம், அதன் பிரசன்டேஷன். 100 வருடத்துக்கு முந்தைய காலகட்டத்தை பளிங்கு சுத்தமாக நம் கண்முன்னே நிறுத்துகிறார்கள். ஒவ்வொறு ப்ரேமும் அவ்வளவு அழகு, அற்புதம். இந்த படம் 2009ல் வெளிவந்த ஷெர்லாக் ஹோம்ஸ்ன் இன்ஸ்பரேஷன் என்று சொல்லலாம். நிச்சயம் நம்ம ஊர் இயக்குனர்கள் போல ஈ அடிச்சான் காப்பி அடிக்கவில்லை. ஷெர்லாக் படத்தின் ப்ளாஷ்பேக் யுக்தி, வெடிக்கிடங்கில் இருந்து தப்பிப்பது, தன்னை துக்கு மாட்டிக்கொண்டு அதன் விளைவுகளைஆராய்வது என பல காட்சிகள் இந்த படத்திலும் இருந்தாலும் படத்தின் கான்டெக்ஸ்ட் முற்றிலும் வேறாகவே இருப்பதால் பெரிய பாதிப்பு தெரியவில்லை.

குறைந்த பட்ஜெட்டில் மிக அதீத வெளிப்பாட்டைக் கொடுக்கும் இந்த படம் தொழில்நுட்பம், காஸ்டிங் என அனைத்திலும் ஆசிய சினிமா சோடை போகவில்லை என எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற படங்கள் தமிழில் எப்பவரும் என்ற எதிர்பார்ப்பை ஏக்கத்துடன் ஏற்படுத்துகிறது. அது வரை இந்தவகை படங்களை டப்பிங்காவது செய்து வெளியிடலாம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s