சேரன் எனும் இயக்குனரின் படைப்புலகம்


jk_2334770f

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் 90களில் இறுதியில் நுழைந்து தமிழ் சினிமாவில் தனக்கென தனியிடத்தை பிடித்தவர். அவர் இயக்கிய எல்லா படங்கள் சமூக பொறுப்புணர்வுடன் நம்பிக்கையை விதைக்கும் தன்மையுடைய மெலோட்ராமா வகையை சார்ந்தவை. சாதி பிரச்சனை பற்றி பாரதி கண்ணம்மா, மாற்றுத்திறனாளிகள் குறித்த பொற்காலம், தற்கால அரசியல் குறித்த தேசிய கீதம், வெளிநாட்டு வேலை மோகம் குறித்த வெற்றிக்கொடி கட்டு, வரட்டு குடும்ப கவுரவம் குறித்த பாண்டவர் பூமி என அவர் ஆரம்பத்தில் எடுத்த ஐந்து படங்களுமே சமூக பிரச்சனைகளை கமர்ஷியலாக, ரசிக்கத்தகுந்த வகையில் சொன்னவை. (வடிவேலு – பார்த்திபன் காம்பினேஷன் மறக்கவே முடியாது) இந்த ஐந்து படங்களுமே கிராம பின்னணியில் அமைந்திருந்தது குறிப்பிடப்படவேண்டியது.

கொஞ்சம் இடைவெளி விட்டு, அடுத்த இன்னிங்ஸில் சேரன் பயோகிராபி சார்ந்த படங்களை செய்யத்துவங்கினார். இவரது ஆட்டோகிராப் படம், ஒரு இளைஞனின் வாழ்வில் பல கட்டங்களில் சந்தித்த காதலை சுவாரசியமாக சொன்னது. இதிலும் பெண் கல்வி, ஜாதிய அடக்குமுறை என பல சமூக அவலங்கள் பதியப்பட்டாலும் ஒருவித ஆணாதிக்க பாவத்துடன் இந்த படம் இருப்பதாக குறை சொல்லப்பட்டது. அதையும் தாண்டி இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அடுத்து இவர் இயக்கிய தவமாய் தவமிருந்து எனக்கு மிக முக்கிய படமாக இருந்தது. இதுவும் பயோகிராபி வகை தான். தந்தையின் அன்பை, தியாகத்தை விரிவாக சொன்ன படங்கள் தமிழில் மிகக்குறைவு. இந்த படத்தில் ராஜ்கிரண் பாத்திரம் அவ்வளவு அற்புதமாக இருக்கும். பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் எப்பவும் ஞாபகம் வைத்துக்கொள்ளக்கூடிய, உணர்வெழுச்சி சார்ந்த திரைப்படமாக இருக்கிறது. இதற்கு பிறகு அவர் இளைஞர்களின் நகர வாழ்க்கை, ஆடம்ப மோகம் குறித்து இயக்கிய மாயக்கண்ணாடி, மத ரீதியான வேறுபாடுகளினால் காதலர்கள் பிரிந்து போயிருந்தாலும் அவர்களின் நினைவுகளில் அன்பு அப்படியே மாறாமல் இருந்தது குறித்து பேசிய பொக்கிஷம் படம் என பயோகிராபி வகை படங்கள் சேரனிடம் இருந்து வெளிப்பட்டன.

இயக்குனர் சேரன் மீது எனக்கு பெரிய மரியாதை இருந்தாலும் அவரை நடிகராக எனக்கு பிடிக்கவில்லை. பாக்கியராஜ், ராஜேந்தர்.டி போல வெகு சில நபர்களே இயக்குனராகவும் கதாநாயகனாகவும் பெரிய வெற்றியும் மக்கள் அங்கீகாரமும் பெற்றிருக்கிறார்கள் என்பதை இவர் உணராதது நமக்குத் தான் இழப்பு. சுமார் 10 படங்களில் இவர் நடித்திருந்தாலும் இயக்குனர் சூர்யா, சுந்தர்.சி, பார்த்திபன் வரிசையில் இவரும் நடித்தே ஆகவேண்டும் என்ற பிடிவாதத்தால் பல நல்ல படங்களை மொக்கையாக்கியிருக்கின்றார். ஆனா, ஆட்டோகிராப் படம் எக்செப்ஷனல். அந்த படத்தில் ஒருவித நம்பகத்தன்மை தேவைப்பட்டது. நன்கு அறிமுகமான நடிகர்கள் நடிப்பதற்கு பதில் இவரே கதாநாயகான நடித்ததால் வெற்றிபெற முடிந்தது. அதே சமயம், இவர் கதாநாயகனாக நடித்ததால் மட்டுமே மாயக்கண்ணாடியும், பொக்கிஷமும் உள்ளிட்ட வேறு பல நல்ல கதைகளன் இருந்த படங்களும் தோற்றுப்போனது.

மீண்டும் சுமார் ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, ஜெகே எனும் நண்பனின் கதை படத்தின் மூலம் சேரன் தனது மூன்றாவது இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். இதுவும் அவருக்கு மிகவும் பழக்கமான பயோகிராபி வகை படம் தான். இந்த படத்தில் நான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் விட்டுக்கொடுத்திருப்பது மிகப்பெரிய ஆறுதல். இந்த படம் ஒருவித சென்டிமெண்ட் + எமோஷனலி பேக்ட் டிராமா. இவரது முந்தைய படங்களில் வெளிப்படும் “கடினமான தருணங்களில் வாழ்வின் மீதான நம்பிக்கை” இந்த படத்திலும் வலிமையாக வெளிப்படுகிறது. மிஷ்கின், வாசுதேவ் மேனன் போல பெரிய டெக்னிகல், திரை மொழி சார்ந்த பரிட்சார்த்த முயற்சிகள் இல்லை என்றாலும் சும்மா கேஷவலாக ரமணி சந்திரன் நாவல் படிப்பது போல இயல்பாக, உருத்தல் இல்லாமல் படத்துடன் பயணிக்க முடிகிறது.

வாழ்க்கையின் மீது பெரிய பொறுப்புகள் இல்லாத ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் சாலை விபத்தும், அதில் நண்பனின் மரணம், தனக்கு மூளையில் ஏற்படும் ரத்தகசிவால் அதிக வருடங்கள் உயிர் வாழ முடியாது என்பது தெரிந்ததும் தனது குடும்ப கடமைகளை அதற்குள் நிறைவேற்றுவது தான் கதை. இந்த கதையை முடித்த விதம் எனக்கு பிடித்திருந்தது. க்ளைமாக்ஸில் “இட்ஸ் மெடிக்கல் மிராகிள்” என்ற ஒரு வசனத்தை வைத்து கதாநாயகன் பிழைத்துவிட்டான் என்று முடித்திருக்க முடியும். இல்லைன்னா, அவன் சாவைதை பாசமலர் சிவாஜி போல “கைவீசம்மா… கைவீசு…” என்று அழுகாச்சியா முடிச்சிருக்கலாம். ஆனா, ஜென்டிலா தனது கடமையை முடித்த பிறகு பறவையைப் போல தனது குடும்பத்தை நண்பர்களை விட்டு பிரிந்து சென்றுவிடுவதாக காட்டியிருப்பது நல்லாயிருந்தது.

அதே போல கதாநாயகன் எடுக்கும் சின்னச்சின்ன வணிக முயற்சிகள், அந்த பேஸ்புக் தீமில் அமைந்த பாடலின் க்ராபிக்ஸ், காதலியாக இல்லாமல் தோழியாக மட்டுமே நித்யா மேனனை காட்டியது பாராட்டப்படவேண்டிய விஷயம். நிச்சயம் படத்தை பார்க்கும் போது ரொம்ப பாசிட்டிவாக, வாழ்வின் நம்பிக்கையை உணரமுடியும். ஆனா, இந்த படத்தில் தனக்கு தெரிந்த வித்தை எல்லாத்தையும் மொத்தமா இறக்கனும்ன்னு படத்தின் மையநீரோட்டத்துக்கு தேவையே இல்லாத எக்கச்சக்க காட்சிகள், சேரனின் முந்தைய படக்காட்சிகளை ஞாபகப்படுத்தும் சீன்கள், அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு பாட்டு போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். அதே போல மடத்தனமாக சம்மந்தமே இல்லாமல் கமெண்ட் அடித்திருக்கும் சந்தானம் சுத்தமா இந்த படத்தின் உணர்வுக்கு செட்டே ஆகவில்லை.

ஒட்டு மொத்தமாக 50 ரூபாய்க்கு மனதை தப்பா யோசிக்கச்செய்யாத, இயல்பாக ரெண்டு மணி நேரத்தை நல்லியல்புடன் எங்கேஞ் செய்யும் இந்த படத்துக்காக மேல சொன்ன சின்னச்சின்ன தவறுகளை நிச்சயம் சகித்துக்கொள்ளலாம்.

நன்றி சேரன். தொடர்ந்து இயக்குனராக மட்டும் இயங்குங்கள்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s