தமிழ் சினிமா 2012: பறவைப் பார்வையில்….


2012

சினிமா வெறும் என்டர்டெய்ன்மெண்டுக்காக தான் என எளிதில் கடந்து சென்றுவிடமுடியாது. வருடத்துக்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் பணம் புழங்கும் துறை. தமிழக அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் தவிர்க்கமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தும் அதிசக்தி வாய்ந்த ஆயுதம். சினிமா பேசும் செய்தியை வெகுஜனமக்களின் ரசனையையும் சமூகப்போக்கையும் வெளிப்படுத்தும் கண்ணாடியாகத் தான் காணமுடிகிறது. இந்தியாவில் வங்காள, மராத்தி மற்றும் மலையாள சினிமாக்களைப் போல தமிழ் சினிமா இன்னும் தனித்துவம் பெறவில்லை என்றாலும் அதற்கான வெளிச்சக்கீற்றுகள் இந்த ஆண்டு தென்பட்டிருப்பது பெரிய ஆறுதல்.

வழக்கம் போல இந்த வருடமும் தமிழ் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானது. இது தவிர ஆங்கில மற்றும் பிறமொழி டப்பிங் திரைப்படங்களின் வருகை இதே அளவுக்கு இணையாக இருக்கும். அப்படிப் பார்த்தால் சராசரியாக மாதத்துக்கு 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள். கடல் அலையைப் போல சினிமா ரசிகனை அடுத்தடுத்து கனவுகளின் கடலுக்குள் இழுத்துக்கொண்டே சென்றிருக்கிறது. 10 வருடத்துக்கு முன்பு போல தமிழில் எந்த படமும் 100 நாள் 150 நாள் ஓடக்கூடிய சாத்தியம் இப்போது வெகுவாக குறைந்துவிட்டது. இந்த வெள்ளிக்கிழமை வெளிவரும் படம் அடுத்த வெள்ளிக்கிழமை வரை தாங்கினாலே போட்ட பணத்தை எடுத்துவிடலாம். இரண்டு வெள்ளிகளை கடந்து ஓடினால் பெரிய ஹிட் என பெருமிதப்பட்டுக்கொள்ளலாம்.

நேர்மையுடனும், சுவாரசியத்துடனும் சொல்லப்பட்ட எந்த கதையையும் தமிழ் ரசிகன் ஏமாற்றவே இல்லை எனும் போக்கு உருவாகிவருகிறது. நாலு சிப்ஸை காற்றடைத்த பையில் போட்டு அநியாய விலைக்கு விற்கும் லேஸ், குர்குரே பாக்கெட்டுகளை போல ஸ்டார் வேல்யுவின் கவர்ச்சியான அம்சங்களை மட்டுமே ஆதாரமாக கொண்ட குப்பைகளை புறக்கணித்தலும் கடந்த ஆண்டில் ஆரவாரத்துடன் நிகழ்ந்தேறியிருக்கிறது மகிழ்ச்சி தருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டில் என்னை ஆச்சரியப்படுத்திய, பொருளாதார ரீதியில் வெற்றி பெற்ற, மரண மொக்கை அனுபவம் தந்த படங்களை வரிசைப்படுத்தி பார்க்கிறேன்.

thuppakki

இந்த வருடம் ரஜினி, கமல் ஆகிய ஹெவிடுயூட்டி நடிகர்களின் படங்கள் ஏதும் வரவில்லை என்றாலும் 50 கோடிக்கும் மேலாக செலவு செய்து தயாரிக்கப்பட்ட படங்கள் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இருந்தன. பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்றி, தந்திரத்துடன் மார்க்கெட்டிங் செய்யப்பட்ட பெரிய நடிகர்கள் நடித்த மெகா பட்ஜெட் படங்களான வேட்டை, சகுனி, பில்லா-2, முகமூடி, 3 (மூன்று), தாண்டவம், மாற்றான், போடாபோடி, நீஎபொவ என ஏறக்குறைய சோ கால்ட் மெகாநடிகர்களை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்பட்ட பெரிய பட்ஜெட் படங்கள் மிகப்பெரிய தோல்வியை தழுவின. இந்த வரிசையில் தப்பிய ஒரே மெகா பட்ஜெட் படம் துப்பாக்கி மட்டுமே. ஆனா, துப்பாக்கியின் வெற்றிக்கு விஜயின் அன்டர்ப்ளே ஆக்டிங்கும் மிக முக்கிய காரணம். அவர் தனது வழக்கமான பஞ்ச்சை இந்த படத்திலும் தூவியிருந்தால் துப்பாக்கி இன்னொறு “சுறா”வாகியிருக்கும்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் சாதாரணமாக, குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டு, பெரிய நடிகர் பட்டாளம் இல்லால் வெளியான சில படங்கள் தமிழ் சினிமாவின் பெருமிதமாக அடையாளமாகியிருக்கிறது. இவை அனைத்தும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றிருப்பது ஆரோக்கியமானது. காதலில் சொதப்புவது எப்படி, அம்புலி, தடையறத் தாக்க, நான் ஈ, அட்டகத்தி, சாட்டை, சுந்தரபாண்டியன், பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், கும்கி ஆகிய படங்கள் இந்த லிஸ்டில் வந்திருக்கின்றன. இவற்றில் பெரும்பாலான படங்கள் அவற்றின் இயக்குனர்களுக்கு முதல் படமாகும்.

Karnan-Stills-202002

சென்ற ஆண்டில் போட்ட முதலீட்டை சார்ந்து மிக அதிக லாபம் ஈட்டிய படம் “கர்ணன்” என்பது இனிய ஆச்சரியம். நடிகர் திலகத்தின் முத்திரைப் படமான இது கடந்த ஆண்டு டிஜிடலஸ் செய்யப்பட்டு ரீரிலிஸ் செய்யப்பட்டது. இது முதலீட்டை விட சுமார் 15 மடங்கு இலாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது. இது புதிய சினிமாக்களில் தற்போது இருக்கும் கதை சொல்லல் முறையில் இருக்கும் பஞ்சத்தையே காட்டுகிறது. கர்ணன் வெற்றி, தமிழ் சினிமாவுக்கு புதிய வாய்ப்புகளை திறந்து விட்டிருக்கிறது. இனி வரும் வருடங்களில் இதே வரிசையில் தில்லானா மோகனாம்பாள், உலகம் சுற்றும் வாலிபன், திருவிளையாடல், அடிமைப்பெண் போன்ற காலத்தை வென்ற பசுமையான பொழுதுபோக்கு படங்கள் டிஜிட்டலில் ரசிகர்களை மகிழ்விக்கும் எனலாம். இதன் நீட்சியாக சூப்பர் ஸ்டாரின் “சிவாஜி 3D”யில் மறு வெளியீடு செய்யப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க ஒன்று.

Aravaan-Stills-23

வேறு சில படங்கள் நல்ல கண்டென்ட்டுடன், சிறப்பாக தயாரிக்கப்பட்டிருந்தாலும் சரியான முறையில் மக்களிடம் போய் சேரவில்லை. பெரிய படங்களின் போட்டி, சரியான மார்க்கட்டிங் இல்லாதது, திரையங்க உரிமையாளர்களின் முன்முடிவுகள் போன்றவை முக்கிய காரணங்களாக விளங்குகின்றன. இது நல்ல சினிமாவை எதிர்பார்க்கும் கலாச்சாரத்துக்கு எதிரானது என்று மட்டும் புரிகிறது. வழக்கு எண் 18/9, மதுபானக்கடை, அரவான், தோனி, மெரினா, ஆரோகணம், வெங்காயம், ராட்டினம், லீலை, நீர்பறவை போன்ற படங்களை இந்த வரிசையில் குறிப்பிடலாம். இவற்றில் அரவான், மெரினா, நீர்பறவை ஆகிய படங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்திருந்தாலும் சின்னச்சின்ன திரைக்கதை சறுக்கல்களால் வெற்றிக்கோட்டிற்கு சில அடிகளுக்கு முன்பே சுருண்டு விழுந்தது பரிதாபம்.

ஊருக்கு கருத்து சொல்கிறேன் என்று ஷாட் பை ஷாட் டெரராக கருத்துமழை பொழிந்தோ,  பக்கம் பக்கமாக பஞ்ச் டயலாக் பேசி தமிழ்நாட்டையே காக்க வந்த சூப்பர் ஹீரோவாகவோ இல்லாமல் சொல்லவந்த கதையை நறுக்காக, நாலு பேர் மனம்விட்டு சிரிக்கும் படி கொடுத்த, நண்பன், ஒருகல் ஒரு கண்ணாடி, கலகலப்பு, மனம் கொத்தி பறவை போன்ற படங்கள் உள்ளடக்கத்தில் பெரிய ரிஸ்க் எடுக்காமல் பாதுகாப்பாக காமெடி மற்றும் எளிய சென்டிமெண்ட்களை உள்ளடக்கி வெளியிடப்பட்டதால் மக்கள் விரும்பிய என்டர்டெய்னராகவும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியும் பெற்றுள்ளது.

“என்னதான் ஆயிரம் படங்கள் வந்தாலும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த “யாருக்கு யாரோ” புகழ் சாம் ஆண்டர்சன், “லத்திகா” புகழ் பவர்ஸ்டார் சீனிவாசன் ஆகியோரின் அமர காவியங்கள் இந்த வருடம் வராதது தமிழ் சினிமாவுக்கு சூனியம் வைத்தது போலாகி விட்டது”  என தீவிர மொக்கை சினிமா ரசிகர்களின் வருத்தம் அடுத்த வருடம் நீங்கிவிடும் என நம்புவோம். 🙂

மொத்தமாக கடந்த ஆண்டின் தமிழ் சினிமா சூழலை தொகுத்துப்பார்க்கும் போது கலவையான உணர்வுகள் வெளிப்படுகின்றது. நாலில் மூன்று பங்கு படங்கள் வந்த அடையாளமே தெரியாமல் தொலைந்து போனதும், மிச்சமிருந்த எதிர்பார்ப்பு மிகுந்த படங்களுக்கு அந்த எதிர்பார்ப்பே வில்லனாக மாறியதும், சாலையோரத்தில் நம்மை கடந்து செல்லும் பேருந்தில் இருந்து குழந்தைகள் நாம் எதிர்பார்க்காத தருணத்தில் உற்சாகமாய் நம்மைப் பார்த்து கையசைத்து புன்னகைக்கச் செய்வது போல புதிய இயக்குனர்களின் படங்கள் தமிழ் சினிமாவின் உற்சாகத்துக்கு காரணமாய் அமைந்திருக்கின்றன.

kumki (9)

இந்த வருஷத்தில் வடிவேலு இல்லாத காமெடிக்கு மக்கள் பழக்கப்பட்டு விட்டார்கள், திரிஷா, ஷிரேயா, நயன்தாரா என சுற்றி வந்து இந்த வருடத்தின் கனவுக்கன்னிகளாக காஜல் அகர்வாலும் அனுஷ்காவும் பொறுப்பை சரி விகிதத்தில் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள் (சரி சரி, சமந்தாவை அடுத்த வருஷ ஆட்டதுல சேர்த்துப்போம்), வருடத்தின் கடைசி மூன்று மாதங்களில் மாதத்துக்கு ஒரு சூப்பர் ஹிட் கொடுத்த விஜய் சேதுபதி காட்டில் நல்ல மழை அடித்துப் பொழிந்துள்ளது, எப்பவுமே நான் ராஜா என்று இசைஞானியின் நீஎபொவ பாடல்கள் புத்துணர்ச்சி தந்துள்ளது, கலைஞர் டீவியின் நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் பங்கெடுத்த பங்கேற்பாளர்களில் ஒவ்வொறுவராக பெரிய அளவில் ஜெயிக்கத் துவங்கியிருக்கின்றனர். ஒட்டுமொத்தமாக 2012 தமிழ் சினிமா : மழைக்கால தூறலில் கிடைத்த சூடான இஞ்சி டீ போல சர்ப்ரைசிங்காக இருக்கிறது.

************************

Gold top 10 winner

இப்ப என்னுடைய பார்வையில் கவுண்ட் டவுன் லிஸ்ட்:     

டாப் 10 தமிழ் திரைப்படங்கள் 2012:

 1. வழக்கு எண் 18/9: சொந்த ப்ரெஷ்ஷான சிந்தனையுடன் படங்கள் வருவது குறைந்து போன காலகட்டத்தில் மிகவும் சின்சியராக எடுக்கப்பட்ட படம். படத்தின் நடிகர்கள் பற்றி இன்று வரை தெரியாது. ஆனால் பாலாஜி சக்திவேலின் உழைப்பும் டீடெயில்ஸ்சும் படத்தை உச்சாணிக்கொம்பில் நிறுத்தியிருக்கிறது. கிளைமேக்ஸ் தவிர்த்து பார்த்தால், இந்த படம் உலக சினிமாவுக்கான தமிழின் பங்களிப்பு எனலாம்.
 2. காதலில் சொதப்புவது எப்படி?: நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் குறும்படமாக எடுக்கப்பட்ட படம். அதுவே முழுநீளப்படமாக சுவாரசியம் கெடாமல், மாறுபட்ட பிரசன்டேஷனுடன் வந்து பிரமாதமான பாராட்டை பெற்ற படம். சித்தார்த் மற்றும் அமலா பாலின் எளிமையான யதார்த்தமான நடிப்பு அழகு.
 3. நான் ஈ: தெலுங்கிலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட படம். தெலுங்கு சினிமா உலகின் ஷங்கர் என்று கொண்டாடப்படும் ராஜமவுலியின் முதல் தமிழ்படம். அனிமேஷன் தொழில்நுட்பத்தின் உச்சமாக வந்து அசத்திய படம். வழக்கமான காதல், மோதல், பழிவாங்கல் தான் கதை என்றாலும் சொன்னவிதத்தில் கவனத்தை ஈர்க்கிறது.
 4. பிட்சா: தமிழின் டிரென்ட் செட்டர் படம். ஹாரர் படங்கள் பெரும்பாலும் தியேட்டரில் காமெடியாக முடியும். கடைசியாக யாவரும் நலம் நல்ல பய அனுபவத்தை கொடுத்தது. இந்த படத்தின் ஹாரர் ஃபீலிங் மிக வலிமையானது. இடைவேளை வரை தியேட்டரில் ரசிகர்களின் நடுநடுக்கமே இந்த படத்தின் வெற்றி. க்ளைமாக்ஸ் யூகிக்கமுடியாத படி, கண்ணாமூச்சி காட்டியது ரசிக்கப்படவேண்டியது.
 5. நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்: என்னாச்சி? தமிழ் சினிமாவுக்கு? என்று கேட்கவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம். கடைசி ப்ளாக் வரை ஹீரோயினையே காட்டவில்லை. வில்லன் கிடையாது, ஆலமரம், நசுங்கிபோன சொம்பு, ஊர்பஞ்சாயத்து கிடையாது, சும்மா பத்து கேரக்டர்களை வைத்துக்கொண்டு சுவாரசியமான படத்தை கொடுத்து, இந்த ஆண்டின் மிகச் சிறந்த நகைச்சுவை படமாக பெயரை தக்கவைத்துக்கொண்டார் இயக்குனர்.
 6. தடையற தாக்க: மகிழ்திருமேனியின் முதல் படம் கைவிட்டுவிட, இந்த படத்தில் விட்டதையும் சேர்த்து பிடித்துவிட்டார். ஒரு ஆக்ஷ்ன் படத்துக்கு உரிய மிக தெளிவான திரைக்கதை. கடைசிவரை ஏறிய டெம்போகுறையாமல் சென்றது படத்தின் பெரிய பலம். அருண் விஜய்க்கு நல்ல திருப்பம் அளித்த படமாகவும் அமைந்தது.
 7. சாட்டை: மெகா சீரியல்கள் போல பிழிய பிழிய சென்டிமெண்ட்டும் நாடகத்தனமான காட்சிகளும் நிரம்பியிருந்த படமென்றாலும் அரசு பள்ளிகளின் கான்டெம்பொரரி நிலை நிதர்சனமாய் காட்டியதற்கும், அதை திருத்துவதற்குறிய வாய்ப்புகளையும் கோடுபோட்டு காட்டியுள்ளது நிச்சயம் கவனம் கொள்ள வேண்டியது.
 8. கும்கி: பிரபு சாலமனுக்காக பெரிதும் எதிர்பார்த்த படம். நிச்சயம் ஏமாற்றவில்லை. ஆனால் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் என்று தோன்றியது. நான் ஈ போலவே அன்புக்காக தன் உயிரை தியாகம் செய்யும் ஒரு மிருகத்தின் கதை. கதைக்களன் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவே புதிது. பளிங்கு கண்ணாடி போல ஒவ்வொறு ஃப்ரேமும் அவ்வளவு அழகு, சுத்தம், பசுமை.
 9. சுந்தர பாண்டியன்: சசிகுமாருடைய டெம்ப்ளேட் படம். கிராமிய நட்பு, நட்பின் துரோகம், பழிவாங்கல், நட்பை மன்னித்தல் என்ற அவருக்கு வாகான ஏரியாவில் நின்னு விளையாடியிந்தார். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்ததால் கதை சீராகவும், சுவாரசியமாகவும் சென்றது.
 10. துப்பாக்கி: படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் படம் பார்த்து முடிக்கும் வரை அதைப்பற்றியே சிந்தனை எழாமல் படத்துடன் ஒன்றவைத்தது திரைக்கதையின் வெற்றி. ரொம்ப க்ரிஸ்பான திரைக்கதையும் எடிட்டிங்கும் படத்தின் பலம். முருகதாஸ் துப்பாக்கியின் குறி ரமணாவுக்கு பிறகு இந்த முறை தான் தப்பாமல் சுட்டிருக்கிறது.

ஆகச்சிறந்த டாப் மொக்கைத் திரைப்படங்கள் 2012

மொக்கை படங்களுக்கு காரணங்கள் தேவையில்லை. இவை அனைத்தும் ஒரு வகையில் தமிழ் ரசிகர்களை லகுடபாண்டிகளாக நினைத்துக்கொண்டு, பெரிய நடிகரின் கால்ஷீட்டும், நல்ல டெக்னிகல் டீமும் இருந்தால் பணத்தை சுலபமாக அள்ளிவிடலாம் என்ற மதப்பில் எடுக்கப்பட்டவை.

 1. சகுனி
 2. தாண்டவம்
 3. மாற்றான்
 4. பில்லா 2
 5. வேட்டை

அவர்களை குற்றம் சொல்வதற்கு எனக்கு தகுதியில்லை என்றாலும் ரசிகர்களின் ரசனையை மதித்து குறைந்தபட்ச நேர்மையையாவது படத்தில் செலுத்துங்கள் என சொல்வதற்கு உரிமை இருக்கிறது.

டிஸ்கி: இந்த தரப்படுத்துதல் சாதாரண திரைப்பட ரசிகனான எனது பார்வையின் புரிதலில் அமைந்த பட்டியல் மட்டுமே. இது தான் அல்டிமேட் தமிழ் சினிமா என எல்லாரும் ஏற்றுக் கொள்ளவேண்டிய கட்டாயம் இல்லை.

3 thoughts on “தமிழ் சினிமா 2012: பறவைப் பார்வையில்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s