கரைந்து போகும் பெண் குழந்தைகள்


சில மாதங்களுக்கு முன் திருவண்ணாமலை பகுதியில் அலுவல் ரீதியாக ஒரு மருத்துவரிடம் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, இன்னமும் பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்படும் அவலம் மறைமுகமாக நடந்து வருவதாக குறிப்பிட்டார். அரசு, கர்ப்பகாலத்தில் கருவிலிருக்கும் குழந்தைகள் ஆணா பெண்ணா என்பதை அறிய சட்டபூர்வ தடை செய்து, அவ்வாறு கருவின் பாலினத்தை வெளிப்படுத்தும் ஸ்கேனிங் மையங்களுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை என்று அறிவித்திருக்கிறது. ஆனாலும் நகரத்தைத் தாண்டி உட்பகுதியில் உள்ள  மையங்கள் இவற்றை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்றும் கிராமங்களில் இருந்து வரும் ஏழைக்குடும்பங்கள் தங்களது வறுமையை முன்வைத்து ஸ்கேன் மூலம் குழந்தையின் பாலினத்தை அறிந்து பெண் குழந்தையாயிருந்தால் அதனை கருவிலேயே அழிப்பது நிகழ்கிறது என்றும் கவலைபட்டார். அது எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும், அப்போது நான் அதை அவ்வளவு சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஆனால் சமீபத்தில் 2011 ம் ஆண்டின் சென்செஸ் கணக்கெடுப்பின் முதற்கட்ட புள்ளிவிவரங்களைப் பார்த்தபோது அந்த ஆபத்து நடந்திருக்குமென்று ஊகிக்கமுடிகிறது. அவர் சொன்ன அந்த பயங்கரத்தின் விளைவு புள்ளிவிவரங்களாக வெளிப்பட்டிருந்தது. தமிழ்நாட்டளவில் 14 மாவட்டங்களில் 2001ம் ஆண்டு இருந்ததை விட ஆறு வயதுக்குட்பட்ட பெண்குழந்தைகளின் எண்ணிக்கை இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக கடலுர், அரியலுர், பெரம்பலுர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களில் முன்னெப்போதும் விட ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பாலின விகிதம் சராசரியாக 1000க்கு 25 என்ற அளவில் குறைந்துள்ளது.

தமிழ்நாடளவில் மொத்த மக்கள்தொகையின் பாலின விகிதம் 1000ம் ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற நிலையில் இருந்தாலும், ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகள் அளவில் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் என்றுள்ளது கவலைக்குறியது. பெண் சிசுவதை அதிகம் இருப்பதாக கருதப்படும் தர்மபுரி, சேலம், தேனி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரளவுக்கு பெண்குழந்தை விகிதம் கடந்த பத்து ஆண்டுகளில் அதிகரித்திருந்தாலும் அங்கும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மாநில சராசரிக்கும் குறைவாகவே இருக்கின்றன.

இந்தியாவில் 2001 ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்சஸ் அறிக்கைப்படி, குழந்தைகள் அளவில் பாலின விகிதம் 927 ஆக இருந்ததது. அது இப்போது 10 புள்ளிகள் குறைந்து இப்போது 917 ஆக பிரதிபளிக்கிறது. இந்த புள்ளிவிவரம், கடந்த 60 ஆண்டுகளாக இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு எடுக்கப்பட்ட எல்லா சென்சஸ் புள்ளிவிவரங்களிலும் பதிவாகிய மிகக்குறைந்த அளவு என்பது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். இதன்மூலம், இந்திய சமூகத்தில் முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் பெண்குழந்தைகள் பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது.

இதன்படி, இந்தியாவில் பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 83 பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள் என்று புரிந்துகொள்ளலாம். ஒரு பெண் குழந்தைக்கு அடிப்படையான பிறப்புக்கான உரிமை மறுக்கப்பட்டுவருவது மிகக்கொடுமையான செய்தி. பொதுவாக இயற்கையின் நியதி படி, 1000 ஆண் குழந்தைகளுக்கு 1036 பெண் குழந்தைகள் பிறப்பதாக அறிவியல் வல்லுனர்கள் சொல்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளில் பிறந்த குழந்தைகளில் அதிகபட்ச பெண்குழந்தை பிறப்பு துத்துக்குடியில் 970ஆகவும் நீலகிரியில் 982ஆகவும் இருக்கிறது. எப்படிப் பார்த்தாலும் தமிழ்நாட்டில் பெண்குழந்தைக்கான முழுபாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது.

1997களில் சராசரியாக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் ஒரு மாதத்துக்கு 160 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர் என்று ஓர் ஆய்வறிக்கை சொல்கிறது. தற்போது இந்த விகிதம் குறைந்திருந்தாலும் பெண் சிசுவுக்கு முழுமையான பாதுகாப்பு ஏற்படவில்லை. தற்போதய மருத்துவத்துறை தொழில்நுட்ப ரீதியில் பெரிதும் வளர்ந்திருப்பதால் பெண் குழந்தை பிறந்த பிறகு இறக்கும் விகிதம் குறைந்து, கருவிலேயே அழிக்கும் போக்கு அதிகமாகியிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் இதனை வெறும் சமூகப்பிரச்சனை மட்டுமாக எடுத்துக்கொள்ளமுடியாது. பேறுகாலத்தின் நான்காவது மாதத்தில் கருவின் பாலினம் கண்டறியப்பட்டு கருச்சிதைவு நிகழ்த்துதல் தாயின் உயிருக்குக் கூட ஆபத்தாக அமையும் என மருத்துவர்கள் எச்சறிக்கிறார்கள்.

வறுமை மற்றும் சமூக கட்டமைப்புகள் இதற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் மிக முக்கியமான காரணமாக கருதப்படுவது, விதிமீறலாக நிகழும் செலக்டிவ் அபார்ஷனும் முன்னேற்றப்படவேண்டிய பேறு கால கவனிப்பும் தான். எப்படி பார்த்தாலும் உயிர் கொண்ட ஒரு சிசுவிற்கு தன் வாழ்க்கையை முழுமையாக வாழ சகல உரிமையும் இருக்கிறது. அதனை பாலினக்காரணங்களுகாக கரைப்பது பாவம். இது மூன்று வித உரிமை மீறலாக கருத்தப்படவேண்டும். 1.மனித உரிமை மீறல், 2. குழந்தை உரிமை மீறல், 3. பெண்ணுரிமை மீறல். இந்த நிலைக்கு அரசாங்கமும் பொறுப்பெடுக்கவேண்டும். முதலமைச்சராக, ஜனாதிபதியாக பெண்கள் இருப்பது மட்டும் பாலின சமத்துவத்துக்கான குறியீடாகாது. இந்தியா உலக அளவில் வல்லரசாவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நமது பூமியில் பூக்கும் ஒவ்வொறு பெண்குழந்தையும் முழுமையாக, ஆரோக்கியத்துடன் மலரவழி செய்யட்டும்.

இந்திய அளவில் தனிநபர் வருமானம் மிக அதிகம் இருக்கும் மாநிலங்களான பஞ்சாப் (846), ஹரியானா (830) ஆகிய மாநிலங்களில் தான் பெண் குழந்தை பாலின விகிதம் மிகக்குறைவாக இருக்கிறது. அதே போல வளர்ச்சி அடையாத, பிரச்சனைகள் மிகுந்த மாநிலங்களாக கருதப்படும் மிசோரம் (971), மேகாலயா (970) ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் அதிக பாலின விகிதத்தை கொண்ட முதல் இரண்டு மாநிலங்களாக நிலைபெற்றுள்ளன. இந்த புள்ளிவிவரம், வளர்ச்சி என்பது வெறும் ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் காகிதம் மட்டும் தானா அல்லது சமநிலைச்சமுதாயமா என்ற அடிப்படை கேள்வியை நம்முன் வைக்கிறது.

இதன் தாக்கம் அடுத்த 20 ஆண்டுகளில் தெரியவரும். பாலினம் சமநிலையில் இல்லாத சமூகம் நிச்சயம் நொண்டியடிக்கும். அப்போது நாம் செய்த தவறு தெரியவரும். கலர் டீவி, மிக்ஸியை விட பெண் குழந்தைகள் முக்கியம் என்று உணர ஆரம்பிப்போம்.

குறிப்பு: மேலுமதிக விவரங்களுக்கு: http://www.census.tn.nic.in/whatsnew/ppt_total2011.pdf

10 thoughts on “கரைந்து போகும் பெண் குழந்தைகள்

 1. முன்னெப்போதையும் விட இந்த காலகட்டத்தில் பெண்குழந்தைகள் பெரிய ஆபத்தை சந்தித்து வருகிறார்கள் என்றே புரிந்து கொள்ளமுடிகிறது. அதாவது பிறக்கும் 1000 ஆண் குழந்தைகளுக்கு 83 பெண் குழந்தைகள் காணாமல் போகிறார்கள்.//

  இதான் காரணம்.. சமீபத்தில் கூட தமன்னா கூட இருந்த சிறுவன் காணாமல் போகல.. ஆனா சிறுமி மட்டுமே காணாமல் போகிறாள் என்றால்?..

  //தமிழ்நாட்டில் பெண்குழந்தைக்கான முழுபாதுகாப்பு உறுதிசெய்யப்படவில்லை என்று தெரியவருகிறது//

  அதே

  // முதலமைச்சராக, ஜனாதிபதியாக பெண்கள் இருப்பது மட்டும் பாலின சமத்துவத்துக்கான குறியீடாகாது. இந்தியா உலக அளவில் வல்லரசாவது ஒரு பக்கம் இருக்கட்டும், முதலில் நமது பூமியில் பூக்கும் ஒவ்வொறு பெண்குழந்தையும் முழுமையாக, ஆரோக்கியத்துடன் மலரவழி செய்யட்டும்//

  நம்பிக்கை இல்லை எனக்கெல்லாம்..

  இன்னும் 50 ஆண்டுகள் ஆகலாம்..

  நாட்டின் அரசே , சினிமா துறைக்கும் , ஊடகத்துக்கும் கால் பிடிக்கும் கேவலம் இந்த நாட்டில் இருக்கும் வரை பெண் குழந்தை போகப்பொருள் மட்டும்தான்..

  பெண் குழந்தைக்கு திருமணம் முக்கியமில்லை என்ற நிலை வரணும்..தனியாக வாழக்கூடிய நிலைமை எளிதாக இருக்கணும்…

  ஏன் சிசுக்கொலைகள்.?.. ஏன் பென் குழந்தை பெற்றால் இழிவாகப்பார்க்கப்படுகின்றனர்?..

  சமூக மாற்றம் வராமல் அவர்கள் யாரையும் குறை சொல்வதோ, தண்டனை அளிப்பதோ பயனில்லை..

  மெத்தப்படித்த மேதவிகளுக்கே பெண் பற்றிய புரிதல் இல்லை.. அடிமை என்ற எண்ணம் இருக்கும்போது????..

  1. தங்கள் கருத்துக்கு நன்றி சாந்தி. பொதுவாக நமது சமுதாயம் வளர்ந்து வருகிறது, ஏற்றத்தாழ்வுகள் எல்லாம் குறைந்து வருகின்றன என்ற மாயை இது போன்ற புள்ளிவிவரங்கள் தகர்க்கும் போது, உண்மை அப்பட்டமாய் வெளிப்படும் போது, கொஞ்சம் கேவலமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

  1. நன்றி கண்ணன். நான் இந்த பிரச்சனை பற்றி கரைத்திருந்தாலும், அதனை நீர்த்துபோகச்செய்யாமல் வைத்திருப்பது நம் எல்லாருடைய கையிலும் உள்ளது.

 2. yes, you said correctly. i am working in a tribal area which is bordering thiruvannmalai (my area also bordering with salem and vilupuram,but am in one corner of dharmapuri). particularly in chengam area of thiruvannamalai, lots of lambadi tribe settlements (in TN they comes under BC catagory) are there. in their community due to the socio-cultural change getting married of a girl child is too costly. so they kill the female child immediately after birth. i came across many cases in my working area too. but we are not able to do much with them because the modern world is seeing everything at cost basis. now the gold price is Rs. 21000 for 8 gms. if it is incrases more,the death of the female children also will increase. offering gold for marriages is not a tribal culture but now it is a custom and people income is not increased to practice this custom. because they are not able to practice their custom infront their community, they feell shame. to avoid this now the people startedc killing their female children immediately after the birth. but most of these cases are not recordded in the government systems, we are analysing the data from census which is recorded only 50 % of the field reality. the truth is much more. we will understand the real thing one day when we we won’t have girls to marry our sons and grandsons from our own community.

  1. நன்றி முருகன். நீங்க சொல்வதைப் போலவே, இது போன்ற விஷயங்களில் நமக்கு கிடைக்கும் புள்ளிவிவரங்கள் கொஞ்சம் அண்டர் ரிபோர்ட்டா தான் இருக்கின்றன. குறிப்பாக சில பிரிவு மக்களிடையே உண்மையான தகவல் சேகரிப்பது சிரமமான விஷயம். அடுத்து, அரசாங்கமும் உண்மைத்தகவலை சொல்லிக்கொள்ள விரும்புவதில்லை, தேசம் வளர்கிறது, எல்லாரும் எல்லா வளமும் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள் என்று உலக சமுதாயத்துக்கு படத்தைப் போட்டு, இந்தியாயும் வல்லரசு தான் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ள விரும்புகிறது. (நகரம் படத்தின் ஒரு காட்சியில் வடிவேலு, தான் வாலன்டியராக, நானும் ரவுடி தான் என்று சொல்லிக்கொண்டே போலிஸ் வண்டியில் ஏறிப்போவார். அதே போல உலக அரங்கில் இந்தியாவும் தனக்குள் இருக்கும் அடிப்படை பிரச்சனைகளை மறந்து, தானும் வளர்ச்சியடைந்த நாடு தான் என்று சொல்லிக்கொள்கிறது.) தங்கம் என்கின்ற ஒரு உலோகம், சின்ன குழந்தைகளின் உயிரைப் பறிக்கும் அவலம் மிகக் கொடுமையானது, கேவலமானது.

 3. Hi janaki, this is the first time i am visiting your blog. I am longing to see your blog for the past two years. But it slipped somehow. Anyway in the recent MID-AIM i could get your blog address and now the visit has been happened. Interesting to surf your blog that touches key social issues. Your thoughts are enchanting, Keep on writing…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s