அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.


(புகைப்படத்தில் இருப்பவர் – வடிவேல் அய்யா)

திருத்தணிக்குப் பக்கத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்திலிருக்கும் விவசாயி வடிவேலு அய்யா.  ஒருமுறை இவரது கிராமத்தில் ஏரி மதகை சரி செய்வதற்காக 1.5 இலட்சம் ரூபாயில் காண்ட்ராக்ட் விட்டிருக்கிறார்கள். காண்ட்ராக்ட் எடுத்தவர் பெயருக்கு வேலை செய்துவிட்டு மிச்ச பணத்தை சுருட்டியிருக்கிறார். இதை கேள்வி பட்ட வடிவேலு அய்யா, அவருடன் சண்டை போட்டிருக்கிறார். முதலில் அவர்கள் கொஞ்ச பணத்தை இவருக்கு லஞ்சமாக கொடுப்பதற்கு பேரம் பேசியிருக்கிறார்கள். இவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. பிறகு மிரட்டியும் பார்த்திருக்கிறார்கள். இவர் மசியவில்லை. ஒரு புகார் மனு தயாரித்து, ஊரில் இருக்கும் 130 விவசாயிகளிடம் கையெழுத்து வாங்கி கலெக்டரிடம் கொடுக்க போனார். கலெக்டரின் உதவியாளர், “இப்போது கலெக்டரை பார்க்கமுடியாது. வேண்டுமானால் என்னிடம் கொடுத்துவிட்டு போங்கள்” என்று சொல்ல, இவர் மறுத்து பிடிவாதமாக கலெக்டரை பார்க்கவேண்டும் என்று வலியுருத்தியிருக்கிறார்.

கலெக்டர் அலுவலகத்தில் இருந்தவர்கள் போலிஸை கூப்பிட்டு ஜெயிலில் போடுவேன் என்று சொல்லி இவரை மிரட்டியிருக்கிறார்கள். இவர், “இந்தியா சுதந்திரம் அடைவதற்காக காந்தி, நேரு போன்றவர்கள் ஜெயிலுக்கு போயிருக்கிறார்கள். நான், என்னுடைய கிராமத்து ஏரிக்காக ஜெயிலுக்கு போகவேண்டியிருந்தால் சந்தோஷமாக போகிறேன்” என்ற சொல்லிவிட்டு அங்கேயே உட்கார்ந்து விட்டார். இந்த சச்சரவை உள் அறையிலிருந்து கேட்ட கலெக்டர், அவரைக் கூப்பிட்டு விவரம் கேட்டு பிறகு அந்த காண்ட்ராக்டர் மீது உரிய நடவடிக்கை எடுத்தார். இப்போது அந்த மதகு, அந்த ஊரில் உள்ள 150 விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு பயன்பட்டுவருகிறது.

ஆள் பலம், பண பலம் என எதுவும் இல்லாத எளிமையான விவசாயியான வடிவேலு அய்யா ஊர் நலத்துக்காக தனி ஆளாக போராடிய குணம் என்னை ஆச்சரியப்படுத்தியது. இது போல ஊர் நலனுக்கான பல விஷயங்களில் யாருடைய உதவியும் இல்லையென்றாலும் அவர் தனியாளாக தன்னால் முடிந்தததை மனமாற செய்துவருகிறார். இதை அவர் தம்பட்டம் அடித்துக்கொள்வதும் இல்லை தான் பெரிய சமூக சேவகன் என்று கூறிக்கொள்வதுமில்லை.

இதேபோல தேனி மாவட்டம், கடமலைக்குண்டு கிராமத்தின் கிராமக் கமிட்டி பொருளாளராக இருந்தவர் வண்டப்புலி நாடார். (வண்டப்புலி நாடார் என்பது அவரது பெயர் அல்ல.  வண்டப்புலியிருருந் இடம் பெயர்ந்தவர்). சிறிய அளவில் பலசரக்கு கடையும் வைத்திருந்தார்.  கிராம கமிட்டி சார்பாக இவரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் அப்படியே இருக்கும்.  ரூபாய் நோட்டுகளின் எண்ணை கூட சரிபார்த்துக் கொள்ளலாம். பல்வேறு சாதியினரும் மதத்தவரும் வசிக்கும் கடமலைக்குண்டில் நாடார் சமூகத்தின் எண்ணிக்கை குறைவு. இருப்பினும் தொடர்ச்சியாக பொருளாளராக இருந்தவர்.

திருவிழாவிற்கு கிராமத்தின் சார்பாக பலசரக்கு வாங்குவதாக இருந்தால் கூட தனது கடையில் வாங்குவதை தவிர்த்தவர். தேனியில் இந்தக் கடையில் வாங்குங்கள். இங்கு விலை குறைவாக இருக்கும் என்று தகவல் சொல்லிவிட்டு கண்ணியமாக ஒதுங்கிக் கொள்வார். வருடந்தோறும் திருவிழா முடிந்ததும் கணக்கு ஒப்படைப்பது வழக்கம். ஒருமுறை இதுபோல திருவிழா முடிந்து ஊர்மக்களிடம் கணக்கு ஒப்படைக்கும் நாளில், குடிகாரன் ஒருவன் போதையில் “வண்டப்புலி நாடார் புது வீடு கட்டுறாரே! எப்படி ‘எல்லாம் கிராமத்துப் பணம் தான்’ “ன்னு கேட்டுட்டான். அந்தக் கணமே தனது பதவியைத் துறந்தார். (தன்தரப்பு நியாயத்துக்காக வருடக் கணக்கில் விவாதிக்கவில்லை, வாய்தா வாங்கவில்லை) கணக்கினை பைசா சுத்தமாக ஊர் மக்களிடம் ஒப்படைத்தார்.

அடுத்த நாள் கிராமத்து பெரியவர்கள் எல்லாம் வீட்டிற்கு சென்று நீங்கதான் பொருளாளராக இருக்கனும் ‘அவன் என்னமோ தண்ணியைப் போட்டு ஒலறிட்டான்’எவ்வளவோ சமதானம் சொன்னாங்க. முன்பு குற்றம் சுமத்தியவனும், “நான் ஏதோ நேத்து தெரியமா போதையில அப்படி கேட்டுட்டேன், என்னை மன்னிச்சிருங்க நீங்கதான் பொருளாளராக வரனுமு”ன்னு அவர் காலில் விழுந்தான். இருந்தும் இவர் சம்மதிக்கவில்லை. “நீ சந்தேகப் படும்படி என்னுடைய ஏதோ ஒரு செயல் உனக்கு தெரிந்திருக்கிறது. அதனால்தான் நீ அப்படி கேட்டாய். சந்தேகப்படும்படியான ஆள் பொறுப்பில் இருப்பது அவ்வளவு நல்லதில்லை” என அனைவரையும் இன்முகத்தோடு அனுப்பிவிட்டார்.

இரண்டொரு நாள் அதே வேதனையில் இருந்தவர் இறந்துவிட்டார்.  இறப்பிற்கு முன் வண்டப்புலி நாடார் தம்குடும்பத்தாருக்கு சொன்ன வார்த்தைகள் “நம் குடும்பத்தில் இருந்து யாரும் கிராமப் பொறுப்பிற்கு வரக்கூடாது. ஆனால் கிராமத்திற்கு செலுத்த வேண்டிய முதல் வரி நம்முடையதாகத்தான் இருக்க வேண்டும்”.  இதனால் தான் அவர் இறந்து 10 வருடங்களாகியும் உள்ளுர் மக்களால் உதாரணமாய் வாழ்கிறார். இன்றைக்கு பொது வாழ்வில் ஈடுபடுவர்களுக்கு எத்தனை பெரியவர் வண்டப்புலி நாடார்.

இல்லாதவர்கள், ஏதுமற்றவர்கள் நேர்மையாகத்தான் இருக்கின்றனர்.  ஒரு ஏழையோ, கிராமத்து விவசாயியோ எளிதாக பொய் சொல்வதில்லை. நீதி நூல்களை படித்தவர்கள், நீதிகளை மேடைகளில் முழங்குபவர்கள்தான் திருக்குறளுக்கு உரை எழுதியவர்கள் நமக்கு முன்னே போலிகளாய் நிற்கிறார்கள். மிக எளிமையாக, தன்னைச்சுற்றி நல்லது நடக்கப் போராடும் இவருக்கு ஸ்பெக்ட்ரம், காமன்வெல்த், ஆகாஷ் குடியிருப்பு ஊழல்கள் பற்றியோ, தேசிய அரசியலின் விளையாட்டுகள் பற்றியோ அதிகம் தெரியாது. அது தெரியாமல் இருப்பதாலேயே அவருடைய ஆன்ம பலம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.

(வண்டப்புலி நாடார் பற்றிய தகவல் பகிர்ந்துகொண்ட திரு.கண்ணனுக்கு நன்றி)

24 thoughts on “அவர்கள் அறியாமையிலேயே இருக்கட்டும்.

 1. பாராட்டுக்கு நன்றி துளசியம்மா . நீங்க சொல்வதைப்போலவே தேசிய, மாநில அரசியல் தலைவர்கள் ஏமாற்றம் தந்தாலும் இந்த மண் இன்னும் நல்ல இதயங்களை சுமந்து கொண்டுதானிருக்கிறது.

 2. நல்லவர்கள் நன்கு பேர் இருப்பதால் தன் மழை பெய்கிறது என்பது உண்மைதான் சார் ! யாருக்கும் நல்லது செய்யா விட்டாலும் கெடுதல் செய்யாமல் இருக்கலாம் !

  1. ஆமாம் சிவா. நம்மைச்சுற்றி நல்ல உள்ளங்கள் தொடர்ந்து இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன. அவையே நமக்கு நம்பிக்கையை தந்துவருகிறது.

 3. ரொம்பவே ஆச்சர்யப்படுத்தும் மனிதர்கள் இவர்கள்..

  நாமும் கற்கிறோம்..

  //பாராட்டுக்கு நன்றி துளசி சார்.//

  அவங்க சார் இல்ல அம்மா,. துளசியம்மா , டீச்சர் னு சொல்வாங்க .:)

  துளசிதளம் னு வலைப்பு இருக்கு.. – தகவலுக்கு மட்டும்..

  1. மிக்க நன்றி சாந்தி. இப்போது திருத்திவிட்டேன். பல சமயங்களில் பெயரை வைத்து பாலினத்தை கண்டறிய எனக்கு கடினமா இருக்கு. மன்னித்துக்கொள்ளுங்கள்.

 4. கடமலைக்குண்டு கிராமத்து மக்களின் கடவுள் கோவிலுக்கு வெளியே ஒரு பெட்டிகடையில் தான்
  வாழ்ந்துள்ளார் என்பது மெய் சிலிர்க்க வைக்கிறது

  1. அன்பு கார்த்திக். சில மனிதர்கள், வெளியாட்களுக்காக இல்லாமல் தன்னுடைய உள்ளுணர்வுக்காக நேர்மையுடனுடம் நியாயத்துடனும் வாழ்ந்துவருகிறார்கள். நீங்கள் சொல்வதைப்போல அவர்களும் கடவுளுக்கு நிகரானவர்கள் தான். வருகைக்கு நன்றி.

 5. அழகான செய்தியை பகிர்ந்தமைக்கு நன்றிங்க. இவங்கதான் சமூக சேவகர்கள் அப்படீங்கிற வார்த்தைகளுக்கு பொருளாய் நிற்பவர்கள். ஆனால் இவர்கள் யாரும் தங்களை வெளிச்சம் போட்டு, டமாரம் அடித்து “நானும் ரௌடிதான்” என்று வடிவேலு பாணியில் காட்டிக்கொள்வதேயில்லை என்பதற்க்கு எத்தனை எத்தனை உதாரணங்கள். வாழ்க வடிவேலு அய்யா போன்ற கதாநாயகர்கள். நிழலுலக கதாநாயகர்களை பார்த்து பார்த்து சலித்துப்போன எங்களுக்கு இந்த செய்தி மிக சுவாரசியமானதும், படிப்பினையும் கூட……

  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

 6. அப்படிப்பட்ட உத்தமர்களொல்லாம் எப்போதுமிருந்தால் மும்மாரியென்ன, மாதம் ஆறுமுறை கூட மழைபொழிந்து வையம் சிறக்கும்.

 7. இனிய ஜானகி. நல்ல பதிவு. நீண்ட இடைவேளைக்குப் பிறகு தங்களின் பதிவு இது. எண்மைத் தலைமையைப் பதிவு செய்தமைக்காக எனது வாழ்த்துகள். திரு. கண்ணன் பசுமைத்தாயகம் இதழில் தலைமை பற்றிய தொடரை எழுதத் தொடங்கியுள்ளார்.

  வடிவேலு அய்யா போன்றும் வண்டப்புலி நாடார் போன்றும் தன்னலமறியாத தலைவர்களின் வரலாறுகள் முழுமையாகத் தொகுத்தளிப்பப்பட வில்லை. இந்தப் பணியை வாய்ப்புள்ள காலங்களில் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் எனக்கு இன்றும் உண்டு. தாங்களும் கண்ணனும் எனது ஏக்கத்தைப் போக்கும் பொருட்டு தொடருவீர்கள் என நம்புகிறேன்.

  1. பாராட்டுதலுக்கு பல நன்றிகள் தங்கபாண்டியன். ஒரு வழிப்போக்கன் போலவாவது, நாம் செல்லும் வழியில் எந்த எதிர்பார்ப்புமின்றி பூத்துக்குலுங்கும் காட்டு மலர்களைப் போல, வாழ்வின் எதிர்பாராத தருணங்களில் சந்திக்கும் இது போன்ற மக்களை ரசிக்கவேண்டும். அடுத்தத் தலைமுறைக்காக பதிவு செய்திடவேண்டும். தனிப்பட்டவகையில் எனக்கு தேசிய, உலகத் தலைவர்கள் தரும் ஊக்கத்தைவிட இவர்கள் அதிகம் தருகிறார்கள். கண்ணனுடைய பணி வரவேற்கப்படவேண்டியது. இயல்பாக எனக்கிருக்கும் சோம்பல் உணர்வின் காரணமாக தொடர்ச்சியாக பதிவிடமுடியும் என்று எண்ணவில்லை. என்னைவிட நீங்களும் கண்ணனும் இப்பணியை சிறப்பாக செய்வீர்கள் என்றென்ணுகிறேன். அதற்கான தரவுகளும், திறனும் உங்களுக்கு நிரம்பியுள்ளன. நன்றி.

 8. Very interesting janaki. I was in Kadamalai for four years and even i was a regular customer to his own shop, but without knowing its fame tradition. Though it is very pleasing to see such extreme good personality, but he should have re-assumed the responsibility for the betterment of the village. No? Kaaintha marathuku kalladi vilathane seyyum. Appadi ellorum othinki poita ippadi sila athisiya manitharkalai patri ulaguthuku theriyamale poidume?

 9. புகைப்படத்தில் இருப்பவரின் பெயரை அதில் குறிப்பிட்டால் நன்றாக இருக்கும்.
  பதிவில் குறிப்பிட்டுள்ள முதலாமானவர் தான் அவர் என நினைக்கிறேன்.
  இருவர் பற்றி எழுதியிருப்பதால் இருவரில் யார் படம் அது என ஒரு சிறு குழப்பம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s