டீ பிரேக் 1


[டீ பிரேக் என்பது, ஒரு தொகுப்புப் பதிவு.

எனக்குத் தெரிந்த, படித்த பல சின்னச்சின்ன விஷயங்கள் பற்றி

உங்களுடன் பகிர்ந்து கொள்ள கிடைத்த வாய்ப்பு.

வாரம் ஒருமுறை எழுதலாம் என்றிருக்கிறேன். பார்க்கலாம். ]

 

ஒரு கதை…

புத்தரும் அவருடைய சீடரும் ஒரு ஊரைத் தாண்டி சென்றுகொண்டிருந்தனர். அந்த ஊரில் உள்ளவர்கள் புத்தரை கண்டபடி திட்டிக்கொண்டிருந்தனர். அவரை அசிங்கப்படுத்தினர். ஆனால் புத்தர் எந்த எதிர்வினையும் செய்யாமல் அமைதியாக சென்றுகொண்டிருந்தார். அவருடைய சீடருக்கு இது அடங்காத கோபத்தை ஏற்படுத்தியது. அவர் மக்களை பார்த்து பதிலுக்குத் திட்டினார். புத்தரிடம், ”ஏன் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள், தப்பான மக்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டே வந்தான். புத்தர் பதிலேதும் சொல்லாமல், அமைதியாக அந்த சீடனைப்பார்த்து, சிறு புன்முறுவலுடன் தன் உடலில் இருந்த மேல்துண்டை அந்த சீடனுக்கு போர்த்திவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

இப்போது, மேல்துண்டை தன் மீது புத்தர் ஏன் போர்த்தினார் என்ற குழப்பம் சீடனை ஆக்ரமித்தது. அதிலிருந்து புத்தர் என்ன செய்தியைச் சொல்கிறார் என யோசிக்க ஆரம்பித்தான். யோசித்துக்கொண்டே இருந்தான். அன்று இரவு உறக்கம் கூட அவனுக்கு வரவில்லை. நேராக புத்தரிடம் சென்று இது பற்றிக் கேட்டான். புத்தர், “நான் துண்டை உன்மீது போர்த்தியதில் எந்த செய்தியும் இல்லை.

உன்னுடைய மனம், மக்களின் திட்டுகளையும் கேலிகளையும் யோசித்துக்கொண்டிருந்தது, அதிலிருந்து திசைதிருப்ப துண்டினை உன் மேல் போர்த்தினேன். அதற்கு பிறகு நீ மக்களை மறந்துவிட்டு, துண்டினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்” என்றார்.

 

ஒரு காணொளி

தனிமை எப்பவும் கொடுமையானது. இதைப்பார்த்த பிறகு என் அப்பாவிம் மீதான என் அன்பு இன்னும் அதிகரித்தது.

 

ஒரு செய்தி

யார் இந்த அன்னா ஹசாரே?

முன்னால் ராணுவ வீரர். 1965 இந்திய-பாகிஸ்தான் போரில் பங்கெடுத்தவர், காந்தியவாதி.

என்ன பெரிசா செய்துவிட்டார்?

எல்லா நிலைகளிலும் பின்தங்கியிருந்த ராலேகான் சித்தி (அகமது நகர், மகராஷ்டிரா) கிராமத்தை தனிஆளாக பண்பிலும், பொருளாதாரத்திலும் இந்தியாவின் முன்னோடி கிராமமாக மாற்றிக்காட்டியவர்.

அதனால என்ன?

இப்போது, இந்த கிராமம் முழுமையான சுயசார்புத் தன்மையுடையதாக, மத்திய மாநில அரசின் உதவியில்லையென்றாலும் தன்தேவையை பூர்த்திசெய்துகொள்ளும் வகையில் மாறியுள்ளது. கிராமத்துக்கான மின்சக்தி கிராமத்திலேயே சூரிய, உயிர்ம, காற்று சக்திகளால் உற்பத்திசெய்யப்படுகிறது. 1975ல் வறுமைக்கோட்டுக்கு கீழிருந்த இந்த கிராமம் இப்போது, இந்தியாவின் பொருளாதார வளமிக்க கிராமமாக மாறியுள்ளது.

இதெல்லாம் சரி, இவரோட வாழ்க்கை, வசதிகள் பற்றி…

இந்த மாற்றத்துக்கு காரணமான இவர் தன்னுடைய வாழ்நாள் சேவைக்காக பத்ம பூஷன் விருது பெற்றுள்ளார். இன்றைக்கும், அந்த கிராமத்தில் உள்ள கோவிலுக்கு அருகே 10க்கு 10 இடவசதி கொண்ட ஒரு சிறு அறையில் தான் வாழ்ந்துவருகிறார்.

இப்ப எதுக்காக உண்ணாவிரதம் இருக்கார்?

நாட்டில் புரையோடிப்போயுள்ள ஊழலை ஒழிக்க சரியான சட்டக்கருவியை (ஜன லோக்பால் சட்டம்) ஏற்படுத்த போராடிக்கொண்டிருக்கிறார்

இந்த சட்டம் புதியதான ஒன்றா?

இல்லை. 1972லேயே அப்போதய சட்ட அமைச்சர் திரு.சாந்தி பூசனால் கொண்டுவர பரிசீலிக்கப்பட்டது. ஆனா, நமது மாண்புமிகுக்களும் உயர் அதிகாரிகளும் 40 ஆண்டுகளாக கிடப்பில் போட்டு பொதுசொத்தை ஆட்டையை போட்டு வருகின்றனர்

இவர் உண்ணாவிரதத்தின் மூலம் குறுகிய காலத்தில் இதை சட்டமாக்க அரசை நிர்பந்திப்பது சரியா?

இப்போதைக்கு அரசிடம் இவர் கேட்டுக்கொள்வது, இந்த சட்டம் நிறைவேற்றப்படும் என்ற அறிக்கை வாயிலான உறுதிமொழியைத் தான். அடுத்து, இந்த சட்டவரைவை மேற்கொள்ள 50% அரசு அதிகாரிகளும் 50% மக்கள் அமைப்புப் பிரதிநிதிகளும் அடங்கிய ஒரு குழு அமைக்கப்படவேண்டும் என்பது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் என்ன நிகழும்?

இதன் மூலம் தேர்தல் ஆணையம் போன்ற சுதந்திரத்தன்மையுடன் இயங்கும் மத்தியில் லோக்பால், மாநிலங்களில் லோக்அயுக்தா அமைப்புகள் ஏற்படுத்தப்படும். ஊழல் குற்றம் சாட்டப்படுபவர் எவ்வளவு பெரிய அதிகாரியாகவோ, எவ்வளவு பெரிய அரசியல்வாதியாகவோ இருந்தாலும் 1 வருடத்துக்குள் விசாரிக்கப்பட்டு 2 வருடங்களுக்குள் தீர்ப்பும் தண்டனையும் வழங்க சட்டபூர்வ வழி ஏற்படும்.

இந்த சட்டத்தால் மட்டுமே இந்தியா ஊழலற்ற தேசமாகிவிடுமா?

தகவல் பெறும் உரிமை சட்டம் போல இந்த சட்டமும் வெளிப்படையான நிர்வாகத்தை உண்டாக்க உதவும் ஒரு கருவி மட்டுமே. இது நடைமுறைப்படுத்தப்பட்டால் கண்டிப்பாக இப்போதைக்கு இருக்கும் ஊழல் விசாரணை முறைகள் இன்னும் மேம்படும். இதில் சந்தேகமே இல்லை.

அன்னா ஹசாரே மட்டுமே இதற்காக போராடுகிறாரா?

அவருடன் இப்போது, சமூக ஆர்வலர்களான பாபா ஆம்தே, சுவாமி அக்னிவேஷ், அர்விந் கெஜ்ரிவால், கிரண்பேடி போன்றவர்களும் இணைந்திருக்கிறார்கள். இன்னும் பல நல்ல உள்ளங்கள் இணைந்து போரட வந்துகொண்டிருக்கின்றன.

சரி, நான் என்ன செய்யமுடியும்?

இந்த விஷயத்தைப் பற்றி, நம் நண்பர்கள், உறவினர் வட்டத்தில் பேசலாம். இந்த செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளலாம். விருப்பமும் வாய்ப்பும் இருந்தால், நமது பகுதியில் இது பற்றிய விழிப்புணர்வை பிரசாரத்தை மேற்கொள்ளலாம். எதுவும் முடியாதென்றால், அன்னா ஹசாரேவின் உடல் நலம் மேம்பட பிரார்த்தனையாவது செய்யலாம்.

12 thoughts on “டீ பிரேக் 1

 1. அதற்கு பிறகு நீ மக்களை மறந்துவிட்டு, துண்டினைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தாய்”//

  ம். சங்கடம் தான்.. பழகணும் ..ஆனால்.. 🙂

 2. டீ பிரேக்கில், புத்தரையும் அசாரேயையும் பற்றி எழுதியமைக்கு ஒரு ஒற்றுமையுண்டு ..

  பாராட்டுக்கள்..

 3. நான் அறிந்த அசாரேதான்… ஆனால் இந்த நேரத்தில் புத்தரின் கதை தேர்தலுக்கு சரியாக பொருந்தியுள்ளது. எப்போதும் பொருந்தும் தான்…

  முன்னால் ராணுவ வீரர் கார்பேரேட் ஆட்களை மேடை ஏற்றினார் என்ற குற்றச் சாட்டு எழுந்துள்ளது….

  1. கார்பொரேட் ஆட்கள் தீண்டத்தகாதவர்கள் இல்லையே கண்ணன். நல்ல விஷயத்துக்கு யார் குடைபிடித்தாலும் தப்பில்லை. இது தப்பென்றால், பல தன்னார்வ நிறுவனங்கள், கார்பொரேட் நிறுவனங்களின் உதவியில் தான் நலத்திட்டங்களை செய்துவருகிறது. அதுவும் தவறாகிவிடுமா?

 4. அண்ணா ஹசாரே ஊழலை தோற்றுவிக்கும் தனியார்மயத்தை ஏற்றுக் கொள்கிறார்
  இதனால் அண்ணா ஹசாரே இந்த விசயங்களை புரிந்து கொண்டு தவறு செய்கிறார் என்று கருதிவிடக்கூடாது. அவரைப் பொறுத்தவரை இந்த அமைப்பு முறையை அதாவது இந்தியாவின் அரசியல், சமூக, பொருளாதார அமைப்பை அடிப்படையில் ஏற்றுக் கொள்கிறார். அந்த பலத்தில்தான் அவர் ஜன்லோக்பால் சீர்திருத்தத்தைக் கோருகிறார். ஆனால் இந்த அமைப்பு முறையே மக்களைச் சுரண்டும் ஊழலை தன் அடிப்படையாக வைத்திருக்கும் போது நாம் எதை எதிர்த்து போராட வேண்டும்? பளிச்சென்று ஒரு எடுத்துக்காட்டு கூறவேண்டுமென்றால் தாமிரபரணி தண்ணியை கொக்கோ கோலாவுக்கு விற்பது ஊழலா, இல்லை அந்த விற்பனையில் ஒரு கலெக்டர் சில இலட்சங்களை கமிஷனாக பெற்றார் என்பது ஊழலா? முன்னது இந்த நாட்டின் இயற்கை வளத்தை அப்பட்டமாக விற்கிறது. பின்னது அதிகார வர்க்கத்திடம் அன்றாடம் நடக்கும் நிர்வாக ஊழல். இரண்டு ஊழல்களின் பரிமாணங்களும் வேறு வேறானவை. சட்டம் போட்டு கலக்டரையோ, இல்லை மந்திரியையோ தண்டித்து விடலாம். ஆனால் நாட்டை விற்பனை செய்யும் இந்த அரசை எப்படி தண்டிப்பது?

  தற்போது நடக்கும் ஊழல் எதிர்ப்பு போராட்டங்களோ, அண்ணாவின் உண்ணாவிரதமோ தமது நோக்கத்திற்கும் நலனுக்கும் எவ்விதத்திலும் முரண்பட்டதல்ல என்பதைப் புரிந்து கொண்டுள்ளதாலேயே ஆளும் கும்பல் இவர்களிடம் பரிவோடு பேசுகிறது. எதார்த்தத்தில் நீதி மன்றங்களும், சட்டமுமே தனியார்மய கார்பொரேட் பகற்கொள்ளைக்கு ஆதரவானதாக இருக்கிறது. உண்மை இப்படியிருக்கும் போது, சட்டவாத நடைமுறைகளைக் கொண்டே ஊழலை எதிர்த்து விடப் போவதாகச் சொல்வதும், அதையே ஊழலுக்கு எதிரான ஆகப் பெரிய போராட்டம் என்பது போலும் சித்தரிப்பது கேடுகெட்ட அயோக்கியத்தனமாகும். இது சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக மக்களிடையே இயல்பாக எழும்பக் கூடிய ஆத்திரத்தை மடைமாற்றி விடவே செய்யும். எனவே தான் இந்த போராட்டக்காரர்களிடம் பணிந்து போவது போலும் பரிந்து பேசுவது போலும் ஒரு நாடகத்தை ஆளும் கும்பல் அரங்கேற்றி வருகிறது.

  ஒருவேளை இந்தக் கமிட்டியின் மூலம் வெகுவிரையில் லோக்பால் அமைப்பு உண்டாக்கப்பட்டு விட்டால் இவர்களே ஊழல் என்று சொல்வதை அது ஒழித்து விடுமா? இல்லை. அந்த அமைப்புக்குத் தலைவராகப் போட பி.ஜே.தாமஸ் போன்ற இன்னொரு அதிகாரி கிடைக்காமலா போய் விடுவார்? ஏற்கனவே மலக்குட்டையில் முக்குளித்துக் கொண்டிருக்கும் உள்ளூர் போலீசு, சி.பி.சி.ஐ.டி, சி.பி.ஐ போன்ற நிறுவனங்களோடு சேர்ந்து புதிதாக இன்னொரு பன்றி என்கிற அளவிலேயே இருக்கும்.

  அண்ணாவின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டாலும் அது இந்த அமைப்பு முறையின் அடிப்படையான ஊழலை மாற்றி விடாது. மேலும் முதலாளிகளின் கொள்ளையை நியாயப்படுத்திக் கொண்டே புறங்கையை நக்கியவர்களை மாபெரும் வில்லன்களாக காட்டுவதே இதன் நோக்கம். ஆக அண்ணா ஹசாரேவின் போராட்டத்திற்கு அம்பானியே ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

  மும்பையில் நடந்த மெழுகுவர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்ட ஒருவர் செய்திச் சேனல் ஒன்றின் கேமரா முன் தான் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வது ஏன் என்று விளக்குகிறார் – “என் தாத்தா காந்தியைப் பற்றி நிறைய சொல்லியிருக்கிறார். நான் என் வாழ்நாளில் காந்தியைக் கண்டதில்லை. இப்போது அண்ணாவைப் பார்க்கும் போது காந்தி என்பவர் இப்படித்தான் இருந்திருப்பார் என்று புரிந்து கொள்ள முடிகிறது” என்றார். ஆம், காந்தியும் இப்படித்தான் இருந்தார் – ஒரு மக்களின் நியாயமான எதிர்ப்புணர்ச்சிகளுக்கு ஒரு வடிகாலாய், தன்னெழுச்சியான போராட்டங்களைக் நீர்த்து போக செய்வதற்கான வேலையைத்தான் அவர் செய்தார்.

  வருடம் முழுவதும் பிசா, கென்டகி, எம்.டி.வி, ஐ.பி.எல், என்று வாழும் நடுத்தர வர்க்கம் அதற்கு ஊறு இல்லாமல் கொஞ்ச நேரம் காந்தியையும் போற்றுகிறது. வார இறுதி கேளிக்கைளில் கொஞ்சம் சலித்துப் போனால் கோவிலுக்கு போவதில்லையா? ஆக இந்த ஊழல் எதிர்ப்பு கூட வந்து போகும் ஒரு வீக் எண்ட்தான். இது முடிந்த பிறகு அவர்கள் ஐ.பி.எல்லுக்கு போவார்கள். சியர் லீடர்களோடு சேர்ந்து ஆரவரிப்பார்கள். கிரிக்கெட்டோ, ஊழல் எதிர்ப்போ தொடர்ந்து மக்களை ஆரவாரத்தில் வைத்திருப்பதே அவர்களது நோக்கம். அடிப்படையை மாற்றுவது நம் கையில். புரிந்தவர்கள் இந்த உண்ணாவிரதம் தோற்றுவித்திருக்கும் பொய்மையை கலைப்பதற்கு முன்வரவேண்டும்.

  வினவில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி

  1. இந்தியாவில் இருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு பழக்கம் இருக்கிறது. தீயதுக்கு எதிரான போராட்டங்களை தாம் மட்டுமே செய்ய குத்தகை எடுத்ததாகவும், அவர்களைத் தவிர யார் அநீதிக்கு எதிராக போராடினாலும் அவர்களை சந்தேகப்படுவது, அவர்களின் முயற்சியை நீர்த்துப்போகச்செய்வது என தீவிரமாக இயங்குவார்கள். இது துரதிருஷ்டவசமானது. நல்ல விஷயம் ஒரு இன்ச் அளவு நடந்தாலும் அது வரவேற்கத்தக்கதே….

 5. நல்ல அற்புதமான பலதரப்பட்ட தரவுகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன, சிறுவயதில் கல்கண்டு நூலைப் படித்து நாம் சர்ச்சை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது. ஒரு உபதேசம், ஒரு சிறுகதை, ஒரு செய்தி. வழக்கமான உன் பாணி இந்த தளத்திலும் ப்ரகாசிக்கிறது. உன்னறிவு விருந்து பெரிதாகி இன்னும் பல தரவுகளை பல்சுவையோடு வழங்கட்டும் என்று உளமார வாழ்த்துகிறேன்

  1. அன்புக்கு மிக்க நன்றி சங்கரா. உண்மையில் நாம் சின்ன வயதில் பேசிய படித்த விஷயங்களின் நீட்சியே இது போல ப்ளாக் எழுத உத்வேகம் கொடுத்துள்ளது. வெறும் நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கையை சுருக்கிக்கொள்ளாமல், கட்டற்ற வெளியில் சுற்றும் சுதந்திரத்தை விதைத்த நமது பள்ளி நாட்கள் எப்பவும் பசுமையாக இருக்கும்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s