தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும்


15 வருஷத்துக்கு முன்பு குமுதத்தில் வந்த கட்டுரை ஞாபகத்துக்கு வருகிறது. சென்னையையே பார்க்காத கிராமத்து மனிதரை சென்னைக்கு கூட்டிவந்து, ஊர் சுற்றிக்காட்டி அவருடைய ரியாக்ஷன்களை பதிவுசெய்திருந்தார்கள். அதில் ஒரு அங்கமாக சினிமா படபிடிப்பினை பார்வையிடவைத்திருந்தனர். அந்த டைரக்டரை தயங்கித் தயங்கி கிராமத்தவர், “சினிமாவை எப்படி 3 மணி நேரத்தில் எடுக்கமுடியுது?” என்று கேட்ட அவரின் கேள்வி நமது மக்கள் எவ்வளவு அப்பாவியாக இருக்கிறார்கள் என்பதை உணர்த்தியது. பொதுஜனங்களிடையே சினிமா பற்றி இருக்கும் இது போன்ற மாயவியப்பின் விளைவாகவே சினிமாவின் கதாநாயகர்கள் நம்மை ஆள்வதும், கடவுளாகுவதும் நிகழ்கிறது. ஆனால் காலம் எல்லா மாயத்தையும் கட்டுடைத்துக் கொண்டுதான் இருக்கிறது. நிச்சயம் இன்றைய தேதிக்கு தமிழ் ரசிகன் இவ்வளவு அப்பாவியாக இல்லை. அவன் சினிமா எது நிஜம் எது என்பதை குறைந்தபட்ச அளவிலாவது புரிந்து வைத்துள்ளான். சினிமா தரும் குச்சிமிட்டாய்க்கும் குருவிரொட்டிக்கும் மயங்குவதில்லை. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம், உலகமயமாக்கலால் பெருமளவில் அன்னிய மொழிப்படங்களின் பரிட்சயம் ஏற்பட்டதும் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்பட்ட இண்டர்நெட்டின் வீச்சும் தான். இது சராசரி ரசிகனுக்கு சினிமா பற்றிய பலவித சாய்ஸ்களை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையான கதை, திறமையான பிரசன்டேஷன் இல்லாத திரைப்படங்கள் குப்பைக்குத் தள்ளப்படும் போக்கு நம் காலத்தில் நிகழ்ந்துவருவதை ஆமோதித்துத்தான் ஆகவேண்டும்.

பொல்லாதவன் படம் வெளிவந்த நேரம். விஜய் டீவியின் மதன் திரைப்பார்வையில், இயக்குனர் வெற்றிமாறன் பொல்லாதவன் படம் பற்றி பேசிக்கொண்டிருந்தார். “இந்தப்படத்தை பைசைக்கிள் தீவ்ஸ் படத்தின் தழுவல் என்று பேசிக்கறாங்களே…” என்ற மதனுடைய கேள்விக்கு வெற்றிமாறன் சற்றுத் தடுமாறித்தான் போனார். தொடர்ந்து பேசிய மதன், “இல்ல… இந்த படத்துக்கும் அதுக்கும் தொடர்பிருப்பதாக நான் நினைக்கல” என்று சொன்னபிறகு, ஆசுவாசமான வெற்றிமாறன், “சார். பொல்லாதவன் படமும் பைசைக்கிள் தீவ்சும் வேற வேற. அந்த படம் கிளாசிக். அப்படி அந்த படம் போல இது இருக்குன்னு சொன்னாங்கன்னா நான் கொடுத்துவைச்சவன்” என்று சிறு புன்னகையுடன் சொன்னதாக ஞாபகம். பைசைக்கிள் தீவ்சில் சைக்கிள் காணமல் போகிறது. பொல்லாதவனில் பைக் காணாமல் போகிறது. இந்த ஒரு முடிச்சை மட்டும் வச்சிக்கிட்டு அதோட காப்பி தான் பொல்லாதவன் என்று சொல்லும் தமிழின் திரைவிமர்சனக் கலைஞர்களின் ரசனை பயப்படவைக்கிறது. அதே போலத்தான் கஜினி படம் வந்த போது, அது மெமொண்டோவோட காப்பின்னு அடிச்சுவிட்டாங்க. சமீபத்தில் வெளிவந்த யுத்தம் செய் படத்தையும் மெமரிஸ் ஆப் மர்டர் படம்ன்னு சொல்லிக்கிழிக்கிறாங்க. இது போன்ற புரிதலற்ற விமர்சனங்கள் நம்முடைய சினிமா ரசனையின் மொன்னைத்தன்மையையே வெளிப்படுத்துகிறது.


அதே நேரத்தில் நந்தலாலாவுக்கு கிகுஜிரோவிலிருந்து சீன்-பை-சீன் அப்படியே அளவெடுத்து ஜெராக்ஸ போட்டுவிட்டு இது என்னுடைய சொந்தகதை என்று சண்டித்தனம் செய்த மிஷ்கின், டீரெயில்ட் படத்தை அச்சாக தமிழுக்கு பச்சைக்கிளி முத்துச்சரமாக எடுத்துவந்த கௌதம், செல்லுலார் என்ற படத்தை ரெண்டு மூனு பேர் வேறுவேறு நடிகர்களைப் போட்டு தமிழ்படுத்திய விதம் (ஒரு வெர்ஷனில் ரித்திஷ், இன்னொரு வெர்ஷனில் எஸ்.வி.சேகர் மகன் நடித்ததாக ஞாபகம்) ட்சோட்சி படத்தை தமிழ் படுத்திய யோகி படம் (இப்போதைக்கு இவ்வளவு படங்கள் தான் என் ஞாபகத்தில் வருகிறது) போன்றவை சகித்துக்கொள்ளமுடியாதது. இதில் மூலப்படத்துக்கு எந்த கிரெடிட்டும் கொடுக்காமல், என்னமோ, தாங்கள் முட்டுச்சந்தில் மொட்டுவலைய பாத்துப்பாத்து யோசிச்சு எழுதியது போல, a flim byன்னு தன்னோட பெயரை போட்டுக்கொள்வது அயோக்கியத்தனம்.

 

இந்த பிரச்சனைகளை தவிர்ப்பதற்காகவே வெற்றிமாறன் ஆடுகளத்தில் பிளிமோகிராபியை வைத்து கேச்சி, அமரோஸ்பெராஸ் என்று ஒரு நீளமான படலிஸ்டை கொடுத்துவிட்டார் என நினைக்கிறேன். கண்டிப்பா அமரோஸ் பெராஸின் நாய்ச்சண்டையை ஆடுகளத்தோடு தொடர்புபடுத்தி எழுதும் வாய்ப்பு குறைவென்றாலும் வாலண்டரியாக தன்னுடைய இன்ஸ்பரேஷன்களை வெளிப்படையாக ஒத்துக்கொண்டது தமிழ்சினிமாவின் பாசிட்டிவ் போக்காகவே பார்க்கத் தோன்றுகிறது. ஒருவகையில் இதை வருங்காலங்களில் தவிர்க்கமுடியாது. இப்பல்லாம் உலகப்படங்கள் பர்மாபாஜாரிலும், டோரண்டிலும் கொட்டிக்கிடக்கிறது. சாதாரண ரசிகர்கள்கூட உலகப்படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இனிமே நம்ம இயக்குனர்கள் உலகப்படத்தை உல்டா செய்வதை ரொம்ப சுலபமாக கண்டுபிடித்துவிடமுடியும்.
மாறிவரும் சமூக-தொழில்நுட்பச்சூழலில் தமிழ் இயக்குனர்கள் சொந்த கதையை வைத்து படமெடுப்பது மட்டுமே அவர்களை நிலைக்கச்செய்யும் . சொந்த சரக்கு இல்லை, ஜெராக்ஸ் தான் எடுக்கமுடியும்னா முன்கூட்டியே கன்பெஷன் செய்துவிடவேண்டியிருக்கும்.

2000ம் ஆண்டுக்கு பிறகு வெளிபட்டு வரிசை கட்டி வரும் புதிய தலைமுறை இயக்குனர்கள்,  மிஷ்கின், வெற்றிமாறன், கௌதம், சுசீந்திரன், சசிகுமார், அமீர், சமுத்திரகனி, ராம், வசந்தபாலன், பிரபுசாலமன், ராதாமோகன், சற்குணம், பாண்டிராஜ், ராசுமாதவன், செல்வராகவன், பாலாஜி சக்திவேல்  (இந்த வரிசை தரமதிப்பீட்டில் அமைந்ததல்ல, எழுதும் போது மனதில் தோன்றிய ரேண்டம் பெயர்கள்) எல்லாரும் தமிழ்சினிமாவின் மிகப் பெரிய நம்பிக்கைகளாக தெரிகிறார்கள். அதற்கான உழைப்பும், தகுதியும் நிச்சயம் இவர்களுக்கு இருக்கிறது. ஆனால், மாறிவரும் சூழலின் தன்மையறிந்து வேற்று மொழிப்படங்களை பிரதியெடுப்பதற்கு பதிலாக நமது மண்ணிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் கதைகளைச் சொல்லத்துவங்கவேண்டும்.

சமீபத்தில் நடுநிசிநாய்கள், யுத்தம் செய், ஈசன் ஆகிய 3 படங்களை தொடர்ச்சியாக பார்க்கநேர்ந்தது. இந்த மூன்று திரைப்படங்களின் கதையின் தளம் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருந்தது. நகரச்சூழலில் இளம்பெண்களுக்குக்கெதிரான பாலியல் வன்முறை, அதைச்சார்ந்த பழிவாங்கல் என்று கதையின் வடிவம் குறுகியிருந்தது. ஆனால் இந்த மூன்று படங்களின் இயக்குனர்னர்களின் இதற்கு முந்தைய படங்கள் வி.தா.வ, நந்தலாலா, சுப்ரமணியபுரம் வெவ்வேறு கதைத்தளத்தில் சொல்லப்பட்டவையாக இருந்தது சுவாரசியம். தொழில்நுட்பமும் திரைமொழிபற்றிய புரிதலும் விரிந்து செல்லச்செல்ல, நமது கதைத் தளத்துக்கான கரு பழிவாங்கல், காதல், வன்முறை என குறுகிக்கொண்டிருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. சினிமாவின் வியாபாரத்தைத் தாண்டி, ரசிகனின் ரசனையை அடுத்தநிலைக்கு எடுத்துச் செல்வது சினிமா பிழைத்திருப்பதற்கான கட்டாயமும் ஆகும். தமக்கான பார்வையாளர்களும் வியாபாரமும் மிகக்குறுகிய அளவே இருந்தாலும் சமரசம் செய்யாத ஆகச்சிறந்த படங்கள் மராத்தி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் வரும் போது, ஒரு தமிழ் சினிமாவுக்கான வியாபார சாத்தியம் 300, 400 கோடிகள் அளவில் இருக்கும் போது (உபயம்: எந்திரன்) அதன் முழுவீச்சை நாம் இன்னும் பயன்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. எப்படி, ஈரானிய, கொரிய திரைப்படங்கள் தம்முடைய தனித்துவமான திரைமொழியால் தமக்கென தனிஇடத்தை உலகத்திரை அரங்கில் பிடித்ததோ, அதே காலம் தமிழுக்கும் வரவேண்டும். இதற்கான பொறுப்பு இயக்குனர்கள், ரசிகர்கள் என இருவருக்குமே இருக்கிறது.

12 thoughts on “தமிழின் இயக்குனர்களும் ரசிகர்களும்

 1. நண்பருக்கு…
  ஜானகி, விஜயகுமார், ராஜாமணிகண்டன் ஆகிய நீங்கள் மூவர் தான் எனது சினிமா குறித்த எண்ணங்களை மாற்றியமைத்தவர்கள். அடிப்படையில் சினிமா பார்ப்பது… சினிமாக்கரர்களையும் சினிமாவையும் எதிர்மறையாக விமர்சிப்பது தான் எனது எண்ணம். பின்னொரு திண்ணையில் நீங்கள் எடுத்துரைத்த வாதம் சரியாக இருந்ததால் சினிமா மீது ஒரு நேர்மறையான எண்ணம் எழுந்தது. ஆனால் அது உருப்பெற வில்லை… அதனால் இந்தக் கட்டுரை குறித்து பெரிய அளவில் என்னால் எதுவும் சொல்ல இயலவில்லை. நல்ல சினிமா எடுக்கட்டும்… வாய்ப்புள்ள போது பார்த்து பேச வேண்டிதருணங்களில் பேசுகிறேன்.

  1. நன்றி கண்ணன். படைப்பிலக்கியம் போலவே, சினிமாவும் ஒரு உன்னதமான கலைவடிவம் தான். இன்னும் சொல்லப்போனால், இந்தியச்சூழலில் எல்லாக்கலைகளையும் விட மிக வலிமையானது சினிமா என்பது உனக்கும் தெரியும். இதனை இன்னும் வீரியமாக வார்த்தெடுப்பதில் சினிமாவை தொழிலாக சார்தவர்களுக்கு இருக்கும் அதே பொறுப்புணர்வு, சினிமாவை பொழுதுபோக்காக பார்க்கும் என்னைப்போன்ற, உன்னைப்போன்ற ரசிகர்களுக்கும் உள்ளது. நேரில் விரிவாக பேசுவோம்.

 2. தமிழ் சினிமா குறித்த அழகான புரிதல்.வாழ்த்துக்கள்! ஒரு படைப்பு முழுமையாக தனதில்லை என்று சொல்லும் தைரியமுள்ள படைப்பாளிகளை வரவேற்போம். ஆனால் நந்தலாலா போல ஈயடிச்சான் காப்பி அடித்துவிட்டு ஊரை ஏமாற்றும் மிஷ்கின்கள் இருக்கும்வரை தமிழ் சினிமா அடுத்த தளத்துக்கு போவது குதிரைக்கொம்புதான். கதையின் கரு காதல், பழிவாங்கல், வன்முறை என்றுதான் பெரும்பான்மையான தமிழ் சினிமாவில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காரணம், தொப்புளாட்ட குத்து டான்ஸும், ஒருத்தன் 100 பேரை அடிக்கும் ரோப் கட்டிய சண்டைய மட்டும் இருந்தால் போதும் ப்ளாக்ல டிக்கெட் வாங்கி உங்களை கோடிகளில் புரள வைக்க நாங்கள் ரெடி என்னும் தமிழ் ரசிகனும்தான். ஆக, நீங்கள் சொல்லியதுபோல படைப்பாளிகளுக்கு இருக்கும் அதே பொறுப்பு ரசிகர்களுக்கு வேண்டும்! நன்றி….
  பத்மஹரி,
  http://padmahari.wordpress.com

  1. மிக்க நன்றி பத்மஹரி. முன்பு போல் இல்லாமல், தமிழில் இப்போது நல்ல சினிமாவுக்கான நம்பிக்கைகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது. இதனை சரியான தடத்தில் கொண்டு செல்வதில் ரசிகர்கள், நடுநிலை விமர்சகர்களின் பங்கு அவசியப்படுகிறது. குறிப்பாக சினிமாத் துறையை தொழிலாகக் கொள்ளாத பார்வையாளர்களின் நேர்மையான விமர்சனங்கள் மிகவும் அவசியம் என நினைக்கிறேன்.

  1. பாராட்டுக்கு மிக்க நன்றி ரங்கநாதன். கண்டிப்பாக இந்தப் பதிவின் நகலை உங்கள் அஞ்சலுக்கு அனுப்பிவைக்கிறேன். (எனக்கு “சார்” வேண்டாமே.. ப்ளீஸ்)

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s