ஓ போடு…


ஓட்டுப் போடு; பிடிக்கலைன்னா 49-ஓ போடு..

(கார்டூன்:http://onegirlathousandwords.wordpress.com/)

போனமாதம், ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம். அதையொட்டி, எங்க ஊரில் நிறைய பேனர்கள் ரோட்டரி க்ளப் மூலமாக வைத்திருந்தனர். அவை எல்லாம் வாக்காளர்கள் தேர்தல்களில் வாக்களிப்பது கடமை என வலியுத்தியது. எல்லா சுவரொட்டிகளிலும் எங்கள் மாவட்ட ஆட்சியர், வாக்காளர்கள் நேர்மையாகவும் தவறாமலும் வாக்களிப்பதை வலியுருத்தினார். இதைப்பார்த்த என்னுடைய நண்பன் “வாக்காளர்களை காசு வாங்காம ஓட்டுப்போடச் சொல்வதற்கு முன் தப்பே செய்யாத நல்ல வேட்பாளர்களை தேர்தலில் நிறுத்தச்சொல்லனும்” என்று அலுத்துக்கொண்டான். இன்று அரசியல் என்பது பணம் கொழிக்கும் வியாபாரமாக போய்விட்டதையும் அந்த ஊழல் நீரோட்டத்தில் சமீபகாலமாக வாக்காளர்களையும் கலக்கச்செய்யும் பழக்கமும் ஞாபகத்துக்கு வந்தது.

உலக அளவில் எல்லா நாடுகளும் இந்தியாவைப் பார்த்து வியப்பதற்கு அடிப்படை காரணம் நம்முடைய மக்களாட்சித் தன்மையில் பரப்பும் வீச்சும் தான். இந்தியாவில் மட்டும் தான் பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் முதல் குடியரசுத் தலைவர் வரை 32 இலட்சத்துக்கும் மேற்பட்ட பதவிகள் வாக்காளர்களின் வோட்டுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படப்படுகிறது. இந்தத் தன்மையே நமது தேர்தல் முறையை மிக வலிமையானதாகவும் அதேசமயத்தில் சிக்கலானதாகவும் ஆக்கியுள்ளது.

நமது தேசத்தை ஜனநாயக தேசம் என்று சொல்வதற்கு இருக்கும் ஒரே காரணம், ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நமது ஆட்சியாளர்களை நாம் மத்தியிலும் மாநிலத்திலும் உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கிறோம் என்பது தான். இதோ, இப்போது நமது மாநிலத்திலும் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டது. கூட்டணி பேரங்கள் சீரும்சிறப்புமாக களைகட்டிவிட்டது. வரும் மே மாதம் சட்டசபை தேர்தல், ஜீன் இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் என அடுத்த 4 மாதங்களில் இரண்டு முக்கிய தேர்தல்கள் நடைபெறவுள்ள இந்த காலக்கட்டத்தில் நேர்மையான தேர்தல் பற்றிய விவாதத்தை முன்னெடுத்துச் செல்வது அவசியமெனப்படுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னும் நமது தேர்தல்களில் 100% வாக்கெடுப்பை உறுதிசெய்யமுடியவில்லை. எந்தத் தேர்தலிலும் சராசரியாக 70% சதவிகித வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள். அதில் 20% வாக்கு பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறது. அதாவது, மொத்த வாக்காளர்களில் 30%க்கும் குறைவான பெரும்பான்மை பெற்றவர் கையில் நம் நாட்டின் அடுத்த 5 ஆண்டையும் நமது வாழ்க்கையின் தலைவிதியையும் கொடுக்கிறோம். சாதாரண காய்கறிக்கடையில் கூட நாம் உண்ணும் காய்கறிகளை கீறிப்பார்த்து, முறுக்கிப்பார்த்து, உடைத்துப்பார்த்து, தட்டிப்பார்த்து, முடிந்த அளவுக்கு பேரம் பேசி வாங்கும் நாம், நாட்டின் போக்கினை தீர்மானிக்கும் வாக்குக்கு எந்த முயற்சியும் எடுக்காமல் உதாசினப்படுத்துகிறோம் அல்லது போகிறபோக்கில் எதோ ஒரு கட்சிக்கு ஓட்டளித்துவிட்டு நாடு கெட்டுப்போச்சு, ஊழல் ஊறிப்போச்சு என்று அங்கலாய்க்கிறோம்.

100% வாக்கினை உறுதி செய்யமுடியாததற்கு அரசு மற்றும் மக்கள் ஆகிய இருவரிடமும் தவறுகள் இருக்கின்றன. சோம்பேறித் தனத்தாலும் வாழ்வாதாரத்துக்காக வெளியூர்களுக்கு இடம்பெயர்ந்ததாலும் மக்களில் குறிப்பிடத்தகுந்த சதவீதத்தினர் தமது வாக்குரிமையை பயன்படுத்துவதில்லை. சமீபகாலங்களில் வாக்காளர்கள் தமது, விலைமதிக்கமுடியாத வாக்குரிமையை பணத்துக்காகவும் சலுகைகளுக்காகவும் விற்றுவரும் போக்கும் அதிகரித்துவருகிறது. இவை இரண்டுமே நமது ஜனநாயகத்தின் மீதிருக்கும் கரும்புள்ளிகளாகும். வாக்குரிமையில் அரசின் தவறுகளெனப் பார்த்தால் மூன்று விஷயங்கள் முக்கியமானவை. 1.வாக்காளர் பட்டியல் முழுமையானதாக, சரியானதாக எப்போதுமே இருந்ததில்லை. எல்லா சமயங்களிலும் இறந்தவர் பெயர் நீக்கப்படாமல் இருப்பது, ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை இருப்பது, வாக்களிக்கும் வயதினை அடைந்திருந்தாலும் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் முக்கியமானவை. 2.வாக்களிக்கும் நடைமுறை வாக்காளருடைய கடமை என்று வலியுருத்தப்பட்டாலும் அதனை சட்டப்பூர்வ கட்டாயமாக்காமல் இருப்பதால் சோம்பல்தனத்தால் வாக்களிக்க விருப்பாதவர்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்தவகையில் இருந்து வருகிறது. 3.மிக முக்கியமாக போட்டியிடும் வேட்பாளர்களில் யாருமே சரியான நபர்களாக இல்லை என்று வாக்காளர் கருதும் பட்சத்தில் அவர் நடுநிலை அல்லது எதிர் வாக்கினை பதிவு செய்யும் நடைமுறை இல்லாதிருப்பது இந்தியத் தேர்தல் முறையின் மிகப் பெரிய பலவீனமாக கருதப்படுகிறது.

“நிற்கின்ற வேட்பாளர்கள் எல்லாருமே தப்பானவர்கள் இவர்களுக்கு ஓட்டளிப்பதை விட, வீட்டில் உட்கார்ந்து டீவியில் தேர்தல்கால சிறப்பு நிகழ்ச்சிகளை பார்கலாம்” என்று தேர்தல் சமயத்தில் ஓட்டளிக்காத மக்கள் நிறையபேர் சொல்வார்கள். யோசித்துப்பார்த்தால் அது உண்மையாகத் தான் உள்ளது. எடுத்துக்காட்டாக, எங்கள் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே ஊழல் பேர்வழிகளாக இருக்கும் பட்சத்தில், அவர்களில் யார் குறைந்த ஊழல் செய்பவரோ அவரைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு தான் எனக்குள்ளதே தவிர, அவர்கள் அனைவரையும் நிராகரிக்கும் வாக்கினை பதிவு செய்யும் உரிமை எனக்கு தரப்படவில்லை. இந்த வாய்ப்பு நேர்மையான, நம்பகத்தன்மையுள்ள மக்களாட்சியை நிறுவுவதற்கு மிகவும் அவசியமானதாகும். சரியான நபரை தேர்தலில் நிறுத்தவில்லையென்றால் மக்கள் நிராகரிப்பார்கள் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளுக்கு ஏற்பட்டால் அவர்கள் மக்களின் ஓட்டினை பெறுவதற்கு சரியான நபர்களை தேர்தலில் நிறுத்தமுற்படுவார்கள். அதன் மூலம் ஒட்டுமொத்த ஜனநாயகத் தலைமைத்துவமும் அரசியல் முறைமையும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை.

ஆனால் தற்போதிருக்கும் தேர்தல் நடைமுறையில் மறைமுகமாக இந்த நடுநிலை ஓட்டு தரப்பட்டுள்ளது. இந்திய அரசின் தேர்தல் நடத்தை விதிகள் 1961ன் 49-O விதிமுறையானது, ஒரு வாக்காளர் தமது வாக்கினை எந்த வேட்பாளருக்கும் பதிவு செய்யாமல் வாக்கெடுப்பில் பங்கெடுக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது. துரதிருஷ்ட வசமாக இந்த விதிமுறைப் பற்றிய விழிப்புணர்வு வாக்காளர்களிடையே மிகக் குறைவாகவே உள்ளது. இந்த நடைமுறையின் படி, வாக்காளர் தம்முடைய அடையாள அட்டையை உறுதி செய்துகொண்ட பின்னர் வாக்களிக்க செல்வதற்கு முன், தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாம் 49 ஓ விதிப்படி எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறவேண்டும். அதன் அடிப்படையில் தேர்தல் நடத்தும் அதிகாரி, இதற்கென தரப்பட்டுள்ள 17 A படிவத்தில் வாக்காளர் பெயர், முகவரி எழுதி வாக்காளருடைய கையொப்பம் அல்லது இடதுகை பெருவிரல் அச்சினை பெற்றுக்கொள்வார். இந்த முறையில், வாக்காளரானவர் தேர்தலில் பங்கெடுத்தது உறுதிசெய்யப்படும் அதே நேரத்தில் வாக்காளரின் விருப்பப்படி அவரது ஓட்டு எந்த வேட்பாளருக்கும் கிடைக்கப்படமாட்டது.

எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்த வேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது. ஒருவேளை ஒரு குறிப்பிட்ட தொகுதியில் பதிவாகும் மொத்த ஓட்டுகளில் அதிகபட்ச ஓட்டுகள் 49ஓவின் கீழ் பதிவுசெய்யப்பட்டிருந்தால் அந்த தொகுதிக்கு மறு தேர்தல் நிகழ்த்தவும் வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், அரசியல் சட்டப்படி நாம் தெரிவிக்கும் வாக்கு ரகசியமானது, யாருக்கும் தெரியவராது என்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக 49 ஓவை ரகசியமாகப் பதிவு செய்யமுடியாமல் பொதுவில் தெரிவிக்கும் வகையில் வைத்திருப்பது வாக்காளருக்கு அளிக்கப்பட்டுள்ள இரகசியத்தன்மையையே கேலிக்குறியதாக ஆக்கிவிடுகிறது. அடிப்படையில் இந்த முறையானது சட்டப்படி தவறாகும். இதையும் ரகசிய வாக்காக அளிக்கும் விதத்தில் மின் வாக்கு இயந்திரத்தில் 49 ஓவுக்கு ஒரு தனி பொத்தானை வரும் தமிழக சட்ட மன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி வாக்காளர்களின் நம்பகத்தன்மையையும் மக்களாட்சியின் உண்மையான மாண்பையும் உறுதிசெய்ய வேண்டும்.

தன்னார்வ அமைப்புகள், இணையதள பதிவர்கள், ஊடகங்கள் இது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவேண்டும். மின் வாக்கு எந்திரத்திலேயே 49 ஓவுக்கான பொத்தானை வைக்க வலியுருத்தும் அதே நேரத்தில், சுவரொட்டிகள் மூலமாகவும் விழிப்புணர்வு முகாம்கள் மூலமாகவும் மக்களிடையே இது போன்ற வாய்ப்பிருப்பது பிரபலப்படுத்தவேண்டும். அப்போது தான் ‘இனி நேர்மையான அரசியல், நல்ல வேட்பாளர்கள் இல்லாவிட்டால் மக்கள் ஆதரவு கிடைக்காது’ என்ற செய்தி அரசியல்வாதிகளின் பொட்டில் உறைக்கும். பூனைக்கு கட்டவேண்டிய மணி நம் கையில் உள்ளது. எப்போது கட்ட ஆரம்பிப்போம்?

குறிப்பு: பதிவர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் இந்த 49 O விதிமுறைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துங்களேன்.

16 thoughts on “ஓ போடு…

 1. பொதுவாக 49 O படிவம் பல சாவடிகளில் கிடைப்பதில்லை. 49 O வோட்டிங் மெஷினில் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் பலன் அளிக்கும். மேலும் நாம் சென்ற பிறகு அதை கிழித்து போட்டு விட்டு நம் பெயரில் கள்ள வோட்டு போடமாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? {நான் நம்புவதாய் இல்லை} அதனால் ஒரு நல்ல சுயேட்சை வேட்பாளர் இருந்தால் அவருக்கு வோட்டு போடுதல் மிகவும் சிறந்தது. இது தவறும் அல்ல.

  1. நன்றி ராம். ஆனால், நீங்கள் நினைப்பதைப்போல 49 ஓ என்பது தனிப்படிவம் கிடையாது. அது ஒரு பதிவேடு. அதில் உங்கள் பெயரைப் பதிவு செய்து அதற்கு நேராக கையொப்பமிட்டுவிட்டாலே போதும். அதிகாரப்பூர்வமாக நீங்கள் வாக்கெடுப்பில் பங்கெடுப்பததாக பதிவாகும். அதைக் கிழிக்கவோ, உங்கள் பெயரில் கள்ளஓட்டுப் போடவோ நிச்சயம் வாய்ப்பில்லை. மற்றபடி, நீங்கள் சொல்வது போல ஆகச்சிறந்த முறை 49ஓ வானது வாக்களிக்கும் இயந்திரத்திலேயே இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக்கருத்துமில்லை. அதே போல், உங்கள் தொகுதியில் உண்மையிலேயே நல்ல வேட்பாளர் நின்றால் (கட்சி சார்பானவராக இருந்தலும்) அவருக்கு வாக்களிப்பது நல்ல விஷயம் தான்.

 2. பதிவர்கள் தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தைப்பற்றியும் இந்த 49 O விதிமுறைப் பற்றியும் ஒரு பதிவாவது எழுதி, ஜனநாயகத்தை வலுப்படுத்துங்களேன்.//

  இத்தனை விவரமா எழுத தெரியாதே..அவ்வ்வ்.

  இதையே பகிரலாமா.?

  1. எனக்கும் இது பத்தி தெரியாது தான். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா அறிஞ்சவங்க தெரிஞ்சவங்க கிட்ட விசாரிச்சு எழுதியிருக்கேன். இதையே பகிர்ந்துகொண்டாலும் எனக்கு மகிழ்ச்சி தான். (ஆனா, உங்களைப் போன்ற பதிவர்கள் என்னுடைய பதிவின் உள்ளடக்கத்தை இன்னும் மேம்படுத்தி எழுதும் போது எனக்கும் அது பயன்விளைவிக்கும் இல்லையா?) நன்றி சாந்தி.

 3. பின்னுட்டத்துக்கு நன்றி ரமேஷ். உண்மையில் 49 ஓ என்பது படிவம் கிடையாது. அது ஒரு பதிவேடு. அந்த பதிவேட்டில் உங்கள் பெயரை எழுதி கையொப்பமிட்டாலே போதும். (நீங்க சொல்றதைப் போல நிறைய பூத் அலுவலர்களுக்கே 49 ஓ பற்றிய தெளிவு இருப்பதில்லை. அது தான் பிரச்சனையே.) ஆனால், வாக்காளர் 49ஓவின் கீழ் பதிவு செய்யவேண்டும் என்று உறுதியாக இருந்தால், அன்றைக்கு நீங்க தான் உண்மையான ஹீரோ!

 4. நன்றி ஜானகிராமன். அது ஒரு பதிவேடு என்று இப்பொழுது தான் தெரியும். (நாளிதழில் அது ‘படிவம்’ என்று படித்த நியாபகம், சரியாக தெரியவில்லை) இது வரை உபயோகித்ததும் இல்லை.

  1. 🙂 நன்றி. வரும் தேர்தலில் நாம் பயன்படுத்த வேண்டும். நடுநிலை ஓட்டினை மின்-வாக்கியந்திரத்திலேயே வைக்காததற்கு அரசு சொல்லும் முக்கிய காரணங்களில் ஒன்று, “இப்போது இருக்கும் வாய்ப்பையே (49 ஓ) மக்கள் பயன்படுத்துவது இல்லை. அதனால் நடுநிலை வாக்களிப்பு முறை தேவையற்றது” என்பதாகும்.

 5. நண்பருக்கு…

  ஆண்டிபட்டியில் நடைபெற்ற ஒரு முக்கியமான இடைத் தேர்தலில் (எது என்று நீங்கள் புரிந்திருப்பீர்கள்) 49 ஓ வை பயன்படுத்தினேன். நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே 49 ஓ வைப் பயன்படுத்த முடிந்தது. ஒரு பதினைந்து நிமிடம் அலுவலர்கள் என்னோடு… ஆனால், ஒரு நேர்மை என்னை வியப்பில் ஆழ்த்தியது… எங்கள் ஊரைச் சார்ந்த எந்த ஒரு வாக்குச்வாவடி முகவரும் என்னிடம் எனது செயலில் இருந்து பின்வாங்கச் சொல்லவில்லை…

  அடுத்த முறை நடைபெற்ற ஊராட்சி மன்ற தேர்தலுக்குச் சென்றேன். இப்பயும் ஜனாதிபதிக்கு ஓட்டுப்போட போறியா? என்ற கேள்வி என் மீது விழுந்தது. அப்போதுதான் நீங்கள் கட்டுரையின் இறுதியில் சொன்ன ரகசியம் காக்கப்படவில்லை என்பது புரிந்தது.
  நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்கு வாக்குக்கிற்கு பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், என்னுடைய வாக்கிற்கு பணம் கொடுக்க யாரும் முன்வரவில்லையாம்… மாப்ள ஓட்டுப்போட மாட்டார்.

  ஒரு 49 ஓ என்னைப்பற்றி எதையோ பதிவு செய்துள்ளது. அது மட்டுமில்லை மக்கள் 49 ஓவை ஜனாதிபதி ஓட்டு என்று சொல்ல வைத்தது. ஜனாதிபதி செல்லக்காசு என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது பாரு்ங்கள்…

  1. மனமார்ந்த பாராட்டுக்கள் கண்ணன். உங்கள் பகுதியைப் பொருத்தவரை, நீங்கள் மிகச்சிறந்த முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அடுத்து, உங்கள் வீட்டார், நண்பர்களை 49 ஓ வுக்கு மாற்றுங்கள் (அவர்களின் விருப்பத்துடன்). இது அற்புதமான சமூகப்பணி. இதனை அற்ப பணக்காரணங்களுடன் தொடர்பு படுத்தவேண்டாம். 1000 மைல் மாரத்தான் ஓட்டம் கூட முதல் அடியில் இருந்து தான் ஆரம்பிக்கிறது. தயவுசெய்து ஊர் கிண்டலடிப்பதைப் பற்றி பெருசாக எடுத்துக்கொள்ளவேண்டாம்.

 6. நண்பரே… வர வர இந்திய பாரளுமன்ற ஜனநாயகத்தின் மீது நம்மிக்கை குறைந்து வருகிறது. ஒரு கூட்டத் தொடரே முடிந்த பின் கூட்டுக்குழுவிற்கு இசைந்துள்ளனர். இதை முன்னமேயே செய்திருக்கலாமே? அப்போ இல்லாத நியாயம் இப்ப மட்டும் எப்படி கிடைத்தது? நம்ம நாட்டுக்கு… 49 வை விட 47 சிறந்தது.

  1. ஏன் இந்த கொல வெறி? அதிகார, லஞ்சபணத்தைப் பிரிக்கும் சண்டையில அவங்களே அவங்களை அடிச்சுச் செத்துடுவாய்ங்க… நாம நல்லதை மட்டும் செய்வோம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s