பசியுடனிரு, முட்டாளாயிரு…


சென்ற மாதம், கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் என்னுடைய வண்டிக்காக காத்துக்கொண்டிருந்தேன். அரைமணிநேரம் ஆகியும் வண்டி வரவில்லை. டீ குடிக்க பர்சை துழாவியபோது, ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டு மட்டும் இருந்தது. சில்லரையில்லாமல் நம்ம ஊர் பஸ்ஸில் ஏறினால், கண்டக்டர், ஏதோ நாம் சில்லரையில்லாமல் பயணம் செய்யவே நேர்ந்து விட்டு வருவதைப்போல, இளக்காரமாக ஒரு பார்வை பார்த்து டிக்கட்டின் பின்புறம் 500/1 என்று எழுதிக் கொடுத்துவிட்டு காணாமல் போய்விடுவார்.

நாம் இறங்கவேண்டிய இடம் வரும்வரை மறக்காமல் அவரை அப்பப்ப பார்த்துக்கொண்டு, மிச்சப் பணத்தை ஞாபகம் வைத்துக்கொண்டு, சில்லரைக்காக அவருடைய கருணையை எதிர்பார்த்து காத்துக்கிடக்கவேண்டும். எனக்கும் வண்டியோட வாஸ்துவுக்கும் எப்பவுமே ஏழாம் பொருத்தம் என்பதால், இது போன்ற ரிஸ்க் எடுக்கவிரும்பவில்லை. பஸ் ஸ்டாண்டில் இருக்கும் ஒரே ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம் என்று போனால், அங்கு ஏற்கனவே ஐந்தாறு பேர் காத்துக்கொண்டிருந்தனர்.

ஏடிஎம்முக்காக வரிசையில் நின்று, பஸ்ஸை தவறவிடவும் விரும்பவில்லை. அதனால் 500 ரூபாய் நோட்டை மாற்ற, அடுத்த பிளாட்பார்மில் இருந்த புத்தகக்கடைக்கு சென்றேன். திருப்பதிக்கான பஸ்கள் நிற்கும் பிளாட்பார்மில் நல்ல புத்தகக் கடை இருந்தது. நிறைய புத்தகங்கள் பார்வைக்கு இருந்தன. அப்போது எனக்கு புத்தகம் வாங்கும் மூட் இல்லையென்றாலும், 100 ரூபாய்க்கு குறையாமல் புத்தகம் வாங்கினால் தான் அந்த கடைகாரர் சில்லரை தரும் வாய்ப்பு இருப்பதால், 100லிருந்து 200க்குள் விலையுள்ள புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். அப்போது தான் ஆனந்த விகனுடைய பிரசுரத்தில் வெளிவந்த முயற்சி திருவினையாக்கும் என்ற புத்தகத்தை பார்த்தேன். மிக நேர்த்தியான அட்டைப்படம், 500 பக்க கனமான புத்தகம். மிக முக்கியமாக, அதன் மூலவெளியீடு ஐஐஎம் நிறுவனம் என்று பார்த்த போது உடனே எடுத்துவிட்டேன். விலையைப் பார்த்தவுடன் என்னால் நம்பமுடியவில்லை. எப்படியும் 400ரூபாய் இருக்கும் என்று நினைத்த எனக்கு வெறும் 175 ரூபாயை பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது. பிறகு ஐஐஎம் சப்ஸிடைஸ் செய்திருக்கிறது என்று தெரிந்துகொண்டேன்.

சில்லரையை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் அமர்ந்த பின் உள்ளடக்கத்தை புரட்ட ஆரம்பித்தேன். பொதுவாக பஸ் பயணங்களின் போது படிப்பதை தவிர்த்துவருகிறேன். புத்தகத்தில் ஆழ்ந்திருக்கும் போது, சூழலை கவனிக்கவும் புரிந்துகொள்ளவும் கிடைக்கும் வாய்ப்பை நாம் தவறவிடுகிறோம். மேலும், பஸ்ஸினுடைய சீரற்றப் பயணத்துக்கிடையே படிப்பது கண்ணை சீக்கிரம் அயர்ச்சியடையச் செய்கிறது. ஆனால், இந்த முறை என்னுடைய ஆர்வத்தை அடக்கமுடியாமல் உள்ளடக்கத்தையும், முன்னுரையையும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் முன்னுரையே, இது சாதாரண புத்தகமல்ல என்று சொல்லிவிட்டது.

ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் படித்து முடிக்கும் முன்பே வந்து குவியும் பிளேஸ்மென்ட்களையும், ஆறு இலக்க சம்பளங்களையும் உதறித்தள்ளி, தம்முடைய உள்ளுணர்வு சொல்லியபடி கரடுமுரடான சுயதொழிலைத் தேர்ந்தெடுத்து வெற்றிகரமாக இயங்கிவரும் 25 பேருடைய வாழ்க்கைக் கதைகள். இந்த 25 பேருக்கும் எடுத்த உடன் வெற்றி கிடைத்துவிடவில்லை. வேதனை, போராட்டம், விரக்தி என்று பல துயர நிகழ்வுகளிடையே சிறு கீற்றாய் அவர்களை வழிநடத்திய நம்பிக்கை ஒரு அற்புதத் தருணத்தில் அவர்களுக்கு கை கொடுத்துள்ளது.

இவர்கள் வயதால் வேறுபட்டவர்கள், பிறந்து வளர்ந்த சூழலில் வேறுபட்டவர்கள், குடும்ப பொருளாதார நிலையில் வேறுபட்டவர்கள், அவர்களுடைய துறைகளும் வெவ்வேறு. ஆனால் அவர்களிடம் இருந்த பொதுவான விஷயம், அவர்கள் தங்களுடைய கனவுகளை பின்பற்றினார்கள். எதாவது ஒரு நிறுவனத்தில் கிடைத்த வேலையை எடுத்துக்கொண்டு, சோப்பு விற்பதையோ, சாயம் கலந்த குளிர்பானத்தை விற்பதையோ, முகம் தெரியாத கஸ்டமர்களுக்காக பொட்டித் தட்டுவதையோ விட, தங்களுடைய உள்ளுணர்வின் குரலை காது கொடுத்துக் கேட்டவர்கள். அதற்காக வாழ்க்கையை பணயம் வைத்தவர்கள்.

இப்போது பிரபலமாக விளங்கும் நௌக்ரி.காம் சஞ்சிவ் பிக்சாண்டனி, சுபிக்ஷா ஆர்.சுப்பிரமணியன், எஜிகேம்ப் ஷாந்தனு, ரேணுகா சுகர்ஸ் நரேந்திரா, ஏகலைவா ஃபவுண்டேஷன் சுனில் ஹண்டா, ஆர்சிட் பார்மா ராகவேந்திர ராவ், கிவ் இந்தியா வெங்கட் கிருஷ்ணன், பேசிக்ஸ் விஜய் மகாஜன், சின்டெக்ஸ் டங்காயச் போன்றவர்களின் தொழில் சரிதத்தை படிக்கும் போது ஒன்றுமில்லாததில் இருந்து தொடங்கி பல மில்லியனுக்கு தம்முடைய நிறுவனங்களை கட்டமைத்த மேஜிக் வியக்கச்செய்கிறது. இதில் எனக்கு சுனில் ஹண்டாவுடைய கதையும் வெங்கட் கிருஷ்ணன் கதையும் ரொம்ப வியப்பு. இப்படியும் மனிதர்களா என்று ஆச்சரியப்பட்டு போனேன்.

உண்மையான கனவு என்பது நமது உறக்கத்தில் வருவதல்ல, எது நம்மை உறங்கவிடாமல் செய்கிறதோ அது என்பது புரிந்தது. 2005ம் ஆண்டு, ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வகுப்பில் தொடக்க உரை ஆற்றும் போது ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்ன அறிவுரை தான் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்”. இந்த புத்தகத்திலிருக்கும் அத்தனை தொழிலதிபர்களும் ஸ்டீவ் ஜாப்ஸ் சொன்னதையே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்துள்ளார்கள்.இவர்கள் அனைவரும் மற்றவர்கள் முட்டாள்தனம் என்று நினைத்த விஷயங்களை எடுத்துக்கொண்டவர்கள். இன்னும் விரிவாக அவற்றைச் செய்வதற்குறிய பசியுடன் இருந்தார்கள்.

இந்த புத்தகத்தின் மூல வடிவத்தை ஆங்கிலத்தில் எழுதிய ராஷ்மி பன்சாலும் ஒரு ஐஐஎம் அலும்னி, பத்திரிகையாளர். இளைஞர்களுக்கான இதழை நடத்தி வருகிறார். அவருடைய எழுத்து நடையும், பிரசன்டேஷனும் குறிப்பிட்ட நபருக்கு பக்கத்தில் நாம் உட்கார்ந்து டீ அருந்திக்கொண்டே பேசிச் செல்வது போல் அவ்வளவு அன்யோன்யமாக இருக்கிறது. படிக்க ஆரம்பித்தால் கீழே வைப்பதற்கு தோன்றவில்லை. பிறகு இதன் ஆங்கில வடிவத்தையும் இணையதளத்தில் எடுத்துப் படித்தேன். ஆங்கில நடையும் மிக எளிமையாக சரலமாக இருந்து நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது. தமிழில் ரவிபிரகாஷ் மொழிபெயர்த்திருக்கிறார். அற்புதமான ஆகச்சிறந்த மொழி பெயர்ப்பு. மனுஷன், ஆங்கில மூலவடிவத்தின் ஜீவனை அப்படியே தமிழுக்கு கொண்டுவந்திருக்கிறார். ஆனால் தமிழ் வடிவத்தில் வைத்திருக்கும் முயற்சி திருவினையாக்கும் என்ற தலைப்பு ரொம்ப கன்வன்ஷனலாக இருக்கிறது. படித்தவும் பற்றவைக்கவில்லை. ஆங்கிலத்தின் “ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்” என்ற தலைப்பு சொல்லும் செய்தியை தமிழ் தலைப்பு சொல்ல மறந்துவிட்டது. ஆ.விகடன் எப்படி இதை அனுமதித்தது என்பது வியப்பு. இருந்தாலும் உள்ளடக்கத்தில் தமிழ் பதிப்பு மிகச்சிறந்ததாகவே வெளிவந்திருக்கிறது.

இந்த 25 பேரைப்போல இன்னும் பலர் இன்னமும் வெளியே தம்முடைய கனவை துரத்திக்கொண்டிருக்கிறார்கள். தம்முடைய நம்பிக்கையுடன் போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த புத்தகம் நம்பிக்கையளிக்கும். சக்தியையும் புத்துணர்ச்சியையும் புதுப்பிக்கும். இந்த புத்தகத்தை ஒரே ஸ்டெட்சில் படித்து முடித்தபோது என்னுடைய பசி மற்றும் அறியாமையின் கணத்தை உணர்ந்தேன். நீங்களும் படிக்கும் போது உணரக்கூடும்.

வால்:இந்த புத்தகத்தின் ஆங்கில மொழியின் மென்நகலை வேண்டுவோர் http://ciieindia.org/programmes/stay-hungry-stay-foolish என்ற இணையதளத்துக்கு சென்று உங்களைப் பற்றிய அடிப்படை விவரங்களை கொடுத்துவிட்டு தரவிரக்கிக்கொள்ளலாம்.

10 thoughts on “பசியுடனிரு, முட்டாளாயிரு…

 1. இது ஒரு பழைய புத்தகம், இருந்தாலும் பகிர்ந்தமைக்கு நன்றிகள். அதில் பெரும்பான்மையான ஆண்களுக்கு மனைவி சம்பளம் பெறுபவராக இருந்து உள்ளனர். எனவே சுய தொழில் தொடங்கிய ஆரம்ப நாட்களில் மனைவியின் சம்பளம் உதவியாக இருந்தது.
  இன்றைய கால கட்டத்தில் நாம் சுய தொழில் தொடங்க இருக்கும் நண்பர்களை+நண்பிகளை ஊக்குவிப்போம் .

 2. உண்மையான கனவு என்பது நமது உறக்கத்தில் வருவதல்ல, எது நம்மை உறங்கவிடாமல் செய்கிறதோ அது என்பது புரிந்தது

  ———–

  நல்லதொரு விமர்சனம்..படிக்கும் ஆவலை தூண்டுவதாய்

 3. தகவலுக்கு மிக்க நன்றி சார்….. எமது அலுவலகத்தில் எனது தனிமை கொடுமையாக…….. இல்ல!! இல்ல!!!! மிகவும் கொடுமையாக உள்ளது….இந்த தகவலை பதிவு செய்த நேரம் இரவு 11.30. தனியாக இருப்பது கடினமா இருக்கு….. இதனை போக்க நானே பல இடங்களில் நல்ல புத்தகங்களை தேடினேன்…..உங்களிடமே நல்ல புத்தகத்தை கேட்டு அதனை வாங்கி படிக்கலாம் என்றிருந்தேன்….. ஆனால் தங்களது இந்த செய்தி எனக்காகவே அனுப்பீங்க போலிருக்கு……… படித்துவிட்டு எனது கருத்துக்களை பதிவு செய்கிறேன்……….

  1. உண்மை தான் ராஜா. தனிமையை நம்மால் எப்போதும் எதிர்கொள்ளமுடிவதில்லை. எப்போதும் நம்முடைய நேரத்தை உறவினர்களுடன், நண்பர்களுடன், எதுவும் இல்லையென்றால் சினிமா, டீவி, ஷாப்பிங், சும்மா ஊர் சுற்றிப்பார்ப்பது, இண்டர்நெட் என நம்மை நாம் எதிலாவது எங்கேஜ் செய்துகொண்டே இருப்போம். இவை எதுவுமில்லாமல் தனிமையுடன் இருக்கும் நிகழ்வுகளை நாம் சந்திக்கவிரும்புவதே கிடையாது. மனிதனுக்கு தனிமை ஒருவித பயஉணர்வாகவே இருந்து வருகிறது. அதிலும் சீத்தஞ்சேரி போன்ற, பொழுதுபோக்குக்கு பெரிய வாய்ப்புகள் இல்லாத சின்ன கிராமத்தில் காலத்தை கழிப்பது கடினமான விஷயம் தான். ஆனால், தனிமை நம்முடைய மனஉறுதியையும், நம்மைப்பற்றி கொஞ்சம் உள்நோக்கிப் பார்க்கும் வாய்ப்பையும் தருகிறது. தனிமையை பயனுள்ளதாக ஆக்க, புத்தகங்கள் மிகச்சிறந்த நண்பன். தொலைகாட்சி, சினிமாவை விட புத்தகம் நமக்கு ரொம்ப நெருக்கமான தோழனாக இருக்கும். புத்தகம் தரும் கற்பனையும், புதிய விஷயம் பற்றிய புரிதலும் பெரிய சக்தியாக விளங்கும். நான் வேலைக்கு சேர்ந்த புதிதில், 3 வருடங்கள் வத்தலகுண்டில் இது போல தனிமையில் தான் இருந்தேன். அப்போது எனக்கு புத்தகமும் இணையதளமும் மிகப் பெரிய நண்பனாக இருந்தது. அதன் மூலம் நான் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன். அடுத்த முறை நாம் சந்திக்கும் போது என்னிடமிருக்கும் சில புத்தகங்களைத் தருகிறேன். நன்றி.

 4. புத்தகத்தை படிக்க வேண்டும் என்று ஆவல் எழுந்துள்ளது…
  எழுத்தாளர்களை உயர்த்திப் பேசுவதில் தங்களுக்கு நிகர் தாங்களே!…..

  நன்றி

  1. நன்றி கண்ணன். உண்மையில் அந்த புத்தகம் நான் சமீபத்தில் படித்த நல்ல புத்தகங்களில் ஒன்று. அதிலுள்ள சில நபர்களின் வெற்றிக்கதைகளை (விஜய் மகாஜன், சுனில் ஹண்டா, வெங்கட்) நீங்கள் நடத்தும் பயிற்சிகளில் பங்கேற்பாளர்களுக்கு நிகழ்வாய்வாக தரலாம். சிறப்பான ஒன்று.

 5. இவர்களைப்போலவே சமீபத்தில் சென்னையைச் சேர்ந்த IIMல் படித்த பையன் அவங்க அம்மா இட்லிக்கடை நடத்தி படிக்க வைத்தார்கள். இவன் படித்து முடித்ததும் நிறைய கம்பெனிகள் நல்ல சம்பளத்தில் வேலை தந்தன. ஆனால் இவர் தன் அம்மாவின் வேலையையே செய்யப்போவதாக அறிவித்தார். பிறகு அதே போல் செயின் ஆப் ஹோட்டல் தொடங்கினார். ஆரம்பத்தில் நிறைய நஷ்டமாகி கஷ்டப்பட்டு பிறகு பிக்கப் ஆகி இப்போது நன்றாக இருக்கிறார். சென்னையில் எம்பி எலக்ஷனில் கூட நின்றார். எங்கள் தொகுதியில் நின்றிருந்தால் நாங்கள் அவருக்கு ஓட்டு போட்டிருப்போம்.

  1. ஆமாம் ஜெயந்தி. அதை நானும் அவரைப் பற்றி கேள்விபட்டிருக்கேன். சரத்பாபு ஏழுமலை. அவங்க அம்மா, மதிய உணவு திட்டத்தில் வேலை செய்தவங்க. அந்த தாக்கம் அவருக்கு ஏற்பட்டு நல்ல முறையில் இப்ப நடத்திட்டு வருகிறார். அவர் தேர்தலில் நின்றது பற்றிய தகவல் எனக்கு புதியது. நன்றி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s