வலசை போதல்


வடபழனி வசந்தபவனில் நேற்றிரவு உணவு சாப்பிட்டு விட்டு காபியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது நான் சாப்பிட்டத் தட்டை எடுக்க தயக்கத்துடன் நின்றுகொண்டிருந்த கிளீனர் சிறுவனைப் பார்த்தபோது வித்தியாசமாகப் பட்டது. அவன் வடகிழக்கு மாநிலத்திலிருந்து வந்திருப்பான் போல. சுற்றுமுற்றும் பார்த்த போது அவன் வயதை ஒத்த பல சிறுவர்கள் அங்கு பணியிலிருந்தார்கள். இதே போல் வடகிழக்கு மாநிலச் சிறுவர்களை மதுரை, விழுப்புரம், ராமநாதபுரம் என்று பல இடங்களில் குறிப்பாக உணவகங்களில் சமீபத்தில் பார்த்து வருகிறேன். ஆச்சரியமாக இருந்தது. பிழைப்புக்காக நமது தமிழர் புலம் பெயர்வது குறைந்து வேற்று மாநிலத்தவர்கள் நம்மாநிலத்தில் வரும் அளவுக்கு முன்னேறிவிட்டோமா என கேட்டுக்கொண்டேன்.

நண்பரிடம் இதுபற்றி பேசிக்கொண்டிருந்தபோது தமிழ்நாட்டில் வடகிழக்கு மாநிலத்தவர் ஆயிரக்கணக்கில் பிழைப்புக்காக வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார். வாழ்வாதாரத்துக்காக சொந்த ஊர் விட்டு சொற்ப வருமானத்தில் முகமறியாத மொழி, கலாச்சாரம் மாறான இடத்திற்கு இடம்பெயர்வது வலிநிறைந்தது.

சிறுவயதில் எங்கள் வீட்டுப்பக்கம் அவ்வப்போது வந்து போகும் கூர்க்கர் இன இரவுக்காவலாளி என்னுடைய ஆச்சரியம். அவரது வித்தியாசமான முகஅமைப்பு,காக்கிச்சட்டை, கையில் வைத்திருக்கும் பெரிய தடி, இடுப்புக்கத்தி, கழுத்தில் தொங்கும் விசில் எல்லாம் எங்களுடைய பள்ளிகால பேச்சுக்கான கருப்பொருட்கள். கூர்க்கா யாரையாவது கத்தியால குத்தினா அவனை போலிஸ் கூட கேள்வி கேட்கமுடியாது. நைட்ல பேய்களிடமிருந்து காத்துக்கொள்ள அவன் கழுத்தில் மந்திரித்த தாயத்து இருக்கும் என்றெல்லாம் அவரைப்பற்றி எங்கள் கற்பனைகள் இட்டுக்கட்டிக்கொள்ளும்.

மாதந்தோறும் ஒரு வீடு தரும் வெறும் 5 ரூபாய்க்காக எல்லா இரவுகளிலும் உறக்கத்தைத் தொலைத்த அவர்களின் வாழ்க்கை என்னைச் சலனப்படுத்தும். சில வீடுகளில் இரவு நேர விசில் சத்தம் அவர்களுக்கு கேட்கவில்லை என்று கூறி மாதச்சந்தாவை மறுப்பார்கள். இவர்கள் அரைகுறைத் தமிழில் பேசி அவர் பக்க நியாயத்தை சொல்லித் தோற்று முகம் வாடி போவதை அடிக்கடி சந்தித்திருக்கிறேன். பிறகு ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் மாலை நேரத்தில் வழியில் அவரை சந்தித்தபோது டீ சாப்பிடுவோம் வாங்க என்று கேட்டபோது அவர் மகிழ்ந்து போனர். நான் எங்கிருப்பதாக விசாரித்தார். என் வீடு சொன்னபிறகு என்னை அடையாளம் கண்டுகொண்டார். யாருமே இதுவரை அவருக்கு டீ வாங்கித்தந்ததில்லை என்று சொல்லிக்கொண்டார். பிறகு அவ்வப்போது சந்திப்போம். ஒரு சகோதரனின் வாஞ்சையுடன் வணக்கம் சொல்வார். இப்போது அவரைப் பற்றிய தகவல் தெரியாமல் போனது.

பொருளாதார வாய்ப்புகளின் ஈர்ப்புக் காரணமாக நமது தகவல் தொழில்நுட்ப துறையினர் வேறிடம் புலம் பெயர்வதைவிட இருக்கின்ற இடத்தில் வாழ்வதற்கான வழிகள் இல்லாமல் வேறிடம் நோக்கித் துரத்தப்படும் அவலம் கொடுமையானது. ஈசிஆர் சாலைகளில் வண்டிகளில் பறக்கும் போது, அதில் முகமறியாத ஆயிரக்கணக்கான ஆந்திர தொழிலாளர்களின் இடபெயர்ந்த வாழ்க்கையும் கரைந்துள்ளதை உணரமுடிகிறது.  தென்மாவட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் திருப்பூரிலும் அதைச்சுற்றியுள்ள டெக்ஸ்டைல் நகரங்களிலும் பிழைப்புக்காக வாழ்ந்து திருவிழா காலங்களில் சொந்த ஊர் நோக்கி மிகக்கொடுமையான நெரிசல் மிகுந்த பயணங்களை மேற்கொள்ளும் போது அவர்களின் சொந்த ஊர் மண்ணே அது போன்ற எதிர்பாரா பயணங்களுக்கான சக்தியை கொடுக்கிறது. 

எனக்கெல்லாம் 3 நாள் ஊர் தாண்டி இருந்தால் நிலைப்புக்கொள்ளாது. எஸ்.ராமகிருஷ்ணன் சொல்வது போல், நாம் வழக்கமாக படுக்கும் தலையணை இல்லையென்றால் கூட உறக்கம் புரண்டுபோய்விடுகிறது. வாழ்க்கையை உற்சாகமாய் எதிர்கொள்ளும் பதிண்பருவத்தில்,  குடும்ப தேவைகளுக்காக தெரியாத ஊரில் வாழவிதிக்கபட்டவர்களை எப்போதாவது நாம் சந்திக்க நேர்ந்தால் சிறு புன்சிரிப்பு, சின்ன விசாரிப்பு முடிந்தால் உதவி செய்லாமே. அவர்களை நோக்கிய அக்கரையான சிறு செயலும் அவர்களுக்குள் பெரிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் கொடுக்குமல்லவா…

Advertisements
Comments
15 Responses to “வலசை போதல்”
 1. வடகரைவேலன் சொல்கிறார்:

  பிகார் மானிலத்தவர் அதிகமாக இங்கு(கோவை) வந்து தொழில் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் 5 வருடத்தில் நமது இளஞர்கள் வேலயற்றவர்களாகவும் நமது வேலைகளை அவர்கள் பற்றித்துக் கொண்டவர்களாகவும் ஒரு நிலை வரப் போகிறது. யாரும் விழித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.

  மேன் பவர் ஏஜெண்டுகளும் மொத்தமாக பிகாரிகள் வேண்டுமா எனத்தான் முதலில் கேட்கிறார்கள். அவர்கள் தேவை குறைவு. பாத்ரூம் வசதி இல்லையென்றால்கூட பரவாயில்லை ஒரு கூரை வேய்ந்த கட்டிடம் இருந்தால் போதும் தங்கிக் கொள்கிறார்கள். உணவுத் தேவையும் குறைவு இரண்டு சப்பாத்தியும் ஒரு பெரிய வெங்காயமும் போதும். அதிக நாட்கள் விடுமுறை எடுப்பதில்லை. நேரத்திற்கு வருகிறார்கள். தேவை இல்லாத அரட்டை அடிப்பதில்லை. முக்கியமாக எந்த தொழிற்சங்கத்திலும் உறுப்பினராக அவர்கள் சேர்வதில்லை.

  ஆகவே முதலாளிகள் இவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். மலயாளத்தானுக என எழுதுவதைப் போல சீக்கிரம் பீகாரிக்காரனுக என நாம் பதிவுகள் எழுதும் நாள் வெகு தொலைவில் இல்லை.

  கண்ணுக்கும் நடப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே தமிழனின் கல்யாண குணம்.

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   வருகைக்கும் பகர்வுக்கும் மிக்க நன்றி வேலன் சார். உங்களுடைய கருத்து அர்த்தம் பொதிந்தது. ஒரு மனிதன் தன்னுடைய அடிப்படை தேவைகளின் சிரமங்களைக் கூட பொருத்துக்கொண்டு உலகின் கூரையின் கீழ் எதாவது ஒரு வேலை கிடைத்தால் போதும் என்றென்னும் மனநிலை நமது சமூக அமைப்புக்குக் கிடைத்தத் தோல்வி. பீகார் காரராக இருந்தாலும் அவரும் மனிதர் தானே. அவரது மண்ணில் அவருக்கு வாழ்வதற்கான வழி கிடைக்காததால் இங்கு வந்து பிழைக்கிறார். வறுமை நம் முதலாளிகளுக்கு தேவையானதாக இருக்கிறது. அது இருந்தால் தான் சீப் லேபர் கிடைப்பார்கள். யாராக இருந்தாலும் கண்ணியமான சம்பளம், சமமான மதிப்பு எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை.

   //கண்ணுக்கும் நடப்பதைப் பற்றிக் கவலைப்படாமல், தும்பை விட்டு வாலைப் பிடிப்பதே தமிழனின் கல்யாண குணம்//
   உடன்படுகிறேன்.

 2. Raj சொல்கிறார்:

  மனதின் எண்ணங்களை வெளிபடுத்தியது மிகவும் அருமை, என் மனம் பின்னோக்கி ஒரு பயணம் சென்று வந்தது போல் இருந்தது….. வரவேற்கிறேன் ….

 3. மஞ்சூர் ராசா சொல்கிறார்:

  சிறு வயதில் ஊரைவிட்டு முப்பது வருடங்கள் ஆகியும் ஊர் திரும்பாமல் இருக்கும் என்னை போன்றவர்களின் ஏக்கம் கொடியதே….

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   பிறந்த மண்ணை மறக்க முடியாதுங்க ராசா சார். சின்ன வயசில் நாம் தெரிந்தோ தெரியாமலோ நம் பிறந்த மண்னை எடுத்துத் தின்று இருப்போம். அதன் சுவை நாம் சாகும் வரை நமது பூர்வீகத்தை நமக்கு ஞாபகப்படுத்திக்கொண்டுதானிருக்கும். இல்லையா

 4. Mohan Kumar சொல்கிறார்:

  Very good post; thanks

 5. Amina சொல்கிறார்:

  பல பேர் இப்படி பிழைப்பு தேடி போக வேண்டிய நிலை தானே உள்ளது. நான் கூட காரைக்காலை விட்டு மதுரைக்கு பிழைக்க வந்தேன். மறுபடியும் காரைக்கால் போகனும்னு தான் நினைக்கிறேன், கணவர், பிள்ளை ஆவலோடு இருக்கிறார்கள், வேலை மாற்றல் கிடைக்குமானு தான் தெரியல… இப்படி சூழ்நிலை கைதியாக மாட்டிக்கிறவங்க தான் அதிகம்னு நினைக்கிறேன். (எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும் – தமிழ் கற்றதில்லை, பேச மட்டும் தான் தெரியும்)

 6. c. kannan சொல்கிறார்:

  குடும்ப தேவைகளுக்காக தெரியாத ஊரில் வாழவிதிக்கபட்டவர்களை எப்போதாவது நாம் சந்திக்க நேர்ந்தால் சிறு புன்சிரிப்பு, சின்ன விசாரிப்பு இங்கு சின்ன திருத்தம் மேற்கொள்ள விரும்புகிறேன். முடிந்தால் ஊக்கமூட்டுவோம். நாம் உதவி செய்ய வேண்டாம். அவர்கள் மீது அக்கறை செலுத்துவோம், அவன் அடுத்த நிலைக்குச் செல்ல… நானும் புலம் பெயர்ந்தவன்.

 7. Radhika சொல்கிறார்:

  வணக்கம். சார்.

  தங்கள் எழுதிய இந்த கட்டுரை என்னை மிகையும் பதித்தது. நானும் பல வேலைகளில் கூர்கக வேரட்டிஎருக்கிறேன் எப்பொழுது நினைத்தாலும் அசிங்கமாக இருக்கிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: