ம.ம.உலகம்? 2


ஒருமுறை நாகர்கோவில் பக்கம் செல்லவேண்டியிருந்தது. வேலையை முடித்துக்கொண்டு திரும்பும்போது பஸ் நிலையம் பக்கத்தில் இருந்த ஒரு பழக்கடையை கவனித்தேன். விதவிதமான வாழைப்பழங்கள் மஞ்சள், பச்சை, சிவப்பு, குட்டை, நீளம் பல நிறங்களில் பல அளவுகளில் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டு ஆச்சரியமடைந்தேன். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சென்னைப் பக்கம் மஞ்சள், பச்சை வாழைகளை மட்டுமே பார்த்து வந்த எனக்கு மட்டி, மொந்தன், நாடன், நேந்திரம், செவ்வாழை என எட்டு வகைகளுக்கும் மேல் தனித்தன்மையுடன் நீளும் பலவகை வாழைப்பழங்கள் மகிழ்ச்சியைக் கொடுத்தன.

உலகில் பலவகை தாவரங்களும் விலங்குகளும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழ்வது அந்த இடத்தின் வளத்தையும் ஆரோக்கியத்தையும் குறிக்கும். ஐரோப்பிய கண்டத்தில் பல 100க்கணக்கான ஏக்கர்களுக்கு ஒரே விதமான பெரணி வகைத் தாவரங்கள் நீண்டிருக்கும். ஆனால் இந்தியாவின் பெரும்பான்மையான பகுதிகளில் பலவித தாவரங்களும் விலங்குகளும் ஒரு சேர இருப்பதைக் காணமுடியும். அந்த வகையில் பல உயிரினங்களின் வாழ்வாதாரமாக நமது தேசம் விளங்கி வருகிறது. கர்நாடகாவின் கொல்லேகால் பகுதியில் 7 வகை நிறங்களுடைய மக்காச்சோளங்களை அந்தப்பகுதி விவசாயிகள் காலங்காலமாக பயிரிட்டு வருகின்றனர். நமக்கெல்லாம் மஞ்சள் நிற மக்காச்சோளத்தைத் தவிர வேறு மக்காச்சோள வகைகளை பார்தத்தில்லை. பல வண்ண மக்காச்சோளங்கள் நாட்டில் மற்றபகுதிகளில் அழிந்த நிலையிலும் கொல்லேகால் பகுதி விவசாயிகள் பாதுகாத்து வருவது முக்கியமானது.

அதேபோல் மைசூர் பக்கத்தில் சையதுகான் என்னும் விவசாயி தனது சொந்த முயற்சியால் திப்புசுல்தான் அவரது தாத்தாவிற்கு வீரப்பரிசாக வழங்கிய தோட்டத்தில் அவர் தாத்தா வைத்த 120 வகை மாம்பழ மரங்களை காலங்காலமாக காப்பாற்றி வருகிறார். அதில் பாதிக்கும் மேற்பட்ட வகைகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. இதே போல சிறப்பு குணம் கொண்ட சில வகைப் பயிர்கள் கண்ணுக்கு முன்னே அழிந்து வருகின்றன. குரங்கு சம்பா என்ற நெற்பயிர் வெள்ளத்திலும் உயிர்பிடித்து வாழக்கூடியது. களர்பாலை என்ற மற்றொரு நெற்பயிர் உப்பு நிலத்திலும் வளர்ந்து பயன்தரக்கூடியது. பூசணிக்காயின் ஒரு வகையான வைத்தியக்குன்னம், செயல்படாத சிறுநீரகங்களையும் சீர்செய்யும் மகத்துவம் கொண்டது. அதே போல் கருங்குருவை அரிசி யானைக்கால் நோயை குணப்படுத்தும் சக்தி கொண்டது. இது போல் பல அரிய வகை மூலிகைகள், சிறப்பு குணம் கொண்ட தாவரங்கள் மனிதனின் பேராசையால் உலகை விட்டே அழிந்து வருகின்றன.

புதுடெல்லியிலுள்ள தேசிய மரபணு பாதுகாப்பு மையமானது 1 இலட்சத்துக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்வகைகளின் ஜீன்களை பாதுகாத்து வருகிறது. ஒரு தாவரத்தின் பல வகைகளை பாதுகாப்பது 4 காரணங்களுக்காக முக்கியமானதாக விளங்குகிறது.

  1. ஒவ்வொறு உயிரும் இந்த உலகில் வாழ சமஉரிமை கொண்டுள்ளது. அதனை தற்காலிக இலாபத்துக்காக மனித இனம் அழிப்பது பாவச்செயல்.
  2. பலவகை உயிரினங்கள் இருக்கும் போது மனிதனின் உணவுப் பாதுகாப்பு உறுகி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவிலும் அமெரிக்காவிலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் ஒரேவித பயிர் செய்த போது நோய் தாக்குதலினால் பெரும் பயிர்ச்சேதம் ஏற்பட்டு உணவுத் தட்டுப்பாடு உண்டானதை தவிர்க்க ஒரு குறிப்பிட்ட சூழலில் எல்லாவித பயிர்களையும் வளர்க்கலாம்.
  3. சரிவிகித உணவை மனிதனுக்குத் தர பலவித பயிர்களை பயிரிடுவதும் உண்பதும் அவசியம். இப்போதெல்லாம் நமது உணவு அரிசி, கோதுமை, உளுந்து என்ற அளவில் சுருங்கிவிட்டது. சாமை, சோளம், ராகி, கம்பு, வரகு போன்ற பலவித உணவு தானியங்களை இன்றைய தலைமுறை கண்ணால் கண்டது கூட கிடையாது. துரதிருஷ்டவசமாக கிராமங்களில் கூட மாற்று தானியப் பயிர்களை மக்கள் உண்பது குறைந்து வருகிறது. தமிழக அரசின் 1ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத்தை ஆரம்பித்த பிறகு மக்களின் சரிவிகித உணவு முறை தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு சர்வதேச ஆய்வில் இந்தியர்கள் ஒரே மாதிரியான உணவினை உட்கொள்வதால் அவர்களின் சராசரி உயரம் குறைந்துள்ளாக கண்டறிந்துள்ளனர்.
  4. ஒரு குறிப்பிட்ட பயிரின் நோய் எதிர்ப்பு சக்திக்கு மற்றொரு பயிர் வகையில் இருந்து விடை கிடைக்கும். எடுத்துக்காட்டாக கத்தரிக்காயைத் தாக்கும் பழப்பூச்சிக்கு மாற்றாக மரபணு மாற்ற கத்தரிக்காயை சந்தைப்படுத்துவதற்கு பதிலாக கத்தரிக்காயின் ஒரு வகையில் பழப்பூச்சிக்கு எதிரான எதிர்ப்புச்சக்தி இயல்பாகவே அமைந்திருப்பது அறிவியல் பூர்வமாக நிறுபிக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் நமது சூழ்நிலைக்கு உகந்த புதிய வகையினை உறுவாக்குவது எளிதாகப்படுகிறது.

இதையெல்லாம் பார்க்கும் போது கேயாஸ் தியரி ஒருவகையில் உண்மையோ என எண்ணவைக்கிறது. நாம் வெட்டும் ஒரு மரத்தால் வானத்தில் ஒரு நட்சத்திரம் உதிர்ந்து போவதற்கான வாய்ப்புள்ளதாக கேயாஸ் தியரி சொல்கிறது. பிரபஞ்சத்தில் உள்ள எல்லா பொருட்களும் ஏதோ ஒருவகையில் தொடர்பு கொண்டிருப்பதாகவும் ஒன்றின் மீதான செயல் சங்கிலித்தொடர் போல பிரபஞ்சத்தின் மற்ற பொருட்களில் தாக்கத்தை விளைவிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் உலகில் எல்லா உயிர்களின் வாழ்வு மனிதனின் நிம்மதிக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளதை உணரமுடிகிறது.

(தொடரும்)

6 thoughts on “ம.ம.உலகம்? 2

  1. பொதிகை மலைத் தொடர் உலகின் 12 biodiversity பிரதேசங்களில் ஒன்று.வாழை இந்த இடத்தில் தோன்றிய தாவரம்.ஆகவே இத்தனை வகைகள் இருப்பது இயல்பே.ஒருதடவை சென்னையில் இருந்து என்னுடன் பேருந்தில் வந்த வெள்ளைக் காரர் ஒருவர் பஸ் நிற்கும்போது எல்லாம் பாய்ந்து வெளிசென்று வாழைப் பழங்களாக வாங்கி வெட்டிக் கொண்டிருந்தார்.கேட்டதற்கு இத்தனை சுவையான பழங்கள் ஐரோப்பாவில் கிடைகாது என்றார்.அங்கு கிடைப்பதெல்லாம் தென் அமெரிக்காவில் இருந்து வரும் பெரிய ஆனால் சுவையற்ற பழங்களே.ஆனால் நிலை அருகி வருகிறது.இன்றைய தலைமுறைக்கு வாழைப் பழம் தெரியுமே தவிர அதன் வகைகள் தெரியாது.நாளை வாழைப் பழமும் தெரியாமல் போகும் நன்றி .கூர்மையாக கவனித்திருக்கிறீர்கள்.

    1. தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி போகன். சுற்றுச்சூழலைப் பொருத்தவரை, நுனிமரத்தில் உட்கார்ந்துகொண்டு அடித்தண்டை வெட்டிக்கொண்டிருக்கிறோம். எங்குபோய் முடியுமோ…

போகன் -க்கு பதில் அளிக்கவும் மறுமொழியை நிராகரி