பாடல் வனம்


மதுரைக்கு செல்வதற்காக செங்கல்பட்டில் காத்திருந்தேன். பக்கத்தில் இருந்த டீக்கடையிலிருந்து ரேடியோ ஒலித்துக் கொண்டிருந்தது. எல்லாக் காலத்திலும் எனக்கு ரொம்பப்பிடித்தப் பாடல். “ஆலோலம் பாடி, அசைந்தாடும் காற்றே…” இளையராஜா என் உயிருக்குள் இறங்குவது போலிருந்தது.

 

அந்தப்பாடலின் அடிச்சோகமும் சற்றே வெளிப்படும் நம்பிக்கையும் பல சமயங்களில் எனக்கு பெரிய ஆறுதலாய் இருந்துள்ளது. குறிப்பாக நான் கல்லுரி முடித்தப் பிறகு முதன்முறையாய் ஒரு மருந்து கம்பெனியின் மார்கட்டிங் பிரிவுக்கான இன்டர்வியூ எதிர்கொண்டேன். எனது பயிற்சியற்ற ஆங்கில மொழியால் அதில் தேர்வு பெற முடியவில்லை. அதைவிடக் கொடுமை என்னுடன் வந்த என் நண்பன் தேர்வானது. அவன் மீது எனக்கு பொறாமை இல்லை. ஒருவகையில் அவன் தேர்வை நான் மகிழ்ச்சியுடன் நான் எடுத்துக் கொண்டேன்.

 

ஆனால் என் மீது எனக்கிருந்த நம்பிக்கை பொய்த்துப்போனது. அந்த ஏமாற்றம் வாழ்க்கையை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற கேள்வியை எனக்குள் துளைத்தது. அந்த நாளின் இரவு “ஆலோலம் பாடி…” பாடலை ரேடியோவில் கேட்டபோது பெரிய விடுதலைக் கிடைத்தது போலிருந்தது. “…தனியானால் என்ன? துணை இங்கே; நான் பாடும் பாட்டுண்டு!…” என்ற இளையராஜாவின் குரல் என்னை ஆற்றுப்படுத்தியது.

 

10 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்க்கையின் பல நிலைகளை தாண்டிய பிறகு, அதே பாடலை செங்கல்பட்டில் எதோ ஒரு டீக்கடையில் கேட்டவுடன் என்னைப் போல் எத்தனைப் பேருக்கு இந்த பாடல் மருந்தாயிருந்திருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். மனம், கடைசியாக நான் எப்போது ரேடியோ கேட்டேன் என்றது. இப்போதெல்லாம் ரேடியோவின் இடத்தை டி.வி. ஆக்ரமித்துவிட்டது. இதுபோல டீக்கடைகளில், சில அரசுப் பேருந்தில் அல்லது செல்போன் கூடவே வரும் எப்.எம்.களில் என யதேச்சையாகத் தான் ரேடியோ கேட்கிறோம். ரேடியோவிலிருந்து வரும் பாடல் தரும் இன்பத்தை டிவியோ ஐபாட்களோ தருவதில்லை. ரேடியோவில் எந்தப்பாடல் எப்போது ஒலிக்கும் என தெரியாத மர்மம் அதன் அழகைக் கூட்டுகிறது.

 

எனது பள்ளிவயதில் நானும் எனது நண்பன் சந்தோசும் எங்கள் ஊரின் இரயில் நிலைய மரத்தடியில் மாலை முதல் இரவு வரை பாடல் கேட்டுக்கொண்டிருப்போம். எங்கள் நேரத்தை இளையராஜா, ஜேசுதாஸ், பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் நிரப்புவார்கள். “அந்திமழைப் பொழிகிறது…” பாடலின் இடையில் வரும் இந்துஸ்தானி சங்கதி எங்களை மயக்கும். நேயர் விருப்பம், ஒரு படப்பாடல், ஒலிச்சித்திரம் போன்ற ரேடியோ நிகழ்ச்சிகள் மிகப்பெரிய நேயர் பட்டாளத்தைக் கொண்டிருந்தது.

 

அகடமியில் படித்தபோது, எனது நண்பன், கிரண் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவன் என்றாலும் இளையராஜா எங்களை இணைத்தார். அவனுக்கு தமிழ் வார்த்தைகள் புரியாவிட்டாலும் ரேடியோவின் தமிழ் இசை அவனை மயக்கியது. கொஞ்சம் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொண்டு, “ரோஜாவைத் தாலாட்டும் தென்றல்…” பாட்டில் வரும் “…நீ கட்டும் சேலைக்கு நுலாவேன்…” என்ற வரியின் அர்த்தத்தை தானே புரிந்து   கொண்ட அந்தத்தருணத்தில் ஆர்க்கிமிடிஸ்  தத்துவத்தை கண்டுபிடித்ததைப் போன்று உற்சாகமானான். அந்த வரியை இரண்டு நாட்கள் என்னிடம், “What a feel, brother!” என்றவாறு திரும்பத்திரும்ப ஒப்படைத்துக் கொண்டிருந்தான்.

 

அகடமி நாட்களில் இசையால் என்னைக் கவர்ந்த மற்றொருவன் மனோஜ். அவனுக்கு இடுக்கி சொந்த ஊர். குளிர் காலத்தின் ஒரு நாள் இரவில் எங்கள் வகுப்பு மாணவர்கள் எல்லாம் கேம்ப் பயர் வைத்திருந்தோம். மனோஜ், கிடார் வாசித்துக்கொண்டே எங்களுக்கு ரொம்பப் பிரியமான மளையாளப் பாடல், “ஓர் மதன் வாசத்தே… மஞ்சனத் தோப்பில்; ஒரு புஷ்பம் மாத்ரம், ஒரு புஷ்பம் மாத்ரம்., டெய்சி.! டெய்சி..!” என்றப்பாடலைப் பாடினான். அப்போது அவன் ஹிமாவை காதலித்துக் கொண்டிருந்தான். அந்தப் பாட்டைப் பாடும்போது அவன் பிரகாசமாயிருந்தான். காதல் அவன் கண்களின் வழியாக வழிவதை உணர முடிந்தது. பிறகு பல இரவுகளில் நான், கிரண், மனோஜ் மூவரும், தமிழ், தெலுங்கு மளையாளம் என கலந்துகட்டி படிப்புக்கிடையே பாடிக் கொண்டிருந்த நாட்கள் இனிமையானவை.

 

எனது பதிண்வயதுகளில் எனது நண்பன் குள்ளுவிஜி காதலில் விழுந்த பிறகு அடிக்கடி ரட்சகன் படத்தில் வரும், நெஞ்சே நெஞ்சே மறந்து விடு பாட்டின் “…பெண்ணே.. பெண்ணே.. உன் வளையல்; எனக்கொறு விலங்கல்லவோ!…” என்று பாடிக்கொண்டிருப்பான். இன்னொறு நண்பன் ஆனந்தன், “பொட்டு வைத்த ஒரு வட்டநிலா…” பாட்டை எங்கு கேட்டாலும், தேசியகீதத்தை கேட்டது போல் சிலையாகி நின்றுவிடுவான்.

 

நமது வாழ்க்கையில் சந்தோஷத்துக்கும் துக்கத்துக்கும் பெரிய வடிகாலாய் இருப்பது திரைப்பாடல்கள். “அகரம் இப்போ சிகரம் ஆச்சு…” பாடலில், “…பரிமார விரலா இல்லை; தலைசாய மடியா இல்லை; பரிமாற பார்வை போதும், பசியார வார்த்தை போதும், நம்பிக்கையே நல்லது.., எறும்புக்கும் வாழ்க்கை உள்ளது…!” என்ற வரிகளை தனிமையில் கேட்கும்போதெல்லாம் தாய்மையின் அரவணைப்பில் கண்ணீர் சுரக்கும். அதே போல், புதுப்பேட்டைப் படத்தின், “எத்தனை கோடிக் கண்ணீர், மண் மீது விழுந்திருக்கும்! ..அத்தனை வீழ்ந்த பின்னும், பூமி இன்னும் பூ பூக்கும்!” என்ற பாடல் பெரிய நம்பிக்கையை விதைக்கத்தான் செய்கிறது.

 

எனது கல்லுரி நாட்களில், “ராஜ ராஜ சோழன் நான்; எனை ஆளும் காதல் தேசம் நீ தான்…” என்றப் பாடல் எனக்கு நெருக்கமாய் இருந்தது. அந்தப்பாடலை பாடும் போதும், கேட்கும் போதும் உலகம் என்னைச்சுற்றி இயங்குவது போல் இருக்கும். நான் தான் பெரியவன் என்ற உணர்வு தோன்றும். உண்மையில் திரைப்பாடல்களின் உளவியலே அதுதான். பாடலைக் கேட்கும் போது நாம் அந்தப்பாடலாகவே மாறிவிடுகிறோம். அந்தப்பாடல் நமது வாழ்க்கையை விளக்குவதாக, ஆறுதலளிப்பதாக நினைத்துக் கொள்கிறோம். பாடல் மனதைக் கரைக்கிறது. நம்மை புத்துணர வைக்கிறது. எனக்கு இளையராஜா, ஜேசுதாஸ் போல ஒவ்வொருவருக்கும் பிடித்தப் பாடகர் இசையமைப்பாளர் இருக்கிறார். பிடித்தப் பாடல் இருக்கிறது. திரையிசையும் பாடலும் நமக்கான வாழ்க்கையை இன்னும் அழகாக்குகிறது.

 

செங்கல்பட்டில் இரயில் ஏறி எனக்காக படுக்கையில் அமர்ந்த பின், எனது செல்போனில் ரேடியோ வைக்கிறேன். வாரணம் ஆயிரம் படத்தின் “நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை…” கேட்கிறது. பாடல் அடர்ந்த வனம் போல நம் வாழ்க்கைக்கான எல்லா தேடலின் விடையுடன் மர்மமாய் விளங்குகிறது. வனத்துக்குள் உட்புக ஆரம்பித்தப் பிறகு கிடைக்கும் எதிர்பாராமையும் உற்சாகமும் ரேடியோ இசையில் பீறிடுவது போல் இருக்கிறது. இரயில் உடலைத் தாலாட்ட, இசை மனதைத் தாலாட்ட எப்போது துங்கினேன் என்றே தெரியாமல் போனது.

 

Advertisements
Comments
6 Responses to “பாடல் வனம்”
 1. தங்கபாண்டியன் சொல்கிறார்:

  இனிய ஜானகி, பாடல் வனம் பசுமையாக இருந்தது. சமீப காலமாக எனது குழந்தைகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிக்கிறேன். எனது மகன் அதிகமாக தொலைக் காட்சித் தொடர்களையும், பாடல்களையும் விரும்பிப் பார்க்கிறான். அவன் அதிகமாய் விரும்பும் பாடல் வேட்டைக்காரன் படத்தில் வரும் புலி உறுமுது பாடலைத்தான். ஆனாலும் எப்போதாவது அதிலும் குறிப்பாக காலை நேரங்களில் ஒளிபரப்பாகும் மெலோடிகளை அவன் மெய் மறந்து கேட்பதை நான் பார்க்கிறேன்.

  இவன் நடவடிக்கைகள் சரியில்லை என எனது மனைவி சொல்வார். எனக்கு அவனது செயல்கள் யாவும் எனது சின்ன வயதை நினைவூட்டுவதாகவே இருக்கிறது

  நினைவு தட்டிய காலத்தில் எங்களூரில் ஐயப்ப பக்தர்களின் பஜனையைக் கேட்க பிள்ளையார் கோவிலுக்குப் போனதிலிருந்து, இப்போது வரையில் பாடல்களைக் கேட்டாலே என்னை மறந்துபோன தருணங்கள் பல உண்டு.

  காதலன் படத்தின் என்னவளே…. பாடலும், சின்னக்கவுண்டர் படத்தின் முத்துமணி மாலை பாடலும், ஒரு பொண்ணு நெனச்சா படத்தின் கடலலை பாடலும் எனது காதல் காலத்தின் தேசிய கீதமாய் இருந்தது.

  எழுத்தாளர் சங்கத்தில் இணைந்த பிறகு ஷாஜகான் எழுதிய அமுத மழையில் என் கவிதை நனைகிறது… நிலவே கொஞ்சம் குடைபிடி….. என்ற பாடலில் நான் பல நேரம் என்னை மறந்ததுண்டு. இருபதாண்டுகள் கழித்தும் இன்றும் என்னால் அந்தப்பாடலை அடிபிரளாமல் பாட முடிகிறது. இதே போல பிரளயன் எழுதிய ஊருறங்கும் சாமத்துலே… என்ற பாடலையும் என்னால் பாட முடிகிறது.

  பாடல்களைக் கேட்டதன் விளைவாகவே நான் கவிஞனாக மலர்ந்தேன். எனது கவிதைகள் பல பழைய பாடல்களின் சந்தங்களை மனதில்வைத்துக் கொண்டு எழுதப்பட்டவைதான். ஒரு ஊர்ல.. ஒரு ஊரணி.. குறும்படத்திற்காக நண்பர் ரங்கநாதன் பாடல் கேட்டபோது தைரியமாக ஒத்துக் கொண்டு எழுதிக்கொடுத்தேன். இசையமைக்கப்பட்ட அந்தப்பாடல் ஏனோ படத்தில் இடம் பெறவில்லை.

  இன்றும் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இரவு கோடைப்
  பன்பலையில் இடம் பெறும் கோடைத் தென்றலைக் கேட்க நான் தவறுவதில்லை. சுந்தர ஆவுடையப்பனும், மகா சோமா. கந்தமூர்த்தியும் தருகின்ற இனிய தொகுப்புகளோடு பாடலின் கருத்துகள் இதயம் நுழைகிற சுகம் தந்தது. தற்போது அவர்கள் இருவரும் இல்லை. புதியவர்களால் என்னைப் போன்ற பாடல் விரும்பிகளின் தாகத்தைத் தணிக்க முடியவில்லை

  இலங்கை ஒலிபரப்பில் நான் என்னைத் தொலைத்த காலமும் உண்டு. எங்கள் ஊரைச் சேர்ந்த முத்துவேல் அண்ணன் எழுதி அனுப்பிய கவிதைக் குறிப்புகளோடு இந்தமான் காதலி படத்தில் இடம் பெற்ற அந்தமானைப் பாருங்கள் அழகு…. என்ற பாடலை அந்த நாளில் நான் விரும்பிக் கேட்டதுண்டு.

  அதற்கடுத்த காலங்களில் நண்பர் விவேகானந்தன் மூலமாக நாங்கள் அனைவரும் புதிய நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி அதில் உள்ள அனைவரின் பிறந்த நாட்களைக் கொண்டாடுவோம். அப்போதெல்லாம் எனது நண்பர்களில் பாடும் திறன் கொண்ட வெங்கட்டும், கணேசனும் பாடுவார்கள். நானும் முத்துரங்கனும் பாடாவிட்டாலும் பாடுவதுபோல காமெடி செய்வோம்.

  பாட்டும் கூத்தும் பாதை காட்டும். நாட்டின் இருட்டை விரட்டி ஓட்டும். என்று பின்னாளில் எங்களது கலை இரவு பேனர்களில் வெண்மணியால் எழுதப்பட்ட இந்த வாசகத்தை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்….. இசையால் வசமாகா இதயம் எது?

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   பாட்டும் கூத்தும் பாதை காட்டும். நாட்டின் இருட்டை விரட்டி ஓட்டும். நன்றி தங்கபாண்டியன். நீங்கள் பாட்டை சமூக மாற்றத்துக்கான கருவியாக பயன்படுத்துகிறீர்கள். எனக்கு பாடல், தனிப்பட்டது. எனக்கே எனக்காக உருவானது என்ற நெருக்கத்தைத் தருகிறது.

 2. கண்ணன் சொல்கிறார்:

  நண்பருக்கு,
  இசைகலந்து வணக்கம் தருகிறேன்.

  உங்களது நினைவுகள்
  எனக்குள்ளும் இப்படி நிகழ்வு ஏதேனும் இருந்ததா என திருப்பிப் பார்க்கச் சொன்னது.

  நன்றி

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   நன்றி கண்ணன். எனக்குத் தெரிய பாடல்கள், எல்லார் மனதிலும் எதோ ஒரு சந்தர்பத்தில் ஊடுருவித்தான் சென்றிறுக்கும். இசையும், கவிதையும் நம் வாழ்வின் அடித்தளங்கள்

 3. கே.ஆர்.பி.செந்தில் சொல்கிறார்:

  எங்களுக்கெல்லாம் ஒரு காலத்தில் சிலோன் ரேடியோதான், திருச்சி நிலையம் செய்திகள் கேட்க்க மட்டுமே.
  கே.எஸ்.ராஜாவும், அப்துல் ஹமீதும்தான் அப்போது எங்கள் ஹீரோஸ்…

  • ஜானகிராமன் சொல்கிறார்:

   நன்றி செந்தில். சிலோன் ரேடியோவின் தாக்கமில்லாமல் இன்றைக்கு வாழ்ந்துகொண்டிருக்கும் தலைமுறை வந்திருக்காது. பதிவர்கள் பலர் கவிமனதுடன் இயங்குவதற்கு சிலோன் ரேடியோவும் ஒரு காரணம் என்றே நினைக்கிறேன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: