பெண்கள் இடஒதுக்கீடு: வரமா., சாபமா?


கொஞ்ச நாளைக்கு முன் ஜனதா கட்சியைச் சேர்ந்த சரத்யாதவ் பாரளுமன்றத்தில் பெண்கள் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின் போது, “இப்போதிருக்கும் இதே நிலையில் இந்த சட்டத்தை நிறைவேற்ற இந்த அரசு முயற்சிக்குமானால் அதனை முறியடிக்கும் பெரும்பான்மை எங்களுக்கு இல்லையென்றாலும் நான் இதே பாரளுமன்றத்தில், இந்த சட்டத்தை எதிர்த்து விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வேன்” என்றார். இதைப் படித்தவுடன் எனக்கு நாட்டின் ஆணாதிக்க மனோபாவம், அதன் போக்கு பற்றிய அடங்காக்கோபம் ஏற்பட்டது.

பிறகு தொடர்ச்சியாக இந்த விஷயத்தை ஆழ்ந்து கவனித்தபோது பெண்கள் இடஒதுக்கீடு பற்றிய மறுபக்கம் எனக்கு புரியவந்தது. பாராளுமன்றத்தில் 13 வருடங்களாக இடஒதுக்கீடு மசோதா முன்வைக்கப்பட்டாலும் இப்போது தான் அதை நிறைவேற்றும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக காங்கிரஸ் கூட்டணி அரசு கொண்டாடி வருகிறது. உண்மையில் இச்சட்டத்தை எதிர்த்த லாலு, முலாயம், மாயாவதி, சரத்யாதவ் போன்றவர்கள் வைத்த, பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கான உள்ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்ற கோரிக்கையில் ஞாயம் இல்லாமல் இல்லை. அது சில மறைமுக காரணங்களுக்காக, இம்மசோதாவை எதிர்க்கவேண்டும் என்ற காரணத்துக்காக கையாண்ட தந்திரம் எனக்கொண்டாலும் பெண்களுக்கான இடஒதுக்கீட்டில் உள்ஒதுக்கீடு அவசியம் என்பதை மறுப்பதிற்கில்லை.

இன்றைய சூழலில் எந்தவிதமான பெண்கள் அரசியலுக்கு வருகிறார்கள்?

1.அரசியல் குடும்பத்தை சேர்ந்த தலைவரின் மனைவி (சோனியாகாந்தி), தலைவரின் வாரிசுகள் (கனிமொழி)

2.மாஜி நடிகைகள் (ஜெயலலிதா, ஜெயப்பிதா, விஜயசாந்தி,மற்றும் பலர்)

3.மேட்டுக்குடி ஜமீன் குடும்பத்தினர் (கீதா ஜீவன், வசுந்தரா, பிரதிபா பாட்டில்)

இந்த 3 வகையிலிருக்கும் பெண்களின் வாழ்க்கை முறையும், கள்ளிக்காட்டிலும் அடுப்பறையிலும் ஓயாமல் வேலைசெய்து பல சிக்கல்களுடன் வாழ்க்கையை நடத்திச்செல்லும் சராசரி இந்திய குடும்பப்பெண்ணின் வாழ்க்கை முறையும் ஒன்றா? மம்தாபானர்ஜி, மாயவதி போன்ற பெண் தலைவர்கள் அடித்தளத்திலிருந்து மேலுக்கு வந்திருந்தாலும் அவர்களின் அரசியல் தந்திரங்கள் எல்லா உள்லடி வித்தைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் அவர்களை சாதாரண இந்தியப்பெண்ணின் படிமமாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.

உண்மையில் இடஒதுக்கீட்டின் அடிப்படைத்தத்துவம் பின்தங்கிய, பிரச்சனையை நிதம் சந்திக்கின்ற சமுகம் அதிகாரத்துக்கு வருதலும் அதன் வாயிலாக அவர்களின் தேவைகளை தேசிய அளவில் கொண்டுசெல்வதும் ஆகும். இப்போது நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த இடஒதுக்கீட்டால் எந்தவித அதிகாரப் பின்புலமும் கவர்ச்சியும் இல்லாத சாதாரண இந்தியப் பெண் அதிகாரம் பெறமுடியுமா?

கடந்த 10 ஆண்டுகளாக உள்ஒதுக்கீடு வேண்டும் என்ற இதே காரணத்தை காட்டித்தான் இச்சட்டத்தை நிறைவேற்றாமல் இருந்தனர். இப்போதும் அவசரம் அவசரமாக முதலாளித்துவ நெருக்கடிகளுக்கிடையில் இச்சட்டம் உள்ஒதுக்கீடு இல்லாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது காங்கிரஸின் ஆதிக்க மனோபாவ வெளிப்பாடு.

சட்டத்தில் ஒரே ஒரு வரியை சேர்க்க மறுத்து அடம்பிடித்து உள்ஒதுக்கீடு இல்லாமல் நிறைவேற்றிய காங்கிரஸின் போலி ஜனநாயகம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இனி உலக மாநாடுகளில், தேர்தல் சமயங்களில் நாங்கள் ஒரு பெண்ணை ஜனாதிபதி ஆக்கியுள்ளோம், ஒரு பெண்ணை மக்களவை சபாநாயகர் ஆக்கியுள்ளோம், பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்துள்ளோம் என்று பெருமை பேசும். ஆனால் அவர்கள் குறிப்பிடும் பெண்கள், வீட்டிலும் சமுகத்திலும் பலவித அடக்குமுறைகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாகும் சராசரி இந்தியப் பெண்களின் பிரதிகள் இல்லை என்பதை நாம் எப்போது உணரப்போகிறோம்?

இச்சட்டம் பற்றி தமக்காக பாராட்டு விழாக்களுக்கிடையில் கருணாநிதி, “முதலில் சட்டம் நிறைவேறட்டும் பிறகு இடஒதுக்கீடு பற்றி யோசிக்கலாம். கருத்து வேறுபாடு வரும்போது பெரும்பான்மையோர் கருத்து எதுவோ அதனை சார்ந்திருப்பதே நல்ல மக்களாட்சி” என்று பச்சோந்தித்தனமான விளக்கத்தை படித்தபோது, அவர் ஓய்வு பெறப்போகிறாறோ இல்லையோ அவரது சிந்தனை எப்போதோ ஓய்வு பெற்றுவிட்டது என்று தான் எண்ணத் தோன்றியது.

அதிகார வர்க பெண்கள் ஆட்சிக்கு வந்தபின் தமக்கு ஆப்பு வைத்துக்கொள்ளும் வகையில் உள்ஒதுக்கீடுக்கு நிச்சயம் ஆதரவளிக்கமாட்டார்கள். அதேபோல் பெரும்பான்மை கருத்தைச் சார்ந்து இயங்குவது தான் மக்களாட்சி என்றால், சமீபத்தில் இலங்கைப் பிரச்சனையில் பெரும்பான்மை தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக இயங்கிய கருணாநிதியை என்ன செய்ய?

பஞ்சாயத்து அமைப்புகளில் 10 வருடங்களுக்கு முன்பே பெண்களுக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டு விட்டது. தற்போதய நடப்பு பாராளுமன்றக் கூட்டத்தில் பஞ்சாயத்து அமைப்புகளின் 33 சதவீத இடஒதுக்கீட்டை 50 அதிகரிக்கச்செய்யும் மசோதா வைக்கப்பட்டுள்ளது. ஒரு வகையில் பஞ்சாயத்து அமைப்புகளின் இடஒதுக்கீடு பாராட்டத்தக்கது. அதன் முதல் வடிவத்திலேயே உள்ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வகுப்பினர் உரிமையுடன் அதிகாரம் பெற வாய்ப்பேற்பட்டுள்ளது. அதேசமயத்தில்10 ஆண்டுகளுக்குப் பிறகும் பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்கள் சுதந்திரத்துடன் செயல்படுகிறார்களா என்று பார்த்தோமானால் வேதனை தான் மிஞ்சும். 99% இடங்களில் பொறுப்பிலிருக்கும் பெண்களின் பினாமியாக அவர்களது கணவன்களோ நெருங்கிய உறவினர்களோ தான் செயல்பட்டு வருகின்றனர்.

கட்சிக்கோ நாட்டுக்கோ என்ன சாதனை செய்து மதுரை மாநகர மேயராக தேன்மொழி தேர்ந்தெடுக்கப்பட்டார்? அவரது கணவர் கோபிநாதன் அதிகாரமையத்துக்கு விசுவாசமாக இருப்பார் என்ற ஒரே அளவுகோலில் தானே அவரது மனைவி ஆட்சிக்கு வந்தார்? இதே போல் சென்ற ஆட்சியின் போது ஊராட்சி தலைவர்களாக இருந்து மிகச்சிறந்த முன்னுதாரணப் பணிகளைச் செய்துவந்த நாலுகோட்டை ஊராட்சி, ஓடந்துறை ஊராட்சி, குத்தம்பாக்கம் ஊராட்சி ஆண் தலைவர்கள் இம்முறை அவ்வூராட்சிகள் பெண்கள் இடஒதுக்கீட்டுக்கு மாற்றப்பட்டதால் அவர்களின் மனைவியையோ நெருங்கிய பெண் உறவினரையோ தலைவர் பதவியில் பெயருக்கு அமர்த்தி, தாமே செயல்பட்டு வருவது என்ன ஜனநாயக முறை?

ஆக 10 ஆண்டுகளுக்குப் பிறகும் சட்டப்பூர்வ உள்ஒதுக்கீடு அளிக்கப்பட்டபிறகும் அதிக அதிகாரமும் பணப்புழக்கமும் இல்லாத பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களின் ஒதுக்கீடு எதையும் பெரிதாக சாதிக்காத நிலையில், அரைவேக்காட்டுத்தனமாக பெண் அரசியல் வாரிசுகளும் மாஜி நடிகைகளும் அம்பானி, பிர்லா குடும்ப பெண்களும் இன்னும் வலிமையுடன் சட்டசபைக்கும் பாராளுமன்றத்துக்கும் செல்லவதற்கு வழிவகுக்கும் இந்த பெண்கள் இடஒதுக்கீட்டால் சாதாரண பெண்கள் பூரிப்படைவதற்கு எந்த காரணமும் இல்லை என்றேபடுகிறது.

எது எப்படியோ இந்த புதிய சட்டத்தால் மார்கெட் போன நடிகைகளுக்கும் அமைச்சர்களின் வாரிசுகள், பேத்திகளுக்கும் பெரிய டிமாண்ட் ஏற்படும். தோரயமாக 800 இடங்கள் உள்ள பாராளுமன்றத்தில் 250 பெண்கள் பொறுப்பேற்பதால், பாரளுமன்றத்தில் விடுப்பு எடுக்கும் ஆண் உறுப்பினர் எண்ணிக்கை குறையும். சட்டசபைகள் வண்ணமயமாக இருப்பதால் நேரடி ஒளிபரப்புக்கு தனியார் தொலைக்காட்சிகள் போட்டிப் போடும். வருங்காலத்தில் “மானாட மயிலாட” போன்ற நிகழ்ச்சிகள் கூட சட்டசபைகளில் நடத்தப்படலாம்.

வாழ்க பெண்ணியம்!

2 thoughts on “பெண்கள் இடஒதுக்கீடு: வரமா., சாபமா?

  1. பெண்களுக்கான இட ஒதுக்கீடு என்பது வெறும் பம்மாத்து. தங்களின் வாரிசுகளுக்கும் மனைவிகளுக்கும் பதவி வாங்கித்தரும் பணியை இந்த ஓய்வு பெறும் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். உண்மையில் யாதவுகளின் கோபம் நியாயமானதே.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s