ஞானியரின் ஞானத்தை மட்டும் கேள்…


நேற்று இரவு 10.30 மணியிருக்கும். யதேச்சையாக வெளியே வந்து பார்த்தபோது எதிர் வீட்டுக்காரர் குடும்பத்துடன் முற்றத்தில் நிறைய புத்தகங்கள், புகைப்படங்கள் போட்டு எரித்துக் கொண்டிருந்தனர். உற்றுக் கவனித்த போது அவை நித்தியானந்தர் பற்றியவை எனத் தெரிந்தது, அக்குடும்பம் நித்தியானந்தரின் தீவிர பக்தர்கள். அவர்கள் வீடு எங்கள் ஊருக்கான நித்தியானந்தரின் தியானபீடத்தை நிர்வகித்து வந்தது. சில மாதங்களுக்கு முன் நித்தியாநந்தரின் முக்கிய சீடர்களுள் ஒருவர் இவர்களின் வீட்டுக்கு வந்தபோது இவர்களின் தயாரிப்பும் வரவேற்பும் மிகையாக இருந்தது. நேற்று வரை நித்தியானந்தரின் புகழ் பாடிவந்த இவர்கள் சன் டிவி வெளியிட்ட ஒரே ஒரு செய்தியினால் நித்தியானந்தர் (இனி, நித்தியா) மீது பெருங்கோபம் கொண்டு எதிர்வினை ஆற்றியது வருத்தமாக இருந்தது.

நித்தியா ஒரு நடிகையுடன் உறவு கொண்டிருந்தது ஆதாரபூர்வமாக தெரிந்தவுடன் அதற்கான எதிர்வினை பெரிய அளவில் இருந்தது. இதற்கு முன் இது போன்ற சிக்கலில் மாட்டிய சாமியார்களை விட இவர் கொஞ்சம் பெரிய அளவில் பெயர் பெற்றவர் என்பதும், அவர் இளைஞர் என்பதும், அவருடன் உறவு கொண்டவர் பிரபலமான முன்னால் நடிகை என்பதும் ஊடகங்களையும் பொதுஜனத்தையும் இந்நிகழ்வு குறித்து தீவிரமாக கவனிக்க வைத்தது. நித்தியா குறுகிய காலத்துக்குள் கட்டிவைத்த பல கோடிக்கணக்கான ஆன்மீக சாம்ராஜ்யம் ஒரே நாளில் தவிடு பொடியானது. “முட்டை உடைந்த பிறகு, அதிகபட்சம் அதை ஆம்லட் தான் போடமுடியும்”.

உண்மையில் எனது கவனமெல்லாம் அவருடைய திறம் பற்றித் தான். யூ-டியூபில் அவரது ஞானம் பற்றிய பகவத்கீதை பற்றிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மிகச் சிறப்பானவை. ஆழமானவை. அவரது அறிவுத்தெளிவும் கேட்பவரை வசீகரிக்கும் பேச்சும் வலிமைமிக்கது. இப்போது அவர் ஒரு நடிகையுடன் உறவு கொண்டார் என்பதாலேயே அவரது திறமும் இது வரை இந்து மதத்துக்கான அவரது பங்களிப்பும் இல்லாமல் போய்விடுமா? கள்ளக்காமம் குறித்த மனிதகுலத்தின் புரிதல் உணர்வுபூர்வமானது. அது எல்லாத் தவறையும் விட மிகக் கடுமையானதாக கருதப்படுவது. எவ்வளவு பெரிய நபராக ஒருவர் இருந்தாலும், பாலியல் ஒழுக்கம் மீறப்படும் போது அவர் மக்களிடமிருந்து தூக்கியெறியப்படுகிறார். தனிமனித ஒழுக்கத்துக்கு அதிக முக்கியத்துவம்தராத அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கள்ளக்காமம் கொண்ட முன்னால் ஜனாதிபதி கிளின்டன், கோல்ப் விளையாட்டு வீரர் டைகர் உட்ஸ் மீதான அமெரிக்க மக்களின் கோபம் கடுமையாகவே இருந்தது. நமது இந்திய மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். பாலியல் ஒழுக்கம் நமது தேசத்தின் அடையாளமாகவே உலகெங்கும் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

நம் மக்கள் நமது புனிதர்களின் தவறான பாலியல் ஒழுக்கத்தைக் கூட பொருத்துக்கொள்வார்கள், ஆனால் அது பொது வெளிக்கு வெளிப்படுவதை சகித்துக் கொள்ளவே மாட்டார்கள். சன் டிவியின் எதாவது ஒரு நல்ல டி.ஆர்.பி ரேட் உள்ள மெகா சீரியலில் ரஞ்சிதா நடித்துக்கொண்டிருந்தால் இதே போன்ற அறச்சீற்றத்தை சன் டிவி மேற்கொண்டிருக்குமா? இப்போது நித்தியா மீது கடும் நடவடிக்கை எடுக்க காத்துக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் ஒழுக்கமானவர்கள்? நமது திரைத்துறையில் பல கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள அகில உலக சூப்பர் ஸ்டார்களின் லீலைகள் ஊரறிந்த இரகசியமாகத் தானே இருந்து வருகிறது? ஏசுநாதர் கூறியது போல் எந்தத் தவறும் செய்யாத மனிதன் முதற்கல்லை எடுத்து வீசச்சொன்னால் யார் மிஞ்சுவர்? உண்மையில் இப்போதய சாமியார்கள் பெரும்பாலானோர் போலி எனவும் முன்பிருந்த முற்றும் துறந்த முனிவர்களை நாம் இப்போது காணமுடிவதில்லை எனவும் நாம் அங்கலாத்து வருகிறோம். அடிப்படையில் எல்லா மனிதரும் குறைமனிதர் தான். யாருமே புனிதர் இல்லை. ஒருவேளை முன்காலத்தில், இப்போதிருக்கும் ஹிடன் கேமரா தொழில்நுட்பம் இல்லாததால் அவர்கள் தப்பித்தார்கள்.

பிரச்சனை சாமியார்கள் மற்றும் மக்கள் இருவர் மீதும் உள்ளது. சாமியார்களின் “உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல்” மிகப் பெரிய குற்றம். நமது காலகட்டத்தில் வாழ்ந்த ஓஸோ மிகச் சிறந்த உதாரணம். அவர் வெளிப்படையாக செக்ஸ் பற்றி பேசினார். அவர் தன்னைச் சுற்றி எந்தவித புனிதத்தன்மையையும் கட்டமைக்கவில்லை. அவரை நாடிச் சென்றவர்கள் அவரின் இயல்பை அறிந்தே ஏற்றுக்கொண்டதால் எந்த சூழ்நிலையிலும் ஏமாற்றமடையவில்லை. அவர் வாழ்ந்த காலத்தில் அவரை திட்டியவர்கள் கூட இப்போது அவரது கருத்தை மதிக்கிறார்கள். இப்போதும் கோடிக்கணக்கில் அவரது புத்தகங்கள் விற்பனையாவது கவனிக்கத்தக்கது.

மக்களின் மீதுள்ள முக்கிய தவறு, ஒரு மனிதரை அவரது திறத்தைச் சார்ந்து மட்டும் எடைபோடாமல் அவரது தனிமனித வாழ்க்கையை பொதுப்படுத்திக் கொள்வதாகும். கலில் கிப்ரனின் மகா வாக்கியம், “ஞானியரின் ஞானத்தை மட்டும் கேள்” என்று சொல்கிறது. நாம் ஞானியரின் ஞானத்தை விடவும் ஞானியை பிடித்துக் கொள்கிறோம். நித்தியா பிரச்சனையில், சாருவுடைய பின்னூட்டம் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. சாரு, எல்லா காலத்திலும் தமக்குப் பிடித்தது “வைன், வுமன் மற்றும் கடவுள்” என்பவர். அதை வெளிப்படையாகவும் எழுதிவருபவர். அவர் நித்தியாவின் சீடரும் கூட. ஆனால் அவரால் கூட ஏமாற்றத்தை பொருத்துக்கொள்ள முடியவில்லை. அவரது வலைத் தளத்தில் நித்தியாவைப் பற்றி மிகக் கேவலமாக எழுதியிருப்பது, சாமியார்களின் தனிப்பட்ட வாழ்க்கை உயர் நிலையில் இருப்பது அல்லது இருப்பதாக காமித்துக்கொள்வது நமக்கு மிகமுக்கியம் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியது.

இந்த நிலை மாற நாம் ஞானியரை தவிர்த்து அவரது ஞானத்தை மட்டும் கவனிக்க ஆரம்பித்தால் ஏமாற்றங்களையும் கோபங்களையும் இல்லாமல் செய்யலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நமக்கும் கடவுளுக்கும் இடையில் நமக்கு ஏன் சாமியார்கள் போன்ற இடைத்தரகர்கள் தேவை. அவன் அருளால் அவன்தாள் வணங்கி, கடவுளை நமக்குள் கொண்டு வருவோம்.

Advertisements
Comments
2 Responses to “ஞானியரின் ஞானத்தை மட்டும் கேள்…”
 1. மரிக்குண்டு கண்ணன். சி சொல்கிறார்:

  ஜானகி,

  ஞானியின் ஞானத்தை மட்டும் கேள் என்ற தங்களது கருத்துக்கு சூடான பதிலை தட்டச்சு செய்தேன். வலைபூவில் கருத்து சேர் பகுதியில் இட்டபோது, இடுகையை ஏற்றுக் கொள்ளாததால் அவை அழிந்து விட்டது. சரி விட்டுவிடுவோம் என்று பணியைத் தொடர்ந்தேன். இன்று நேரம் அமைந்தது. அவ்வளவு சூடாக இல்லாவிட்டாலும்…

  ஒரு பழைய பாடல் பணம் பந்தியிலே…. எத்தனை அறிவு இருந்திட்டாலும் பணம் இல்லாத ஆளை… மனித கூட்டம் கருத்து கேட்பதற்கு, ஆலோசனை கேட்பதற்கு ஒரு தகுதியை வைத்துள்ளது. அந்தத் தகுதி நபருக்கு நபர் வேறுபடலாம்.

  நித்தியாவை விட திறம் மிகுந்தவர்கள் இந்தியாவில் ஏராளாம். அவர்கள் வெளிவருவதற்கு மனித கூட்டம் எதிர்பார்க்கும் தகுதி இல்லை. அதனால் தான் நித்தியா போன்றோரை தூக்கி கொண்டாடுவதும், பிற்பாடு செருப்பை கழட்டி, காரி உமிழ்வது எல்லாம் நடைபெறுகிறது.

  இந்த மனித கூட்டத்தை ஒரு விசயத்திற்காக பாராட்டுகிறேன். இத்தனை வேலைப் பளுவிற்கு மத்தியில் நித்தியாவை பற்றி பேசுகிறார்களே.

  ஊடகங்களை கண்டிக்காமல் விடுவதில்லை. சன் குழுமம் இவ்வளவு தரம் தாழ்ந்து நடந்து கொண்டதற்கு தண்ணியில்லாத கிணத்தில் விழுந்து செத்து தொலைத்திருக்கலாம். நக்கீரன் என நல்ல பெயரை வைத்துள்ள இந்த வார இதழ் மஞ்சள் பத்திரிக்கை போல் படங்களைப்போட்டு, ச்சீசீசீ……..

  நித்தியாவை கொளுத்துபவர்கள் இவர்களையும் கொளுத்த வேண்டும்.

 2. Janakiraman சொல்கிறார்:

  You are true Kannan. Thanks for postig your comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

%d bloggers like this: