எனக்கு ரொம்பப் பிடித்த ஒரு அழகான கஸல் பாடல், “நாம் அடிக்கடி சந்தித்துக்கொண்டிருக்கிறோம், நாம் சீக்கிரம் காதலிக்கத் தொடங்குவோமென நினைக்கிறேன்…” என்று போகும். அது போலத்தான் பிரச்சனைகளும். பிரச்சனைகளை தவிர்க்க எண்ணினால், அதுவே பெரிய பிரச்சனையாய் போய் முடிய வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக பிரச்சனைக்குள் இறங்கி, அதனை தொடர்ச்சியாக சந்தித்தால் அப்பிரச்சனையை நாம் இரசிக்க ஆரம்பித்து காதலிக்கவும் செய்யலாம்.
ஜப்பானில் மீன்சந்தையில் மக்களின் விருப்பத்தை பொறுத்து மீனவர் எடுத்த பல விதமான முயற்சிகளை படிக்கும் போது ரொம்ப சுவாரசியமாக இருந்தது. ஜப்பானியர்களுக்கு மீன் மிகவும் பிடித்த உணவு என்பதல் அதன் தேவையும் அதிகமாயிருக்கும். தொடர்ச்சியாக மீன் பிடித்ததால் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் மீன் கிடைக்கவில்லை. மீன் தேவையை சமாளிக்க மீனவர்கள் கடல் மீன்களை கடற்கரையை ஒட்டி நிலப்பகுதியில் குளம் வெட்டி மீன் வளர்த்தனர். ஆனால் நிலப்பகுதி மீன்களின் சுவையை மக்கள் விரும்பவில்லை.
அடுத்து, மக்களின் விருப்பத்துக்காக மீனவர்கள் கடலில் நீண்டதூரம் சென்று, ஆழ்கடலில் மீனெடுத்து ஐஸ் பெட்டியில் கொண்டு வந்து விற்க ஆரம்பித்தனர். ஐஸ்பெட்டியில் மீன்களை வைத்திருந்ததால் அவற்றின் சுவை ஜப்பானியர்களை கவரவில்லை.
மீனவர்கள் யோசித்து, மீன்பிடிக்கும் படகுக்குள்ளேயே சிறிய நீர்தொட்டியை ஏற்படுத்தி அதில் ஆழ்கடலில் பிடித்த மீன்களை வைத்து எடுத்து வந்து விற்றனர். இப்போதும் சலனமற்ற படகுத்தொட்டிக்குள் இருந்த மீன்கள் அதிக இயக்கமற்று இருந்ததால் அதன் சுவை குறைப்பாட்டை ஜப்பானியர்கள் கண்டுகொண்டனர்.
மீண்டும் மீனவர்களுக்கு மக்களின் சுவைத் தேவையை பூர்த்தி செய்யவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நீண்ட யோசனைக்குப் பின் புதிய வழிமுறையை கண்டுபிடித்தனர். ஆழ்கடலில் பிடித்த, மீன் இருக்கும் படகுத் தொட்டியில் ஒரு சிறிய சுறாமீனையும் விட்டனர். சுறாமீனைக் கண்டதும் தொட்டியிலிருந்த மற்ற எல்லா மீன்களும் பயந்து நீந்திக் கொண்டேயிருந்தன. இம்முறை கொண்டுவரப்பட்ட மீன்களின் சுவையில் எந்த குறையையும் மக்கள் கண்டுபிடிக்கமுடியவில்லையாம்.
நான் கூட இயல்பான சூழலில் செயல்படும் வேகத்தைவிட இலக்கு நிர்ணயித்த பணிகளின் போது மிக வேகமாக பணியாற்றியிருக்கிறேன். நாம் எப்போதும் சிறப்பாக பணிசெய்ய, நாமே நமக்கு சில சுறாமீன்களை தொட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டுமெனத் தோன்றுகிறது.
மிகச் சிறந்த மேலாண்மைத் தத்துவம். இதே போல் தொடர்ந்து எழுதுங்கள்.