காலத்தைவிட காலம் வேகமாக நகர்கிற இச்சூழலில், நமது வாழ்க்கைக்கான வெளிச்சத்தைத் தரும் அனுபவங்கள் மூன்றாவது உலகத்திலிருந்து வருவதில்லை. நம்மைச்சுற்றி நிகழும் ஒவ்வொறு நிகழ்வும் ஏதோ ஒருவகையில் நமக்கான செய்தியைத் தாங்கித்தான் வருகின்றன. சென்ற வாரம் ஒரு மாலைப்பொழுதில், ஒரு பேக்கரி கடையில் இனிப்புகளை வாங்கிக்கொண்டிருந்தேன். கடையின் ஓரத்தில் பூச்சிகளைக் கொல்லும் மின்சார விளக்கு பொருத்தப்பட்டிருந்தது. இதற்கு முன் அக்கருவியை பல முறை, பல இடங்களில் பார்த்திருந்தாலும் அன்று அது என் கவனத்தைக் கவர்ந்தது. நான் அதனை கவனித்துக்கொண்டிருந்ததைக் கவனித்த கடைகாரர், “இந்த விளக்கு ரொம்ப நல்லா வேலை செய்யுது சார். முன்னாடி பூச்சித் தொல்லை தாங்கமுடியாது” என்றார். மனிதர்கள் தமது சுகவாழ்க்கைக்காக மற்ற உயிரினங்களின் இருப்பை கேள்விக்குறியாக்குவது என்ன நியாயம் என்று தெரியவில்லை. பூமியில் இருக்கும் உயிரினங்களில், மனிதன் மட்டுமே உலகத்துக்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளாமல், தனக்கு ஏற்றார்போல் உலகத்தை மாற்ற நினைக்கிறான். இந்த மனநிலை தான் நமது எல்லாப்பிரச்சனைக்கும் அடிப்படைப்புள்ளி.
உலகமெல்லாம் வலிமையுள்ளவனின் பெருங்கருணையினால் மட்டுமே சிறுபான்மை மக்களின் வாழ்க்கை நீடித்திருக்கும் நிலை பெரும்பாவம். இலங்கையில் சிறுபான்மை தமிழரின் வாழ்க்கை மீது வலிமையும் அதிகாரமுள்ள சிங்களவர் முடிவுகளெடுப்பதும் அவர்கள் மீதான வன்கொடுமையும் இந்தியாவுக்கு கீழே சிறு கண்ணீர்த்துளியாய் அமைந்திருக்கும் இலங்கைத் தீவின் உயிர்ச்சமநிலைக்கு விரோதமானது. முற்றிய இலவம்பஞ்சு வெடிக்கும் போது, காற்றின் போக்கில் பரவிச்செல்லும் பஞ்சினைப் போல இலங்கையின் தமிழ் மைந்தர்கள் உலகமெலாம் அகதிகளாக விரட்டப்பட்டது அயோக்கியத்தனம்.
நான் பணிபுரியும் திருவாலங்காடு வட்டார களஞ்சியத்தின் வட்டார செயற்குழு உறுப்பினரில் பத்மினி என்பவர் இலங்கை அகதி. அற்புதமான பெண்மணி. தாமே முன்வந்து வட்டாரப்பணிகளில் ஈடுபடுத்திக்கொள்பவர். அவர் சார்ந்திருக்கும் பகுதிக்கு இணையாளர் கிடைக்கவில்லை. கடந்த 6 மாதங்களாக, இவர் எந்த எதிர்பார்ப்புமின்றி அந்தப் பகுதியை சேர்ந்த குழுக்களின் கூட்டங்களை தாமே முன்வந்து நடத்தி வருகிறார். தமிழகம் முழுவதும் சிதறியுள்ள அவரது பிற உறவினர்களை சந்திக்க அடிக்கடி வெளியூர் சென்று வருவார். அவரது குடும்பம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறு குடிலமைத்து வாழ்ந்து வந்தாலும், இதுவரை அவர்களுக்கு நிலஉரிமை வழங்கப்படவில்லை. “மரங்கள் ஓய்வை விரும்பினாலும்; காற்று சும்மா இருப்பதில்லை” என்பதைப்போல், அவருக்கு நமது தேசம் அமைதி தராவிட்டாலும், தொந்தரவு செய்யத் தவறுவதில்லை. தற்போது அவர் இருக்கும் இடத்திலிருந்து அவரது குடும்பத்தை அப்புறப்படுத்த உள்ளூர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இவர் குடும்பம் யாரிடம் உதவிகேட்டு நின்றாலும், இரண்டாம்தர குடிமகனாக நடத்தப்படுகின்றனர். இலங்கைத்தமிழர் நம்மைச்சுற்றி விதைகளாக விழுந்து கிடந்தாலும், இன்னும் நமது மண்ணில் வேர்பிடிக்க முடியாத சூழல் வேதனைக்குறியது.
திருவாலங்காடு, பொது நேர்மை பற்றிய மிகச்சிறந்த நிகழ்வைத் தாங்கியுள்ள அற்புதமான கிராமம். 600 ஆண்டுகளுக்கு முன்னால் அடைக்கலம் தேடிவந்த ஒருவனின் உயிருக்கு திருவாலங்காட்டைச் சேர்ந்த பழையனூர் கிராம மக்கள் உத்திரவாதம் கொடுத்தனர். ஆனால் அடைக்கலமாய் வந்தவரின் உயிரைக் காக்கமுடியாமல் போனதால் ஊரிலுள்ள 64 குடும்பங்களின் தலைவர்கள் ஒன்று கூடி பொது இடத்தில் தீ வைத்து அனைவரும் தமது உயிரை மாய்த்துக்கொண்டனர். அவர்கள் தீ வைத்துக் கொண்ட இடம், நீலிக்கோவில் ஆகியவற்றின் படிமங்களைத் தேடி நானும் தங்கபாண்டியனும் சென்ற போது பெய்த பெருமழையும் கடுங்காற்றும் இன்று நினைவுக்கு வருகிறது. யாரோ முகமறியாத நபருக்கு ஊரே உயிரைக் கொடுத்த பண்பு நீர்த்துப்போய் வருவது பாரம்பரியத்தின் மீதான கரையாகும்.